Pages

வியாழன், அக்டோபர் 06, 2016

தெருக்கூத்து எங்களின் உடல் அல்ல; உதிரம்


முக்கலைகளின் தொகுப்பாய், முச்சந்தியில் நடக்கும் மூத்த கலையே, தெருக்கூத்து. இது, இந்தியாவின் பாரம்பரிய சொத்து. தென்னகத்தில், வடக்கத்தி பாணி, தெற்கத்தி பாணி என்னும், இரு பிரிவாய், நடை, உடை, பாவனை, இசையால் பிரிந்து கிடக்கிறது. கட்டைக்கூத்து என்று, பரவலாக அழைக்கப்படும் தெருக்கூத்து தான், கதகளியின் தாய் என்கின்றனர், கலை ஆய்வாளர்கள். விருந்தில் வாழை இலை போல், திருவிழா துவங்கி தெருவிழா வரை, கூத்து தான் முக்கிய அம்சமாய் இருந்தது ஒருகாலத்தில். ஆறுகள், வாய்க்காலாய் சுருங்குவது போல், கைக்குள் இணையம் வந்து விட்ட நிலையில், தெருக்கூத்து ரசிகர்களின் எண்ணிக்கையும் சுருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (2.9.2016), சி.ஐ.டி.நகர், தக்கர்பாபா வித்யாலயாவில் நடந்த விதை சத்தியாகிரகத்தில், இரண்டு தெருக்கூத்து கலைஞர்கள், பார்வையாளர்களை கவர்ந்தனர். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் வயது வேறுபாடு இல்லாமல், அந்த கலைஞர்களுடன் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.

உத்திரமேரூர், இளநகரைச் சேர்ந்த சேகர் என்ற கூத்துக் கலைஞரிடம், தெருக்கூத்து பற்றி கேட்டபோது, ''தெருக்கூத்து, எங்களின் உடல் அல்ல; உதிரம். அது, எங்களை எங்கெங்கோ அழைத்துச் செல்கிறது. எங்களை, கிருஷ்ணனாகவும், தருமனாகவும் ரசிகர்கள் போற்றுவர்; அதேநேரம், துரியோதனன் வேடத்தில் துாற்றுவர். வேடமிட்ட பின், நாங்கள் நாங்களே அல்ல என்பதை உணர்ந்துள்ளோம்,'' என்றார், தன் நினைவுகளை மீட்டெடுத்து.
அவர் அருகில் இருந்த பூபதி தொடர்ந்தார் -

வினாயகர் அருளல், அபிமன்யு சண்டை, கிருஷ்ணன் துாது, அறவாண் களபலி என, பல்வேறு குட்டிக்கதைகளை நாங்கள் கூத்தில் நிகழ்த்துவோம். மகாபாரதம் மட்டும், 20 இரவுகள் நடத்துவோம். ராமாயணம் கதையும் எங்கள் கூத்தில் உண்டு. அம்மன் கதைகள், கண்ணன் பிறப்பு உள்ளிட்ட கதைகளும் எங்கள் கூத்தில் இடம்பெறும். கூத்து பொதுவாக, தை மாதம் துவங்கி, ஆனி மாதம் வரை நடக்கும்.இவ்வாறு, கூத்தின் கதை மற்றும் காலம் பற்றி பூபதி விவரித்தார்.
அர்ஜுனன் தபசு

தெருக்கூத்து.காம்' ( http://therukoothu.com ) என்ற, இணையப்பக்கத்தை நிர்வகித்து வரும், சுரா சுரேஷ் கூறியதாவது:

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட வட மாவட்டங்களில் மட்டும், ரசிகர்களால் விரும்பப்படும் கலையாக இது உள்ளது. இது, முழுக்க முழுக்க, தெருக்களில் ஆடப்படும் கலை. இதில், ஆர்மோனியம், தபேலா, முகவீணை ஆகிய வாத்தியங்கள் மட்டும் இடம்பெறும்.

கலைஞர்கள் பெரும்பாலும், மைக் இல்லாமலேயே, மிகவும் சத்தமாக பேசி, பாடுவர். பழங்காலத்தில், இந்த கலையில் பெண்கள் இருந்ததில்லை. தற்போது, பல்வேறு குழுக்களில், பெண்களும் இந்த கலைகளை கற்றுக்கொண்டு, பிரமாதமாக கலையை வெளிப்படுத்துகின்றனர்.
இந்த கலைஞர்கள், விறைப்பான பாவாடைகள், கல்யாண முருங்கை கட்டையிலிருந்து செய்யப்பட்ட ஆபரணங்கள், அடர் வண்ணங்களில் தங்களை அலங்கரித்துக் கொள்வர். ஒருவர், ஒரு கதாபாத்திரத்தை ஏற்க, குறைந்தது ஒரு மணி நேரம் வரை ஆகும். 15க்கும் மேற்பட்ட கலைஞர்கள் உள்ள ஒரு குழுவை, வாத்தியார் என்பவரே வழி நடத்துவார்.
பெரும்பாலும், கிருஷ்ணன் கோவில், திரவுபதி அம்மன் கோவில்களில், இந்த கலைகள் நடத்தப்படும்.

பல்லவர் காலத்தில், தொண்டை மண்டலத்தில், வைணவத்தை பரப்பவும், வீரர்களை எழுச்சியுடன் வழி நடத்தவும், மகாபாரதம், ராமாயணக் கதைகளை சொல்ல தெருக்கூத்து வளர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. வில்வளைப்பு, திரவுபதி கல்யாணம், சுபத்ரை கல்யாணம், ராஜசூயயாகம், துகில் உரித்தல், அர்ஜுனன் தபசு, குறவஞ்சி, கீசகவதம், கிருஷ்ணன் துாது, அபிமன்யூ போர், கர்ண மோட்சம், பதினெட்டாம் போர் ஆகியவை, மகாபாரத கூத்துக்கள் ஆகும். ராமாயணத்தில், ராமர் பட்டாபிஷேகம், பக்த அனுமான், சீதா கல்யாணம் ஆகியவையும் இடம்பெறும்.
துரியோதனன் படுகளம்

இவ்வாறான புராண கதைகள் மட்டுமின்றி, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதைகளிலும் இவர்கள் நடிப்பதுண்டு. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள், இறப்பு சடங்குகளிலும், அதற்கேற்றவாறு கூத்தாடுவர்.

தெருக்கூத்து கலைஞர்களிடம், போதிய படிப்பறிவு இல்லை. அதனால், கூத்து நடக்காத நாட்களில், கூலி வேலைக்கு செல்வர். அவர்களுக்கான அரசு உதவிகள் கிடைக்க உதவுவதோடு, அக்கலையை ஆவணப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன்.

தற்போது, அழிந்து வரும் இக்கலையை வளர்க்க, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில், ஒரு மணி நேரம் நிகழ்த்துவதன் மூலம், அக்கலைஞர்களை காக்கலாம். காரணம், நம் மண்ணின் கலை, நம் கண் முன் அழியக்கூடாது. இவ்வாறு, அவர் பேசினார். தொடர்புக்கு: 96264 62802, 72992 12345

(இச்செய்தி தினமலர் நாளிதழின் படைப்பு - நன்றி: தினமலர் 4.9.2016)

குறிப்பு: "பல்லவர் காலத்தில், தொண்டை மண்டலத்தில், ...வீரர்களை எழுச்சியுடன் வழி நடத்தவும் ...தெருக்கூத்து வளர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது" - என்கிற இந்த தினமலர் செய்தியின் பின்னணியை அறிய, இந்த இணைப்பை காண்க: http://arulgreen.blogspot.com/2016/09/Vatapi-Ganapati.html

கருத்துகள் இல்லை: