Pages

திங்கள், ஆகஸ்ட் 22, 2016

இன்று சென்னை தினம்: மறைக்கப்படும் மாநகரின் வரலாறு!

377 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், கிழக்கிந்திய கம்பெனியினர் சென்னையில் காலூன்றி, ஒரு மாபெரும் சாம்ராஜயத்தைக் கட்டமைத்தனர்.

"வரலாற்று ரீதியிலும் புவியியல் ரீதியிலும் சென்னை ஆந்திராவின் ஒரு பகுதி. ஆங்கிலேயர்கள் இங்கே தொழிற்சாலை அமைக்க 1639 இல் அனுமதி கேட்டது, இப்பகுதியை ஆட்சி செய்த தெலுங்கு வெலமா சாதியைச் சேர்ந்தவரிடம்தான். 1920 ஆம் ஆண்டுக்கு பின்பு சென்னை மாகானத்திலும் தேசிய அரசிலும் தமிழர்களின் ஆதிக்கம் அதிகரித்ததன் விளைவாகவே சென்னை தமிழ்நாட்டுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது" என்பது ஆந்திராவுடன் சென்னையை சேர்க்கக் கோரியவர்களின் வாதம் ஆகும். ஆனால், அது உண்மை அல்ல.

ஆங்கிலேயர்கள் எவ்வாறு சென்னைக்கு வந்தனர். அவர்களுக்கு இந்த இடத்தை அளித்தவர்கள் யார், அவர்களின் பின்னணி என்ன - என்கிற வரலாற்றை, சென்னை தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் அறிந்துகொள்ள வேண்டும்.

ஆங்கிலேயர்கள் சென்னைக்கு வந்தது எப்படி?

மசூலிப்பட்டனத்தில், தொழிற்சாலை என்கிற பெயரில், ஆங்கிலேயெ கிழக்கிந்தியக் கம்பெனி குடியிருப்பை அமைத்துக்கொள்ள 1611 ஆம் ஆண்டு கோல்கொண்டா முகலாய அரசர்கள் அனுமதி அளித்தனர். அதன் தொடர்ச்சியாக 1626 ஆம் ஆண்டு பழவேற்காட்டிற்கு 35 மைல் வடக்கே ஆறுமுக நாயகன் பட்டினத்தில் வேறொரு குடியிருப்பை அமைத்தனர். கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அந்த இடம் ஒத்துவராததால் வேறொரு இடத்தை தேடினர்.
1636 ஆம் ஆண்டு ஃபிரான்சிஸ் டே என்பவரிடம் புதிய இடத்தை தேடும் பொறுப்பு அளிக்கப்பட்டது. மசூலிப்பட்டனத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையே கடலோரமாக இடம் தேடி அலைந்த அவர் மதராசக்குப்பம் எனும் இடத்தை தேர்ந்தெடுத்தார்.

ஆங்கிலேயர்கள் அனுமதி பெற்றது யாரிடம்?

ஆங்கிலேயர்கள் மதராசக்குப்பத்தில் தமது நிறுவனத்தை அமைக்க முயன்றபோது தாமல் வெங்கடப்ப நாயகர் வந்தவாசியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தார். அவருக்கு கீழே, அவரது தம்பி தாமல் அய்யப்ப நாயகர் பூந்தமல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தனர் (இந்த அய்யப்ப நாயகர் பெயரால் அமைந்த ஊர்தான் அய்யப்பன் தாங்கல்). 

இவர்களிடம் 15000 வீரர்களைக் கொண்ட பெரும் போர்வீரர் படை இருந்துள்ளது. எனவே, சந்தரகிரி அரசரிடம் மிகுந்த ஆதிக்கம் செலுத்துபவராக இவர்கள் இருந்துள்ளனர்.

பழவேற்காட்டுக்கும் சாந்தோமுக்கும் இடையிலான கடற்கரை அய்யப்ப நாயகர் கட்டுப்பாட்டில் இருந்தது. அவரிடம் தான் ஆங்கிலேயர்கள் அனுமதி பெற்று தமது நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். உண்மையான சென்னையின் கதை இங்கேதான் ஆரம்பிக்கிறது.

தாமல் நாயகர்களின் வரலாறு என்ன?

தாமல் நாயகர்கள் என்போர் தற்போது காஞ்சிபுரத்துக்கும் ராணிப்பேட்டைக்கும் இடையே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாமல் எனும் ஊரை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

காஞ்சிபுரத்தை எதிரிகளின் படையெடுப்பில் இருந்து காப்பாற்றுவதற்காக, காஞ்சிபுரத்துக்கு மேற்கே பல்லவ மன்னர்களால் நிறுத்தப்பட்ட போர்மரபினர் தான் தாமல் நாயகர்கள் ஆகும்.

இந்த ஊர் பல்லவர் காலத்தில் தாமர் கோட்டம் என்று அழைக்கப்பட்டது. இங்குள்ள தாமல் ஏரி பல்லவர்கள் காலத்தில் வெட்டப்பட்டது.

"தாமல், பழமையும் பெருமையும் வாய்ந்த காஞ்சி மாநகரத்தின் அரணாக விளங்கியுள்ளது. ஏனெனில், இது வடக்கு மற்றும் மேற்குப்புறத்திலிருந்து வரும் அரசர்களின் படையை காஞ்சி செல்லும் முன் எதிர்கொள்ளும் ஓர் போர்க்களமாக இருந்துள்ளது...இங்கு வன்னியர் (அல்லது நாயக்கர்) குலத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக வசிக்கின்றனர்....

தாமலில் அதிகளவு காணப்படும் இனமான நாயக்கர், விஜயநகரப் பேரரசு ஆட்சியில் சிறந்த போர் வீரர்களாக விளங்கியுள்ளனர். இவர்களே காஞ்சிக்கு எதிரான படையெடுப்புகளை தாமலில் முறியடித்து காஞ்சியைக் காத்துள்ளனர் என்றால் அது மிகையாகாது.

இவர்கள் விஜயநகர ஆட்சிக்காலத்தில் போர் வீரர்களாகவும், படைத்தலைவர்களாகவும், ஆளுனர்களாகவும் மற்றும் நாயக்க அரசர்களாகவும் இருந்துள்ளனர்" என்று குறிப்பிடுகிறது சென்னை சி.பி.ராமசாமி அய்யர் பவுண்டேசனின் வெளியீடான "வரகீசுவரர் கோவில்" எனும் தாமல் வரலாற்று நூல்.

வன்னியர் ஆட்சியின் கீழ் சென்னை

தாமல் வெங்கடப்ப நாயகரும், தாமல் அய்யப்ப நாயகரும் தங்களது தந்தை சென்னப்ப நாயகரின் பெயரை இந்த நகரத்துக்கு சூட்ட வேண்டும் என்று கோரியதன் விளைவாகவே, இன்று சென்னைப்ப நாயகன் பட்டினம் என்பது - சென்னை என்று அழைக்கப்படுகிறது.

இப்போதும் காஞ்சிபுரம் தாமல் ஊரில் பெருமளவில் வன்னிய நாயகர்கள்தான் வசிக்கின்றனர். அதே போன்று, சென்னை அய்யப்பன் தாங்கலில் அதிக அளவில் இருப்பதும் வன்னிய நாயகர்கள்தான். (இந்த இரண்டு ஊர்களிலும் ஊராட்சிமன்றத் தலைவர்கள் வன்னியர்கள்தான். இருவருமே பாமகவினர்தான்.).
ஆனாலும், வெங்கடப்ப நாயகரும், அய்யப்ப நாயகரும், சென்னப்ப நாயகரும் தமிழர்கள் அல்ல. அவர்கள் தெலுங்கு சாதியினர் என்கிற பிரச்சாரம் திட்டமிட்டு பரப்பபடுகிறது. இத்தகைய வரலாற்று கட்டு்க்கதைகளை தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது.

(சென்னை வரலாற்று ரீதியில் வன்னியர்களின் ஆளுகையின் கீழ் இருந்தது என்பதுதான், சென்னை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருப்பதற்கான நியாயங்களில் ஒன்றாக இருக்கும். ஆனாலும், இதனை தமிழ் வன்னியர் ஆட்சிப்பகுதி என்பதை விட, வரலாற்று ரீதியில் தெலுங்கு வெலமா ஆட்சிப்பகுதி என்று சொல்வதையே திராவிட, கம்யூனிச, போலித் தமிழ்த்தேசியர்கள் விரும்புவார்கள்)

(குறிப்பு: சென்னையை உருவாக்கியவர்கள் தெலுங்கு மரபினரா? என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த இணைப்பில் காணலாம்:  சென்னை நகரத்தின் வேர் தெலுங்கா? தமிழா? - சென்னை தினத்தில் ஒரு சர்ச்சை!)

கருத்துகள் இல்லை: