Pages

புதன், மார்ச் 02, 2016

சமூகநீதிப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் தினமணி: கோயபல்ஸ் தலையங்கத்துக்கு மறுப்பு!

தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு 1987 சமூகநீதிப் போராட்டம் ஆகும். பல உயிர்களை தியாகம் செய்து, பல ஆயிரம் குடும்பங்களில் விளக்கேற்றிய அந்த உன்னதமான போராட்டம் குறித்து கொச்சையாக தலையங்கம் தீட்டியுள்ளது தினமணி நாளிதழ். இந்த அக்கிரமம் சகித்துக்கொள்ளக் கூடியது அல்ல.

ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் அது உண்மையாக்கப்படும் என்பது ஹிட்லரின் தந்திர வியூகம் ஆகும். கடந்த நூற்றாண்டின் சோக நிகழ்வான யூத இனப்படுகொலையின் அடிப்படையே பொய்ப்பிரச்சாரம் தான். இதற்காக கோயபல்ஸ் எனும் தனி அமைச்சரையே நியமித்தார் ஹிட்லர். ஜெர்மனியில் ஹிட்லர் மேற்கொண்ட இனவெறி பிரச்சாரத்துக்கு இணையாக தமிழ்நாட்டிலும்  பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியை குறிவைத்து, குறிப்பாக மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை குறிவைத்து அந்த பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன. அதில் ஒரு பங்குதான் கீழே உள்ள தினமணி தலையங்கம்:
தினமணியின் "உண்மை சுடுகிறது!" தலையங்கம் 2.3.2016:

"ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான வன்னியர் சங்கம் இடஒதுக்கீட்டிற்காகப் போராடியபோது, சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டு, சென்னைக்கு வரும் வாகனங்களைத் தடுத்து நிறுத்தியது நினைவிருக்கும். சுமார் ஒரு வார காலத்திற்கு சென்னை மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டது. பால் இல்லை; உணவுப் பொருள்களுக்கும், காய்கறிகளுக்கும் தட்டுப்பாடு. வெளியூர் பயணிகள் சென்னையிலும், சென்னைவாசிகள் வெளியூரிலும் பயணிக்க வழியில்லாமல் தவித்தனர்... அன்றைய எம்.ஜி.ஆர். அரசும் சரி, போராட்டக்காரர்களின் மிரட்டலுக்குப் பணியாமல் மிகவும் சாதுர்யமாக அந்தப் போராட்டத்தைக் கையாண்டது" - என்று போராட்டத்தின் ஒரு பகுதியை மட்டும் தனது தேவைக்கேற்ப இட்டுக்கட்டியுள்ளார் தினமணி வைத்தியநாதன். தினமணி தலையங்கம்: http://goo.gl/KEIE4b

தினமணி வைத்தியநாதனின் கட்டுக்கதைகளுக்கு மறுப்பு:

1.  மருத்துவர் அய்யா நடத்திய போராட்டத்தின் நியாயத்தை தினமணி வைத்தியநாதன் மறைக்கலாமா?

சாலை மறியல் போராட்டத்தால் ஏற்பட்ட சில இடைஞ்சல்களை மட்டுமே குறிப்பிட்டுள்ள தினமணி வைத்தியநாதன், அந்த போராட்டம் ஏன் நடத்தப்பட்டது என்கிற காரணத்தை மறைத்துள்ளார்.

தமிழகத்தில் பிராமணரல்லாத இந்துக்களும், தாழ்த்தப்பட்டோரும், மதச்சிறுபான்மையினரும் 1927 ஆம் ஆண்டில் இடஒதுக்கீடு பெற்றார்கள். பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு 1947 ஆம் ஆண்டில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால், உண்மையிலேயே பின்தங்கியிருந்த மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 1989 ஆம் ஆண்டுவரை இடஒதுக்கீடு இல்லை.

உண்மையாக பாதிக்கப்பட்டுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசின் சட்டநாதன் குழு 1970 ஆம் ஆண்டில் பரிந்துரை செய்ததது. அதனை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி ஏற்கவில்லை. இதே கோரிக்கையை தமிழக அரசின் அம்பாசங்கர் குழு 1985 ஆம் ஆண்டில் பரிந்துரை செய்தது. அதனை அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் ஏற்கவில்லை.

