"நம்பகத்தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்பாகவும், பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளேன். இக்கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால்
ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும் திமுகவுக்கும் உள்ள உறவு நீடிக்காது என்பது உறுதி." என்று கலைஞர் கூறியுள்ளார்.
கலைஞரின் பேட்டியைப் பார்க்கும் போது
"இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல...பேசும் போது, ரொம்ப இலக்கணமா பேசு! பாட்டெழுதும் போது கோட்டை விட்டுரு!" என்று
திருவிளையாடல் படத்தில் நாகேஷ் பேசும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது!
ஈழத்தமிழர் இனப்படுகொலையில் கலைஞர் நடத்தும் நாடகங்களைப் பார்த்து தமிழக மக்களுக்கு ரத்தக் கண்ணீர் வடிகிறது. அவரது நாடகங்களில்
மிகக்கொடுமையான காட்சிகள் இரண்டு:
- 'இலங்கையில் போரை இரண்டு வாரத்தில் நிறுத்தாவிட்டால் தமிழ்நாட்டின் எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா' என்று 2008 அக்டோபர் 18-ல் அறிவித்து, அதனை 26 ஆம் தேதி பிரணாப் முகர்ஜியிடம் தனி அறையில் பேசிய பின்பு கைவிட்டார்.
- சாகும்வரை உண்ணாவிரதத்தை 2009 ஏப்ரல் 27 அன்று தொடங்கி மூன்று மணி நேரத்தில் 'சோனியா பேசினார், மன்மோகன் பேசினார், இலங்கையில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்துவிட்டது' என்று கூறி உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
- இந்த இரண்டு நாடகங்களுக்கு பின்னர்தான் ஈழத்தமிழர்கள் ஒரு லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழகமே தோண்டையில் துக்கம் அடைக்க கண்ணீர்விடும் பாலசந்திரன் படுகொலை இந்த நாடகங்களுக்கு பின்னர் நிகழ்ந்ததுதான்.
இப்போது - நாடகத்தின் மூன்றாவது கட்டம் வந்துவிட்டதாக சராசரித் தமிழன் நினைக்கிறான். வரலாற்றில் இந்த அவப்பெயரில் இருந்து கலைஞர் தப்ப வேண்டுமானால் அவர் செய்ய வேண்டியது இதுதான்:
இந்திய அரசு செய்ய வேண்டியது என்ன?
- முதலில்: "இலங்கை இறுதிப்போரின் போது பன்னாட்டு சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பாக சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்காக ஐநா மனித உரிமை பேரவையின் மூலம் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்" என்கிற கோரிக்கையை இந்திய அரசு கொள்கை அளவில் ஏற்கசெய்ய வேண்டும்.
(அதாவது - இலங்கை இறையாண்மை மிக்க நாடு, அதன் உள்விவகாரத்தில் அந்நிய தலையீடு கூடாது, இலங்கையில் நிகழ்ந்த பன்னாட்டு சட்ட மீறல்களை இலங்கையே விசாரிக்கட்டும் - என்கிற பழைய பல்லவியை இந்தியப் பேரரசு முற்றிலுமாக கைவிட வேண்டும்).
- அடுத்ததாக: ஐநா மனித உரிமை பேரவையில் அமெரிக்க முன்வைத்துள்ள தீர்மானத்தில் மேற்கண்ட கோரிக்கையை இந்தியாவின் சார்பில் சேர்க்க வேண்டும்.
இந்தியாவுக்கு இது ஒன்றும் புதிதல்ல.
கடந்த ஆண்டு தீர்மானத்தின் போது இலங்கைக்கு ஆதரவாக கடைசி நேரத்தில் எப்படி இந்தியா திருத்தம் கொண்டு வந்ததோ, அதே போன்று இப்போது தமிழர்களுக்கு ஆதரவாகவும் இந்தியாவால் திருத்தம் செய்ய முடியும்.
எனவே,
'மத்திய அரசுடன் பேச்சு, மத்திய அரசின் தூதர்கள் சந்திப்பு, கலைஞரிடம் விளக்கம்' என எத்தனை காட்சிகள் நடந்தாலும், கடைசியில் "பன்னாட்டு விசாரணை ஆணையம்" என்கிற ஒற்றைக் கோரிக்கையைத் தவிர வேறு எந்த ஒரு சமாதானத்தையும் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.
அப்படி ஏதேனும் புது சமாதானத்தை, விளக்கத்தை, மழுப்பலை, 'அய்யோ மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாதே' என்கிற பசப்பலை கலைஞர் கூறினால் அதைக் கடைசித் தமிழன் கூட நம்ப மாட்டான். கூடவே,
கலைஞரின் மிரட்டல் தமிழனுக்காக அல்ல, அது 'வேறு எதற்காகவோதான்' என்று நாடே பேசும் நிலைதான் உருவாகும்.
"பன்னாட்டு விசாரணை ஆணையம்" (
independent, international commission of inquiry) என்கிற கோரிக்கையை கலைஞர் சாதிக்கிறாரோ இல்லையோ - தமிழக மக்களால் 'இன்றில்லாவிட்டாலும் நாளை' நிச்சயம் சாதிக்க முடியும். அதற்கு தமிழ்நாட்டு மக்கள் ஒரே குரலில் தெளிவாக இக்கோரிக்கையை முன்வத்து போராட வேண்டும்.
இலங்கை மீது பன்னாட்டு விசாரணை ஆணையம் - முன் உதாரணங்கள்.
"Decides to dispatch urgently an independent international commission of inquiry, to be appointed by the President of the Human Rights Council, to investigate violations of international human rights law in the Syrian Arab Republic since July 2011, to establish the facts and circumstances that may amount to such violations and, where possible, to identify those responsible with a view of ensuring that perpetrators of violations are held accountable"
"Decides to urgently dispatch an independent, international commission of inquiry, to be appointed by the President of the Council, to investigate all alleged violations of international human rights law in Libya, to establish the facts and circumstances of such violations and of the crimes perpetrated, and , where possible identify those responsible to make recommendations, in particular, on accountability measures, all with a view to ensuring that those individuals responsible are held accountable, and to report to the Council at its seventeenth session, and calls upon the Libyan authorities to fully cooperate with the Commission"
1. பன்னாட்டு விசாரணை ஆணையம் எதற்காக ?
ஆயுதம் தாங்கிய ஈழப்போரின் கடைசிக் கட்டத்தில் 2008 ஆம் ஆண்டு தொடங்கி 2009 மே மாதம் வரை - இந்த நூற்றண்டின் மிகப்பெரிய அழித்தொழிப்புப் போர், சாட்சிகள் ஏதுமற்ற நிலையில் இலங்கை நாட்டின் சிங்கள பௌத்த பயங்கரவாத அரசாங்கத்தால் நடத்தப்பட்டது. இந்தப் போரில் பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறி தமிழ் மக்களுக்கு எதிராக கொடுமைகள் அரங்கேற்றப்பட்டன.
போர் முடிந்த பின்னர் இந்தக் கொடுமைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளி உலகிற்கு தெரிந்தன. சானல் 4 வெளியிட்ட ஆதாரங்கள், டப்ளின் மக்கள் தீர்ப்பாய விசாரணை, ஐநா நிபுணர் குழு அறிக்கை, ஐநா உள்விசாரணை அறிக்கை - என முக்கியமான அறிக்கைகள் கொடுமைகளை வெளிக்கொண்டு வந்தன. மனித உரிமை கண்காணிப்பகம், அம்னெஸ்டி இன்டர்நேஷனல், சர்வதேச நெருக்கடி குழு உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகள் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டன. ஐநா மனித உரிமை ஆணையரின் அறிக்கையும் இதனை சுட்டிக் காட்டியது.
இத்தனை ஆதாரங்களுக்கு பின்னரும் - இறுதிக் கட்ட போரின் போது சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டமைக் குறித்து ஒரு பாரபட்சமில்லாத விசாரணை நடத்தப்படவே இல்லை. உண்மையில் நடந்தது என்ன என்பதை அதிகாரப்பூர்வமாக வெளிக்கொண்டு வருவதற்காக நியாயமான, பக்கசார்பற்ற, நம்பகத்தன்மையுடன் கூடிய ஒரு விசாரணை இதுவரை இல்லை.
எனவே, உண்மை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும். குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, உரிய நீதி அமைப்புகள் வழியே விசாரிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்கிற 'உண்மை மற்றும் நீதிக்கான' குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
உண்மையும் நீதியும் இல்லாது போனால் அமைதியும் சமாதானமும் இல்லை. இதனை உலகின் பெரும்பாலான நாடுகளும் எல்லா மனித உரிமை அமைப்புகளும் ஏற்றுக் கொள்கின்றன, வலியுறுத்துகின்றன.
உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கையை எல்லோரும் ஏற்கும் நிலையில் அதனை யார் செய்வது என்கிற கேள்வி எழுகிறது.
இலங்கை அரசு தன்னை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட ஜனநாயக அரசு என்று கூறிக்கொண்டாலும் - அதுவே குற்றத்தை செய்த அரசாகவும் இருக்கிறது. நியாயமான, பக்கசார்பற்ற, நம்பகத்தன்மையுடன் கூடிய ஒரு விசாரணையை நடத்தும் தகுதியோ, திறமையோ, நேர்மையோ, உண்மையான விருப்பமோ, நம்பகத்தன்மையோ அந்த அரசுக்கு கொஞ்சமும் கிடையாது.
ஆகவே,
"சுதந்திரமான பன்னாட்டு விசாரணைத் தேவை" என்கிற கோரிக்கை முதன்மையான கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது.
2. பன்னாட்டு விசாரணை என்றால் என்ன?
உலகின் எந்த ஒரு பகுதியிலும் பன்னாட்டு சட்டங்களை மீறும் வகையில் பெரிய அளவில் குற்றங்கள் நடைபெறும் நிலையில் - குறிப்பாக போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான கொடும் குற்றம், இனப்படுகொலை என்கிற மிகக் கொடூரமான குற்றங்கள் இழைக்கப்படும் நிலையில், அல்லது குற்றங்கள் நடந்து முடிந்த பின்பு பன்னாட்டு விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. குறிப்பாக அந்தக் குற்றத்தில் அரசும் ஒரு பங்குதாரராகவோ அல்லது விசாரிக்கும் விருப்பமோ தகுதியோ ஆற்றலோ அரசுக்கு இல்லாத நிலையில் பன்னாட்டு விசாரணை கட்டாயமாகிறது.
இத்தகைய பன்னாட்டு விசாரணைகள் அனைத்தும் குற்றத்தை ஆவணப்படுத்தி உண்மையை வெளி உலகிற்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்படுகின்றன. குற்றமும் அதற்கு காரணமானவர்களும் அதிகாரப்பூவமாக ஆவணப்படுத்தப்பட்ட பின்னர் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் வாய்ப்பு உண்டு.
3. பன்னாட்டு விசாரணைக்கு உத்தரவிடுவது யார்?
பன்னாட்டளவிலான விசாரணைக்கு உத்தரவிடும் அதிகாரம் ஐநா பாதுகாப்பு அவைக்கும் ஐநா மனித உரிமை பேரவைக்கும் உண்டு. இந்த அமைப்புகளில் தீர்மானம் கொண்டுவந்து உலகின் எந்த ஒரு நாட்டின் மீதும் விசாரணை நடத்த உத்தரவிட முடியும்.
இலங்கை நிலவரத்தைப் பொறுத்த வரை, ஐநா பாதுகாப்பு அவையில் இலங்கையைப் பாதுகாக்கும் அதன் நட்பு நாடுகளான சீனாவும் ரஷ்யாவும் வீட்டோ அதிகாரத்துடன் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன (வீட்டோ அதிகாரம் என்பது எந்த ஒரு தீர்மானத்தையும் தனி ஒரு நபராக தடுக்கும் அதிகாரம் ஆகும்). அந்த நாடுகள் இலங்கை மீதான எந்த ஒரு தீர்மானத்தையும் தடுத்துவிடும்.
