Pages

புதன், ஆகஸ்ட் 17, 2016

முஸ்லிம் நாட்டில் ஜல்லிக்கட்டு - எதிர்க்கும் இந்தியா: நீங்கள் அறியாத தகவல்கள்!

உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் 'ஜல்லிக்கட்டு' கோலாகலமாக நடத்தப்படுகிறது. ஆனால், இந்துக்கள் அதிகம் வசிக்கும் இந்தியாவில் அதே 'ஜல்லிக்கட்டு' தடை செய்யப்பட்டுள்ளது. உங்களால் நம்ப முடியாமல் போனாலும் இது முற்றிலும் உண்மை
கரப்பான் சாப்பி போட்டி
ஜல்லிக்கட்டு: தமிழ்நாட்டிலும் இந்தோனேசியாவிலும்

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையும், அதன் ஒரு அங்கமான ஜல்லிக்கட்டு நிகழ்வும் - வேளாண்மை மற்றும் கால்நடை வளத்தை போற்றும் வகையில் இருக்கிறது. தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டுக்கு இணையாக இந்தோனேசியாவில் 'கரப்பான் சாப்பி' எனும் திருவிழா நடத்தப்படுகிறது. (கரப்பான் சாப்பி - Karapan Sapi - எனும் இந்தோனேசிய வார்த்தையின் பொருள் "மாடு விரட்டுதல்" என்பதாகும்).

இந்தோனேசியாவின் ஜாவா பகுதியில் உள்ள தீவு "மதுரா". நெல் விளைவிப்பது முதன்மை விவசாயமாக உள்ள இத்தீவில், நெற்பயிர் அறுவடை முடியும் போது, அதனை கொண்டாடும் வகையில் கரப்பான் சாப்பி போட்டி நடத்தப்படுகிறது.
கரப்பான் சாப்பி போட்டி
கரப்பான் சாப்பி போட்டியின் போது, மாடுகள் இரண்டு இரண்டாக - மரக்கம்பினால் ஆன ஒரு இணைப்பில் பிணைக்கப்படுகின்றன. அதனை இயக்கும் போட்டியாளர் ஒருவர் அந்த கம்பின் மீது நின்றுகொண்டு மாடுகளை விரட்டுகிறார். சுமார் நூறு மீட்டர் தூரத்தை விரைவாக இந்த மாடுகள் ஓடி கடக்க வேண்டும் என்பதுதான் போட்டியாகும்.

ஒவ்வொரு பகுதியிலும் நடத்தப்படும் போட்டிகளில் முன்னணியில் வரும் மாடுகள், அடுத்தக்கட்ட போட்டிக்கு செல்கின்றன. இறுதிப்போட்டியில் சுமார் நூறு அணி மாடுகள் பங்கேற்கின்றன. இதில் வெற்றி பெரும் மாட்டுக்கு, ஜனாதிபதி கோப்பை எனும் விருதும், பெரும் பணமும் அரசாங்கத்தால் அளிக்கப்படுகிறது.

கரப்பான் சாப்பி: ஒரு மாபெரும் கொண்டாட்டம்

மாடுகள் ஓடுவது மட்டுமல்ல திருவிழா. ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம் என பல நிகழ்ச்சிகள் இதனுடன் இணைந்துள்ளன. ஓட்டப்போட்டிக்கு முன்பாக, பெண்களின் நடனத்துடன் அலங்கரிக்கப்பட்ட மாடுகளின் அணி வகுப்பு நடத்தப்படுகிறது. போட்டியில் வெற்றி பெரும் மாடும் அதனை ஓட்டியவரும் உள்ளூரில் கதாநாயகர்களாக கொண்டாடப்படுகின்றனர்.
கொண்டாட்டம்
"மாடு விரட்டுதல்" விழாவுக்கு என பிரத்தியோகமாக மாடுகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றுக்கு தனி உணவு முறைகளும் பராமரிப்பு முறைகளும் உள்ளன. தினமும் எண்பது முட்டைகளைக் கொண்டு சத்துணவுகள் தயாரித்து அளிக்கின்றனர். போட்டியில் ஓடும் முன்பு உள்ளூர் மதுபான வகைகளை மாடுகளுக்கு கொடுக்கின்றனர்.

இந்தோனேசிய ஜல்லிக்கட்டின் வரலாறு

இந்தோனேசியாவில் கரப்பான் சாப்பி எனும் ஜல்லிக்கட்டு சுமார் 800 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. கடந்தூர் இளவரசன் என்பவன் மதுரா தீவில் நெற்பயிர் விவசாயத்தை உருவாக்க முயன்றதாகவும், அதற்காக - காடாக கிடந்த நிலைத்தை உழுது வயலாக்கும் நோக்கில் - கரப்பான் சாப்பி திருவிழாவை உருவாக்கியதாகவும் உள்ளூர் கதையில் கூறுகிறார்கள்.

இந்தோனேசியா - தமிழகத் தொடர்பு

ஜல்லிக்கட்டிற்கும், கரப்பான் சாப்பி போட்டிக்கும் நேரடி தொடர்பு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த இயலாது. ஆனால், தமிழ்நாட்டில் தனித்தனி மாடுகள் ஓடுகின்றன. இந்தோனேசியாவில் ஜோடி ஜோடியாக ஓடுகின்றன. தமிழ்நாட்டில் மாட்டை பிடிப்பது போட்டி. இந்தோனேசியாவில் மாட்டை வேகமாக ஓட்டுவது போட்டி. இதைத்தவிர - ஜல்லிக்கட்டிற்கும், கரப்பான் சாப்பிக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
சுரபயா விமான நிலையத்தில் உள்ள கரப்பான் சாப்பி விளம்பரத்துடன் நான்
அறுவடைத் திருவிழா, மாடுகள் அலங்கரிப்பு, போட்டியின் தொலைவு, மக்களின் மைதான அலங்கரிப்பு, மக்களின் கொண்டாட்டம், வெற்றிபெற்றவர்களின் பெருமிதம் - என எல்லாமும், தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டைப் போன்றே, இந்தோனேசியாவின் மதுராவிலும் நடக்கிறது.

இந்தோனேசியாவுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தமிழர்கள். ஒரு முஸ்லிம் நாடாக இந்தோனேசியா இருப்பதற்கும் தமிழக முஸ்லிம்களே காரணம். சோழ மண்டல கடற்கரையில் இருந்து, சோழ மன்னர்களின் ஆதரவுடன் கிழக்காசியாவில் வர்த்தகம் செய்த மரைக்காயர்களே - இந்தோனேசியாவை முஸ்லிம் நாடாக மாற்றினர் என்பது வரலாறு.

ஏராளமான தமிழ் ஊர்ப்பெயர்களும், தமிழ்க் கல்வெட்டுகளும் நிறைந்திருக்கும் இந்தோனேசியாவுக்கு - ஜல்லிக்கட்டும் தமிழ்நாட்டிலிருந்து சென்றிருக்கலாம்.

அரசாங்கம் செய்வது என்ன?

இந்தோனேசிய அரசங்கம் 'கரப்பான் சாப்பி மாடு விரட்டுதல்' திருவிழாவைக் கொண்டாடுகிறது. வெற்றி பெரும் அணிக்கு, அரசின் சார்பில் ஜனாதிபதி கோப்பையை வழங்குகிறார்கள்.
சுரபயா நகர பிரதான சாலையில் உள்ள சிலை
இந்தோனேசிய நகரங்களில் கரப்பான் சாப்பிக்கு சிலைகளை வைத்துள்ளனர். இந்தோனேசிய சுற்றுலா விளம்பரங்களில், கரப்பான் சாப்பியை முக்கிய திருவிழாவாக கோண்டாடுகின்றனர்.

உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடு ஜல்லிக்கட்டை கொண்டாடும் போது - இந்தியாவை ஆளும் இந்துக்கள் கட்சி ஜல்லிக்கட்டை எதிர்க்கிறது.

1 கருத்து:

Jayakumar Chandrasekaran சொன்னது…

இது கேரளத்தில் மரமடி என்ற பெயரில் இப்போதும் நடக்கிறது.

--
Jayakumar

https://www.google.co.in/?gws_rd=ssl#q=maramadi+in+kerala