வண்டலூர் முதல் வேளச்சேரி வரை 22.80 கீ.மீ. தூரத்துக்கு ரூ. 3 ஆயிரத்து 135 கோடியே 63 லட்சம் திட்ட மதிப்பில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் - என தமிழக அரசு இன்று (29.8.2916) அறிவித்துள்ளது.
இது தமிழக அரசின் முட்டாள் திட்டம் என்றால் அது மிகையல்ல. ஏன் என்பதற்கான காரணத்தை அறிய - மும்பை மோனோ ரயிலை ஒப்பிட்டு பாருங்கள்!
மும்பை மோனோ ரயில்
தற்போது மும்பை நகரில் 10 கி.மீ. தூரத்துக்கு இயக்கப்படும் திட்டம் 1000 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. இதில் தினமும் 16000 பேர் பயணம் செய்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்கும் இத்திட்டத்திலிருந்து இதுவரை ஒரு ரூபாய் கூட இலாபம் கிடைக்கவில்லை.
மாறாக, ஒவ்வொருநாளும் 9 லட்சம் ரூபாய் நஷ்டம் ஆகிக்கொண்டிருக்கிறது. இதுவரை 18 கோடி ரூபாய் பணத்தை அரசாங்கம் மோனோ ரயிலை இயக்குவதற்காக மட்டும் செலவு செய்துள்ளது.
மும்பை மோனோ ரயில்
அதாவது, பல ஆயிரம் கோடி செலவிட்டு கட்டப்பட்ட மோனோரயில் திட்டத்தை இயக்குவதற்காகவும் அரசாங்கம் பெருந்தொகை செலவிடுகிறது. இத்தனைக்கும் இந்த மோனோ ரயிலில் ஒவ்வொருநாளும் 16 ஆயிரம் பயணங்கள் மட்டுமே நடக்கின்றன. (சென்னை MTC பேருந்துகளில் ஒவ்வொருநாளும் 50 லட்சம் பயணங்கள் நடக்கின்றன).
நகர்ப்புற போக்குவரத்து திட்டங்களை எவ்வளவு மோசமாக திட்டமிடுவது என்பதற்கான மோசமான உதாரணமாக மும்பை மோனோ ரயில் இருப்பதாக வல்லுநர்கள் இப்போது குறிப்பிடுகின்றனர். ("Over two years after India's first monorail was launched in the city - Mumbai, it is increasingly being viewed as a symbol of bad planning and wasteful expenditure. Some urban transport experts even describe it as a vehicle for joyrides" - Times fo India 26.4.2016)
மோனோ ரயிலை விட பேருந்துகளே மிகச்சிறந்தவை
சென்னை மோனோ ரயிலுக்கான பணத்தை MTC பேருந்துக்கு செலவிட்டால் சென்னை சொர்க்கம் ஆகும்.
உலகத்தரமான 800 பேருந்துகளுக்கு சுமார் 500 கோடி செலவாகும். இதற்கான உலகத்தரமான பேருந்து நிலையம், இயக்க வசதிகளை செய்ய சுமார் 200 கோடி செலவாகும். ஆக உலகத்தரமான 800 குளிர்சாதன பேருந்துகளுக்கும் அதன் இயக்க வசதிகளுக்கும் சேர்த்து 700 கோடி தேவை.
இதுவே சென்னைக்கு தேவையான 8000 உலகத்தர பேருந்துகளின் இயக்கத்துக்கு 7000 கோடி தேவைப்படலாம். அதாவது - தமிழக அரசின் 45 கி.மீ. தூர மோனோ ரயிலுக்கு தேவைப்படும் அதே அளவு செலவுதான்.
ஆனால், மோனோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளை விட ஆயிரம் மடங்கு அதிகமான பயணிகள், பலமடங்கு குறைவான செலவில் பேருந்துகளில் செல்ல முடியும். மோனோ ரயிலை விட விரைவாகவும், வசதியாகவும் செல்ல முடியும். மேலும், மோனோ ரயில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துவது போல - பேருந்துகள் பெருநஷ்டத்தை ஏற்படுத்தாது.
ஆனாலும், மக்களுக்கு என்ன பயன் என்பதை விட, ஆட்சியாளர்களுக்கு என்ன பயன் என்பதுதானே - மெகா திட்டங்களை முடிவு செய்கிறது!
ஜெயலலிதா பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்
சென்னை மோனோ ரயில் திட்டத்தை 2006 ஆம் ஆண்டில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அப்போது முதல் இந்த மோசமான திட்டத்தை மருத்துவர் அய்யா அவர்கள் எதிர்க்கிறார்கள். ஆனாலும், தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்கள் என சாதிக்க நினைக்கிறார் முதலமைச்சர்.
இந்த முட்டாள் திட்டம் குறித்த எனது பழைய எச்சரிக்கை கட்டுரை இதோ:
"சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து (3.6.2011 இல் எழுதியது)
சென்னை நகர் முழுவதையும் அடையக்கூடிய வகையில் முந்தைய அரசால் தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 45 கிலோ மீட்டர் தொலைவுடன் நிறுத்தப்படும் என்று புதிய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுமாம்.
அதுவும் முதற்கட்டமாக 111 கிலோ மீட்டர் தொலைவும் அதன் நீட்டிப்பாக மொத்தம் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமைக்கப்படுமாம். இதைப் படிக்கும் போது மயக்கமே வந்துவிடும் போலிருக்கிறது.
சென்னை மோனோ ரயில் - ஒரு உலக அதிசயம்
மோனோ ரயில் திட்டத்தில் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.
அவை இதோ:
1. உலகம் முழுவதும் மொத்தம் 60 மோனோ ரயில் திட்டங்களே உள்ளன (தற்போது புதிதாக அமைக்கப் படுபவைகளையும் சேர்த்து). அவற்றின் ஒட்டுமொத்த தூரம் வெறும் 400 கிலோ மீட்டர் மட்டும்தான்.
உலகிலேயே அதிக மோனோ ரயில் திட்டங்கள் உள்ள நாடு ஜப்பான் - அங்கு மொத்தம் 108 கிலோ மீட்டருக்கு மோனோ ரயில் உள்ளது. சீனா உள்ளிட்ட அனைத்து ஆசிய நாடுகளிலும் மொத்தம் 164 கிலோ மீட்டர், அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் மொத்தம் 38 கிலோ மீட்டர், அனைத்து வட அமெரிக்க நாடுகளிலும் மொத்தம் 54 கிலோ மீட்டர், அனைத்து தென் அமெரிக்க நாடுகளிலும் மொத்தம் 24 கிலோ மீட்டர், ஆப்பிரிக்காவில் 6 கிலோ மீட்டர், ஆஸ்திரேலியாவில் 7 கிலோ மீட்டர் என்ற அளவில் மட்டுமே மோனோ ரயில் திட்டங்கள் உள்ளன.
ஆனால், சென்னையில் மட்டுமே 300 கிலோ மீட்டருக்கு தமிழ்நாடு அரசு மோனோ ரயில் திட்டத்தை அமைக்கப் போகிறதாம்!
2. உலகின் பெரும்பாலான திட்டங்கள் 2 அல்லது 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டுமே அமைக்கப் பட்டுள்ளன. வெறும் 12 திட்டங்கள் மட்டுமே 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு கூடுதலாக உள்ளன. 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு அதிகமாக ஒரேஒரு திட்டம் கூட இல்லை.
உலகின் மிகப்பெரிய மோனோ ரயில் திட்டம் என கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ள திட்டம் ஜப்பானின் ஒசாகா மோனோ ரயில் ஆகும். இதன் நீளம் வெறும் 28 கிலோ மீட்டர்தான்.
உலக நிலவரம் இப்படி இருக்கையில் - சென்னையில் முதற்கட்டமாக 111 கிலோ மீட்டர் தொலைவும் அதன் நீட்டிப்பாக மொத்தம் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமைக்கப்படுமாம்.
உலகில் மோனோ ரயில் என்பது சுற்றுலா இடங்களை சுற்றிப் பார்க்க சின்னஞ்சிறு அளவில் அமைக்கப் படுபவை. பயணிகள் போக்குவரத்திற்காக அமைக்கப்படும் எல்லா திட்டங்களும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. மலேசியாவின் கோலாலம்பூர், இந்தோனேசியாவின் ஜாகர்த்தா, அமெரிக்காவின் சீயாட்டில் என எல்லா திட்டங்களும் காலதாமதம் மற்றும் நிதிச்சுமை என்கிற சுழலில் சிக்கித்தவிக்கின்றன.
மலேசியாவின் 9 கிலோ மீட்டர் மோனோ ரயிலை அமைக்க 5 ஆண்டுகள் ஆயின. அதனை 8 மாதம் இயக்குவதற்கு மட்டும் 61 கோடி ரூபாய் செலவானது. இப்போது அந்த நிறுவனம் திவாலாகி 1215 கோடி ரூபாய் கடனில் மூழ்கிவிட்டது.
சீயாட்டில் நகர மோனோ ரயில் திட்டத்துக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 450 கோடி ரூபாய் செலவானது. இதனால் 22 கிலோ மீட்டருக்கு தொடங்கப்பட்ட திட்டம் பாதியில் கைவிடப்பட்டது.
இப்படி உலகெங்கும் மொனோ ரயில் திட்டங்கள் பல்லிளிக்கின்றன. ஆனாலும், மலேசியாவில் உள்ள மோனோ ரயில் நிறுவனங்கள் உலகின் இதர நாடுகளில் பலவிதமான தந்திரங்களைக் கையாண்டும், பொய்யான கட்டுக்கதைகளை பரப்பி ஆசை வார்த்தைக் காட்டியும் ஏமாற்றி வருகின்றன.
இப்போது - மலேசியா மற்றும் ஜப்பானின் மோனோ ரயில் நிறுவனங்களுக்கு "உலகிலேயே மிகப்பெரிய இரை" சிக்கியிருக்கிறது. அது வேறு யாருமல்ல - அப்பாவி தமிழ்நாட்டு மக்கள்தான். ஒருபோதும் சாத்தியமே இல்லாத ஒரு திட்டத்திற்காக பல்லாயிரம் கோடி பணத்தை தமிழக மக்கள் இழக்க இருக்கின்றனர்.
வாழ்க ஜனநாயகம்! (3.6.2011 இல் எழுதியது)