Pages

புதன், அக்டோபர் 19, 2016

வன்னி மரம் - வீரத்தின் அடையாளம்: ஒரு மாபெரும் வரலாறு!

தமிழகத்திலும் இந்தியாவிலும் வீரத்தின் அடையாளமாகவும், நெருப்பின் வடிவமாகவும், வெற்றியை தரும் சின்னமாகவும் 'வன்னி மரம்' கருதப்படுகிறது. தமிழர் பண்பாட்டில் வன்னி மரமும், வன்னி மரத்தின் மீது அம்பு தொடுக்கும் விழாவும் முதன்மையானவை ஆகும்.

வறண்ட பகுதிகளில் வளரக்கூடிய பசுமைமாறா மரம் வன்னியாகும். வன்னி மரத்தின் தாவரவியல் பெயர் ப்ரஸாபிஸ் ஸ்பைசிஜரா (Prosopis spicigera). மூலிகை, கால்நடைத் தீவனம், கட்டிடம் கட்ட மரம், விறகு என பலவழிகளிலும் வன்னி மரம் பயன்படுகிறது.

புராணக் கதைகள்

உலகிலுள்ள எல்லா இலைகளிலும் சிறப்பானது வன்னி இலைதான் என்பதால் - சிவபெருமான் தனது சடாமகுடத்தில் வன்னி இலையை சூடியிருக்கிறார் என்பது இந்து மத நம்பிக்கை ஆகும்.

வன்னி மரம் உருவானது குறித்து ஒரு கதை உள்ளது. புருசுண்டு முனிவரின் சாபத்துக்கு ஆளான சமி எனும் பெண் வன்னி மரமாக ஆனதாகவும், பின்னர் விநாயகரை வழிபட்டு சாபம் தீர்ந்ததாகவும் அந்த புராணக்கதை குறிப்பிடுகிறது. (சமற்கிருத மொழியில் வன்னி மரத்தின் பெயர் 'சமி' ஆகும்)

வன்னி மரம் செல்வத்தை தருகிறது என்பதற்கான புராணக் கதையும் உள்ளது. முனிவரிடத்தில் கல்வி கற்ற கௌத்ச்யன் என்பவன், தனது குருநாதருக்கு குருதட்சணை தர அடம்பிடித்தான். பொருட்களின் மீது பற்றில்லாத குருநாதர் - கௌத்ச்யனால் முடியாது எனக் கருதி, 14 கோடி பொன் தட்சணையாக வேண்டும் என்று கேட்டார். அவன் அயோத்தியை ஆண்ட ரகுவிடம் கேட்டான். மன்னரிடமே அவ்வளவு பணம் இல்லாததால், அவர் இந்திரனிடம் கேட்டார். இந்திரன் அயோத்தியில் உள்ள வன்னி மரங்களில் பொன் மழை பெய்யச் செய்தார் - என்பது ஐதீகம் ஆகும்.

இதனால், வன்னி மரத்தின் இலைகள் தங்கமாக கருதப்படுகின்றன. மராட்டியம், ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாட்டில் - விஜயதசமி நாளில் வன்னி இலைகளை கொண்டு வந்து வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது.

விருதாச்சலத்தில் உள்ள விருதகிரீஸ்வரர் கோவிலைக் கட்டியபோது, அதற்காக வேலைசெய்தவர்களுக்கு ஊதியமாக, விபசித்தி முனிவர் என்பவர் தங்கத்திற்கு பதில் வன்னி  இலைகளைக் கொடுத்தாராம். அக்கோவிலின் வன்னி மரத்தில் இருந்து இலைகளை உருவி கொடுக்கும் போது, யார் எவ்வளவு வேலை செய்தார்களோ, அதற்கேற்ற அளவு வன்னி இலைகள் தங்கமாக மாறின என்று கல்வெட்டு கூறுகிறது. இப்போதும் அந்த வன்னிமரம் விருதாச்சலம் கோவிலில் உள்ளது.

வன்னிய புராணத்தில் வீரவன்னியன் யாகத்தீயிலிருந்து உதித்தான் என்று சொல்லப்படுகிறது. அந்த யாகத்தீயை உருவாக்க வன்னி மரக் குச்சிகளே பயன்படுத்தப்பட்டன என்கிறது வன்னிய புராணம்.

புராணங்களில் வன்னி மரம்

மகாபாரதக் கதையில் 12 ஆண்டு வனவாசமும் ஒரு ஆண்டு மறைந்திருந்து வாழுதல் தண்டனையும் விதிக்கப்பட்டதால் பாண்டவர்கள் ஐவரும் 13-ஆவது ஆண்டில் விராட தேசத்துக்குச் சென்றனர். அப்போது அர்ஜுனனது காண்டீபம் முதலான ஆயுதங்களை யாருக்கும் தெரியாது வன்னி மரப் பொந்தில் ஒளித்து வைத்தனர். துரியோதனன் இவர்களை வெளிப்படுத்த முயலும் போது, வன்னி மரப் பொந்தில் இருக்கும் ஆயுதங்களை எடுத்து போரிட்டு கெளரவர்களை வென்றான் அர்ஜுனன். அந்த போரில் வெற்றி பெற்ற நாளே விஜய தசமி என்றும் கூறப்படுகிறது.

இராமாயணத்தில், போருக்கு புறப்படும் முன்பு இராமன் வன்னி மரத்தை வலம் வந்து வழிபட்டு, போருக்கு சென்றதாக உள்ளது.

இலக்கியங்களில் வன்னி மரம்

தமிழ் இலக்கியங்களில் பதிற்றுப்பத்து "மன்னர் மறைத்த தாழி, வன்னி மன்றத்து விளங்கிய காடே" என்றும் மணிமேகலை "சுடலை நோன்பிகள் ஒடியா வுள்ளமொடு மடைதீ யுறுக்கும் வன்னி மன்றமும்" என்றும் குறிப்பிடுகிறது.

“வம்பார் கொன்றை வன்னி மத்தம் மலர் தூவி.
நம்பாவென்ன நல்கும் பெருமான் உறைகோயில்
கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும்
மொய்ம்பார் சோவை வண்பொடும் மூதுகுன்றே” 

- என தேவாரத்தில் திருஞான சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

வன்னி மர திருவிழாக்கள்

சைவம், வைணவம், அம்மன் வழிபாடு, முருகன் வழிபாடு என அனைத்து வழிபாட்டு முறைகளிலும் வன்னி மரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. புரட்டாசி திருவோண நாள் எனப்படும் விஜயதசமி நாளில், வன்னி மர திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

வைணவ தளங்களில், விஜய தசமி நாளில் பெருமாள் அம்பு எய்து அசுரனை கொல்லும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதற்காக வன்னி மரத்தின் மீது பெருமாள் அம்பு எய்வதாக கொண்டாடுகிறார்கள். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் என பல இடங்களிலும் இந்த 'வன்னி மரத்தின் மீது அம்பு எய்தும்' நிகழ்ச்சி நடக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில், முருகப்பெருமான் வன்னி மரத்தின் மீது அம்பு எய்துவதாகக் கொண்டாடப்படுகிறது.

தசரா விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மன் கோபம் கொண்டு அசுரனை அழிக்கும் நிழச்சியாக, வன்னி மரத்தின் மீது அம்பு பாய்ச்சப்படுகிறது. விஜயதசமி நாளில் துர்கை அம்மன் அசுரனை அழிக்க வேல் வாங்கும் நிகழ்ச்சி வன்னி மரத்தின் கீழ் நடப்பதாகும். அவ்வாறே, வன்னி மரத்தில் ஓடி ஒளிந்த சூரனை மகிஷாசுர மர்த்தினி குத்தி கொன்றதாகவும் கொண்டாடப்படுகிறது.

இதனை 'அம்பு போடுதல்'  'மானம்பூ (மா + அம்பு)' 'வன்னி வாழை வெட்டுதல்' என்றெல்லாம் கொண்டாடுகிறார்கள். வாழை மரத்தில் வன்னி மரக்கிளைகளை பதித்து, வாழை மரத்தை வெட்டுகிறார்கள்.

சிவன் கோவில்களிலும் பாரிவேட்டை என்கிற பெயரில் அம்பு போடும் விழாக்கள் நடக்கின்றன. (ஊரைக் காப்பதற்காக வேட்டைக்கு செல்வதையே பாரிவேட்டை என்றனர் என்றும் கருதப்படுகிறது).

தமிழகத்தின் வடமாவட்டங்களில் முதன்மை பண்பாட்டு விழாவாக நடக்கும் திரௌபதி அம்மன் விழாவில் வன்னி மரம் நடுதலும் ஒரு நிகழ்வாக உள்ளது.

"பூந்தொடை விழா'

வன்னி மரத்தின் மீது அம்பு போடுதல் ஒரு இந்து மதத் திருவிழா மட்டுமல்ல. அது மிகப் பழமையான தமிழர் திருவிழாவும் ஆகும். பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாள் போன்றே, பழந்தமிழர்களின் மற்றொரு விழா இந்த "பூந்தொடை விழா' ஆகும். பூந்தொடு அல்லது பூந்தொடை விழா என்றால் 'புதிய அம்பு தொடுக்கும் விழா' என்பதாகும். அதாவது வில்பயிற்சி தொடங்கும் நாள்.

‘வார்கழல் பொலிந்த வன்கண் மழவர்
பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்,

- என அகநானூறு (187) இதனைக் கூறுகிறது.

இவ்வாறு, புரட்டாசி திருவோண நாளில், வன்னி மரத்தில் அம்பு தொடுக்கும் விழா நெடுங்காலமாக கொண்டாடப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக, தமிழ்மன்னரின் போர்களுடன் தொடர்புடைய சமூகங்களும், மன்னர்களும் இதனை கொண்டாடியுள்ளனர். (வன்னிய மன்னர்கள், குறுநில மன்னர்கள், வன்னிய கிராமங்கள் பலவும் இந்த விழாவைக் கொண்டாடியதற்கான கல்வெட்டுகள் உள்ளன என்கிறார் வரலாற்று ஆய்வாளர் முரளி நாயகர்)

கம்பர் எழுதிய சிலையெழுபது நூல் வன்னியர்கள் விஜயதசமி நாளில் வில்லேந்தும் நிகழ்வை குறிப்பிடுகிறது. கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு, சோழ சிற்றரசனாக பல்லவ நாட்டை ஆண்ட, முதற் குலோத்துங்க சோழனுடைய தளபதி கருணாகரத் தொண்டைமானின் குலமாகிய வன்னியர் பெருமையை பாடும் நூல் சிலை எழுபது ஆகும். அந்த நூல் வன்னியர்கள் விஜயதசமி நாளில் அம்பு தொடுக்கும் நிகழ்வை குறிப்பிடுகிறது.

"சொன்மங்கலம் பொருந்தும் தொல்லுலகிற் பல்லுயிரும்
நன்மங்கலம் பெருந்தும் நான்மறையு நனிவிளங்கும்
வன்மங்கலம் பொருந்தி வளர்வனிய குலவலசர்
வின்மங்கலம் பொருந்தும் விறற்றசமி நாட்கொளினே"

வன்னிய அரசர்கள் விஜயதசமி நாளில் வில்லை கையில் ஏந்தினால், நாட்டு மக்களுக்கு ஏராளமான நன்மைகள் உண்டாகும் என்றும், கலிங்கத்தை வெற்றி கொண்ட போருக்கு விஜயதசமி நாளிதான் கருணாகர தொண்டைமான் வில்லேந்தி சென்றார் என்றும் இந்தப் பாடல் கூறுகிறது.

தமிழக தலவிருட்சம்

தமிழகக் கோவில்களில் தலவிருட்சமாக வில்வத்துக்கு அடுத்தபடியாக அதிக அளவில் காணப்படுவது வன்னி மரமே ஆகும். தமிழகத்தின் 1165 பழமையான கோவில்களில் இருக்கும் தலவிருட்சங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், 112 வகையான மரங்கள் தலவிருட்சமாக இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றுள் மிக அதிக எண்ணிக்கையாக 324 கோவில்களில் வில்வ மரம் தலவிருட்சமாக இருக்கிறது. அதற்கு அடுத்ததாக 63 கோவில்களில் வன்னி மரமே தலவிருட்சமாக இருப்பதாக கணக்கெடுப்பு கூறுகிறது.
தஞ்சை பெரிய கோவில், விருத்தாச்சலம், திருவான்மியூர், திருக்காட்டுப்பள்ளி, திருப்பூந்துருத்தி என பல இடங்களில் வன்னி மரம் தல விருட்சம் ஆகும்.

கங்கைகொண்ட சோழபுரத்தின் தலருட்சம் வன்னி மரம்தான். சோழர்கள் தலைநகரம் அங்கு அமைக்கப்பட்டு, கங்கைகொண்ட சோழபுரம் என்று பெயர் சூட்டும் முன்பு அதன் பெயர் வன்னியபுரம் ஆகும். இன்றும் தல விருட்சமாக, கங்கைகொண்டசோழபுரம் கோவிலில் வன்னி மரம் உள்ளது.

வெளி மாநிலங்களில் வன்னி மரம்

பண்பாடு மற்றும் வரலாற்று ரீதியில் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகா, ஒரிசா, மராட்டியம், இராஜஸ்தானம் ஆகிய பகுதிகளுக்குள் பலவிதமான ஒற்றுமைகள் இருக்கின்றன. அவற்றுள் வன்னி மரமும் ஒன்றாகும். இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் மாநில மரமாக இருப்பது வன்னி மரம் ஆகும்.

(பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் மரமாக வன்னி மரம் உள்ளது. துபை, அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்தில் வன்னி மரம் தேசிய மரம் ஆகும். அங்கு வன்னி மர வளர்ப்பு ஊக்குவிக்கப்படுகிறது. வன்னி மரத்தை வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது)

இராஜஸ்தான்

இராஜஸ்தான் மாநிலத்தில் சம்பு ஈஸ்வரர் எனும் சத்திரிய மகரிஷியால், அன்னிய படையெடுப்பை தடுப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட பிஷ்னோய் சாதியினர் மரங்களை வெட்டக்கூடாது என்பதை மரபாகக் கொண்டவர்கள். அவர்களது தெய்வீக மரம் வன்னி மரம் ஆகும்.

1730 ஆம் ஆண்டு, மன்னரின் உத்தரவின் பேரில் வன்னி மரங்கள் வெட்டப்பட்ட போது, ஒவ்வொரு மரத்துக்கும் ஒவ்வொருவர் உயிரைக் கொடுப்பது என்று சபதம் ஏற்று, 363 பேர் வெட்டப்படும் மரங்களைக் கட்டிப்பிடித்து உயிர்த்தியாகம் செய்தனர். பின்னர் மன்னர் மன்னிப்பு கேட்டு பிஷ்னோய்கள் பகுதிகளில் வன்னி மரங்களை வெட்ட தடை செய்தார். அதன் தொடர்ச்சியாகவே இன்றைக்கும் இராஜஸ்தான் மாநிலத்தின் மரமாக வன்னி மரம் உள்ளது.
பிஷ்னோய் சாதியினரின் போராட்டம்
உலகின் மிகப்பழமையான சுற்றுச்சூழல் போராட்டமாகவும் பிஷ்னோய் சாதியினரின் போராட்டம் கருதப்படுகிறது. பிற்காலத்தில் உருவான, சிப்கோ இயக்கம் எனும் சுற்றுச்சூழல் போராட்டத்துக்கு வழிகாட்டி பிஷ்னோய் போரட்டமே ஆகும். (பிஷ்னோய்கள் உயிர்த்தியாகம் நடந்த நாள் புரட்டாசி மாதம் பத்தாம் நாள் ஆகும். இது புரட்டாசி திருவோண நாளுடன் ஒத்துப்போவது வியப்பான ஒற்றுமை ஆகும்)

ஆந்திர மாநிலம்

ஆந்திர மாநிலத்தில் வன்னி மரம் புனித மரமாகக் கருதப்பட்டு, வணங்கப்படுகிறது. தெலுங்கில் 'ஜம்மிச் செட்டு' என்கிறார்கள். பெரியவர்களிடம் வன்னி இலைகளைக் கொடுத்து, அதனை தலையில் அட்சதையாக தூவச் செய்து, ஆசீர்வாதம் பெறுவது ஆந்திர மாநிலத்தின் வழக்கம் ஆகும்.

மராட்டிய மாநிலம்

மராட்டிய வீரர்கள் வன்னி மரத்தை வழிபட்டு அதன் இலைகளைப் பிரசாதமாகப் பெற்று போருக்குச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.

கர்நாடக மாநிலம்

கர்நாடகத்தில் மைசூர் தசராவின் முக்கிய நிகழ்வாக வன்னி மர வழிபாடு உள்ளது. மகிஷாசுரனை வதம் செய்யும் இடம் வன்னி மண்டபம் என்றும் வன்னி மரம் என்றும் அழைக்கப்படுகிறது (கன்னடத்தில் பன்னி மண்டப், பன்னி மரா)

வன்னியர்களும் வன்னி மரமும்

வன்னி மரமும் வன்னியர்களும் பிரிக்கமுடியாத பந்தத்தைக் கொண்டிருக்கிறார்கள். தங்களது சாதித் தொன்மம் ஆன வன்னிய புராணம், வீரவன்னிய மகராஜன் வன்னி மரத்தின் யாக நெருப்பில் இருந்து தோன்றியதாகக் கூறுவதாலும், வன்னி மரமே நெருப்பின் வடிவமாக இருப்பதாலும், திரவுபதி வழிபாட்டில் - பாண்டவர்கள் ஆயுதங்களை வைக்கும் இடமாக வன்னிமரம் இருப்பதாலும், வன்னி மரத்தை வன்னியர்கள் புனிதமானதாகக் கருதியுள்ளனர்.

(கி.பி. 642 ஆம் ஆண்டில் பாதாமி மீது போர்தொடுத்து, புலிகேசி மன்னனை தோற்கடித்தான் நரசிம்மவர்ம பல்லவன். அதன் அடையாளமே வன்னிய புராணம் ஆகும். வீர வன்னிய ராஜன் என்பதும், திரவுபதி அம்மன் வழிபாட்டில் உள்ள போத்துராஜா என்பதும் - நர்சிம்மவர்ம பல்லவனே ஆகும். மாமல்லபுரத்தில் உள்ள கல்வெட்டுகள் பல்லவர்களை போத்துராஜா என்றே குறிப்பிடுகின்றன).

ஏற்கனவே குறிப்பிட்டது போல, புரட்டாசி திருவோண நாளில், பூந்தொடை விழா எனும் வன்னி மரத்தின் மீது புதிதாக அம்பு தொடுக்கும் விழாவை வன்னியர்கள் கொண்டாடி வந்துள்ளனர்.

வன்னியர்கள் தங்கள்து குலதெய்வத்தைப் போன்று வன்னி மரத்தைக் கருதியுள்ளனர். திருமணத்தின் போது வன்னி மரத்தின் கிளையை முதல் பந்தல்காலாக பயன்படுத்த வேண்டும் என்பது வடார்க்காடு பகுதி வன்னியர்களின் பழக்கம் என எட்கர் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார். வன்னியர் மரணம் அடைந்தால் தகனத்திற்கு வன்னி மரக் கட்டைகளை பயன்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது.

வன்னி மரம் எனும் மாபெரும் மரபு

மொத்தத்தில், வன்னி மரம் என்பது நெருப்பு, வீரம், வெற்றி ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளிலும், பல நம்பிக்கைகளிலும், பல மன்னர்களின் மரபுகளிலும் வன்னி மரம் போருடன் தொடர்புடையதாக இருந்துள்ளது. சமூகங்கள் அளவில் தமிழ்நாட்டில் வன்னியர்களும் இராஜஸ்தானின் பிஷ்னோய் சமூகமும் நேரடியாக வன்னி மரத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
கனடா நாட்டில் வன்னி தெரு 
(வன்னியர்கள் என்கிற பெயரும், வன்னி மரமும் ஒன்றோடொன்று இணைந்து இருப்பதால் - ஈழத்துக்கு சென்ற வன்னியர்கள் ஆட்சி செய்த பகுதி வன்னி நாடு என்றும் வன்னிக்காடு என்றும் அழைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2013 ஆம் ஆண்டில் கனடா நாட்டில் ஈழத்தமிழர்கள் வாழும் ஒரு பகுதிக்கு வன்னி தெரு என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது).

1 கருத்து:

vimalrajnpt சொன்னது…

அருமையான பதிவு