Pages

புதன், நவம்பர் 09, 2016

புதிய ரூபாய் நோட்டில் ஹிந்தி திணிப்பு: மோடி அரசின் மொழிவெறி!

இந்தியாவில் ரூ.1000, ரூ.500 தாள்கள் இனி செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் நோக்குடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. 

ஆனால், இந்த நல்ல நடவடிக்கையின் நடுவே, புதிய ரூபாய் தாளின் வழியாக இந்தி திணிப்பில் மோடி அரசு இறங்கியிருப்பது ஏற்கத்தக்கதல்ல! கண்டிக்கத் தக்கது.

புதிய ரூபாய் தாளில் மொழிவெறி

பழைய ரூபாய் தாளுக்கு பதிலாக, நவம்பர் 10 ஆம் நாள் முதல் புதிய 500 ரூபாய், 2000 ரூபாய் தாள்களை வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ரூபாய் நோட்டுகளில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளையும் இதுவரை சமமாக பயன்படுத்தி வந்தது இந்திய ரிசர்வ் வங்கி. ஆனால், அறிவிக்கப்பட்டுள்ள புதிய 500 ரூபாய், 2000 ரூபாய் தாள்களில் இந்தி மொழிக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் தவிர்க்கப்பட்டுள்ளது.

புதிய ரூபாய் தாள்களில், தூய்மை இந்தியா - தூய்மையை நோக்கி மேலும் ஒரு படி - எனும் பொருள்படும் ஹிந்தி வாசகம் இடம்பெற்றுள்ளது. 

स्वच्छ भारत: 'एक कदम स्वच्छता की ओर' 
(Swachh Bharat: 'ek kadam swachhata ki aur') 

- எனப்படும் இந்த இந்தி வாசகத்துக்கு இணையான, Clean India - A step towards cleanliness என்கிற ஆங்கில வாசகம் இல்லை.


இப்படி, ஹிந்தி வார்த்தைக்கு இணையான ஆங்கில வார்த்தை இல்லாமல் இந்திய ரூபாய் தாள் வெளியிடப்படுவது இதுவே முதன்முறை ஆகும்.

மோடியின் மொழி வெறி ஒழிக!

இந்திய நாட்டில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் தேசிய மொழி இந்தி அல்ல என்று நீதிமன்றங்கள் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டுடனான உறவில் மத்திய அரசு இந்தியை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய சட்டம் கூறும் நிலையில், மாநிலங்களுடனான உறவில் ஆங்கிலம் இந்தி என இரண்டுமே பயன்படுத்தப்படும் என்று ஜவகர்லால் நேரு வாக்குறுதி அளித்துள்ள நிலையில் - புதிய ரூபாய் தாள்களில், இந்திக்கு மட்டும் முன்னுரிமை அளித்தது எப்படி?

மோடி அரசின் மொழி வெறி ஒழிக.



வெள்ளி, நவம்பர் 04, 2016

சாதனை: நவம்பர் 4-ல் செயல்பாட்டுக்கு வந்தது பாரீஸ் காலநிலை ஒப்பந்தம்! 

24 ஆண்டு பேச்சுவார்த்தைக்கு பின் சாதனை!
உலகின் சுற்றுச்சூழலைக் காக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பாரீஸ் காலநிலை ஒப்பந்தம் (The Paris Climate Agreement) ஐநா காலநிலை உடன்படிக்கை  நவம்பர் 4 முதல் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. 

இது ஒரு மாபெரும் சாதனை, ஏனெனில் இதற்காக 24 ஆண்டுகளாக உலகெங்கும் போராட்டம் நடக்கிறது.

2000 ஆவது ஆண்டு முதல் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் பசுமைத் தாயகம் அமைப்பு இதற்கான போராட்டங்களையும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் முன்னெடுத்து வருகிறது (படங்களைக் காண்க).  2009 ஆம் ஆண்டு கோபன்ஹெகன் ஐநா காலநிலை மாநாட்டில் (Conference of the Parties - COP 15) மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுடன் நான் கலந்துகொண்டேன். (அதற்கு முன்பு 2002 புதுதில்லி ஐநா காலநிலை மாநாட்டில் (COP 8)  நான் கலந்துகொண்டேன்).

(2015 பாரிஸ் மாநாட்டில் (COP 21) மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் பசுமைத் தாயகம் அமைப்பு பங்கேற்க, ஐநா அழைப்பு அனுப்பியது. ஆனால், சென்னை பெருவெள்ளம் காரணமாக பங்கேற்க இயலவில்லை).
புவி வெப்பம் அதிகரித்து வருவதையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் தடுப்பதற்காக 1992 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஐநா காலநிலை பணித்திட்ட பேரவை (United Nations Framework Convention on Climate Change - UNFCCC) மூலமாக உலகநாடுகள் 23 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. முடிவில் 2015 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கூடிய ஐநா காலநிலை மாநாட்டில் (COP21)  'பாரிஸ் காலநிலை உடன்படிக்கை' (Paris Climate Agreement) உலகின் 195 நாடுகளால் ஒருமனதாக ஏற்கப்பட்டது.

நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களை மிதமிஞ்சி பயன்படுத்தியதாலும், காடுகளை அழித்ததாலும் வளிமண்டலத்தில் மாசுக்காற்றின் அடர்த்தி அதிகமாகி, அதனால் பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்துச் செல்கிறது. பெருவெள்ளம், அதிவேக சூறாவளி, பெரும் வறட்சி, நோய்கள் அதிகரிப்பு, வேளாண்மை பாதிப்பு, கடல்வள அழிவு என எண்ணற்ற பாதிப்புகள் இதனால் அதிகமாகியுள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புவியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பை 2 டிகிரி செல்சியஸ் ஆளவுக்கு மிகாமல் மிகக்கீழாக குறைப்பது என்றும், அதற்கு மேலும் 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கீழ் குறைக்க முயற்சிப்பதாகவும் 'பாரிஸ் காலநிலை உடன்படிக்கை' கூறுகிறது.

இந்த உடன்படிக்கையின் மூலம் பெட்ரோல், டீசல், எரிவாயு, நிலக்கரி உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

பின்னணி என்ன? 

காலநிலை மாற்றம் குறித்த பன்னாட்டு அறிவியலாளர்கள் குழு ( (IPCC - Intergovernmental Panel on Climate Change) 1988 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1992 ஆம் ஆண்டின் ரியோ-டி-ஜெனிரோ புவி உச்சிமாநாட்டில் ஐநா காலநிலை மாற்ற பணித்திட்டப் பேரவை (UNFCCC - United Nations Framework Convention on Climate Change) அமைக்கப்பட்டது. அந்த அமைப்பு சட்டபூர்வமாக 1994 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்தது முதல், 21 ஆண்டுகளாக 'ஐநா காலநிலை உச்சிமாநாடுகள்' (UNFCCC - Conference of the Parties - COP) ஆண்டுதோரும் கூட்டப்பட்டுள்ளன.

அவற்றில் சில முக்கியத்துவம் வாய்ந்த மாநாடுகள்:

"1997 - கியோட்டோ உடன்படிக்கை"

ஐநா காலநிலை மாற்ற பணித்திட்ட பேரவையின் 3 ஆவது மாநாடு ஜப்பான் நாட்டின் கியோட்டோ நகரில் 1997 ஆம் ஆண்டு கூடிய போது, அங்கு ஒரு புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டது. உலகின் பணக்கார நாடுகள், அதாவது வளிமண்டலத்தில் அதிக மாசுக்காற்றைக் கலக்கவிட்ட நாடுகள், தங்களது நாடுகளில் இருந்து வெளியாகும் கரியமில வாயு அளவைக் குறைக்க ஒப்புக்கொண்டனர்.
உலகை மாசுபடுத்திய நாடுகள் 1990 ஆம் ஆண்டில் எந்த அளவுக்கு கரியமில வாயுவை வெளிவிட்டனவோ, அதற்கு கீழாக 5.2% கரியமில வாயு வெளியாகும் அளவைக் குறைப்பது என ஒப்புக்கொள்ளப்பட்டது (ஒவ்வொரு நாட்டிற்கும் இந்த அளவு மாறுபடும்). இவ்வாறு குறைப்பதற்கான கால அளவு 2008 முதல் 2012 வரை என முடிவெடுக்கப்பட்டது.

உலகின் ஏழை நாடுகள் உடபட எல்லா நாடுகளும் கரியமில வாயுவைக் குறைக்க முன்வந்தால்தான் தாங்களும் குறைக்க ஒப்புக்கொள்வோம் எனக்கூறி, உலகின் மிகப்பெரிய மாசுபடுத்தும் நாடான அமெரிக்கா இந்த உடன்படிக்கையை ஏற்காமல் வெளியேறிவிட்டது.

"2007 - பாலி வழிக்காட்டி"

'காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த 5% கரியமில வாயுவைக் குறைத்தால் போதாது. 85% குறைக்க வேண்டும். அப்போதுதான் உலகைக் காப்பாற்ற முடியும்' என 2007 இல் வெளியான பன்னாட்டு அறிவியலாளர் குழுவின் புதிய மதிப்பீடு சுட்டிக்காட்டியது. இந்த புதிய அவசர நிலைக்கேற்ப தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் புதிய உடன்பாட்டை 2009 ஆம் ஆண்டில் உருவாக்க வேண்டும் என பாலி மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.

மாசுபடுத்திய நாடுகள் மட்டுமே கரியமில வாயுவைக் குறைக்க வேண்டும் என்கிற நிலைபாட்டிற்கு மாறாக, மாசுபடுத்திய நாடுகள் நிதி உதவியும் தொழில்நுட்ப உதவியும் அளித்தால் - மாசுபடுத்தாத ஏழை நாடுகளும் தங்களது நாடுகளில் இருந்து வெளியாகும் கரியமில வாயுவைக் குறைக்க ஒப்புக்கொண்டன.

"2009 - கோபன்ஹெகன் மாநாடு"

உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கோபன்ஹெகன் மாநாடு படுதோல்வியில் முடிந்தது. ஏற்கனவே பாலியில் பேசியபடி கோபன்ஹெகனில் புதிய உடன்படிக்கை உருவாக்கப்படவில்லை. எல்லா நாடுகளும் தங்களது கரியமில வாயுவைக் குறைக்க வேண்டும்.
மாசுபடுத்திய நாடு, மாசுபடுத்தாத நாடு என்கிற பாரபட்சம் வேண்டாம் என பேசப்பட்டது. இதனை ஏற்கும் நாடுகளுக்கு நிதி உதவி கிடைக்கும் என்கிற ஆசை வார்த்தைகள் பேசப்பட்டன. ஆனாலும், எந்த நாடு எவ்வளவு கரியமில வாயுவைக் குறைக்கும் என்கிற கேள்விக்கு பதில் இல்லை.

"2011 - டர்பன் மாநாடு"

ஏற்கனவே 2007 ஆம் ஆண்டு பாலி மாநாட்டின் போது, 2009 கோபன்ஹெகனில் ஒப்பந்தம் செய்வோம் என்று கூறியது போல - இப்போது மீண்டும் 2015 இன் புதிய சட்டபூர்வமான ஒப்பந்தத்தை செய்துகொள்வோம் என்று முடிவு செய்தார்கள்.

ஆனால், இந்த முறை 'எல்லா நாடுகளும்' மாசுக்காற்றைக் குறைக்க வேண்டும் என்று ஒப்புக்கொண்டுவிட்டார்கள்.  மாசுபடுத்திய நாடு, மாசுபடுத்தாத நாடு என்கிற பாரபட்சம் முடிவுக்கு வந்துவிட்டது. வெறும் 4 விழுக்காடு மக்களைக் கொண்டு உலகத்தை 30 விழுக்காடு மாசுபடுத்திய அமெரிக்க நாட்டுக்கும், 17 விழுக்காடு மக்களைக் கொண்டு உலகத்தை வெறும் 3 விழுக்காடு மட்டுமே மாசுபடுத்திய இந்திய நாட்டுக்கும் இனி ஒரேமாதிரி பொறுப்புதான்.

"2015 - பாரிஸ் மாநாடு"

'எல்லா நாடுகளும்' மாசுக்காற்றைக் குறைக்க ஒப்புக்கொள்ளும் ஒப்பந்தம் 2015 பாரிஸ் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2016 நவம்பர் 4 முதல் சட்டபூர்வமாக செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.

திங்கள், அக்டோபர் 31, 2016

மாவீரன் பண்டார வன்னியன் 213 : வரலாற்று அடையாளம் பாதுகாக்கப்படுமா?

விடுதலைப் புலிகளின் வழிகட்டியாக, தமிழீழத்தின் வீர அடையாளமாக இருப்பது வன்னியர் ஆட்சியும் அதன் கடைசி மன்னன் பண்டார வன்னியனும் ஆகும். 213 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (அக்டோபர் 31) பண்டார வன்னியன் துரோகத்தால் தோற்கடிக்கப்பட்டான். ஈழத்தில் இன்று, வன்னிய ஆட்சியின் அடையாளங்களை அழிக்கும் சதிகள் நடந்துகொண்டிருக்கின்றன!

"பண்டார வன்னியன் வழியில் போரிடுகிறோம்" - பிரபாகரன்

முள்ளிவாய்க்கால் இறுதிகட்ட போரின் நாட்களில் தேசியத்தலைவர் பிரபாகரன் பின்வருமாறு கூறினார்:

"விடுதலைபோராட்டத்தில் ஒருவேளை நாங்கள் தோற்றுப்போகலாம். ஆனால் நாங்கள் விட்டுச்செல்லும் வாள், ‘கூர்மையானதாக’ விட்டுச்செல்லவேண்டும். ஒரு காலத்தில் பண்டாரவன்னியன் இந்த மண்ணின் விடுதலைக்காகப் போராடினான். அவன் காட்டிய வழியில் நாங்கள் போரிடுகின்றோம். எங்களால் முடியாவிட்டால் நாளை இன்னொரு சந்ததி வரும். அது எமது போராட்டத்தினைத் தொடர்ந்து கொண்டுசெல்லும்.” என்றார் பிரபாகரன்.

வன்னி: ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் அடங்காத சுதந்திர பூமி

தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவர்கள் ஈழத்து வன்னிய அரசர்கள். கி.பி ஆறாம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட அக்கபோதிமன்னன் காலத்திலேயே வன்னியர்கள் வன்னியை ஆண்டுள்ளனர் என சில ஆய்வுகள் கூறுகின்றனர். சோழர்கள் காலத்தில் வன்னியர்கள் ஈழத்துக்கு வந்ததாக யாழ்ப்பாண வைபவ மாலை கூறுகிறது. வன்னி பெருநிலத்தில் வன்னியர் ஆட்சி, 1803 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நீண்டிருந்தது.

அன்னியருக்குக் கட்டுப்படாமல் மிகநெடுங்காலம் வன்னிய ஆட்சி நீடித்ததால், அப்பகுதி அடங்காப்பற்று என்று அழைக்கப்பட்டது. போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என எல்லா அன்னியர்களையும் முறியடித்த மாவீரர்கள் வன்னியர்கள். (விடுதலைப் புலிகளின் ஈழப்போர் கடைசிவரை நீடித்திருந்ததும் வன்னியில்தான்).

1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது.

டச்சுக்காரர்கள் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும் ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தின் முற்பகுதியிலும் வன்னிராச்சியத்தை ஆண்ட மன்னன் பண்டாரவன்னியன். ஆயிரமாண்டு வன்னிய அரசப் பாரம்பரியத்தின் கடைசி மன்னர். இவரது முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன்.
டச்சுக்காரர்கள் காலத்திலும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தும் மன்னார், திரிகோணமலை, வன்னிக்காடுகள் என வன்னியர்கள் இடைவிடா கொரில்லா போர் நடத்தி வந்தனர். அவர்களில் ஒளிவிடும் மாணிக்கமாய் வந்த மாவீரன்தான் பண்டார வன்னியன்.

1782-ல் வன்னியை கைப்பற்ற டச்சுக்காரர்கள் நடத்திய போர் பற்றி எழுதும் லூயி என்ற வரலாற்று ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: “டச்சுக்காரர்கள் எத்தனையோ நாடுகளில் போர் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் வன்னியர்களைப் போன்று இப்படி வீரத்துடன் போரிட்டவர்களை உலகில் எங்கும் அவர்கள் காணவில்லை”

வன்னிராச்சியத்தில் தோற்கடிக்கப்படாத மன்னாக திகழ்ந்த பண்டாரவன்னியன் காக்கை வன்னியனின் காட்டிக்கொடுப்பினால் ஆங்கிலேய தளபதி லெப். வொன் டெரிபோர்க்கினால், இதே நாளில் 31.10.1803 அன்று தோற்கடிக்கப்பட்டான்.

பண்டார வன்னியன் கொலை செய்யப்படவில்லை!

பண்டார வன்னியன் நினைவு நாள் "1803 ஆகஸ்ட் 25" என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். ஏனெனில், முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள். அப்போது பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி நடைபெற்று வந்தது. வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கினான். அத்தாக்குதலில் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றினான். அந்த நாள்தான் 1803 ஆகஸ்ட் 25. எனவே, பண்டார வன்னியனின் உச்சபட்சமான போர் வெற்றியே அவரது நினைவு நாளும் ஆகும்!
பண்டார வன்னியன் கொலைசெய்யப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் உறுதியாக இல்லை. பண்டாரவன்னியன் 1803 ஆம் ஆண்டில் தோற்கடிக்கப்பட்டதை வைத்தே, அவன் இறந்த நாள்  (அக்டோபர் 31)  என்று கணக்கிடுகின்றனர். ஆனால், 1810 ஆம் ஆண்டு வரை அவர் உயிரோடு இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், போரில் ஏற்பட்ட காயங்களின் விளைவாக அவர் 1811 ஆம் ஆண்டில் பனங்காமத்தில் இறந்திருப்பார் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அந்த வகையில், பண்டார வன்னியனின் வரலாறும் பிரபாகரனின் ஒன்றாக இருப்பது வியப்பானதாகும்!

அழிகப்படும் வன்னியின் வரலாற்று அடையாளம்

இலங்கை அரசு வன்னியர்களின் வரலாற்று இடங்களை முஸ்லிம்களுக்கு அளிக்கத்தொடங்கியிருக்கிறது. இது ஈழத்தின் வரலாற்றை சிதைக்கும் முயற்சி ஆகும்.

தமிழீழத்தில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தமிழர்களாக கருதப்படுவது இல்லை. விடுதலைப் போரின் போது 1990 ஆம் ஆண்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 1000 முஸ்லிம் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர். முஸ்லிம்களை வெளியேறும் நிலை ஏற்பட்டது தவறு என்று பிற்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒப்புக்கொண்டு, முஸ்லிம்களை மீண்டும் வருகை தருமாறு அழைத்தனர். பின்னர் போரினால் எல்லாம் சின்னபின்னம் ஆனது.
இப்போது, முஸ்லிம்கள் மீள் குடியேற்றம் நடக்கின்றன. ஆனால், கரைதுறைப்பற்று எனும் பிரிவில் மட்டும் 1032 குடும்பங்கள் தாங்கள் விட்டுச்சென்ற இடத்துக்கான ஆதாரங்களை அளித்ததன் அடிப்படையில் அவர்களது பழைய நிலம் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 1455 குடும்பங்கள் நிலமற்றவர்களாக அறிவிக்கப்பட்டு - அவர்களுக்கு புதிய நிலத்தை அளிக்கும் பணியை அரசாங்கம் செய்கிறது. இதற்கு மேலும் 448 குடும்பங்கள் புதிதாக நிலத்தைக் கோரியுள்ளன.

ஆக மொத்தத்தில், 1990 ஆம் ஆண்டில் 1000 குடும்பங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வெளியேறிய நிலையில் - இப்போது கரைதுறைப்பற்று என்கிற ஒரு பகுதியில் மட்டும் சுமார் 3000 குடும்பங்கள் உரிமை கோருகின்றனர். அவர்களில் சுமார் 2000 குடும்பங்கள் புதிதாக நிலம் கோருகிறார்கள். இதற்காக வன்னிக்காட்டை அழித்து, புதிய நிலத்தை அளிக்கிறது இலங்கை அரசு.

இவ்வாறு முஸ்லிம்களுக்கு இலவசமாக வழங்கப்படும் நிலங்களில் ஒரு பகுதி 'வன்னியன் மேடு' என்கிற இடம் ஆகும்! வன்னியர்கள் 'அடங்காபற்று முள்ளியவளை வன்னியர்கள் என்றுதான் அழைக்கப்பட்டனர். அவர்களது ஆதிக்கம் மிகுந்திருந்த பகுதிதான் இப்போது முஸ்லிம்களுக்கு அளிக்கப்படுகிறது.

வன்னியன் மேட்டு பகுதியில்தான் பண்டார வன்னியன் தனது படைகளை நிறுத்தியிருந்தார். இதே காட்டுப்பகுதிக்கு படையெடுத்து வந்த வொன் டெரிபோர்க் என்ற ஆங்கிலேய படைத்தளபதியை பண்டார வன்னியனின் தளபதி குலசேகரன் கைது செய்தார். தனது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட வொன் டெரிபோர்க்கை - பண்டார வன்னியன் மன்னித்து விடுதலை செய்த இடம்தான் வன்னியன் மேடு. பின்னாளில் அதே வொன் டெரிபோர்க் தான் பண்டார வன்னியனை தோற்கடித்தான்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க வன்னியன் மேடு பகுதியை, முஸ்லிம்களின் குடியேற்றப் பகுதியாக மாற்றி வருகிறது இலங்கை அரசு.

இந்த வரலாற்று அழிப்பு தடுக்கப்பட வேண்டும்.

சனி, அக்டோபர் 29, 2016

மாபெரும் வெற்றி: மனித உரிமைப் பேரவையில் இருந்து ரஷ்யா வெளியேற்றம்!

இலங்கை அரசுக்கு பன்னாட்டு அரங்கில் அதிதீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்த ரஷ்ய நாடு -ஐநா மனித உரிமைப் பேரவைக்கு நடந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை மீதான விவாதம் மீண்டும் 2017 மார்ச் மாதம் மனிதஉரிமைப் பேரவையில் வரவுள்ள நிலையில், ரஷ்யாவின் தோல்வி இலங்கை அரசுக்கு ஒரு பின்னடைவே ஆகும்.

47 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா மனித உரிமைப் பேரவைக்கு (UN Human Rights Council), 2017 ஆம் ஆண்டுக்காக 14 உறுப்பினர்கள் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டார்கள். ஐநா அவையில் வெள்ளிக்கிழமை (28.9.2016) நடந்த தேர்தலில் உலகின் அனைத்து நாடுகளும் ரகசிய வாக்கெடுப்பு முறையில் வாக்களித்தன. அதில் ரஷ்ய நாடு தோற்கடிக்கப்பட்டுள்ளது. 

உலகின் அனைத்து மனித உரிமை அமைப்புகளும் ரஷ்யாவுக்கு எதிரான பிரச்சாரம் செய்தன. சிரியா நாட்டில், நேரடியாக போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ள ரஷ்யா எவ்வாறு மனித உரிமைப் பேரவையில் உறுப்பினர் ஆகலாம்? என்கிற கேள்வியை அவை முன்வைத்தன.

எனினும், பன்னாட்டு அரசியலில் ரஷ்யாவுக்கு இருக்கும் பலத்தை வைத்து, அந்த நாடு வெற்றிபெரும் என்றே பெரும்பாலான ஊடகங்கள் கருத்து தெரிவித்தன. ஆனால், அனைத்து நம்பிக்கைகளையும் மீறி, ரஷ்யா தோற்கடிக்கப்பட்டுள்ளது.
ஐநாவில் ரஷ்ய அதிபர் புதின்
ஐநா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் ரஷ்யா, மனித உரிமைப் பேரவைக்கான தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போயிருப்பது சர்வதேச அளவில் அதிர்வலையை உண்டாக்கி இருக்கிறது.

மனித உரிமைப் பேரவை உறுப்பினர் பதவி என்பது மூன்று ஆண்டுகளுக்கான உறுப்பினர் தகுதி ஆகும். தொடர்ந்து இரண்டு முறை உறுப்பினராக இருந்த நாடுகள் மூன்றாவது தேர்தலில் போட்டியிட முடியாது. ஒரு ஆண்டு இடைவெளிவிட்டு மீண்டும் தேர்தலில் நிற்கலாம்.

அமெரிக்கா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் இந்த தேர்தலில் வெற்றிபெற்றுள்ளன. 2016 ஆம் ஆண்டில் உறுப்பினராக இல்லாத அமெரிக்கா, இந்த தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் 2017 ஆம் ஆண்டுமுதல் ஐநா மனித உரிமைப் பேரவையில் உறுப்பினராக சேர்கிறது. இந்தியா ஏற்கனவே, உறுப்பு நாடாக இருந்துவருகிறது.

வியாழன், அக்டோபர் 27, 2016

தமிழக அரசின் சட்டத்துக்கு நீதிமன்றம் தடை: தமிழக கட்சிகளின் கள்ள மவுனம் ஏன்?

"யார் வேண்டுமானாலும் சட்டக் கல்லூரி தொடங்கலாம். ஆனால், வன்னியர் சங்கம் மட்டும் தொடங்கக் கூடாது" - என்கிற கொடூரமான இனவெறியுடன் எட்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக தடை விதித்தன திமுக, அதிமுக கட்சிகள். இதற்காக, சட்டமன்றத்தில் தனியாக ஒரு சட்டமே இயற்றி, ஆளுநரின் ஒப்புதலையும் பெற்று சட்டமாக்கின திராவிடக் கட்சிகள்.

ஒரு சமுதாயத்தை ஒதுக்க வேண்டும், ஒழிக்க வேண்டும், முன்னேற விடவேகூடாது என்பதற்காக அரசாங்கம் தனியாக சட்டம் இயற்றுவது, உலகத்திலேயே தமிழ்நாட்டில்தான் நடந்துள்ளது.

சில சாதிகளை குற்றப்பரம்பரையினர் என்று குற்றம் சாட்டி - தனியாக சட்டம் கொண்டுவந்த ஆங்கிலேய காலனியாதிக்க அரசாங்கத்துக்கும், ஒரு சாதி முன்னேறக் கூடாது என்பதற்காகவே சட்டம் கொண்டுவந்த திராவிடக் கட்சி அரசாங்கத்துக்கும் - அடிப்படை வேறுபாடு எதுவும் இல்லை!

வன்னியர் அறக்கட்டளை கல்லூரிக்கு தடைவிதிக்க வேண்டும் என்பதற்காகவே பிரத்தியோகமாகக் கொண்டுவரப்பட்ட தமிழக அரசின் 'தனியார் சட்டக்கல்லூரி தடைச் சட்டம் செல்லாது' என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் எட்டாண்டு சட்டப் போராட்டத்தின் விளைவாக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

அரசின் சட்டத்தை நீதிமன்றம் தடை செய்வது என்பது மிக முக்கியமான நிகழ்வு. ஆனால், தமிழ்நாடு அரசுக்கு எதிரான இந்த மாபெரும் தீர்ப்பு குறித்து, தமிழகத்தின் கட்சிகள் அனைத்தும் மவுனம் காக்கின்றன! பாட்டாளி மக்கள் கட்சி தவிர, வேறு எந்தக் கட்சியும் இது குறித்து எந்தக் கருத்தும் கூறவில்லை!

ஏன் இந்த கள்ள மவுனம்?

தமிழ்நாட்டில் எது நடந்தாலும் துள்ளிக்குதிக்கும் கட்சிகள், இப்போது எதுவும் சொல்லாமல் இருப்பது ஏன்? 

தமிழக அரசின் சட்டத்தையே நீதிமன்றம் தடை செய்துள்ள நிலையில், அரசாங்கத்தை எதிர்க்கும் நிலையில் உள்ள கட்சிகள் கூட வாய்மூடி மவுனம் காப்பது ஏன்?

இதற்கான பதிலில் தான் - தமிழ்நாட்டில் புரையோடிப் போயிருக்கும் சாதிவெறியும், இனவெறியும் ஒளிந்திருக்கிறது!

ஊடக செய்திகள்:

The Hindu: High Court quashes Act prohibiting private law colleges

HC imposes Rs. 20,000 costs on TN govt.

Verdict a milestone: PMK

Times of India: Can't ban new private law colleges, says HC

DECCAN CHRONICLE: Tamil Nadu can’t stop private law colleges: Madras High Court

New Indian Express: Act barring private colleges from opening law schools struck down in Tamil Nadu

Business Standard: TN act banning new private law colleges quashed

அம்பேத்கர் பல்கலைக்கழகத்துக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்: தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்க விதிக்கப்பட்ட தடை நீங்கியது - உயர் நீதிமன்றம் உத்தரவு

தனியார் சட்ட கல்லூரிகள் தொடங்க உயர் நீதிமன்றம் அனுமதி: தமிழக அரசின் தடை சட்டம் ரத்து

தனியார் சட்டக்கல்லூரி அனுமதி மறுப்பு சட்டத்தை ரத்து செய்து சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

தனியார் சட்டக் கல்லூரி தொடங்க அனுமதியில்லை என்ற சட்டம் ரத்து: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சட்டக்கல்லூரிக்கு அனுமதி: நீண்ட சட்ட போராட்டத்தில் சமூகநீதிக்கு வெற்றி! ராமதாஸ்

தனியார் சட்டக் கல்லூரி அமைக்க தடை விதிக்கும் தமிழக அரசின் புதிய சட்டம் ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்க விதிக்கப்பட்ட தடை ரத்து : உயர்நீதிமன்றம் உத்தரவு

புதன், அக்டோபர் 19, 2016

வன்னி மரம் - வீரத்தின் அடையாளம்: ஒரு மாபெரும் வரலாறு!

தமிழகத்திலும் இந்தியாவிலும் வீரத்தின் அடையாளமாகவும், நெருப்பின் வடிவமாகவும், வெற்றியை தரும் சின்னமாகவும் 'வன்னி மரம்' கருதப்படுகிறது. தமிழர் பண்பாட்டில் வன்னி மரமும், வன்னி மரத்தின் மீது அம்பு தொடுக்கும் விழாவும் முதன்மையானவை ஆகும்.

வறண்ட பகுதிகளில் வளரக்கூடிய பசுமைமாறா மரம் வன்னியாகும். வன்னி மரத்தின் தாவரவியல் பெயர் ப்ரஸாபிஸ் ஸ்பைசிஜரா (Prosopis spicigera). மூலிகை, கால்நடைத் தீவனம், கட்டிடம் கட்ட மரம், விறகு என பலவழிகளிலும் வன்னி மரம் பயன்படுகிறது.

புராணக் கதைகள்

உலகிலுள்ள எல்லா இலைகளிலும் சிறப்பானது வன்னி இலைதான் என்பதால் - சிவபெருமான் தனது சடாமகுடத்தில் வன்னி இலையை சூடியிருக்கிறார் என்பது இந்து மத நம்பிக்கை ஆகும்.

வன்னி மரம் உருவானது குறித்து ஒரு கதை உள்ளது. புருசுண்டு முனிவரின் சாபத்துக்கு ஆளான சமி எனும் பெண் வன்னி மரமாக ஆனதாகவும், பின்னர் விநாயகரை வழிபட்டு சாபம் தீர்ந்ததாகவும் அந்த புராணக்கதை குறிப்பிடுகிறது. (சமற்கிருத மொழியில் வன்னி மரத்தின் பெயர் 'சமி' ஆகும்)

வன்னி மரம் செல்வத்தை தருகிறது என்பதற்கான புராணக் கதையும் உள்ளது. முனிவரிடத்தில் கல்வி கற்ற கௌத்ச்யன் என்பவன், தனது குருநாதருக்கு குருதட்சணை தர அடம்பிடித்தான். பொருட்களின் மீது பற்றில்லாத குருநாதர் - கௌத்ச்யனால் முடியாது எனக் கருதி, 14 கோடி பொன் தட்சணையாக வேண்டும் என்று கேட்டார். அவன் அயோத்தியை ஆண்ட ரகுவிடம் கேட்டான். மன்னரிடமே அவ்வளவு பணம் இல்லாததால், அவர் இந்திரனிடம் கேட்டார். இந்திரன் அயோத்தியில் உள்ள வன்னி மரங்களில் பொன் மழை பெய்யச் செய்தார் - என்பது ஐதீகம் ஆகும்.

இதனால், வன்னி மரத்தின் இலைகள் தங்கமாக கருதப்படுகின்றன. மராட்டியம், ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாட்டில் - விஜயதசமி நாளில் வன்னி இலைகளை கொண்டு வந்து வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது.

விருதாச்சலத்தில் உள்ள விருதகிரீஸ்வரர் கோவிலைக் கட்டியபோது, அதற்காக வேலைசெய்தவர்களுக்கு ஊதியமாக, விபசித்தி முனிவர் என்பவர் தங்கத்திற்கு பதில் வன்னி  இலைகளைக் கொடுத்தாராம். அக்கோவிலின் வன்னி மரத்தில் இருந்து இலைகளை உருவி கொடுக்கும் போது, யார் எவ்வளவு வேலை செய்தார்களோ, அதற்கேற்ற அளவு வன்னி இலைகள் தங்கமாக மாறின என்று கல்வெட்டு கூறுகிறது. இப்போதும் அந்த வன்னிமரம் விருதாச்சலம் கோவிலில் உள்ளது.

வன்னிய புராணத்தில் வீரவன்னியன் யாகத்தீயிலிருந்து உதித்தான் என்று சொல்லப்படுகிறது. அந்த யாகத்தீயை உருவாக்க வன்னி மரக் குச்சிகளே பயன்படுத்தப்பட்டன என்கிறது வன்னிய புராணம்.

புராணங்களில் வன்னி மரம்

மகாபாரதக் கதையில் 12 ஆண்டு வனவாசமும் ஒரு ஆண்டு மறைந்திருந்து வாழுதல் தண்டனையும் விதிக்கப்பட்டதால் பாண்டவர்கள் ஐவரும் 13-ஆவது ஆண்டில் விராட தேசத்துக்குச் சென்றனர். அப்போது அர்ஜுனனது காண்டீபம் முதலான ஆயுதங்களை யாருக்கும் தெரியாது வன்னி மரப் பொந்தில் ஒளித்து வைத்தனர். துரியோதனன் இவர்களை வெளிப்படுத்த முயலும் போது, வன்னி மரப் பொந்தில் இருக்கும் ஆயுதங்களை எடுத்து போரிட்டு கெளரவர்களை வென்றான் அர்ஜுனன். அந்த போரில் வெற்றி பெற்ற நாளே விஜய தசமி என்றும் கூறப்படுகிறது.

இராமாயணத்தில், போருக்கு புறப்படும் முன்பு இராமன் வன்னி மரத்தை வலம் வந்து வழிபட்டு, போருக்கு சென்றதாக உள்ளது.

இலக்கியங்களில் வன்னி மரம்

தமிழ் இலக்கியங்களில் பதிற்றுப்பத்து "மன்னர் மறைத்த தாழி, வன்னி மன்றத்து விளங்கிய காடே" என்றும் மணிமேகலை "சுடலை நோன்பிகள் ஒடியா வுள்ளமொடு மடைதீ யுறுக்கும் வன்னி மன்றமும்" என்றும் குறிப்பிடுகிறது.

“வம்பார் கொன்றை வன்னி மத்தம் மலர் தூவி.
நம்பாவென்ன நல்கும் பெருமான் உறைகோயில்
கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும்
மொய்ம்பார் சோவை வண்பொடும் மூதுகுன்றே” 

- என தேவாரத்தில் திருஞான சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

வன்னி மர திருவிழாக்கள்

சைவம், வைணவம், அம்மன் வழிபாடு, முருகன் வழிபாடு என அனைத்து வழிபாட்டு முறைகளிலும் வன்னி மரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. புரட்டாசி திருவோண நாள் எனப்படும் விஜயதசமி நாளில், வன்னி மர திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

வைணவ தளங்களில், விஜய தசமி நாளில் பெருமாள் அம்பு எய்து அசுரனை கொல்லும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதற்காக வன்னி மரத்தின் மீது பெருமாள் அம்பு எய்வதாக கொண்டாடுகிறார்கள். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் என பல இடங்களிலும் இந்த 'வன்னி மரத்தின் மீது அம்பு எய்தும்' நிகழ்ச்சி நடக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில், முருகப்பெருமான் வன்னி மரத்தின் மீது அம்பு எய்துவதாகக் கொண்டாடப்படுகிறது.

தசரா விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மன் கோபம் கொண்டு அசுரனை அழிக்கும் நிழச்சியாக, வன்னி மரத்தின் மீது அம்பு பாய்ச்சப்படுகிறது. விஜயதசமி நாளில் துர்கை அம்மன் அசுரனை அழிக்க வேல் வாங்கும் நிகழ்ச்சி வன்னி மரத்தின் கீழ் நடப்பதாகும். அவ்வாறே, வன்னி மரத்தில் ஓடி ஒளிந்த சூரனை மகிஷாசுர மர்த்தினி குத்தி கொன்றதாகவும் கொண்டாடப்படுகிறது.

இதனை 'அம்பு போடுதல்'  'மானம்பூ (மா + அம்பு)' 'வன்னி வாழை வெட்டுதல்' என்றெல்லாம் கொண்டாடுகிறார்கள். வாழை மரத்தில் வன்னி மரக்கிளைகளை பதித்து, வாழை மரத்தை வெட்டுகிறார்கள்.

சிவன் கோவில்களிலும் பாரிவேட்டை என்கிற பெயரில் அம்பு போடும் விழாக்கள் நடக்கின்றன. (ஊரைக் காப்பதற்காக வேட்டைக்கு செல்வதையே பாரிவேட்டை என்றனர் என்றும் கருதப்படுகிறது).

தமிழகத்தின் வடமாவட்டங்களில் முதன்மை பண்பாட்டு விழாவாக நடக்கும் திரௌபதி அம்மன் விழாவில் வன்னி மரம் நடுதலும் ஒரு நிகழ்வாக உள்ளது.

"பூந்தொடை விழா'

வன்னி மரத்தின் மீது அம்பு போடுதல் ஒரு இந்து மதத் திருவிழா மட்டுமல்ல. அது மிகப் பழமையான தமிழர் திருவிழாவும் ஆகும். பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாள் போன்றே, பழந்தமிழர்களின் மற்றொரு விழா இந்த "பூந்தொடை விழா' ஆகும். பூந்தொடு அல்லது பூந்தொடை விழா என்றால் 'புதிய அம்பு தொடுக்கும் விழா' என்பதாகும். அதாவது வில்பயிற்சி தொடங்கும் நாள்.

‘வார்கழல் பொலிந்த வன்கண் மழவர்
பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்,

- என அகநானூறு (187) இதனைக் கூறுகிறது.

இவ்வாறு, புரட்டாசி திருவோண நாளில், வன்னி மரத்தில் அம்பு தொடுக்கும் விழா நெடுங்காலமாக கொண்டாடப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக, தமிழ்மன்னரின் போர்களுடன் தொடர்புடைய சமூகங்களும், மன்னர்களும் இதனை கொண்டாடியுள்ளனர். (வன்னிய மன்னர்கள், குறுநில மன்னர்கள், வன்னிய கிராமங்கள் பலவும் இந்த விழாவைக் கொண்டாடியதற்கான கல்வெட்டுகள் உள்ளன என்கிறார் வரலாற்று ஆய்வாளர் முரளி நாயகர்)

கம்பர் எழுதிய சிலையெழுபது நூல் வன்னியர்கள் விஜயதசமி நாளில் வில்லேந்தும் நிகழ்வை குறிப்பிடுகிறது. கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு, சோழ சிற்றரசனாக பல்லவ நாட்டை ஆண்ட, முதற் குலோத்துங்க சோழனுடைய தளபதி கருணாகரத் தொண்டைமானின் குலமாகிய வன்னியர் பெருமையை பாடும் நூல் சிலை எழுபது ஆகும். அந்த நூல் வன்னியர்கள் விஜயதசமி நாளில் அம்பு தொடுக்கும் நிகழ்வை குறிப்பிடுகிறது.

"சொன்மங்கலம் பொருந்தும் தொல்லுலகிற் பல்லுயிரும்
நன்மங்கலம் பெருந்தும் நான்மறையு நனிவிளங்கும்
வன்மங்கலம் பொருந்தி வளர்வனிய குலவலசர்
வின்மங்கலம் பொருந்தும் விறற்றசமி நாட்கொளினே"

வன்னிய அரசர்கள் விஜயதசமி நாளில் வில்லை கையில் ஏந்தினால், நாட்டு மக்களுக்கு ஏராளமான நன்மைகள் உண்டாகும் என்றும், கலிங்கத்தை வெற்றி கொண்ட போருக்கு விஜயதசமி நாளிதான் கருணாகர தொண்டைமான் வில்லேந்தி சென்றார் என்றும் இந்தப் பாடல் கூறுகிறது.

தமிழக தலவிருட்சம்

தமிழகக் கோவில்களில் தலவிருட்சமாக வில்வத்துக்கு அடுத்தபடியாக அதிக அளவில் காணப்படுவது வன்னி மரமே ஆகும். தமிழகத்தின் 1165 பழமையான கோவில்களில் இருக்கும் தலவிருட்சங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், 112 வகையான மரங்கள் தலவிருட்சமாக இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றுள் மிக அதிக எண்ணிக்கையாக 324 கோவில்களில் வில்வ மரம் தலவிருட்சமாக இருக்கிறது. அதற்கு அடுத்ததாக 63 கோவில்களில் வன்னி மரமே தலவிருட்சமாக இருப்பதாக கணக்கெடுப்பு கூறுகிறது.
தஞ்சை பெரிய கோவில், விருத்தாச்சலம், திருவான்மியூர், திருக்காட்டுப்பள்ளி, திருப்பூந்துருத்தி என பல இடங்களில் வன்னி மரம் தல விருட்சம் ஆகும்.

கங்கைகொண்ட சோழபுரத்தின் தலருட்சம் வன்னி மரம்தான். சோழர்கள் தலைநகரம் அங்கு அமைக்கப்பட்டு, கங்கைகொண்ட சோழபுரம் என்று பெயர் சூட்டும் முன்பு அதன் பெயர் வன்னியபுரம் ஆகும். இன்றும் தல விருட்சமாக, கங்கைகொண்டசோழபுரம் கோவிலில் வன்னி மரம் உள்ளது.

வெளி மாநிலங்களில் வன்னி மரம்

பண்பாடு மற்றும் வரலாற்று ரீதியில் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகா, ஒரிசா, மராட்டியம், இராஜஸ்தானம் ஆகிய பகுதிகளுக்குள் பலவிதமான ஒற்றுமைகள் இருக்கின்றன. அவற்றுள் வன்னி மரமும் ஒன்றாகும். இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் மாநில மரமாக இருப்பது வன்னி மரம் ஆகும்.

(பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் மரமாக வன்னி மரம் உள்ளது. துபை, அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்தில் வன்னி மரம் தேசிய மரம் ஆகும். அங்கு வன்னி மர வளர்ப்பு ஊக்குவிக்கப்படுகிறது. வன்னி மரத்தை வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது)

இராஜஸ்தான்

இராஜஸ்தான் மாநிலத்தில் சம்பு ஈஸ்வரர் எனும் சத்திரிய மகரிஷியால், அன்னிய படையெடுப்பை தடுப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட பிஷ்னோய் சாதியினர் மரங்களை வெட்டக்கூடாது என்பதை மரபாகக் கொண்டவர்கள். அவர்களது தெய்வீக மரம் வன்னி மரம் ஆகும்.

1730 ஆம் ஆண்டு, மன்னரின் உத்தரவின் பேரில் வன்னி மரங்கள் வெட்டப்பட்ட போது, ஒவ்வொரு மரத்துக்கும் ஒவ்வொருவர் உயிரைக் கொடுப்பது என்று சபதம் ஏற்று, 363 பேர் வெட்டப்படும் மரங்களைக் கட்டிப்பிடித்து உயிர்த்தியாகம் செய்தனர். பின்னர் மன்னர் மன்னிப்பு கேட்டு பிஷ்னோய்கள் பகுதிகளில் வன்னி மரங்களை வெட்ட தடை செய்தார். அதன் தொடர்ச்சியாகவே இன்றைக்கும் இராஜஸ்தான் மாநிலத்தின் மரமாக வன்னி மரம் உள்ளது.
பிஷ்னோய் சாதியினரின் போராட்டம்
உலகின் மிகப்பழமையான சுற்றுச்சூழல் போராட்டமாகவும் பிஷ்னோய் சாதியினரின் போராட்டம் கருதப்படுகிறது. பிற்காலத்தில் உருவான, சிப்கோ இயக்கம் எனும் சுற்றுச்சூழல் போராட்டத்துக்கு வழிகாட்டி பிஷ்னோய் போரட்டமே ஆகும். (பிஷ்னோய்கள் உயிர்த்தியாகம் நடந்த நாள் புரட்டாசி மாதம் பத்தாம் நாள் ஆகும். இது புரட்டாசி திருவோண நாளுடன் ஒத்துப்போவது வியப்பான ஒற்றுமை ஆகும்)

ஆந்திர மாநிலம்

ஆந்திர மாநிலத்தில் வன்னி மரம் புனித மரமாகக் கருதப்பட்டு, வணங்கப்படுகிறது. தெலுங்கில் 'ஜம்மிச் செட்டு' என்கிறார்கள். பெரியவர்களிடம் வன்னி இலைகளைக் கொடுத்து, அதனை தலையில் அட்சதையாக தூவச் செய்து, ஆசீர்வாதம் பெறுவது ஆந்திர மாநிலத்தின் வழக்கம் ஆகும்.

மராட்டிய மாநிலம்

மராட்டிய வீரர்கள் வன்னி மரத்தை வழிபட்டு அதன் இலைகளைப் பிரசாதமாகப் பெற்று போருக்குச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.

கர்நாடக மாநிலம்

கர்நாடகத்தில் மைசூர் தசராவின் முக்கிய நிகழ்வாக வன்னி மர வழிபாடு உள்ளது. மகிஷாசுரனை வதம் செய்யும் இடம் வன்னி மண்டபம் என்றும் வன்னி மரம் என்றும் அழைக்கப்படுகிறது (கன்னடத்தில் பன்னி மண்டப், பன்னி மரா)

வன்னியர்களும் வன்னி மரமும்

வன்னி மரமும் வன்னியர்களும் பிரிக்கமுடியாத பந்தத்தைக் கொண்டிருக்கிறார்கள். தங்களது சாதித் தொன்மம் ஆன வன்னிய புராணம், வீரவன்னிய மகராஜன் வன்னி மரத்தின் யாக நெருப்பில் இருந்து தோன்றியதாகக் கூறுவதாலும், வன்னி மரமே நெருப்பின் வடிவமாக இருப்பதாலும், திரவுபதி வழிபாட்டில் - பாண்டவர்கள் ஆயுதங்களை வைக்கும் இடமாக வன்னிமரம் இருப்பதாலும், வன்னி மரத்தை வன்னியர்கள் புனிதமானதாகக் கருதியுள்ளனர்.

(கி.பி. 642 ஆம் ஆண்டில் பாதாமி மீது போர்தொடுத்து, புலிகேசி மன்னனை தோற்கடித்தான் நரசிம்மவர்ம பல்லவன். அதன் அடையாளமே வன்னிய புராணம் ஆகும். வீர வன்னிய ராஜன் என்பதும், திரவுபதி அம்மன் வழிபாட்டில் உள்ள போத்துராஜா என்பதும் - நர்சிம்மவர்ம பல்லவனே ஆகும். மாமல்லபுரத்தில் உள்ள கல்வெட்டுகள் பல்லவர்களை போத்துராஜா என்றே குறிப்பிடுகின்றன).

ஏற்கனவே குறிப்பிட்டது போல, புரட்டாசி திருவோண நாளில், பூந்தொடை விழா எனும் வன்னி மரத்தின் மீது புதிதாக அம்பு தொடுக்கும் விழாவை வன்னியர்கள் கொண்டாடி வந்துள்ளனர்.

வன்னியர்கள் தங்கள்து குலதெய்வத்தைப் போன்று வன்னி மரத்தைக் கருதியுள்ளனர். திருமணத்தின் போது வன்னி மரத்தின் கிளையை முதல் பந்தல்காலாக பயன்படுத்த வேண்டும் என்பது வடார்க்காடு பகுதி வன்னியர்களின் பழக்கம் என எட்கர் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார். வன்னியர் மரணம் அடைந்தால் தகனத்திற்கு வன்னி மரக் கட்டைகளை பயன்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது.

வன்னி மரம் எனும் மாபெரும் மரபு

மொத்தத்தில், வன்னி மரம் என்பது நெருப்பு, வீரம், வெற்றி ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளிலும், பல நம்பிக்கைகளிலும், பல மன்னர்களின் மரபுகளிலும் வன்னி மரம் போருடன் தொடர்புடையதாக இருந்துள்ளது. சமூகங்கள் அளவில் தமிழ்நாட்டில் வன்னியர்களும் இராஜஸ்தானின் பிஷ்னோய் சமூகமும் நேரடியாக வன்னி மரத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
கனடா நாட்டில் வன்னி தெரு 
(வன்னியர்கள் என்கிற பெயரும், வன்னி மரமும் ஒன்றோடொன்று இணைந்து இருப்பதால் - ஈழத்துக்கு சென்ற வன்னியர்கள் ஆட்சி செய்த பகுதி வன்னி நாடு என்றும் வன்னிக்காடு என்றும் அழைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2013 ஆம் ஆண்டில் கனடா நாட்டில் ஈழத்தமிழர்கள் வாழும் ஒரு பகுதிக்கு வன்னி தெரு என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது).

வியாழன், அக்டோபர் 13, 2016

ரெமோவும் ஆனந்த விகடனும்: தறுதலைக் காதலை எதிர்க்கும் தறுதலை!

தறுதலைக் காதலை போற்றி வளர்க்கும் 'ரெமோ' படத்தின் மீது பாய்ந்து விழுந்து குதறியிருக்கிறது ஆனந்த விகடன். அந்த திரைப்படம் குறித்த விமர்சனத்தில் "இது மாதிரி படங்கள் தமிழ் சினிமாவுக்கு மட்டும் அல்ல, சமூகத்துக்கே கேடு!" என்று பொங்கியிருக்கிறது விகடன் விமர்சனக் குழு!

இந்த விமர்சனத்தில்:

ஒரு பெண்ணைக் காதலிக்கவைக்க, என்னவும் செய்யலாம்; எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம்; பின்னாலேயே திரிந்து டார்ச்சர் கொடுக்கலாம். அந்தப் பெண்ணே `எனக்கு இந்த லவ்ல விருப்பம் இல்லை, பின்னால் வராதே!' என விரட்டினாலும் விடவே கூடாது. அவரை ஐ லவ் யூ சொல்லவைக்க, எந்த லெவலுக்கும் இறங்கலாம். இதுதான் இந்தப் படம் சொல்லும் செய்தி. 

படம் நெடுக நிச்சயதார்த்தம் ஆன பெண்ணாக வரும் கீர்த்தி சுரேஷ்… தூத்துக்குடி பிரான்சினாவை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார். 

`பெண் என்பவள், இலக்குவைத்து அடையக்கூடிய பொருள்’ என்பதே இயக்குநர் முன்வைக்கும் அழுத்தமான மெசேஜ். 

- என்கிறது ஆனந்த விகடன்.

இடிப்பது பெருமாள் கோவில்: படிப்பது ராமாயணமாயனமா?

தமிழ்நாட்டின் தறுதலைக் காதல் நாடகங்கள் அனைத்துக்கும் வக்காலத்து வாங்கிவந்தது இதே விகடன் கும்பல் தான்.

"தருமபுரி"

தருமபுரி சம்பவத்தின் போது - திருமண வயதை அடையாத 19 வயது நபரின் தறுதலை திருமணம் தான் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதை ஒருபோதும் ஒத்துக்கொள்ளவில்லை விகடன். மாறாக, 19 வயது சிறுவனின் காதல்தான் புரட்சிகரமான, புனிதமான, வரலாற்று சிறப்பு மிக்க காதல் என்று கொண்டாடியது விகடன். இதுபோன்ற குழந்தைகளின் சாதி ஒழிப்பு காதலை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று பிரச்சாரம் செய்தது விகடன் கும்பல்.

"நுங்கம்பாக்கம்"

இன்னுமொரு தறுதலை - நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காதலிக்க மறுத்த பெண்ணை முகத்திலேயே வெட்டிக்கொன்றான். அந்தக் கொடியவன் பின்னர் சந்தேகமான முறையில் மரணமடைந்தான். சிலர் அது சிறையில் நடந்த கொலை என்றனர். பிரேத பரிசோதனை செய்த 'எய்ம்ஸ்' மருத்துவர் - அவன் கொலைசெய்யப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என்றார்.

அந்த தறுதலைக் காதல் கொலைக்காரனை தியாகியாக்கி, கவிதை வாசித்தது விகடன்.
கொலைகாரன் ராம்குமாரை புகழ்ந்து  ஜூனியர் விகடனில் வெளியான பழனிபாரதி கவிதை

இப்படி, சாதி ஒழிப்பு போர்வையில் தறுதலைக் காதலுக்காக அல்லும் பகலும் அயராது உழைக்கும் விகடன் கும்பல்தான் - இப்போது தறுதலைக் காதல் திரைப்படத்துக்கு எதிராக கொந்தளித்துள்ளது.

"படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவிலா?" என்பார்கள், ஆனால், "பெருமாள் கோவிலை இடிப்பதையே" முழுநேரத் தொழிலாகக் கொண்ட விகடன் கும்பல் - இப்போது "ராமயணம் படிப்பது" கொடுமையாக இருக்கிறது! 
-----------------------------------------------
விகடன் கும்பலின் விநோத கூத்து!

ஆனந்த விகடன் இதழில் ரெமோ திரைப்படத்துக்கு எதிராக கொந்தளித்திருக்கும் அதே விகடன் கும்பல் - அதன்  விகடன்.காம் இணைய பக்கத்தில் அதே ரெமோ படத்தை போற்றிப் புகழ்ந்திருக்கிறது! 

"லாஜிக் மீறல்களை மறக்கடிக்கும் அந்த மேஜிக்! - ரெமோ விமர்சனம் #REMO" - எனும்  விகடன்.காம் இணைய தளவிமர்சனத்தை இங்கே காண்க (இங்கே சொடுக்கவும்) 
-----------------------------------------------
இணைப்பு: ஒருதலை காதலா? தறுதலை காதலா? - மருத்துவர் ச. இராமதாசு, தினமணி கட்டுரை (இங்கே சொடுக்கவும்)