Pages

வியாழன், அக்டோபர் 06, 2016

செயல்பாட்டுக்கு வந்தது பாரீஸ் காலநிலை ஒப்பந்தம்: உலகை காப்பாற்ற 50 : 50 வாய்ப்பு!


உலகின் சுற்றுச்சூழலைக் காக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்துக்கு (The Paris Climate Agreement) இந்தியா ஒப்புதல் அளித்தது. இந்தியாவின் ஒப்புதலைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்புதல் அளித்தது. இதன் காரணமாக, 24 ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட, ஐநா காலநிலை உடன்படிக்கை செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.

பாரிஸ் ஒப்பந்தத்தின் பின்னணி

புவி வெப்பம் அதிகரித்து வருவதையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் தடுப்பதற்காக 1992 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஐநா காலநிலை பணித்திட்ட பேரவை (United Nations Framework Convention on Climate Change - UNFCCC) மூலமாக உலகநாடுகள் 23 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. முடிவில் 2015 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கூடிய ஐநா காலநிலை மாநாட்டில் (COP21)  'பாரிஸ் காலநிலை உடன்படிக்கை' (Paris Climate Agreement) உலகின் 195 நாடுகளால், டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி ஒருமனதாக ஏற்கப்பட்டது.

நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களை மிதமிஞ்சி பயன்படுத்தியதாலும், காடுகளை அழித்ததாலும் வளிமண்டலத்தில் மாசுக்காற்றின் அடர்த்தி அதிகமாகி, அதனால் பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்துச் செல்கிறது. பெருவெள்ளம், அதிவேக சூறாவளி, பெரும் வறட்சி, நோய்கள் அதிகரிப்பு, வேளாண்மை பாதிப்பு, கடல்வள அழிவு என எண்ணற்ற பாதிப்புகள் இதனால் அதிகமாகியுள்ளன.

இவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புவியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பை 2 டிகிரி செல்சியஸ் ஆளவுக்கு மிகாமல் மிகக்கீழாக குறைப்பது என்றும், அதற்கு மேலும் 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கீழ் குறைக்க முயற்சிப்பதாகவும் 'பாரிஸ் காலநிலை உடன்படிக்கை' கூறுகிறது. 
இந்த உடன்படிக்கையின் மூலம் பெட்ரோல், டீசல், எரிவாயு, நிலக்கரி உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

பாரிஸ் காலநிலை உடன்படிக்கையை செயல்படுத்துவதற்கான ஒப்புதலை, ஐ.நா. சபையில், அக்டோபர் 2 காந்தி பிறந்தநாளில் இந்தியா அளித்தது. அதற்கு முன்பாக, இதுதொடர்பாக மத்திய அமைச்சரவை முன்வைத்த திட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அக்டோபர் 1 ஆம் தேதி கையெழுத்திட்டார்.  

செயல்பாட்டுக்கு வந்தது ஐநா காலநிலை ஒப்பந்தம்

பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இந்தியா 2016 ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி கையெழுத்திட்டது. இதுவரை இந்த ஒப்பந்தத்தில் 191 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் கையொப்பம் (Signatories) இடுவது மட்டுமல்லாமல், அதற்கு நாடுகள் ஒப்புதல் அளிப்பது (Ratification) மிக முக்கியமான நடவடிக்கை ஆகும். உலகின் 55 நாடுகளும் (55 countries ), உலகின் மாசுக்காற்றில் 55 விழுக்காட்டிற்கு பொறுப்பான (55% global emissions) நாடுகளும் ஒப்புதல் அளித்தால் மட்டுமே - பாரிஸ் உடன்படிக்கை செயல்பாட்டுக்கு வரும். இந்தியாவின் மாசுக்காற்று அளவு 4.1 விழுக்காடு ஆகும்.

அக்டோபர் 2 ஆம் தேதிவரை, இந்தியா உட்பட ஒப்புதல் அளித்த நாடுகளின் எண்ணிக்கை 61 ஆகவும், இந்த நாடுகளின் ஒட்டுமொத்த மாசுக்காற்று அளவு 51.89 ஆகவும் இருந்தது. அதன் பின்னர், 12.1 விழுக்காடு மாசுக்காற்றுக்கு பொறுப்பான 28 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அக்டோபர் 4 ஆம் தேதி, பாரிஸ் உடன்படிக்கைக்கு ஒப்புதல் தெரிவித்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றின.

இதனைத் தொடர்ந்து, 55 நாடுகள் மற்றும் 55 விழுக்காடு மாசுக்காற்று என்கிற இரண்டு நிபந்தனைகளும் நிறைவேறியுள்ளன. இதனால், அடுத்த 30 நாட்களில் பாரிஸ் உடன்படிக்கை பன்னாட்டு சட்டமாக செயல்பாட்டுக்கு வந்துவிடும். மொராக்கோ நாட்டில் டிசம்பர் மாதம் கூடவுள்ள ஐநா காலநிலை மாநாடு (COP 22) -  இந்த உடன்படிக்கையின் தொடக்கமாக அமையும்.

இதுவொரு வரலாற்று சாதனை. பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் அதன் லட்சியமான 2 டிகிரி செல்சியஸ் வெப்பத்துக்கு கீழாக புவி வெப்பம் அதிகரிப்பதை தடுத்து நிறுத்தினால் - இப்போதைய அறிவியல் கணிப்பின் படி, உலகை காப்பாற்ற 50 : 50 வாய்ப்பு உள்ளது.

(உலகை முழுமையாக காப்பாற்ற 1.5 டிகிரி செல்சியசுக்கு கீழே போக வேண்டும். அதாவது பெட்ரோல், டீசல், நிலக்கரியை முற்றிலுமாக கைவிட வேண்டும். இனி அடுத்த போராட்டம் அதை நோக்கியதாக இருக்கும்).
படம்: 2009 ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டின் கோபன்ஹெனில் நடைபெற்ற ஐநா காலநிலை மாநாட்டில் (COP 15) நான். இந்த மாநாட்டில்தான் ஐநா காலநிலை ஒப்பந்தம் நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால், அமெரிக்காவின் அடாவடியால் 6 ஆண்டுகள் தாமதம் ஆயின. மேலும், 2015 ஒப்பந்தத்திற்காக இந்தியா அதன் உரிமைகளை விட்டுக்கொடுத்தது.)

 #ParisAgreement

கருத்துகள் இல்லை: