Pages

வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012

எச்சரிக்கை: செல்பேசி கதிர்வீச்சை தவிர்ப்பது எப்படி? செல்பேசி நிறுவனங்கள் மறைக்கும் உண்மைகள்.

எல்லோரும் செல்பேசியைப் பயன்படுத்துகிறோம். ஆனால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை நுகர்வோருக்கு சொல்லாமல் செல்பேசி நிறுவனங்கள் மறைத்து வருகின்றன.

எடுத்துக்காட்டாக,
  • எந்த ஒரு செல்பேசிக் கருவியையும் காதுக்கு மிக அருகில் வைத்து பேசக்கூடாது. 
  • ஒரு நாளில் ஒட்டுமொத்தமாக 18 முதல் 24 நிமிடங்களுக்கு மேல் செல்பேசியைப் பயன்படுத்தக்கூடாது. 
  • குழந்தைகள் செல்பேசியைப் பயன்படுத்தவே கூடாது. 
இதுபோன்ற பல சாதாரண பழக்கங்கள் கடுமையான உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

செல்பேசியிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள நச்சு என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

செல்பேசியைக் காதுக்கு அருகில் வைத்து பேசக்கூடாது என்று செல்பேசி நிறுவனங்களே நுண்ணிய எழுத்துகளில் எச்சரிக்கை செய்கின்றன. 
பிளாக்பெர்ரி நிறுவனத்தின் எச்சரிக்கை.

செல்பேசியிலிருந்து வெளியாகும் நுண்ணலைக் கதிர்வீச்சால் (Microwave Radiation) செல்பேசி பயன்படுத்துவோரின் உடல்நலம் பாதிப்படைகிறது என்பது அறிவியல் ரீதியில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அரசாங்கமோ, செல்பேசி நிறுவனங்களோ இந்த ஆபத்தைக் கட்டுப்படுத்த போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

செல்பேசிக் கதிர்வீச்சினைக் கட்டுப்படுத்த ICNIRP எனப்படும் அமைப்பின் காலாவதியான பரிந்துரைகளே இப்போதும் பின்பற்றப்படுகின்றன. இந்த அமைப்பு ஒரு பொதுஅமைப்பு அல்ல. ஜெர்மனி நாட்டிலுள்ள ஒரு தனியார் கூட்டமைப்பு இதுவாகும். தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் இந்த அமைப்பின் பரிந்துரைகள் நம்பகமானவை அல்ல. எனவே, செல்பேசியைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும் காப்பாற்ற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். 

உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ள சில எளிய வழிகள்

பின்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் செல்பேசிக் கதிர்வீச்சினால் உடல்நலம் பாதிப்படையாமல் தற்காத்துக்குகொள்ள முடியும்:

1. செல்பேசியை நேரடியாகக் காதில்வைத்து பேசாதீர். செல்பேசிக் கதிர்வீச்சு காதையும் தலையையும் தாக்குவது ஆபத்தானதாகும். எனவே காதில் பொருத்தக்கூடிய தலையணி ஒலிவாங்கிக் கருவிகளை (Headset) பயன்படுத்துங்கள்.

- செல்பேசிக் கருவியை விட திறக்கற்றை எனப்படும் புளூடூத் (Bluetooth) கருவிகள் குறைவான கதிர்வீச்சு கொண்டவை என்பதால், குறைந்த அளவு கதிர்வீச்சு கொண்ட புளூடூத் பயன்படுத்தலாம். ஆனால், அதனை காதில் அணிந்திருக்கும் போது நிரந்தரமாக இயங்கு (ON) நிலையில் வைக்கக் கூடாது. பேசும்போது மட்டும் புளூடூத்தை இயக்கி மற்ற நேரத்தில் அணைத்துவிட (OFF) வேண்டும்.

- தலையணி ஒலிவாங்கிக் கருவி (Headset), புளூடூத் ஆகியன இல்லாத நேரத்தில் ஒலிபெருக்கியை (Speaker) பயன்படுத்த வேண்டும்.

எக்காரணம் கொண்டும் செல்பேசியைக் காதுக்கு அருகில் வைத்து பேசக்கூடாது.

2. செல்பேசிக் கருவியை கூடுமானவரை உடலில் இருந்து சற்று தொலைவில் இருக்குமாறு வைக்க வேண்டும். தலையணி ஒலிவாங்கி, புளூடூத் போன்றவற்றை பயன்படுத்தும் போதுகூட செல்பேசியை சற்று தொலைவில் இருக்குமாறு வைக்க வேண்டும். ஏனெனில், செல்பேசிக்கும் உடலுக்கும் இடையே சில அங்குல இடைவெளியை ஏற்படுத்தினால் கூட அதனால் பல நூறுமடங்கு கதிர்வீச்சு குறைந்துவிடும்.

- தவிர்க்க முடியாத நிலையில் செல்பேசிக் கருவி உடலோடு ஒட்டிய நிலையில் இருக்குமானால், விசைப்பலகை (keyboard) உள்ள முன்பக்கம் உடலை நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும். செல்பேசிக் கருவியின் பின்பக்கத்தில் இருக்கும் அலைவாங்கி (antenna) உடல் பக்கம் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

3. முடிந்த வரை செல்பேசியில் பேசுவதைக் குறைக்க வேண்டும். குறைவான நேரமே பேச வேண்டும். பேசுவதைக் குறைத்து குறுஞ்செய்தியைப் பயன்படுத்தலாம்.

4. செல்பேசியின் சமிக்ஞை (signal) குறைவாகக் இருக்கும் இடங்களில் செல்பேசியில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். சமிக்ஞை குறையும்போது செல்பேசியில் அதிகக் கதிர்வீச்சு வெளியாகிறது.

5. குழந்தைகள் ஒருபோதும் செல்பேசியில் பேசாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவசரக் காலங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் குழந்தைகள் செல்பேசியில் பேசக் கூடாது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

- 16 வயதுக்கு கீழானவர்கள் தவிர்க்க முடியாமல் செல்பேசியைப் பயன்படுத்த நேர்ந்தால் அவர்கள் குறுஞ்செய்தி அனுப்ப மட்டுமே பயன்படுத்த வேண்டும். குழந்தைகள், சிறுவர்களை செல்பேசிக் கதிர்வீச்சு அதிகமாகப் பாதிப்பதால் இக்கட்டுப்பாடுகள் அவசியம்.

6. தூங்கும் போது தலைக்கு அருகிலோ, தலையணைக்கு கீழோ செல்பேசியை ஒருபோதும் வைக்காதீர். அவ்வாறே, தூங்குவதற்கு முன்பு கைபேசியில் பேசாதீர். இவற்றால் தூக்கம் கெடும்.

7. கதிர்வீச்சைக் கட்டுப்படுத்தும் உறைகள், ஒட்டிகள், அல்லது பாதுகாப்பு கவசங்கள் கொண்டு செல்பேசிக் கருவியை மறைக்காதீர். இவற்றால் கதிர்வீச்சு அதிகமாகும்.

8. வீடு அல்லது அலுவலகத்தில் முடிந்தவரை சாதாரண கம்பிவழி தொலைபேசியைப் பயன்படுத்துங்கள்.

9. கருவுற்ற பெண்கள் செல்பேசியைப் பயன்படுத்தக் கூடாது. வயிற்றுக்கு அருகில் செல்பேசியை வைக்கக் கூடாது. பச்சிளம் குழந்தைகளிடம் செல்பேசியை விளையாடக் கொடுக்கக் கூடாது.

10. செல்பேசியை பயன்படுத்திக் கொண்டே ஒருபோதும் வாகனம் ஓட்டக் கூடாது. இது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு இணையான கொடுஞ்செயலாகும்.
தொடர்புடைய சுட்டி:




புதன், ஆகஸ்ட் 29, 2012

ஓணம் பண்டிகை - இந்து மதத்தின் மாபெரும் முரண்பாடு!

ஓணம் பண்டிகை மலையாள நாட்டின் தேசியப் பண்டிகை. இப்பண்டிகைக்கு அடிப்படையாக உள்ள கதை ஒன்றுதான். ஆனால், ஓணம் எதற்காகக் கொண்டாடப்படுகிறது என்பதற்கான காரணம் வேறுபட்டதாகும்

அடிப்படைக் கதை: 

மகாபலி என்ற மன்னர் கேரளத்தை ஆண்டு வந்தார். ஒருமுறை திருமால் வாமணனாக (குள்ள உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்த பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையையேக் கொடுத்தார் பலி மகாராஜா. 
காரணம் 1.பார்ப்பனர் அல்லாத மக்கள் கூறும் காரணம்.

"மகாபலி ஒரு மிகச்சிறந்த மன்னன். மக்களை நேசித்தவன். மகாபலியின் ஆட்சிக்காலம் ஒரு பொற்காலம். அப்போது சாதி இல்லை. எல்லா மக்களும் ஒன்றாகவே இருந்தனர். சண்டை இல்லை, சச்சரவுகள் இல்லை, ஏமாற்று வேலைகள் இல்லை, திருட்டு இல்லை. மக்கள் தங்களின் எல்லா தேவைகளையும் பெற்றனர். மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். மகாபலி மன்னன் ஒரு மிகச்சிறந்த நீதிமானாக ஆட்சி செய்தான்.

தேவர்கள் இதைப் பார்த்து அஞ்சினர். "இந்த அசுரனை அழிக்க ஏதாவது செய்" என்று விஷ்ணுவிடம் வேண்டினர். அவரும் வாமணன் எனும் குள்ள பார்ப்பனனாக அவதாரமெடுத்து வாமனனை அழித்தார்.
பாதாளத்தில் புதைக்கப்படும் முன்பு ஆண்டிற்கு ஒருமுறை என்னுடைய மக்கள் இப்போது போல எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா? என்பதை நான் பார்க்க வேண்டும் என்று மகாபலி கேட்டார். அவ்வாறு ஆண்டுக்கு ஒருமுறை அந்த மாமன்னன் தன் மக்களைப் பார்க்க வரும் நாளே ஓணம். ஓணம் நாளில் மக்கள் வாசலில் அத்தப்பூக் கோலம் போட்டு மகாபலியை வரவேற்கிரார்கள். "

காரணம் 2.பார்ப்பனர்கள் கூறும் காரணம்

"மகாபலி ஒரு அசுரன். அவனது அதர்ம ஆட்சியை விஷ்ணு அழித்தார். மகாபலி திரும்பி வருவதற்காக இந்த நாள் கொண்டாடப்படவில்லை. மாறாக, வாமணன் மகாபலியை பாதாளத்தில் புதைத்த நாள் இதுவாதும்.

ஓணம் நாளில் மக்கள் வாசலில் அத்தப்பூக் கோலம் போட்டு அதன் நடுவில் விஷ்ணுவை வைப்பார்கள். அப்போது வரும் மகாபலி தன்னுடைய மக்கள் விஷ்ணுவை வழிபடுவதையும், நாட்டில் தர்மம் நிலைநாட்டப் பட்டிருப்பதையும் பார்த்து ஏமாற்றத்துடன் மீண்டும் பாதாளத்திற்கு போய்விடுவார்."

- ஆக, ஒரே பண்டிகைக்கு இரண்டு விளக்கங்கள் உள்ளன. ஓணம் பண்டிகையின் வரலாற்றில் "தர்மம்" மற்றும் "நீதி" என்கிற வார்த்தைகள் எதிர்எதிர் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மக்கள் சாதியற்ற, தீமையற்ற பழைய பொற்காலத்தை நினைத்து - இந்த ஒரு நாளாவது அந்த நாளாக இருக்கட்டும் என்று ஏக்கத்தில் கொண்டாடுகிறார்கள். பெரும்பான்மை நம்பிக்கையின் படி - மகாபலி மன்னனின் காலமே பொற்காலம். "நீதி" தவறாத அந்த  மன்னனை "தர்மம்" காப்பதற்காக வாமணன் அழித்தான்.

ஆனால், மற்றொருக் கூட்டத்தினர் - தர்மம் நிலை நாட்டப்பட்ட நாளே நல்ல நாள். இந்த அநீதியான காலம் நீடிக்க வேண்டும் என்று அதே நாளைக் கொண்டாடுகின்றனர்.

வாசலில் போடப்படும் ஒரே அத்தப்பூக்கோலம் - மகாபலியை வரவேற்கிறது என்று ஒருசாரார் கூறுகின்றனர். அதுவே அவரை விரட்டவே போடப்பட்டுள்ளதாக ம்ற்றொரு சாரார் கூறுகின்றனர்.
ஓணம் பண்டிகையின் மய்யமாகக் கருதப்படும் திரிக்ககரா ஆலயம் வாமணனின் கோவிலாக இருக்கிறது. அந்த கோவிலுக்கு அடியில் மகாபலியின் அரண்மனை இருப்பதாக நம்பப்படுகிறது. மகாபலியின் அரண்மனையை இடித்து அதன் மீது வாமணனுக்கு கோவில் கட்டப்பட்டதாகக் கூறுகின்றனர்.

எது தர்மம்?

பிரதான இந்துமதம் - "வாமன அவதாரம் என்பது விஷ்ணு நில உலகில் தோன்றிய ஐந்தாம் அவதாரம். இதன் நோக்கம் தருமத்தை நிலைநாட்டலாகும். இந்த அவதாரத்தில் இவர் கேரளத்தில் பிராமண குலத்தில் பிறந்தார். இவர் குள்ளமான உருவம் கொண்டவராய் இருந்தார்." என்கிறது.

ஆனால், "மகாபலி மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். தான் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் தனது நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு மகிழ ஒவ்வொரு திருவோணதிருநாள் அன்று மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகதிற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக" கேரள மக்கள் நம்புகிறார்கள்.

ஓணம் பண்டிகையின் போது பாடப்படும் மலையாளப் பாடலின் ஆங்கில வடிவம்:

When Maveli ruled the land,
All the people were equal.
And people were joyful and merry;
They were all free from harm.
There was neither anxiety nor sickness,
Deaths of children were unheard of,
There were no lies,
There was neither theft nor deceit,
And no one was false in speech either.
Measures and weights were right;
No one cheated or wronged his neighbor.
When Maveli ruled the land,
All the people formed one casteless races

கேரள மக்கள் நீதியைப் பேசுகிறார்கள். சாதியற்ற சமூகத்தை கனவு காண்கிறார்கள். ஆனால், இந்து மதம் தர்மத்தை நிலை நாட்ட விரும்புகிறது. 

மொத்தத்தில் - இந்து மதத்தில் "தர்மம்" என்றால் அது சாதியைக் காப்பாற்றுதல், அநீதியை நிலைநாட்டுதல் என்று பொருளாகும். அதற்கு ஓணமே சாட்சி.


அனைவருக்கும் மகாபலி மன்னனை வரவேற்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகள்

ஆதாரம்:

THE RETURN OF KING MAHABALI: THE POLITICS OF MORALITY IN KERALA Filippo Osella and Caroline Osella, THE EVERYDAY STATE AND SOCIETY IN MODERN INDIA By Fuller C. J. & Benei Véronique (eds.)

திங்கள், ஆகஸ்ட் 27, 2012

மது, மதம், சாதி: மிகத் தீமையானது எது?

தமிழ் பதிவுலகின் மதுபான விவாதம் குறித்து கருத்து சொன்னவர்கள் ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதால்  "மதுபானம் தீமை என்றால் மதம் மட்டும் தீமையில்லையா?" என்று கேட்கப்பட்டது. இதுகுறித்து நான் "குடியால் அழியுமா பதிவுலகம்?" என்று எழுதியபோது என்னை 'சாதிவெறியன்' என்று சொல்லி சிலர் "ஜாதி மதத்தை விடக்கொடியது" என்றார்கள். ஆக மது, மதம், சாதி என்கிற மூன்றும் இணைத்து பேசப்பட்டுள்ளதால் இவை மூன்றிலும் மிகவும் தீமையானது எது என்கிற கேள்வி எழுகிறது.

மது, மதம், சாதி இவை மூன்றையும் ஒன்றாக இணைக்கும் புள்ளி என்று ஏதாவது ஒன்று இருக்குமானால் அது 'அடையாளம்' ஒன்று மட்டும்தான். இவர் இந்த சாதி, இவர் இந்த மதம், இவர் ஒரு குடிகாரர் - என்கிற ஏதோ ஒரு அடையாத்தை இவை ஏற்படுத்துகின்றன. சிலருக்கு இந்த மூன்று அடையாளங்களும் ஒன்றாக அமையலாம்.

ஆனாலும், இத்தகைய ஒரு அடையாளம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதும் அந்த அடையாளத்தை தவிர்க்க முடியுமா என்பதும் அடிப்படையில் மாறுபட்டதாகும்.

1. சாதி அடையாளம் 

சாதி என்கிற அடையாளத்தை ஒருவர் உருவாக்குவதும் இல்லை. அவர் அதை நீக்க முடிவதும் இல்லை. அது நம்முடையக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகும். பிறக்கும் போது சாதியுடனே இந்தியாவில் குழந்தைகள் பிறக்கின்றன. இறந்து சுடுகாட்டில் அடக்கம் நடக்கும் வரை சாதி இந்தியர்களை விட்டு அகலுவதில்லை. அகற்ற முடிவதும் இல்லை. எனவே, சாதி தேர்ந்தெடுக்கும் உரிமைக்கு அப்பாற்பட்டதாகும். (மதமாற்றம் ஒரு சில நிகழ்வுகளில், ஒரே தலைமுறையில் சாதியை அகற்றுகிறதா? என்பது விவாதத்திற்கு உரியது. ஒப்பீட்டளவில் இஸ்லாம் சாதி ஏற்றத்தாழ்வை களைந்துள்ளது)

2. மத அடையாளம் 

மதம் என்கிற அடையாளம் பெரும்பாலும் பிறக்கும்போதே வருகிறது. ஆனாலும், பிறந்த மதத்தை விட்டு வெளியேறி வேறு மதத்திற்கு செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த வாய்ப்பு ஒப்பீட்டளவில் இரண்டு மதங்களில் இல்லை. இஸ்லாம் எவரையும் வெளியேற அனுமதிப்பது இல்லை என்று நான் எங்கோ படித்ததாக ஞாபகம். இந்துமதம் வெளியிலிருந்து எவரையும் தனது மதத்தில் சேர்த்துக்கொள்வது இல்லை (எந்த சாதியில் சேர்ப்பது என்கிற குழப்பமே இதற்கு காரணமாகும்).  எனவே, மதத்தினை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு.

("இஸ்லாம் தன்னில் இருந்து மக்களை வெளியேற அனுமதிக்கவில்லை என்பது இஸ்லாமிய அடிப்படையில் சரியான புரிதல் கிடையாது" என்று இஸ்லாமிய சகோதரர்கள் கூறியுள்ளனர். விளக்கத்திற்கு நன்றி. இஸ்லாமிய நண்பர்கள் சுட்டிக்காட்டியதைப் போன்று, திருக்குர்ஆன் அத்யாயம் 2 அல் பகறாவில் "தீனில் (இறைநெறியை மேற்கொள்வதில்) யாதொரு கட்டாயமோ - நிர்பந்தமோ இல்லை" என்று கூறப்பட்டுள்ளது. (2:256) "There shall be no compulsion in [acceptance of] the religion.")

3. குடிகாரர் அடையாளம் 

குடிகாரர் என்கிற அடையாளம் முற்றிலும் வேறுபட்ட ஒரு அடையாளம் ஆகும். இது பிறப்பினால் வருவது இல்லை. தேர்ந்தெடுப்பதன் மூலம் மட்டுமே வருகிறது. வந்தபின் இந்த அடையாளம் போவது இல்லை. எனவே, குடிகாரன் என்கிற அடையாளத்தை தேர்வு செய்ய முடியும், கைவிடுவது மிக மிகக் கடினம்.

சட்டமும் அடையாளங்களும்

அடையாளங்களில் மாறுபாடு இருப்பது போலவே, சட்டத்தின் பார்வையிலும் இந்த அடையாளங்கள் மாறுகின்றன.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி மதமற்றவர்கள் என்று எவருமே கிடையாது. எவரெல்லாம் - இஸ்லாமியர், கிறித்தவர், பார்சி, சீக்கியர் இல்லையோ, அவர்கள் எல்லாம் இந்துக்கள். எனவே, இந்தியாவில் எவரேனும் ஒருவர் தனக்கு மதம் இல்லை என்று சொன்னால் - அவர் சட்டப்படி இந்து மதத்தைச் சேர்ந்தவர்.

மற்றபடி - இந்தியாவில் ஒவ்வொருவரும் எந்த ஒரு மதத்தையும் பின்பற்ற, பரப்ப உரிமை உண்டு. அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி மதம் ஒரு அடிப்படை உரிமை ஆகும்.

சாதியைப் பொருத்த வரை ஒருவர் தன்னை சாதி இல்லாதவன் என்று கூறிக்கொள்ளலாம். ஆனாலும், இதற்கென்று தனிப்பிரிவு இல்லை. கல்வி, வேலை வாய்ப்புகளில் இவர்கள் பொதுப்பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அதாவது இடஒதுக்கீட்டு சட்டங்களின் முன்பாக பார்ப்பனரும் சாதி அற்றவரும் ஒன்றுதான்.

அதே நேரத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடும் சிறப்பு முன்னேற்றத் திட்டங்களும் செயல்படுத்தப்பட வேண்டும் என்பது அரசியல் சட்டப்பிரிவுகள் 15 (4), 16 (4), 340 ஆகியவற்றின் கீழ் அரசின் கடமை ஆகும். மக்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்கு சாதியே அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. எனவே, சாதி அடையாளம் அரசின் பார்வையில் ஒரு முக்கியமான மேம்பாடு மற்றும் நீதிக்கான அளவுகோள் ஆகும்.

குடிகாரர் என்கிற அடையாளம் முற்றிலும் வேறுபட்ட ஒரு அடையாளம். அரசியல் சட்டத்தின் 47 ஏழாம் பிரிவு மதுபானத்தை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. எனினும், இந்தப் பிரிவு வழிகாட்டிநெறி என்பதால் இதனை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்றத் தேவை இல்லை.

எது மிக மோசமானத் தீமை?

மது, மதம், சாதி என்கிற மூன்று தீமைகளில்:

1. மதம் 

மதம் ஒரு தீமை என்பது தவறான பதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில், உலகின் எந்த இடத்திலும் எந்த சட்டத்திலும் மதம் ஒரு தீமை என்று குறிப்பிடப்படவில்லை. அதிலும் இந்தியாவில் மதம் என்பது ஒரு அடிப்படை உரிமை.
CONSTITUTION OF INDIA Article 25: "all persons are equally entitled to freedom of conscience and the right freely to profess, practise and propagate religion"

உலகில் மிக உயர்வான சட்ட அடிப்படையாக மதிக்கப்படும் பன்னாட்டு மனிதஉரிமைகள் பிரகடனத்தில் மதம் ஒரு உரிமையாக ஏற்கப்பட்டுள்ளது.

UNIVERSAL DECLARATION OF HUMAN RIGHTS Article 18: "Everyone has the right to freedom of thought, conscience and religion; this right includes freedom to change his religion or belief, and freedom, either alone or in community with others and in public or private, to manifest his religion or belief in teaching, practice, worship and observance."

எனவே, உலகெங்கும் அடிப்படை உரிமை என்று கூறப்பட்டுள்ள மதத்தை 'தீமை' என்று கூறுவது மிகத்தவறான, மனிதஉரிமைக்கு எதிரான வாதமாகும்.

மதம் குறித்து வீசப்படும் குற்றச்சாட்டுகள் எல்லாமும் உண்மையில் மதவாதம் அல்லது வகுப்புவாதம் எனப்படுகிற COMMUNALISM ஆகும். தமிழ்நாட்டின் 95 விழுக்காட்டிற்கும் மேலான மக்கள் ஏதோ ஒரு சமயத்தை நம்புகிறார்கள். அவர்களில் 0.001 அளவினர் கூட வகுப்புவாதிகள் அல்ல. எனவே, COMMUNALISM வேறு, RELIGION வேறு என்று புரிந்துகொள்ளாதவர்களிடம் பேசிப் பயன் இல்லை. விரிவாகக் காண: RELIGION AND COMMUNALISM by Asghar Ali Engineer

மதவாதம் என்று வரும்போது அதனை ஒரு குறிப்பிட்ட மதத்துடன் இணைத்துப் பார்ப்பது தவறு. மதவாதிகள் என்றால் இஸ்லாமியர்கள் என்பதும், மதக்கலவரம் என்றாலே அது இஸ்லாமியர்களின் வேலை என்பதும் ஒருவகையான பார்வைக் கோளாறு.
இந்தியாவில் இஸ்லாம் ஒரு சிறுபான்மை மதம். அதுமட்டுமல்லாமல், இஸ்லாமியர்கள் எல்லாவிதமான மனித மேம்பாட்டு அளவுகோளிலும் மிக மிக பின்தங்கி இருப்பவர்கள். எனவே, "ஒருபக்கம் மக்கள் தொகையில் சிறுபான்மை, மறுபக்கம் சமூக பொருளாதார நிலையில் மிக மிக பின்தங்கிய நிலை" என்கிற இரட்டைத் தாக்குதல். இதுவல்லாமல், "அதிகரித்துவரும் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரம்" - இவற்றுக்கு இடையே "இஸ்லாமியர்கள் மத அடையாளத்தின் பேரில் ஒன்றிணைவதும் உரிமைக் கேட்பதும்" தவிர்க்க முடியாததும் நியாயமானதும் ஆகும். 

இந்த நியாயமானக் குரல்தான் பலநேரங்களில் 'மதத்தீமை' என்று மற்றவர்களால், குறிப்பாக சில இந்துக்களால் புரிந்து கொள்ளப்படுகிறது. இது இந்துக்களின் பார்வைக் கோளாறுதானே தவிர இஸ்லாமியர்களின் தவறு அல்ல. (அதே நேர்த்தில் மதத் தீவிரவாதம் என்பது இந்தியாவில் முதன்மையாக இந்துமதத்திலும் இரண்டாவதாக இஸ்லாமிலும் ஓரளவிற்கு இருக்கிறது என்பதை மறைக்க முடியாது. இந்துத்வ தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம் எனும் இரண்டு தீவிரவாதக் கூட்டமும் ஒன்றை ஒன்று வளர்த்து விடுவதால் - இரண்டும் ஒன்றுக்கொன்று ஆதரவானக் கூட்டம்தான்).
2. மதுபானம் 

மதுபானம் ஒரு மிகப்பெரிய தீமையாக வளர்ந்து வருகிறது. வகுப்புவாதம் அல்லது சாதியுடன் ஒப்பிட்டால் - ஒப்பீட்டளவில் மதுபானத் தீமை எளிதானது. அதாவது மதுபானத்தால் ஏற்படும் கேடு பெரிது என்றாலும் அதை ஒழிப்பதோ கட்டுக்குள் வைப்பதோ சாத்தியமானதே ஆகும். (இதுகுறித்து எனது முந்தைய பதிவில் குறிப்பிட்டுள்ளேன்)
3. சாதிதான் மிகப்பெரிய தீமை

மதுபானம், மதவெறி - இவற்றுடன் ஒரு பேச்சுக்காக ஒப்பிட்டோமானால் - இந்தியாவில் சாதிதான் மிகப்பெரிய தீமை.

சாதி என்பது மிகக்கடுமையான ஒரு இடஒதுக்கீட்டு முறையாக கடந்த 2000 ஆம் ஆண்டுகளாக இருந்துவருகிறது. ஒருவர் பிறக்கிற சாதியின் அடிப்படையிலேயே அவருக்கான பலவிதமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை பார்ப்பனராக பிறப்பவருக்கு கிடைக்கும் வாய்ப்பும் மதிப்பும் வேறாகவும், ஒரு பிணம் எரிக்கும் சாதியில் பிறக்கும் நபருக்கு கிடைக்கும் வாய்ப்பும் மதிப்பும் வேறாகவும் இருந்துள்ளது. குறைவான உழைப்புக்கு அதிக மதிப்பு, மரியாதை, ஊதியம். ஆனால், கடின உழைப்புக்கு குறைந்த மதிப்பு, இழிவுத்தன்மை, குறைந்த ஊதியம் என்கிற நிலையை சாதி ஏற்படுத்தி வைத்திருந்தது.

அதைவிடக் கொடுமையாக - எந்த ஒரு வேலையும் பரம்பரை பரம்பரையாகத் திணிக்கப்பட்டது. தனக்கான வேலையைத் தானே தேர்ந்தெடுக்கும் ஒரு அடிப்படை உரிமையை சாதி முற்றிலுமாக மறுத்தது. கல்வி, வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்தல், வழிபாட்டு உரிமை என எல்லாவற்றையும் சாதி மறுத்தது. உணவு, உடை, வாழ்விடம் என எல்லாவற்றையும் சாதியே தீர்மானித்தது

சாதியின் இந்த பெருங்கேடு இப்போதும் பெரிதாக மாறிவிடவில்லை. 

கல்வியில் சாதி

2005 -06 ஆம்ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்பநல கணக்கெடுப்பில் பின்வரும் புள்ளிவிவரங்கள் உள்ளன:

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவரின் படிப்பு: 
மேல்நிலைப் பள்ளி (+2) படிப்புக்கும் கீழாக படித்தோர் ஒவ்வொரு பிரிவிலும் எவ்வளவு பேர்?
(அதாவது சாதியின் மக்கள்தொகையில் குறைவாகப் படித்தோர்)

பட்டியல் இனத்தவர் = 92 %

பழங்குடி இனத்தவர் = 94 %

இதர பிறடுத்தப்பட்ட வகுப்பினர் = 87 %

முன்னேறிய வகுப்பினர் = 45 %

வேலைவாய்ப்பில் சாதி

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவரின் வேலை:
அதிகவருவாய் கிடைக்கும் தொழில்முறை, தொழில்நுட்ப, மேலாண்மைப் பணிகளில் இருப்போர் ஒவ்வொரு பிரிவிலும் எவ்வளவு பேர்?
 (அதாவது சாதியின் மக்கள்தொகையில் மிக அதிகமாக சம்பாதிப்போர்)

பட்டியல் இனத்தவர் = 5 %

பழங்குடி இனத்தவர் = 0 %

இதர பிறடுத்தப்பட்ட வகுப்பினர் = 8 %

முன்னேறிய வகுப்பினர் = 44 %

ஆக, நல்ல வேலையில் இல்லை, போதுமான படிப்பும் இல்லை என்கிற கீழான நிலையில் மிகப்பெரிய மக்கள் கூட்டத்தினர் SC/ST/OBC பிரிவினர் இன்றும் வாழ்வதற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது சாதிதான்.

தனியார் நிறுவனங்களில் சாதி

பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராக உள்ள சுக்தியோ தொராட் என்பவர், 2005 - 2007 ஆண்டுகளில் பத்திரிகைகளில் வெளியான தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்பு விளம்பரங்களுக்கு, ஒரே மாதிரியான உயர் படிப்பு தகுதிகளுடன் விண்ணப்பங்களை தயார் செய்து - சாதியை மட்டும் உயர்சாதி, தாழ்த்தப்பட்ட சாதி என மாற்றி அனுப்பி - எத்தனை பேருக்கு நேர்காணல் அழைப்பு வருகிறது என ஆய்வு செய்தார்.

உயர் சாதியினர் 100 பேருக்கு நேர்காணல் அழைப்பு வந்தால், தாழ்த்தப்பட்ட சாதியினர் 67 பேருக்கு மட்டுமே நேர்காணல் அழைப்பு வந்தது.

அதாவது தகுதிகள் அனைத்தும் ஒன்று, சாதி மட்டும் வேறு என்பதற்காகவே - நேர்காணல் அழைப்பு அனுப்பப்படவில்லை. நேர்காணல் அழைப்புக்கே இந்த நிலை என்றால், நேர்காணலில் என்ன நடக்கும் என்று சொல்லத்தேவை இல்லை.

இந்தியாவின் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படும் - முதன்மையான 1000 நிறுவனங்ளின் கார்ப்பரேட் நிர்வாக உறுப்பினர்களாக (Corporate Board Members) இருப்பவர்களின் சாதி எது? என ஒரு ஆய்வு 2010 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. அதில் பின்வரும் புள்ளி விவரங்கள் தெரியவந்தன.

Corporate Board Members in Top 1000 Indian Companies:

பட்டியல் இனத்தவர்/பழங்குடி இனத்தவர் = 3.5 %

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் = 3.8 %

முன்னேறிய வகுப்பினர் = 92.6 %

இப்படியாக பொருளாதாரம் மற்றும் வாய்ப்புகளில் இப்போதும் சாதிதான் முன்னேற்றத்தைத் தீர்மானிக்கிறது.
சாதியும் மதிப்பும்

வெறும் வெருமானம் மட்டுமல்ல - மதிப்பு, மரியாதை, இதர தேவைகள் என எதை எடுத்தாலும் தடைக்கல்லாக இருப்பது சாதிதான்.

சென்னை நகரில் தான் ஒரு தாழ்த்தப்பட்டு பிரிவு ஆள் என்று சொல்லி வாடகைக்கு வீடு தேடிப்பாருங்கள். சாதியின் நிலை என்ன என்று தெரியும்.

சென்னை தமிழ் பதிவர் சந்திப்பில் மூத்தபதிவர்களுக்கு பொன்னாடை போர்த்திய நிகழ்வைத் தொகுத்து வழங்கிய நண்பர் ஒரு கதை சொன்னார்.

'டெல்லி கணேஷ் எனும் நடிகர் ஏவிஎம் திரைப்பட நிறுவனத்தின் பின்புற சுடுகாட்டில் இருந்த ஒரு வெட்டியா'ன்' இடம் பேசிக்கொண்டிருந்தார். நடிகர் ஒருநாள் சாலையில் சென்ற போது அங்குவந்த வெட்டியா'ன்' சுடுகாட்டுக்கு எப்ப வருவீங்க' என்று கேட்டா'ன்'" - என்று ஒரு நகைச்சுவை கதை சொன்னார்.

இதுவே, மைலாப்பூர் சிவன் கோவில் பார்ப்பன பூசாரியை டெல்லி கணேஷ் சந்தித்திருந்தால் இந்தக்கதை எப்படி இருந்திருக்கும்?

'டெல்லி கணேஷ் எனும் நடிகர் மைலாப்பூர் சிவன் கோவிலில் இருந்த ஒரு அய்ய'ர்' இடம் பேசிக்கொண்டிருந்தார். நடிகர் ஒருநாள் சாலையில் சென்ற போது அங்குவந்த அய்ய'ர்'  கோவிலுக்கு எப்ப வருவீங்க' என்று கேட்டா'ர்'" - என்று கதை சொல்லியிருப்பார்.

இதற்காக இந்த தொகுப்பாளரை நாம் குறைசொல்ல முடியாது. கோவிலில் பூசை செய்யும் சாதி மதிப்பு மிக்கது. பிணத்தை எரிக்கும் சாதி கீழானது என்பது நமது பொது புத்தியில் பதிந்துள்ளது.

சாதிக் கேடு ஒழிய இன்னும் பல தலை முறைகள் ஆகலாம். இப்போது உயிரோடு இருப்பவர்கள் தமது வாழ்நாளில் சாதி ஏற்றத்தாழ்வை களைய முடியாது. எனவே - எல்லாக் கேடுகளிலும் பெருங்கேடு என்பது சாதியால் நேரும் கேடே ஆகும்.

சனி, ஆகஸ்ட் 25, 2012

குடியால் அழியுமா பதிவுலகம்? பதிவுலக சண்டைக் குறித்து ஒரு நடுநிலை ஆய்வு!

சென்னையில் நடக்கும் பதிவர் மாநாடு குறித்த கலந்துரையாடலின் நடுவே குடிப்பழக்கம் குறித்த சர்ச்சையும் முதன்மை இடத்தை பிடித்ததை அண்மையில் காண முடிந்தது.

முதலில் மனிதாபிமானி "பதிவர் சந்திப்புகள் டாஸ்மாக் பிசினஸ்சை உயர்த்தும் இடங்களா?" எனும் பதிவில், "பதிவர் சந்திப்புக்கு தண்ணி அடிச்சிட்டு வருவாங்க" என்றும், "எதார்த்தமாக பேசுவது போன்று குடியை அடுத்த தலைமுறையிடம் ஊக்குவிக்கும் செயல்களை பதிவுலகம் நிறுத்தவேண்டும்" என்று குறிப்பிடப்பட்டது.

சங்கவி "பதிவர் சந்திப்பிற்கு சரக்கு தேவையா??? தேவையே !! தேவையே !!" எனும் பதிவில் "முந்தைய நாள் இரவு வந்து விட்டால் நண்பர்களோடு சேர்ந்து சரக்கு அடித்தே ஆக வேண்டும் இது தான் பதிவுலகில் எழுதப்படாத விதி என்று நினைக்கிறேன்" என்றார்.

 'மதம் மற்றும் குடி' தொடர்பான பொருளில், 
கே.ஆர்.பி.செந்தில் "சென்னை பதிவர் சந்திப்பு ...,
அஞ்சா சிங்கம் "மதுவா ...மதமா ...எதில் போதை அதிகம் .?"
கோவி.கண்ணன் "கு_கா_ன் பே_சு வி_ஞ்_ப் போ_சு !" ,
ரிலாக்ஸ் ப்ளீஸ் "பதிவர்சந்திப்பில் மதுவும் வேணாம், மதமும் வேணாம்!",  
இக்பால் செல்வன் "தமிழ் பதிவர் சந்திப்பைப் புறக்கணிப்போம்"  ஆகியோர் எழுதினர்.

அதிரடி ஹாஜா "சென்னை பதிவர் சந்திப்பினால் என்ன லாபம்?!" எனும் பதிவில் "குடியை ஆதரித்து ஜாலிக்காக கூட பதிவு எழுதவோ பேசவோ வேண்டாம் என ஒரு ஜென்டில்மேன் ஒப்பந்தம் போடலாம்..." என்றார். கடைசியில் மதுமதி "சென்னை பதிவர் சந்திப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு" எனும் பதிவு "மது அருந்திவிட்டு அரங்கிற்குள் நுழைவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளவும்" என்று தெளிவுபடுத்தியது.
இதுபோல பல பதிவுகள் எழுதப்பட்டுள்ளன. இந்த விவாதம் அல்லது சலசலப்பு தேவையா? தேவையற்றதா? என்கிற மற்றுமொரு சர்ச்சைக்குள் நான் புக விரும்பவில்லை. அதே நேரத்தில் "குடிப்பழக்கத்தை விவாதிப்பது" குறித்து சில பொதுவான கருத்துகளைக் குறிப்பிட விரும்புகிறேன்.

1. பதிவர்கள் குடிக்கலாமா?

சட்டபூர்வமாக குடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த உரிமை பதிவர்களுக்கும் உண்டு. எனவே, தமிழ்நாட்டில் 21 வயதுக்கு மேலுள்ள பதிவர்கள் குடிக்கலாம் (அதுதான் அனுமதிக்கப்பட்ட வயது).

ஆனால், இந்த உரிமை கட்டுப்பாடற்ற உரிமை அல்ல. எந்த ஒரு நபரும் தனக்கோ அல்லது பிறருக்கோ தீங்கிழைக்கும் அளவுக்கு குடிப்பதற்கு உரிமை இல்லை. இதனை உலக சுகாதார நிறுவனம் தீங்கிழைக்கும் குடிப்பழக்கம் எனக் குறிப்பிடுகிறது.
2. குடித்துவிட்டு கூட்டங்களுக்கு செல்லலாமா?

குடித்துவிட்டு பொது இடங்களுக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, சென்னையின் பெரிய திரையரங்குகளில் குடித்துவிட்டு வருவோர் அனுமதிக்கப்படுவது இல்லை.

அவ்வாறே குடித்துவிட்டு பணிக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய கொடிய குற்றம்.

3. மதம் ஒரு போதையா?

மதம் மட்டுமல்ல. அதுபோன்று எண்ணற்ற போதைகள் இருக்கின்றன. பாசம், காதல், யோகாசனம், நடனம், கொண்டாட்டம், திருவிழாக்கள், ரசிகர் மன்றம், அரசியல் கட்சிகள், விளையாட்டு என எல்லாமும் ஒவ்வொரு விதத்தில் போதைதான்.

இந்தப் போதையை எந்த ஒரு பொருளும் தூண்டுவது இல்லை, அதனால் உடலுறுப்புகள் சேதமடைவதும் இல்லை. மாறாக, ஆட்டம், கொண்டாட்டம், யோகாசனம் பொன்ற மதம் சார்ந்த அல்லது மதம் சாராத நடவடிக்கைகள் உடலுக்கு நல்லதுதான்.

குடிமயக்கம் எனப்படும் மதுபானப் போதை இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. மனிதனின் மய்ய நரம்புமண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதால், இப்போதை பன்னாட்டு நோய்வரையறைப் பட்டியலில் ஒரு மருத்துவ நோய்க்குறியீடாக (ICD - 10) குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, குடிகாரர்கள் குடிநோயர்களாவர். மதவாதிகள் மதநோயர்கள் அல்ல.
4. மதத்தை ஆதரிப்போருக்கு குடியை எதிர்க்க தகுதி உண்டா?

தாராளமாக உண்டு. குடிப்பழக்கம் மட்டுமல்ல, வேறு எந்த ஒரு சமூக கேட்டையும் யார் வேண்டுமானாலும் எதிர்த்துப் பேசலாம். சனநாயக அமைப்பில் கருத்து சொல்வதும், கேள்வி கேட்பதும் அடிப்படையானவை (ஆனாலும், இதற்கெல்லாம் வரம்பும் உண்டு).

எந்த ஒரு நபரையும் அவரது மதத்தைக் கைவிடுமாறோ, அல்லது அந்த மதத்தில் உள்ள குறைபாடுகளை எதிர்க்குமாறோ கட்டாயப்படுத்த முடியாது. மதம் என்பது ஒரு அடிப்படைக் கலாச்சார உரிமை. அது அவரவர் தனிப்பட்ட விடயம். அதில் மற்றவர்கள் மூக்கை நுழைக்க முடியாது.

எனவே, மதுவின் கேடுகளை எதிர்க்க மதம் ஒரு தடை அல்ல.

5. மதம் குடியை ஒழிக்குமா?

மதத்திற்கும் குடிப்பழக்கத்துக்கும் நேரடித் தொடர்பு இல்லை. மதம் பலவிதமான கட்டுப்பாடுகளை அதை பின்பற்றுபவர்கள் மீது சுமத்துகிறது. அதில் மது ஒழிப்பும் ஒரு அங்கமாக சில மதங்களில் இருக்கிறது. குறிப்பாக இஸ்லாம், பவுத்தம், கிறித்தவம், சீக்கிய மதம் ஆகியன மதுவை எதிர்க்கின்றன.

ஆனால், உலக சுகாதார நிறுவனம் முன்வைக்கும் மது ஒழிப்புக்கொள்கையில் மதங்களுக்கு ஒரு இடமும் கிடையாது. உலகளாவிய மது ஒழிப்புக் கொள்கை என்பது அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையிலானது. இதில் மதங்களுக்கோ, இதர நம்பிக்கைகளுக்கோ இடம் இல்லை.

எனவே, வள்ளலார் சொன்னார், வள்ளுவர் சொன்னார் என்பதற்காகவெல்லாம் அரசின் கோள்கை உருவாக்கப்படக் கூடாது. அரசின் கொள்கை என்பது அடிப்படை ஆதாரங்களின் அடிப்படையில், அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும். மதம் அல்லது நம்பிக்கை என்பதற்காக - ஆதாரமற்றதை ஏற்பதோ, ஆதாரமுள்ளதைப் புறக்கணிப்பதோ ஜனநாயக அரசுகளின் வேலை இல்லை.
6. குடிப்பவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டுமா?

கூடாது. எப்படி எந்த ஒரு மனிதரையும் அவரது மதம், சாதி, இனம், பால் என்கிற அடிப்படையில் ஒதுக்கக் கூடாதோ, அதே போன்று குடிகாரர் என்பதற்காக எவரையும் ஒதுக்கிவைக்கக் கூடாது. இது மனிதஉரிமைக்கு எதிரானதாகும். எனவே, வேலைவாய்ப்பு, பொது இடம் என எதிலும் குடிகாரர் என்பதற்காக ஒருவரையும் ஒதுக்கக் கூடாது.

(இந்த இடத்தில் குடிகாரர் என்பதற்கும் குடித்துவிட்டு வருபவர் என்பதற்கும் உள்ள வேறுபாட்டை கவனிக்கவும். குடிகாரர் = குடிப்பழக்கம் உள்ளவர் அல்லது குடிநோயர். குடித்துவிட்டு வருபவர் = அந்த நேரத்தில் குடித்திருப்பவர். பொது இடத்திற்கு குடிகாரர் வரலாம், ஆனால், குடித்துவிட்டு வரக்கூடாது).

7. குடிப்பவர் நல்லவர், ஆனால் குடிப்பழக்கம் தவறு என்பது முரண்பாடாக இல்லையா?

முரண்பாடாக இல்லை.குடிப்பவர்கள் அல்லது குடிநோயர்கள் என்கிற நிலையை எட்டியவர்கள் மதுவுக்கு பலியான அப்பாவிகளாகவே கருதப்பட வேண்டும். அவர்களது இந்த இந்தநிலைக்கு அவர்களை மட்டுமே பொறுப்பாக்கக் கூடாது. உண்மையானக் குற்றவாளிகள் என்போர் குடியைத் திணிக்கும் மதுபான நிறுவனங்களும், அதனைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்க்கும் அரசாங்கமும்தான். இதில் குடிப்பவரின் பங்கு பெரிதல்ல, முக்கியமானதும் அல்ல.

தனிமனிதர்கள் மனம் திருந்துவதால் மது ஒழியாது. அதுகுறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மதுவை ஒழிக்காது. மாறாக, அரசாங்கம் 'ஒருங்கிணைந்த கொள்கை' செயல்பாட்டின் மூலமாக இந்த தீமையை ஒழிக்க  வேண்டும். (ஒருங்கிணைந்த மதுஒழிப்பு கொள்கைக்கான வழிகாட்டியை இங்கே காண்க: "தீங்கான மதுப்பயன்பாட்டைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தி" 
(WHO Global Strategy to Reduce Harmful Use of Alcohol) 
8. குடிப்பழக்கத்தைப் பற்றி பதிவுகளில் எழுதலாமா?

எழுதலாம். ஆனால், எப்படி? என்ன நோக்கத்தில்? எழுதப்படுகிறது என்பது முக்கியமாகும். இந்தியாவில் மதுபான விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதன் நோக்கம் குடிப்பழக்கத்தை கவர்ச்சிகரமாகவோ, இயல்பானதாகவோ காட்டக்கூடாது என்பதுதான். அப்படிக் காட்டினால அதுவும் விளம்பரம்தான். இதனால்தான் திரைப்படங்களில் குடிக்கும் காட்சிகள் வரும்போது அதுகுறித்த எச்சரிக்கையும் வெளியிடப்படுகிறது.

எனவே, குடிப்பழக்கத்தை அது ஒரு சாதாரண பழக்கம் என்பது போலவோ, கவர்ச்சிகரமானது என்பதாகவோ எழுதக் கூடாது. 

திரப்படத்திற்கு சென்றது, கடைக்கு சென்றது, சுற்றுலா சென்றது - என்பது குறித்தெல்லாம் 'நன்றாக' எழுதுவது போன்று குடியைப் பற்றி 'நன்றாக' எழுதக்கூடாது. இந்த வேறுபாடு 'பொறுப்புள்ள மனிதர்கள்' என்கிற அடிப்படையில் பதிவர்களுக்கு உண்டு.

9. குடிப்பழக்கம் இதயத்திற்கு நல்லதா?

நிச்சயமாக இல்லை. மிகச்சிறிய அளவாகக் குடிப்பதால் இதயத்திற்கு நன்மை என்று கூறப்பட்டது. அந்த நிலை இப்போது இல்லை. ஒருநாளில் ஒட்டுமொத்தமாக 30 கிராம் அளவுக்கு கீழாகக் குடிப்பது மட்டுமே குறைவானக் குடி எனப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட எந்த வளரும் நாட்டிலும் இப்படி மிகக்குறைவாகக் குடிக்கும் பழக்கம் இல்லை. எனவே, குடிப்பழக்கம் என்றாலே அது அதிகமாகக் குடிப்பதைதான் குறிப்பிடுகிறது. 

குடிப்பழக்கம் இதயத்தைக் கடுமையாகப் பாதிக்கிறது. குடியால் ஏற்படும் மரணங்களில் 22% இதயம் பாதிப்பதால் நேர்கிறது. எனவே, குடிப்பழக்கம் இதயத்திற்கு நல்லது என்பது ஒரு கட்டுக்கதையாகும்.

10. தமிழ்நாட்டின் இன்றைய நிலை என்ன?

உலகிலேயே மதுவைத் திணிக்கும் ஒரே அரசாங்கம் தமிழ்நாடு அரசுதான். 2003 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு மதுவால் கிடைத்த வருமானம் 2,800 கோடி ரூபாய். இப்போது 18,000 கோடி ரூபாய். அடுத்த ஆண்டு இது 21,000 கோடியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் வருவாயில் மதுபான வருவாய் மட்டும் 30% ஆகும்.

உலகிலேயே அதிக சாலை விபத்து நடக்கும் நாடு இந்தியா. இந்தியாவில் அதிக விபத்து நிகழும் மாநிலம் தமிழ்நாடு. 60% சாலை விபத்திற்கு குடிப்பழக்கம் காரணம். தமிழ்நாட்டில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 66,300 பேர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் மட்டும் விபத்தில் இறந்துள்ளனர். இதில் குடிக்காதோரும் அடக்கம்.

இந்தியாவிலேயே, விதவைகள் மிக அதிகமாக உள்ள மாநிலம் தமிழ்நாடு. மக்கள் தொகையில் 9% பேர் விதவை அல்லது கணவனால் கைவிடப்பட்டவர்கள். இதற்கும் குடியே முதன்மைக் காரணம். தமிழ்நாட்டில் தந்தையின் குடியால் 5 லட்சம் குழந்தைகள் அனாதைகளாகக் கைவிடப்பட்டுள்ளனர். 

உலகிலேயே அதிக தற்கொலை நடக்கும் நாடு இந்தியா, இந்தியாவில் இரண்டாவது இடம் தமிழ்நாட்டிற்கு. தற்கொலைக்கும் குடிப்பழக்கம் முதன்மைக் காரணமாகும்.

எனவே, தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் குடிப்பழக்கத்தைக் கற்றிருக்கலாம். 21 வயதைக் கடந்தவர்கள் இப்போதும் அளவுடன் குடிக்கலாம். அதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு. ஆனால், குடிப்பவரானாலும் குடிக்காதவரானாலும், நேரடியாகவோ மறைமுகமாகவோ, குடிப்பழக்கத்தை ஊக்குவிக்காமல் இருப்பதே நியாயம் ஆகும்.

இன்று பள்ளிக்கு செல்லும் என்னுடைய மகன் எதிர்காலத்தில் குடிகாரனாக ஆவதை நான் நிச்சயம் விரும்பவில்லை. எந்த ஒரு பதிவரும் தனது சந்ததியினர் குடிக்கு அடிமையாவதை விரும்பமாட்டார் என்றே கருதுகிறேன். இதிலும்கூட விதிவிலக்கானவர்கள் இருக்க வாய்ப்பு இல்லை!
தொடர்புடைய சுட்டிகள்:

1. மதுவை ஒழிக்க விரும்பும் உலகம்; திணிக்க விரும்பும் தமிழ்நாடு!
2. ஐ.பி.எல்: கொலை செய்யும் கிரிக்கெட்!!!
3. டோனியை எதிர்த்து போராட்டம்: மதுபான விளம்பரங்கள் அகற்றப்பட்டன 
4. ஒரு கம்யூனிஸ்ட் காமெடி: மதுஒழிப்பு நல்லகண்ணு, மதுதிணிப்பு தா.பாண்டியன்!

புதன், ஆகஸ்ட் 22, 2012

சென்னை நகரத்தின் வேர் தெலுங்கா? தமிழா? - சென்னை தினத்தில் ஒரு சர்ச்சை!

ஆகஸ்ட் 22 ஆம் நாள் சென்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1639 ஆம் ஆண்டில் இதே நாளில்தான் சென்னை நகரம் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்கள் எஸ். முத்தையா எழுதிய "சென்னை மறுகண்டுபிடிப்பு", நரசய்யா எழுதிய "மதராசப்பட்டினம்" ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.

சென்னை நகரின் வேர் தெலுங்கா?


"சென்னை மறுகண்டுபிடிப்பு" நூலில் "சென்னை நகரின் வேர் தெலுங்கு" எனும் சர்ச்சைக்குரிய தகவல் இருக்கிறது

"கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த ஆண்ட்ரூ கோகனும் ஃபிராசிஸ் டேயும் வெங்கடப்பா, ஐயப்பா என்ற வந்தவாசியில் இருந்த உள்ளூர் நாயக்குகள் பூந்தமல்லியில் அளித்த நிலத்தை நன்றியுடன் ஏற்றுக்கொண்டனர். பிற்காலத்தில் சோழமண்டலக் கடற்கரையில் பிரிட்டிஷ் ஆட்சிபீடமாக வளர்ந்த ஒரு நிறுவனத்தை அந்த இடத்தில் அமைத்தனர். சென்னையின் கதை இங்கே ஆரம்பிக்கிறது" என்று அவர் குறிப்பிடுகிறார்.

கூடவே "ஆங்கிலேயர்களுக்கு சென்னைப் பகுதியை அளித்த சந்திரகிரி ராஜாவின் உள்ளூர் நாயக்குகளான தாமர்ல சகோதரர்கள், சென்னப்ப நாயக் என்ற தங்களது தந்தையின்  ஞாபகார்த்தமாக அந்தக்குடியிருப்புக்கு சென்னப்பட்னம் என்று பெயர் வைக்க வேண்டும் என்று விரும்பினர்" என்று பெயர்க் காரணத்தைக் குறிப்பிடும் எஸ். முத்தையா, அதன் தொடர்ச்சியாக "நகரின் வேர் தெலுங்காக இருந்தாலும், தனித்தமிழ் விசுவாசிகள் இந்தப்பகுதியை சென்னை என்று அழைக்கத் தொடங்கினர்" என்கிறார். (பக்கம் 14)

இதே போன்று, ஆந்திர பிரதேசம் தோன்றியது குறித்த வீக்கிபீடியா கட்டுரையில், "வரலாற்று ரீதியிலும் புவியியல் ரீதியிலும் சென்னை ஆந்திராவின் ஒரு பகுதி. ஆங்கிலேயர்கள் இங்கே தொழிற்சாலை அமைக்க 1639 இல் அனுமதி கேட்டது, இப்பகுதியை ஆட்சி செய்த வெலமா சாதியைச் சேர்ந்த தாமர்ல வெங்கடாத்ரி நாயகுடுவிடம்தான். 1920 ஆம் ஆண்டுக்கு பின்பு சென்னை மாகானத்திலும் தேசிய அரசிலும் தமிழர்களின் ஆதிக்கம் அதிகரித்ததன் விளைவாகவே சென்னை தமிழ்நாட்டுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது" ன்று கூறப்பட்டுள்ளது.
மெட்ராஸ் மேட்டர்ஸ் எனும் நூல் சென்னை ஆந்திராவின் ஒரு பகுதி என்கிறது. "1998 ஆம் ஆண்டில் மெட்ராஸ் எனும் பெயரை சென்னை என்று மாற்றும் போது 'சென்னை' என்பதன் மூலம் தமிழ் அல்ல என்பதற்கான ஆதாரங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். ஆந்திரப் பகுதியைச் சேர்ந்த தெலுங்கு பேசும் சென்னப்ப நாயக்கர் எனும் சந்திரகிரி அரசரின் தளபதி ஆங்கிலேயருக்கு அதனை அளித்ததால்தான் அவரது பெயரில் சென்னை நகரம் அமைந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளனர்.
நரசய்யாவின் மதராசப்பட்டினம் நூலில் "தாமர்ல வெங்கடாத்ரி வம்சத்தினர் காளஹஸ்தி ராஜாக்கள் என்றழைக்கப்படுகின்றனர். அவ்வம்சத்தில், ஐந்தாவதாக வந்தவர் தாமரல குமார சின்னப்ப நாயுடு என்பவர். இவர் பெயரில்தான் சென்னக்குப்பம் என்ற ஒரு இடம் இருந்ததாகவும் அறிகிறோம். இந்தப் பெயர்தான் சென்னை என்ற பெயரின் ஆரம்பமும் ஆகும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது (பக்கம் 33).

ஆக மொத்தத்தில், வெங்கடப்பா நாயக்கர் என்பவர் ஃப்ரான்சிஸ் டேயிடம் சென்னையை அளித்ததாலும், அவரின் தந்தைப் பெயரே "சென்னப்ப நாயக்கர்" என்பதாலும் - அவர்கள் தெலுங்கு நாயுடு அல்லது வெலமா சாதியினர் என்கிற கருத்தில் - "சென்னை நகரின் வேர் தெலுங்கு" என்றும், "சென்னை ஆந்திராவின் பகுதி" என்றும் இப்போதும் பேசப்படுகிறது. இந்தத் தகவல் உண்மை அல்ல. 

சென்னை என்ற பெயருக்கு காரணமானவர்கள் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் அல்ல. சென்னப்ப நாயக்கர் ஒரு தமிழரே! சோழர்கள், பல்லவர்கள், காடவராயர்கள், கடைசியாக தாமல் நாயக்கர்கள் என வரலாற்றின் பெரும்பாலான காலம் தமிழர்களாலேயே சென்னைப்பகுதி ஆளப்பட்டு வந்தது. இந்த வரலாற்றை மாற்றி, சென்னை தெலுங்குப் பகுதி என பொய்யாகக் கட்டமைக்கின்றனர். அதற்கு 'சென்னை' பெயரைப் பயன்படுத்துகின்றனர்.

சென்னையை ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்தது எப்படி?

ஆங்கிலேயெ கிழக்கிந்தியக் கம்பெனிக்கு தென் இந்தியாவில் தொழிற்சாலை என்கிற பெயரில், மசூலிப்பட்டனத்தில் குடியிருப்பை அமைத்துக்கொள்ள 1611 ஆம் ஆண்டு கோல்கொண்டா முகலாய அரசர்கள் அனுமதி அளித்தனர். அதன் தொடர்ச்சியாக 1626 ஆம் ஆண்டு பழவேற்காட்டிற்கு 35 மைல் வடக்கே துர்கராயப்பட்டினத்தில் வேறொரு குடியிருப்பை அமைத்தனர். கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அந்த இடம் ஒத்துவராததால் வேறொரு இடத்தை தேடினர்.

1636 ஆம் ஆண்டு ஃபிரான்சிஸ் டே என்பவரிடம் புதிய இடத்தை தேடும் பொறுப்பு அளிக்கப்பட்டது. மசூலிப்பட்டனத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையே கடலோரமாக இடம் தேடி அலைந்த அவர் மதராசக்குப்பம் எனும் இடத்தை தேர்ந்தெடுத்தார். அப்போது இந்தப் பகுதியை ஆட்சி செய்தவர்தான் தாமல் வெங்கடப்பா நாயக்கர். அவரது தந்தை சென்னப்ப நாயக்கர். 

சென்னப்ப நாயக்கரின் உண்மை பின்னணி என்ன?

தாமல் நாயக்கர்கள் என்போர் தமிழ்நாட்டில் தற்போது காஞ்சிபுரத்துக்கும் ராணிப்பேட்டைக்கும் இடையே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாமல் எனும் ஊரை பூர்வீகமாகக் கொண்டவர்கள். இந்த ஊர் பல்லவர் காலத்தில் தாமர் கோட்டம் என்று அழைக்கப்பட்டது. இங்குள்ள தாமல் ஏரி பல்லவர்கள் காலத்தில் வெட்டப்பட்டது.

"தாமல், பழமையும் பெருமையும் வாய்ந்த காஞ்சி மாநகரத்தின் அரணாக விளங்கியுள்ளது. ஏனெனில், இது வடக்கு மற்றும் மேற்குப்புறத்திலிருந்து வரும் அரசர்களின் படையை காஞ்சி செல்லும் முன் எதிர்கொள்ளும் ஓர் போர்க்களமாக இருந்துள்ளது...இங்கு வன்னியர் (அல்லது நாயக்கர்) குலத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக வசிக்கின்றனர்....
தாமலில் அதிகளவு காணப்படும் இனமான நாயக்கர், விஜயநகரப் பேரரசு ஆட்சியில் சிறந்த போர் வீரர்களாக விளங்கியுள்ளனர். இவர்களே காஞ்சிக்கு எதிரான படையெடுப்புகளை தாமலில் முறியடித்து காஞ்சியைக் காத்துள்ளனர் என்றால் அது மிகையாகாது. இவர்கள் விஜயநகர ஆட்சிக்காலத்தில் போர் வீரர்களாகவும், படைத்தலைவர்களாகவும், ளுனர்களாகவும் மற்றும் நாயக்க அரசர்களாகவும் இருந்துள்ளனர்" என்று குறிப்பிடுகிறது சென்னை சி.பி.ராமசாமி அய்யர் பவுண்டேசனின் வெளியீடான "வரகீசுவரர் கோவில்" எனும் தாமல் வரலாற்று நூல். இந்தநூலை எழுதியவர் சி.பி.ராமசாமி அய்யரின் வாரிசான முனைவர் நந்திதா கிருஷ்ணா.

தாமல் கிராமத்தில் இப்போதும் வன்னிய நாயக்கர்களே மிகப் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர்.

விஜயநகரப் பேரசின் வழிவந்தவர்களான சந்தரகிரி அரசர் இரண்டாம் வெங்கட்டாவின் ஆட்சிக்காலத்தில் அவரது தலைசிறந்த தளபதியாக விளங்கியவர் தாமல் சென்னப்ப நாயக்கர். அதன் காரணமாகவே அவர் விஜயநகர அரசின் கீழ் சிற்றரசர் நிலைக்கு உயர்ந்துள்ளார். சென்னப்ப நாயக்கரின் புகழைப் போற்றும் வகையில் தூசி மாமண்டூரில் சென்னசாகரம் எனும் ஏரி வெட்டப்பட்டது. அவரது பெயராலேயே சென்னக்குப்பம் எனும் ஊரும் அமைக்கப்பட்டது. அவருக்குப்பின்னர் அவரது மகன் வெங்கடப்ப நாயக்கர் சிற்றரசர் அல்லது ஆளுனராக இருந்துள்ளார். அவரை பாளையக்காரர் என்றும் குறிப்பிடுகின்றனர்.

ஆங்கிலேயர்கள் சென்னை நகரில் தமது நிறுவனத்தை அமைக்க முயன்றபோது தாமல் வெங்கடப்ப நாயக்கர் வந்தவாசியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தார். அவருக்கு கீழே தாமல் அய்யப்ப நாயக்கர் பூந்தமல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தனர் (இந்த அய்யப்ப நாயக்கர் பெயரால் அமைந்த ஊர்தான் அய்யப்பன் தாங்கல்). இவர்களிடம் 15000 வீரர்களைக் கொண்ட பெரும் போர்வீரர் படை இருந்துள்ளது. எனவே, சந்தரகிரி அரசரிடம் மிகுந்த ஆதிக்கம் செலுத்துபவராக இவர்கள் இருந்துள்ளனர்.
பழவேற்காட்டுக்கும் சாந்தோமுக்கும் இடையிலான கடற்கரை இவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்களிடம் தான் ஆங்கிலேயர்கள் அனுமதி பெற்று தமது நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். உண்மையான  சென்னையின் கதை இங்கேதான் ஆரம்பிக்கிறது (Indian Records Series Vestiges of Old Madras 1640-1800,  By Henry Davidson Love 1852)

"ஒருகட்டத்தில் தாமல் நாயக்கர்கள் விஜயநகர அரசரை எதிர்க்கும் அளவிற்கும் சென்றுள்ளனர். 1642 ஆம் ஆண்டில் விஜயநகர அரசுப்பொறுப்பை ஏற்ற விஜயநரத்தின் கடைசி அரசரான சிறீரங்க ராயரை தாமல் வெங்கடப்ப நாயக்கர் ஏற்கவில்லை. இதனால், தாமல் வெங்கடப்ப நாயக்கரை பதவி நீக்கம் செய்து சிறையில் அடைத்தார் சிறீரங்க ராயர். ஆனால், தாமல் வெங்கடப்ப நாயக்கரின் தம்பியும் அவரது உறவினர்களும் நெருக்குதல் கொடுத்ததன் காரணமாக அவரை விடுதலை செய்து மீண்டும் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தார் சிறீரங்க ராயர்" என்கிறது தஞ்சை நாயக்கர்கள் எனும் வரலாற்று நூல் (Nayaks of Tanjore, By V. Vriddhagirisan 1942)

தமிழ் வன்னிய நாயக்கர்கள் தெலுங்கு நாயுடுகளாக ஆனது எப்படி?

விஜயநகர அரசர்களின் கீழ் வடதமிழ்நாட்டின் எல்லைப்பகுதியில் இரண்டு சிற்றரசுகள் இருந்துள்ளன. ஒன்று தாமல் வெங்கடப்பா நாயக்கர், மற்றது காளஹஸ்தி வெலுகோட்டி திம்ம நாயக்கர். இந்த இரண்டு தனித்தனி சிற்றரசுகளும் பல ஆவணங்களில் குறிப்பிடப்படுகின்றனர்.

சஞ்சை சுப்ரமணியம் என்பவர், '1600 களின் தொடக்கத்தில் விஜய நகர அரசரான வேங்கடப்பட்டி ராயருக்கும் செஞ்சி அரசரான முட்டு கிருஷ்ணப்ப ராயருக்கும் இடையேயான போரில் தாமல் மற்றும் வெலுகோட்டி சந்ததியினரின் துணைகொண்டு விஜய நகர அரசர் வெற்றிபெற்றதாக' குறிப்பிடுகிறார். (The Political Economy of Commerce: Southern India 1500-1650
 By Sanjay Subrahmanyam 1990)

அதே சஞ்சை சுப்ரமணியம் '1642 இல் நடந்த தண்டலூரு போரில் விஜய நகர அரசரான வெங்கட்டாவுடன் அவரது இரண்டு தளபதிகளான தாமல் வெங்கடப்பா நாயக்கரும் வெலுகோட்டி திம்ம நாயக்கரும் கோல்கொண்டா சுல்தானின் படையிடம் தோல்வியடைந்ததாக' குறிப்பிடுகிறார். (Penumbral Visions: Making Polities in Early Modern South India,  By Sanjay Subrahmanyam 2001)

அதே போன்று கனகலதா முகுந்த் எனும் வரலாற்று ஆய்வாளர், '1635 வாக்கில் வெலுகோட்டி குடும்பம், தாமல் குடும்பம் போன்ற தனிப்பட்ட குடும்பத்தினர் பெரும் அரசியல் சக்திகளாக மாறினர்' என்கிறார். (The Trading World of the Tamil Merchant: Evolution of Merchant Capitalism in the Coromandel,  By Kanakalatha Mukund 1999)

இப்படியாக, சந்தரகிரி அரசரின் கீழ் தாமல் வன்னிய நாயக்கர் பரம்பரையினர் மற்றும் காளஹஸ்தி வெலுகோட்டி பரம்பரையினர் என இரண்டு தனித்தனி பரம்பரையினர் இருந்துள்ளனர்.

இதனிடையே '1614 - 16 ஆம் ஆண்டுகளில் தமிழ் மற்றும் தெலுங்கு பகுதிகளில் நடந்த குழப்பமான போரின் போது தாமல் பரம்பரையை சேர்ந்தவர்கள் காளஹஸ்தியை பிடித்ததாகவும், அவர்கள் தொடர்ந்து காளஹஸ்தி ஜமீந்தார்களாக அங்கே ஆட்சி செய்வதாகவும்' ஒரு தகவல் 1938 ஆம் ஆண்டின் நெல்லூர் மாவட்ட கெசட்டீயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. (Gazetteer of the Nellore District: Brought Upto 1938,  By Government Of Madras Staff, Government of Madras 1942) (அதாவது, காளகஸ்தியைத்தான் தாமல் பரம்பரையினர் பிடித்தனர் என்று பிற்காலத்தில் கூறப்பட்டுள்ளது. மாறாக காளகஸ்தியிலிருந்து எவரும் வந்து தாமலைப் பிடிக்கவில்லை).

ஆக, காஞ்சிபுரம் அருகில் உள்ள தாமல் ஊரைச் சேர்ந்த சிற்றரசர்கள் வன்னிய நாயக்கர்கள். அவர்களது பெயரில்தான் சென்னை அமைந்துள்ளது.

'1756 ஆம் ஆண்டு சென்னை சைனா பசார் எனும் இடத்தில் கட்டப்பட்ட புதிய நகரக் கோவில் எனும் கோவிலுக்காக தாமல் மரபில் வந்த காளஹஸ்தி ராஜாவின் சார்பில் 100 பகோடாக்கள் அளிக்கப்பட்டதாக' சென்னையின் முந்நூறாவது ஆண்டுவிழா மலர் 1939 கூறுகிறது. (The Madras Tercentenary Commemoration Volume,  By Madras Tercentenary Celebration Committee, 1939)

ஆங்கிலேயர்களுக்கும் தாமல் வெங்கடப்பா நாயக்கர்களுக்கும் இடையேயான உடன்படிக்கை பற்றி 1852இல் விரிவாகக் குறிப்பிட்டுள்ள ஹென்றி டேவிட்சன் லவ், "தாமல் குடும்பத்தினரை இப்போது காளஹஸ்தி ராஜா பிரதிநிதிதுவப்படுத்துகிறார்" என்று குறிப்பிடுகிறார். (Indian Records Series Vestiges of Old Madras 1640-1800,  By Henry Davidson Love 1852) அதாவது, தாமல் பரம்பரையினர் வலுவிழந்த பின்னர் அவர்களது உரிமைகளை காளஹஸ்தி ராஜா பயன்படுத்தியுள்ளார்.

ஆக, காளஹஸ்தியில் வாழ்ந்த தெலுங்கு வெலமா சாதி வெலுகோட்டி ஜமீந்தார்கள் பிற்காலத்தில் தாமல் மரபினர் என்று கூறப்பட்டுள்ளனர். இந்த பிற்காலத் தகவலை வைத்துக்கொண்டு - தாமல் சிற்றரசர்கள் காலஹஸ்தியைச் சேர்ந்தவர்கள் என்றும், அதனால் அவர்கள் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்றும் வரலாற்றை தலைகீழாக மாற்றியுள்ளனர்.
'வன்னியர்கள் வரலாற்றை தானே மறைக்கின்றனர், நமக்கென்ன?' என்று பொதுவான தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள் வேடிக்கைப் பார்த்ததால் - தாமல் என்கிற தமிழ் மரபை தெலுங்கு மரபாகத் திரித்து, அதையே 'சென்னப்ப நாயக்கர்' தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்று மாற்றி, பின்னர் தெலுங்கு மன்னரின் பேயரில் அமைந்த சென்னை ஆந்திராவில் ஒரு பகுதி என்று பேசுகின்றனர்.

இதே கருத்தில் சென்னை நகரில் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. இன்று (22.08.2012) சென்னை தினம் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், சென்னையை உருவாக்கிய தாமல் ஊரில் அதன் சுவடே தெரியவில்லை!

தமிழ்ச்சாதியினர் புறக்கணிக்கப்பட்டால் தமிழன் புறக்கணிக்கப்படுவான் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
குறிப்பு: தமிழ்நாட்டின் வரலாறு திரிக்கப்படுவதை மறுத்து இப்பதிவு எழுதப்பட்டுள்ளது. மற்றபடி, ஒரு மொழி எனும் அடிப்படையில் தெலுங்கு மொழியும் ஒரு சிறப்பான மொழி என்றே நான் கருதுகிறேன். அவ்வாறே, தமிழ்நாட்டில் ஒரு அங்கமாகிவிட்ட தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்.தெலுங்கு மொழியையோ அந்த மொழி பேசும் மக்களையோ அல்லது ஆந்திர பிரதேசத்தையோ நான் குற்றம் சாட்டவில்லை. 

ஆதாரம்:

1. Varahishwarar Temple – Damal, CPR Publications, by Dr. Nanditha Krishna 2001.
2. Madras rediscovered, by S Muthiah2009.
3. Madrasapattinam, by Narasiah 2006.
4. Madras Matters – At home in South India, by Jim Brayley-Hodgetts 2008.
5. Indian Records Series Vestiges of Old Madras 1640-1800, by Henry Davidson Love 1852.
6. Gazetteer of the Nellore District: Brought Upto 1938, By Government Of Madras Staff, Government of Madras 1942.
7. The Madras Tercentenary Commemoration Volume, by Madras Tercentenary Celebration Committee, 1939.
8. Penumbral Visions: Making Polities in Early Modern South India, by Sanjay Subrahmanyam 2001.
9. The Trading World of the Tamil Merchant: Evolution of Merchant Capitalism in the Coromandel, by Kanakalatha Mukund 1999.
10. Nayaks of Tanjore, by V. Vriddhagirisan 1942.
 11. The Political Economy of Commerce: Southern India 1500-1650, By Sanjay Subrahmanyam 1990.




வெள்ளி, ஆகஸ்ட் 17, 2012

மகாத்மா காந்தியை உருவாக்கியவர்கள் இஸ்லாமியர்களா? சுவனப்பிரியனுக்கு ஒரு பதிலடி!

"இன்றைக்கு சுதந்திரம் என்ற பெயர் கேட்டாலே அனைவருக்கும் நினைவில் வருவது மகாத்மா எனும் தேசப்பிதாதான். அந்த மகாத்மாவை தேசப்பிதாவாக மாற்றியவர்கள் யார் என்ற உண்மையை எல்லா வரலாற்றாசிரியர்களும் சாமர்த்தியமாக மறைத்து விட்டனர்." என்று தனது பதிவில் குறிப்பிடும் சுவனப்பிரியன், மகாத்மா காந்திக்கு விடுதலை உணர்வை ஊட்டியவர்கள் இஸ்லாமியர்கள் என்று கூறுகிறார். (காந்திஜிக்கு சுதந்திர உணர்வை ஊட்டியவர்கள் யார்?)

வரலாற்று உண்மை என்ன?

குசராத் மாநிலத்தில் பிறந்து லண்டனில் சட்டம் பயின்ற காந்தி, இந்தியாவில் உரிய வேலை அமையாத காரணத்தினால் 1893 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் நேட்டாலில் பணிக்கு சேர்ந்தார்.அப்போது தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள்தான், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்கியது.
தென் ஆப்பிரிக்காவில் காந்தி
தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டமே மகாத்மா காந்தியை உருவாக்கியது, அதுவே இந்திய விடுதலைப் போரின் வழிகாட்டி என்பதை காந்தியும் தெளிவாக கூறியிருக்கிறார். "காந்தி இந்தியாவில் பிறந்திருக்கலாம் - ஆனால் தென் ஆப்பிரிக்காதான் காந்தியை 'உருவாக்கியது" என்றார் அவர்.

1925 ஆம் ஆண்டு கான்பூர் காங்கிரசு மாநாட்டில் பேசிய காந்தி "தென் ஆப்பிரிக்க இந்தியர்கள் என்னை உங்களுக்கு (காந்தியை இந்தியாவுக்கு) அளித்ததாகக் கூறுகிறார்கள். அதனை நான் ஒப்புக்கொள்கிறேன். அது முற்றிலும் உண்மை. இப்போது என்னால் இந்தியாவுக்காக என்னென்ன பணிகளை எல்லாம் செய்ய முடிகின்றதோ, அவை எல்லாம் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவை" என்று கூறினார்

ஆக, தென் ஆப்பிரிக்காதான் சாதாரண மோகன்தாசஸ் காந்தி, மகாத்மா காந்தி ஆனதன் தொடக்கமாகும்.

மகாத்மா காந்தியை உருவாக்கியோர்: இஸ்லாமியர்கள் - தமிழர்கள்!

மதுரையில் துணி வணிகம் செய்யும் இஸ்லாமியர்களின் முன்னோர்கள்தான் தமது நேட்டால் தாதா அப்துல்லா நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக காந்தியை தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பினர். அதுமட்டுமல்லாமல், காந்தி முதன்முதலில் முதல் அரசியல் இயக்கம் தொடங்க முயற்சித்தபோது அதுகுறித்து ஆலோசனைக் கேட்டது இதே அப்துல்லாவிடம்தான். அவரது முதல் இயக்கமான 'நேட்டால் இந்தியன் காங்கிரசு' இயக்கம் தொடங்கப்பட்டது தாதா அப்துல்லாவின் அலுவலகத்தில்தான். முதன்முதலில் அந்த இயக்கத்துக்கு நிதிவழங்கி காப்பாற்றியதும் அவர்கள்தான்.
நேட்டால் இந்திய காங்கிரசு இயக்கத்தில் இஸ்லாமியர்கள் (நடுவில் நிற்கும் காந்தி)
“Practice as a lawyer was and remained for me a subordinate occupation. It was necessary that I should concentrate on public work to justify my stay in Natal. Sustained agitation was essential for making an impression on the Secretary of State for the Colonies. For this purpose it was thought necessary to bring into being a permanent organization. So I consulted Sheth Abdulla and other friends, and we all decided to have a public organization of a permanent character. I recommended that the organization should be called the Natal Indian Congress, and on the 22nd May the Natal Indian Congress came into being. Dada Abdulla's spacious room was packed to the full on that day. Only he who paid five shillings monthly could be a member. Abdulla Sheth also put the list with £ 2 per month. I thought I should not stint my subscription, and put down a pound per month. This was for me beyond my means, if at all I was to pay my way.” – MK Gandhi 

இப்படியாக, மகாத்மா காந்தியை உருவாக்குவதில் எல்லாமுமாக இருந்தவர்கள் இஸ்லாமியர்களே. அதுவும் மதுரை நகரோடு தொடர்புள்ள இஸ்லாமியர்கள்.

காந்தி போராட்டக் களத்தில் இறங்கியபோது, போராட்டத்தினை வெற்றியடையச் செய்தவர்கள், வேரும் விழுதுமாக இருந்தவர்கள் தமிழர்கள். அதாவது தமிழர்கள் இல்லாமல் போயிருந்தால் - சத்தியாகிரகப் போரில் வெற்றிபெற முடியும் என்கிற நம்பிக்கையே காந்திக்கு வந்திருக்காது. இதை அவரே பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார்.

காந்தியின் தென்னாப்பிரிக்க போரில் மிக அதிக அளவில் கலந்து கோண்டவர்கள் தமிழர்கள்தான். அப்போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த 10 பேரில் 9 பேர் தமிழர்கள்.

"தமிழர்களுக்கு நன்றிக் கடன் பட்டவர்களாக மற்ற இந்திய சமூகத்தினரை தமிழர்கள் மாற்றிக் கொண்டிருக்கின்றனர். நாளுக்கு நாள் இந்த நன்றிக்கடன் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தமிழர்கள் தம்மீதான புகழ் பேரொளியை நாளுக்கு நாள் அதிகமாக்கிக் கொண்டிருக்கின்றனர். தமிழ் சமூகத்திற்கு இந்தியர்கள் எப்படி இந்த நன்றி கடனை திருப்பியளிக்கப் போகிறார்கள்?

தமிழர்களிடம் இந்திய சமூகத்தினர் பாடம் கற்க வேண்டும். தமிழர்களை முன்மாதிரியாகக் கொண்டு அவர்களைப் பின்பற்ற வேண்டும். தாய்நாட்டுக்காக அமைதியாக துன்பத்தை ஏற்பது எப்படி என்பதை இந்தியர்கள் தமிழர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். இதை செய்யத் தவறினால் இந்தியர்கள் தமக்குத் தாமே பழியை சுமப்பார்கள்" என 22.10.1910 அன்று இந்திய ஒப்பீனியன் இதழில் எழுதினார் காந்தி.

1915 ஆம் ஆண்டு மார்ச் 22 அன்று பர்மாவின் ரங்கூன் நகரில் தி இந்து பத்திரிகைக்கு பேட்டியளித்த காந்தி "தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு சிறைக்கு செல்லாவிட்டால் அது தமக்கு அவமானம் என தமிழர்கள் ஒவ்வொருவரும் நினைத்தனர். பொது நோக்கிற்காக சிறை செல்லாமலிருப்பது அவமானம் என்கிற இந்த மனப்பான்மை தமிழ் சமூகத்தைத் தவிர வேறு எந்த ஒரு இந்திய சமூகத்தினரிடமும் இல்லை. நான் முதன்முதலாக தமிழ் சமூகத்தினரை சந்தித்த போது அவர்களை நினைத்து பெருமிதம் அடைந்தேன். அடுத்தடுத்த சந்திப்புகளின் அவர்கள் மீதான மதிப்பு உயர்ந்து கொண்டே சென்றது. நான் என்னை வேறு எந்த ஒரு இந்திய சமூகத்தினரை விடவும் தமிழர்களுடன் தான் இணைத்துக் கொள்கிறேன்." என்று தெரிவித்தார் காந்தி.

மகாத்மா காந்திக்காக வன்னியர்கள் தியாகம்
ஜொகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் உள்ள சாமி நாகப்பன் படையாட்சி படம்
மகாத்மா காந்தியின் தென் ஆப்பிரிக்க விடுதலைப் போரில் தமிழர்கள் பெருமளவில் பங்கேற்ற போதும், அதிலும் பெரும்பகுதியினராக இருந்தவர்கள் வன்னியர்கள். இன்றைக்கும் தென் ஆப்பிரிக்க தமிழ்சமூகத்தில் முதன்மையாக இருப்பவர்கள் வன்னியர்கள்தான். படையாட்சி எனும் பெயர் இப்போதும் அங்கு பிரபலமான பெயராக உள்ளது. (அண்மையில் தென் ஆப்பிரிக்க அரசாங்கத்தை சோகத்தில் ஆழ்த்திய ஒரு முக்கிய நிகழ்வு அந்நாட்டு கேபினட் அமைச்சர் இராதாகிருஷ்ண படையாட்சியின் மரணம்).

உலகின் முதல் சத்தியாகிரக தியாகி.

மகாத்மா காந்தி வடிவமைத்த மாபெரும் போராட்ட முறை சத்தியாகிரகம் எனப்படுவதாகும். இந்திய விடுதலைப்போராட்டம், நெல்சம் மண்டேலாவின் தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டம், மார்ட்டின் லூதர் கிங்கின் அமெரிக்க கருப்பின உரிமைப் போராட்டம் என உலகின் மிகப்பெரிய போராட்டங்களின் அடிப்படை வடிவம் சத்தியாகிரகம்தான். அப்படிப்பட்ட தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போருக்காக உயிர்த்தியாகம் செய்த உலகின் முதல் தியாகி "சாமி நாகப்பன் படையாட்சி. உலகின் முதல் சத்தியாகிரக உயிர்த் தியாகம் எனும் அந்த மாபெரும் நிகழ்வு வரலாற்றின் பக்கங்களில் மறைக்கப்பட்டுவிட்டது.
 சாமி நாகப்பன் படையாட்சி
ஜொகனஸ்பர்க் சத்தியாகிரக காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். "இந்தியர்கள் சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும்" என்ற காந்தியின் கட்டளைக்கு ஏற்ப "பெயரை பதிவு செய்ய மறுத்து சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால்" 1909 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்டார் தமிழரான சாமி நாகப்பன் படையாட்சி. அவருக்கு 10 நாள் கடின உழைப்புடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

முதல் நாள் இரவு ஜொகனஸ்பர்க ஃபோர்ட் சிறையில் அடைக்கப்பட்டார் சாமி நாகப்பன் படையாட்சி. (இதே சிறையில்தான் காந்தியும், பின்னாளில் நெல்சன் மண்டேலாவும் அடைக்கப்பட்டனர். 'கான்சிடியூசன் மலை' என்று அழைக்கப்படும் அந்த இடம் இப்போது ஜொகனெஸ்பர்க் நீதிமன்றமாகவும், அருங்காட்சியகமாகவும் இருக்கிறது). அடுத்த நாள் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுக்ஸ்கெய் சாலை சிறை முகாம் எனும் இடதிற்கு நடத்தியே அழைத்துச் செல்லபட்டார். அங்கு அவர் சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டார். கடும்குளிரில் திறந்தவேளி கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டார். சரியான உணவும் இல்லை. உடல் நலம் பாதிப்படைந்த நிலையிலும் சாலை அமைத்தல், அதற்காக கல் உடைத்தல் போன்ற கடுமையான வேலைகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டன. உடல்நலப் பாதிப்பிற்கு சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை.
ஜொகனஸ்பர்க ஃபோர்ட் சிறை
ஏறக்குறைய கொலை செய்யப்பட்டவராக சூன் 30 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் இரட்டை நிமோனியாவால் இதயம் செயலிழது மரணத்தை தழுவினார். 1909 ஆம் ஆண்டு சூலை 7 ஆம் நாள் ஜொகனஸ்பர்க் இந்தியர்கள் அவர் உடலை ஒரு பொது நிகழ்ச்சியாக பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்தனர்.

1909 ஆம் ஆண்டு சூலை 19 அன்று மாஜிஸ்ட்ரேட் மேஜர் டிக்சன் என்பவரது தலைமையில் "சாமி நாகப்பன் படையாட்சி சிறைவாசத்தால் கொல்லப்பட்டது" குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் அளிக்கப்பட்ட விசாரணை அறிக்கை சிறை அதிகாரிகள் குற்றமற்றவர்கள் என்றது. இதற்கு இந்திய வம்சாவழியினர் திரண்ட ஜொகனஸ்பர்க் பொதுக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அரசாங்கத்திற்கு காந்தி எழுதிய கடிதத்தில் விசாரணை அறிக்கையில் உள்ள விசயங்களே நாகப்பன் சிறைவாசத்தால் கொல்லப்பட்டதை உறுதி செய்வதாக தெரிவித்தார்.

சாமி நாகப்பன் படையாட்சி சத்யாகிரகியாக சிறை சென்று உயிர்தியாகம் செய்யும் போது அவரது வயது பதினெட்டு. அந்த இளம் வயதில் சம உரிமைக்காக தனது உயிரை தந்தார் அவர்.
 பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டம்

1914 ஆம் ஆண்டு சூலை 18 ஆம் நாள், தனது 21 ஆண்டுகால தென் ஆப்பிரிக்க வாழ்வை முடித்துக்கொண்டு, காந்தி லண்டன் வழியாக இந்தியாவுக்கு கிளம்பினார். அதற்கு மூன்று நாள் முன்னதாக, சாமி நாகப்பன் படையாட்சி இறந்து ஐந்தாண்டுகளுக்கு பின்னர், சூலை 15 அன்று தென் ஆப்பிரிக்காவின் ஜொகனஸ்பர் நகரில் உள்ள பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடத்தை திறந்துவைத்தார் மகாத்மா காந்தி.

(தென்னாப்பிரிக்க இனவெறி ஆட்சி காலத்தில் சாமி நாகப்பன் படையாட்சி நினைவிடம் சிதைக்கப்பட்டது, தென் ஆப்பிரிக்காவில் 1994 இல் நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் 20.4.1997 அன்று மீண்டும் சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடம் மறுசீரமைக்கப்பட்டது. 
அதனை விடுதலைப் போராட்ட வீரரும் நெல்சன் மண்டேலாவின் நண்பருமான வால்டர் சிசுலு மற்றும் இந்திய தூதரும் காந்தியின் பேரனுமான கோபாலகிருட்டின காந்தியும் திறந்து வைத்தனர்.)

தனது சத்தியாகிரகப் போராட்டத்தில் உயிர்நீத்த முதல் தியாகி சாமி நாகப்பன் படையாட்சியின் வீரமரணம் காந்தியின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பதை அவரது பேச்சுகளில் இருந்தும் எழுத்துகளில் இருந்தும் அறியமுடியும்.

தனது மகன் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று முதன்முதலாக சிறை சென்ற போது -  நாகப்பன் தியாகத்தோடு ஒப்பிட்டால், தனது மகனின் சிறைவாசம் பெரிதல்ல என்று 14.12.1909 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி.

தனது சகோதரர் இறந்த போது -   நாகப்பன் உயிரிழப்பு தனக்கு ஏற்படுத்திய மன வலியுடன் ஒப்பிட்டால் தனது சகோதரன் இறப்பால் ஏற்படும் வலி பெரிதல்ல என்று 18.3.1914 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி.

சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகத்தை போற்ற வேண்டும் என காந்தி விரும்பினார். முதலாவதாக, 6.10.1909 அன்று போலக் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் சாமி நாகப்பன் நிழற்படம் கிடைத்ததைக் குறிப்பிட்டு, உடனடியாக அதனை சென்னையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்று காந்தி தெரிவித்தார். இதன் மூலம் தமிழ்மக்களிடம் நாகப்பன் தியாகத்தை கொண்டுசெல்ல வேண்டும் என அவர் நினைத்தார். அந்த விருப்பம் நிறைவேறவில்லை.

அடுத்ததாக, நாகப்பன் தியாகத்தை போற்றும் வகையில் ஜொகனஸ்பர்க் நகரில் ஒரு கல்வி உதவித்தொகை நினைவு நிதியை உருவாக்க விரும்பினார். அதற்காக திருமதி.வோகல் என்பவர் நிதிதிரட்ட முன்வந்த போது காந்தி அதனை வரவேற்று ஆதரித்து 9.12.1911 மற்றும் 14.6.1912 தேதிகளில்  இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகையில் எழுதினார். அதுமட்டுமல்லாமல் சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களிலும்  நாகப்பன் நினைவு நிதியை உருவாக்க வேண்டும் என்றார் காந்தி. அதுவும் நடக்கவில்லை.

காந்தி இந்தியா திரும்பிய பின்னர் - இந்திய சுதந்திரப் போராட்டம் எப்படி அமையவேண்டும் என்பதற்கு - போராட வருவோர் நாகப்பனை முன்னுதாரணமாக கொண்டு அவர் காட்டிய பதையில் பயணிக்க வேண்டும் என்றார் காந்தி. சென்னை (21.4.1915), மதுரை (26.3.1919), தூத்துக்குடி (28.3.1919), நாகப்பட்டிணம் (29.3.1919) என தமிழ்நாட்டில் தான் பங்கேற்ற கூட்டங்களில் எல்லாம்  நாகப்பன் தியாகத்தை புகழ்ந்து பேசினார் காந்தி.

இந்தியாவின் எரவாடா சிறையில் இருந்த காலத்தில் 'தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகிப் போராட்டம்' எனும் விரிவான நூலை எழுதினார். இந்த நூல் 1928 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. அந்த நூலில் நாகப்பன் குறித்து விரிவாகக் கூறியுள்ளார் மகாத்மா காந்தி.

"நாகப்பன் ஒரு இளம் சத்தியாகிரகி. பதினெட்டு வயதில் சிறையில் அடைக்கப்பட்ட அவர் சிறையில் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்தார். அதிகாலையில் சாலை அமைக்கும் பணிக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு இரட்டை நிமோனியாவால் தாக்கப்பட்டு சிறையிலிருந்து வெளியானவுடன் 6.7.1909 அன்று வீர மரணம் அடைந்தார்.

நாகப்பன் கடைசி நிமிடம் வரை உயிரோடிருந்த ஒவ்வொரு நிமிடமும் சத்தியாகிரகப் போராட்டத்தை மட்டுமே பேசியதாக அவரோடு இருந்தவர்கள் கூறினார்கள். அவர் ஒருபோதும் சிறைக்கு சென்றதை நினைத்து வருந்தவில்லை. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்வதை அவர் பெருமிதமாகக் கருதினார்.

நம்முடைய தராதரத்தில் பார்த்தால் நாகப்பன் எழுத்தறிவற்றவர். அவர் தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலமும் சூலு (தென் ஆப்பிரிக்க) மொழியும் பேசினார். அரைகுறை அங்கிலத்தில் எழுதினார். எப்படிப்பார்த்தாலும் அவர் கற்றறிந்தவர் அல்ல. இருந்தாலும் அவரது தேச பக்தி, அவரது வலிமை, அவரது எதையும் தாங்கும் துணிச்சல், மரணத்தையே எதிர்கொள்ளும் ஆற்றல் ஆகியவற்றை கருத்தில் கொண்டால் அவர் எல்லாம் வல்லவராக இருந்தார்.

கற்றறிந்த கல்விமான்களால் தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போர் வெற்றிபெறவில்லை, மாறாக நாகப்பன் போன்ற வீரர்கள்தான் அதனை வெற்றியடைய வைத்தனர்" என்று எழுதியிருக்கிறார் காந்தி.

இத்தனைக்கு பிறகும் விடுதலை அடைந்த இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில், சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகம் வெளியே தெரியாமல் மறைந்து போய்விட்டது.

இப்படியாக - மகாத்மா காந்தியை உருவாக்கிய "இஸ்லாமியர்கள், தமிழர்கள், வன்னியர்கள்" மற(றை)க்கப்பட்டுவிட்டனர். இதைப்பற்றி பேசினால் அது "சுய மத, சுய இன, சுய சாதிப் பெருமை" என்று அடையாளப்படுத்தப்படலாம்.


தொடர்புடைய சுட்டிகள்

1. மறக்கப்பட்ட மாபெரும் தியாகம்: சாமி நாகப்பன் படையாட்சி!
2. தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகமும் தமிழர்களின் தியாகமும்
3. தமிழ் வீரத்தை புகழும் மகாத்மா காந்தி: சாமி நாகப்பன் படையாட்சி
4. தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்