Pages

செவ்வாய், பிப்ரவரி 02, 2016

தலித் முதல்வர்: மக்கள் நலக் கூட்டணி ஏற்காதது அதிர்ச்சியளிக்கிறது

தமிழ்நாட்டில் தலித் ஒருவர் முதலமைச்சர் ஆகவேண்டும் என்பதை ஏற்றுக்கொண்ட ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே. தமிழகத்தில் ஜனநாயகம் மேம்பட வேண்டும் என்கிற நோக்கில், அனைத்து சமூகங்களும் அதிகாரத்தில் பங்குபெற வேண்டும் என்கிற கோரிக்கையை 1991, 96 தேர்தல்களில் பா.ம.க., முன் வைத்தது.
தலித், மிகவும் பிற்படுத்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர், சிறுபான்மையினர், இதர பிரிவினர் என ஐந்தாண்டுகளுக்கும் ஆண்டிற்கொருவர் முதலமைச்சராக சுழற்சி முறையில் பதவி வகிக்க வேண்டும். அதன்படி, முதலில் தலித் ஒருவர் முதலமைச்சராக வேண்டும் என்கிற நிலைப்பாட்டை வைத்து பாமக தேர்தலை சந்தித்தது.

அப்போதைய சூழலில், இந்தக் கோரிக்கைக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை என்பதால், பின்னர் மத்திய அரசின் 1998 ஆம் ஆண்டில் பங்கேற்ற போது, பா.ம.க.,வின் முதல் மத்திய அமைச்சராக தலித் ஒருவரை பதவியில் அமர்த்தியது பா.ம.க. 

(அதன் பின்னர் கூட்டணிகளில் இடம் பெற்றதால் முதல்வர் கோரிக்கையை பாமக முன்னெடுக்கவில்லை. தற்போது ஒரு தகுதியான முதலமைச்சர் வேட்பாளராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை பா.ம.க., முன் நிறுத்துவதால் இப்போதும் தலித் முதல்வர் என்கிற முழக்கத்தை முன்வைக்கும் சூழலில் பா.ம.க., இல்லை.)

முதலமைச்சர் வேட்பாளர் - இப்போது சாதிக்க முடியும்

மக்கள் நலக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு பிரதான  கட்சியாக இருக்கிறது. இடது சாரிகளுக்கோ, வைகோவுக்கோ முதல்வர் கோரிக்கை பெரிதாக இருப்பதாக தெரியவில்லை. மத்திய அமைச்சர் பதவிகளே வேண்டாம் என்று துறந்தவர்கள் அவர்கள்.

இந்நிலையில், திருமாவளவன் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று மக்கள் நலக் கூட்டணியினர் அறிவிப்பது ஒரு ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும். இதனைச் சொல்வதில் அவர்களுக்கு என்ன தயக்கம் என்று தெரியவில்லை?

மக்கள் நலக் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் யாருமே நம்பவில்லை. எனவே, இப்போதைய சூழலில் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து ஒரு முதலமைச்சர் வருவார் என்பதை உறுதியாக கூற வாய்ப்பே இல்லை.

ஆனால், மக்கள் நலக் கூட்டணியில் இருந்து ஒரு முதலமைச்சர் வேட்பாளர் வர முடியும். இதற்கு எந்தத் தடையும் இல்லை.

எனவே, தமிழ்நாட்டின் முதலமைச்சராக தலித் ஒருவர் பதவியேற்கும் காலம் வருவதற்கு தாமதம் ஆனால் கூட, தலித் ஒருவர் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டார் என்கிற வரலாற்றையாவது இந்த தேர்தலில் சாத்தியமாக்க முடியும்.
அதிமுக கூட்டணியில் - செல்வி ஜெயலலிதா, திமுக கூட்டணியில் - கலைஞர் கருணாநிதி (அல்லது) மு.க. ஸ்டாலின், பாமகவில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பாஜக கூட்டணியில் விஜயகாந்த் - என்று நான்கு முதலமைச்சர் வேட்பாளர்கள் களத்தில் இறங்க வாய்ப்புக் கூடியுள்ளது.

இதன்மூலம், இரண்டு முன்னேறிய வகுப்பு முதலமைச்சர் வேட்பாளர்கள், இரண்டு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முதலமைச்சர் வேட்பாளர்கள் களத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த சூழ்நிலையில் - தாழ்த்தப்பட்ட வகுப்பு வேட்பாளர் ஒருவரும் தமிழக தேர்தல் கலத்தில் நிற்பது தமிழக அரசியல் சூழலை மேம்படுத்தவே செய்யும்.

தலித் முதலமைச்சர் வேட்பாளர் - ஒரு வரலாற்று வாய்ப்பு

தலித் முதலமைச்சர் வேட்பாளர் எனும் இந்த வரலாற்று வாய்ப்பை மக்கள் நலக்கூட்டணி பயன்படுத்த வேண்டும். 2016 ஆம் ஆண்டின் தேர்தலில், தலித் ஒருவர் தமிழகத்தின் பிரதான கூட்டணிகளில் ஒன்றின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டார் என்கிற வரலாற்றை மக்கள் நலக் கூட்டாணியால் மட்டுமே ஏற்படுத்த முடியும்.

இந்த வரலாற்றின் படிப்பினைகள் - எதிர்காலத்தில் தலித் ஒருவர் உண்மையாகவே தமிழக முதலமைச்சர் ஆக படிக்கல்லாக அமையும்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

திருமா அவர்கள் தலித்தியப் பிரிவைச் சார்ந்தவர் இல்லை. அவர் தனது சாதி என்ன என்பது குறித்து எப்போதுமே பேசியதில்லை. தலித்திய பிரிவினரின் வாக்கு வங்கியை திமுகவுக்கு ஆதரவாக திருப்பியளிக்குப்படி திரு மு கருணாநிதி அவர்களா நிறுத்தப்பட்டிருக்கும் மடைவாய். அவ்வளவுதான்.