ஆனால், ஐநா மனித உரிமை பேரவை என்பது 47 தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் ஜனநாயக அமைப்பாகும். இங்கு யாருக்கும் வீட்டோ அதிகாரம் கிடையாது. ஒரு தீர்மானத்தின் மீது வாக்களிக்கும் நாடுகளில் சரிபாதிக்கு கூடுதலான வாக்குகளைப் பெற்றால் தீர்மானம் வெற்றிபெற்றுவிடும்.
ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கையின் தீவிர நட்புநாடுகளான சீனா, ரஷ்யா, கியூபா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக இல்லை. அவற்றின் பதவிக்காலம் 2012 இல் முடிந்து விட்டது. இலங்கை உறுப்பினராகும் தேர்தலில் தோற்று அதற்கு முன்பாகவே வெளியேறிவிட்டது. இப்போதைக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் மட்டுமே இலங்கையின் தீவிர ஆதரவு உறுப்பு நாடுகள்.
எனவே,
இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐநா மனித உரிமை பேரவையில் வெற்றி பெறுவது சாத்தியம்தான். இலங்கை மீது பன்னாட்டு விசாரணைக்கு ஐநா மனித உரிமை பேரவை எளிதாக உத்தரவிட முடியும்.
4. பன்னாட்டு விசாரணையை எந்த நாடு மேற்கொள்ளும்?
பன்னாட்டு விசாரணையில் எந்த நாடும் இடம்பெறாது. நீண்ட அனுபவமும் தகுதியும் கொண்ட மனித உரிமை வல்லுநர்கள் ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலகம் மூலம் இதற்காக தெரிவு செய்யப்படுவார்கள். தன்னிச்சையான அதிகாரம் கொண்ட அந்தக் குழுவே விசாரண நடத்தும்.
விசாரணையில் பங்கேற்கும் மனித உரிமை வல்லுநர்களுக்கு சம்பளம் எதுவும் அளிக்கப்பட மாட்டாது. அவர்கள் தன்னார்வ அடிப்படையிலேயே வேலை செய்வார்கள். அலுவலகம், ஆய்வு உதவி, பயணங்கள் போன்றவற்றிற்கு ஐநா மனித உரிமை அணையர் அலுவலகம் உதவும்.
5. இதுபோன்ற பன்னாட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளதா?
யூகோசுலோவியா, லெபனான், இஸ்ரேல், காங்கோ, லிபியா, சிரியா, சூடான் என உலகின் பல நாடுகளுக்காக பன்னாட்டு விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகள் மூலம் கொடூரமான குற்றங்கள் ஆதாரப்பூர்வமாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் பன்னாட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். தனி நாடுகள் உதயமாகவும் இது வழிவகுத்துள்ளது.
சூடான்: தெற்கு சூடனின் தர்ஃபுர் பகுதியில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் பன்னாட்டு சட்ட மீறல்கள் குறித்து விசாரிக்க 2004 ஆம் ஆண்டில் ஐநா பாதுகாப்பு சபை ஒரு பன்னாட்டு விசாரணை ஆணையத்தை அமைத்தது.
சூடான்
மூன்றே மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்ட இந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை, சூடானின் அரசாங்கமே மனித குலத்துக்கு எதிரான கொடுங்குற்றங்களையும், பாலியல் வன்கொடுமைகளையும், சித்தரவதைகளையும், திட்டமிட்ட மக்கள் அப்புறப்படுத்தலையும் நிறைவேற்றியதை நிரூபித்தது. கூடவே, அரசாங்கமே இனப்படுகொலைக்கு வழி செய்யவில்லை என்றாலும், அரசின் சில உயர்மட்ட உறுப்பினர்கள் இனப்படுகொலைக்கு வழிவகுத்ததை சுட்டிக்காட்டியது.
இதனைத் தொடர்ந்து, சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. சூடான் அதிபர் ஒமர் அல் பஷீர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
தெற்கு சூடான்
அதே ஆண்டில் எட்டப்பட்ட அமைதி உடன்படிக்கையின் கீழ் தெற்கு சூடான் பகுதி ஆறு ஆண்டுகளுக்கு தன்னாட்சிப் பகுதியாகவும், பின்ன
ர் 2011 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பின் மூலம் - 99 % மக்கள் தனிநாட்டிற்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக - தெற்கு சூடான் தனிநாடாகவும் மலர்ந்தது.
லிபியா: லிபியாவில் நடந்த கலவரத்தினைத் தொடர்ந்து ஐநா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தின் படி 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஐந்து மாத காலத்தில் இந்த விசாரணை ஆணையம் தனது அறிக்கையை அளித்தது. அதில் லிபியாவில் பன்னாட்டு சட்டங்களை மீறி கொடும் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதை மெய்ப்பித்தனர். போர்க்குற்றங்களும் மனித குலத்துக்கு எதிரான கொடுங்குற்றங்களும் நிகழத்தப்பட்டது வெளிக்கொணரப்பட்டது.
லிபியா
குற்றச்சாட்டுக்கு உள்ளான கடாஃபியின் அரசு தூக்கி எறியப்பட்டது. அவரும் கொல்லப்பட்டார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து - லிபியாவின் புதிய அரசே குற்றங்களை விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்கலாம் என பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சிரியா: சிரியாவில் நடந்துவரும் கலவரங்களைத் தொடர்ந்து
2011 ஆகஸ்ட் மாதம் ஒரு பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைத்து ஐநா மனித உரிமை ஆணையம் தீர்மானம் நிறைவேற்றியது.
தங்களது நாட்டில் நடந்த குற்றங்களை விசாரிக்க நாங்களே ஆணையம் அமைத்துள்ளோம் என்று கூறி இந்த விசாரணை ஆணையத்தை சிரியா அனுமதிக்கவில்லை. எனினும், சிரியாவுக்கு வெளியா உள்ள அகதிகளிடமும் மற்ற நாடுகளிடமும் விசாரணை நடத்தி சிரியாவின் அரசாங்கமே பன்னாட்டு சட்டங்களை மீறீயுள்ளதாகவும், குற்றவாளிகளை அரசே காப்பதாகவும், மனித குலத்துக்கு எதிரான கொடுங்குற்றங்கள் நடப்பதாகவும் விசாரணை ஆணையம் தெரிவித்தது. இந்த விசாரணை அறிக்கை குறித்த விவாதங்கள் தற்போதைய மனித உரிமை பேரவையில் நடந்து வருகிறது.
- இதே போன்று இலங்கையில் நடந்த
'பன்னாட்டு சட்ட மீறல்கள்' குறிப்பாக இனப்படுகொலை, போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான கொடுங்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்பதே இப்போது வலியுறுத்தப்பட வேண்டிய முதன்மைக் கோரிக்கை ஆகும்.
அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தில் இந்த கோரிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால், அத்தகைய விசாரணை ஆணையம் அமைக்க இந்த தீர்மானம் உத்தரவிடவில்லை. எனவே, சர்வதேச விசாரணை ஆணையம் அமைப்பதற்கான திருத்தத்தை இந்தியா முன்வைக்க வேண்டும்.
ஒரு உதாரணத்திற்கு இந்தியா கொண்டுவரும் திருத்தம் பின்வருமாறு அமையலாம்:
- Decides to dispatch urgently an independent international commission of inquiry, to be appointed by the President of the Human Rights Council, to investigate violations of international human rights law and international humanitarian law in the Democratic Socialist Republic of Sri Lanka since January 2008, to establish the facts and circumstances that may amount to such violations and, where possible, to identify those responsible with a view of ensuring that perpetrators of violations are held accountable.
இவ்வாறு "சர்வதேச விசாரணை ஆணையம்" அமைக்கப்பட்டு,
இலங்கை அரசின் கொடூர முகம் அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படும் நிலையில் - காலம் நிரந்தரமான அரசியல் தீர்வை நோக்கி பயணிக்கும். தெற்கு சூடானில் நேர்ந்தது போன்று விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு சாத்தியமாகும்.
எனவே - "சர்வதேச விசாரணை ஆணையம்
(Commission on Inquiry) " என்பதை தமிழ்நாட்டு மக்களின் தற்போதைய முதன்மைக் கோரிக்கையாக்க வேண்டும்.