யார் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ, அவர்களுக்குதான் முதலில் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் நியாயமான நீதிமுறை ஆகும். ஆனால், உயர்நிலையில் இருந்த பிராமணரல்லாதோருக்கு வாய்ப்பளித்து 62 ஆண்டுகள் கடந்தும், ஓரளவுக்க நல்ல நிலையில் இருந்த பிற்படுத்தப்பட்டோருக்கு வாய்ப்பளித்து 42 ஆண்டுகள் கடந்தும் கூட - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எந்த வாய்ப்பும் அளிக்கப்படாத நிலையே இருந்தது. இந்த தாமதம் என்பது இரண்டு தலைமுறைகளின் காலம் ஆகும்.

2. வன்னியர்கள் - தமிழக அரசியலில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் என்கிற உண்மை தினமணி வைத்தியநாதனுக்குத் தெரியுமா?

1970 ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசின் பிற்பட்டோர் நலக்குழு அறிக்கை (சட்டநாதன் குழு) வன்னியர்களின் வஞ்சிக்கப்பட்ட நிலையை பின்வருமாறு வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது:

"பெருமளவில் இருக்கும் இந்த சாதியில் உள்ள பெரும் நிலச்சுவாந்தார்களுடைய எண்ணிக்கை மிகக் குறைவே... நாட்டுப்புறங்களிலும் நகரப்புறங்களிலும் இச்சாதியை சேர்ந்த வெகுசிலர் தான் வர்த்தகத்துறையிலும் சில்லரை வியாபாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள்... கொடிய வறுமையின் காரணமாக பழைய சில தலைமுறைக் காலத்தில் இச்சாதியைச் சேர்ந்தவர்கள் பல தொழில்களிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் ஈடுபடாத தொழில் இல்லை என்றே கூறலாம்... கிணறு தோண்டுதல், மண் வெட்டுதல், கட்டட வேலை போன்ற கடினமான உழைப்பு தேவைப்படும் தொழில்களுக்கு இச்சாதியிலிருந்து ஆட்கள் வருகிறார்கள்.

(1970 ஆம் ஆண்டில்) குறைந்தது ஐந்து மாவட்டங்களிலாவது தனிப்பெரும் சாதியினராக இருந்த போதிலும், ஒரு இடத்திலாவது ஆதிக்கம் செலுத்தக் கூடிய நிலையை அடையவில்லை... மற்ற ஆதிக்க வகுப்புகளை அண்டி வாழும் நிலையில் இருக்கிறார்கள்... கல்வி நிலையின் எல்லா மட்டங்களிலும் வன்னியர்கள் முன்னேற்றம் மிகக் குறைவாகவே இருக்கிறது... டாக்டர்களாகவும், இன்ஜினியர்களாகவும், வழக்குறைஞர்களாகவும் இருப்பவர்களுடைய எண்ணிக்கை மிகக்குறைவாகவே இருக்கிறது. இச்சாதியில் மேல்தட்டு நிலையில் இருப்பவர்கள் குறைவாக இருப்பதுதான் இதற்கு முக்கிய காரணமாகும்.

நிலப்பிரபுக்களோ, வணிகர்களோ அல்லது செல்வந்தர்களோ இச்சாதியில் வெகு சிலரே இருக்கிறார்கள். இச்சாதி எண்ணிக்கையில் பெரும்பான்மையினராக இருக்கும் காரணத்தால் ஆதிக்க நிலையை அடையக்கூடிய வகையில் இருக்கிறது என்னும் எண்ணம் சில வட்டாரங்களில் நிலவுகிறது. ஆனால், இம் மாநில அரசியலில் இவ்வகுப்பு போதிய அளவுக்கு அடியெடுத்து வைக்கவில்லை".

- இதுதான் மருத்துவர் அய்யா அவர்களின் போராட்ட காலத்திற்கு முன்னர் வன்னியர்களின் நிலைமை. இது தமிழக அரசாங்கமே அளித்துள்ள அறிக்கை.

3. நியாயமான கோரிக்கையை செவிமடுக்காமல் அலட்சியம் செய்தது சாதுர்யமான செயலா?

இரண்டு தலைமுறைகளாக ஏமாற்றப்பட்ட சமூகங்களுக்கு நீதி வேண்டும். அந்த அடிப்படையில் வன்னியர்களுக்கு விகிதாச்சார பங்கீடு வேண்டும் என்கிற நோக்கத்தில் வன்னியர் சங்கம் 1980 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அனைத்து வகுப்புகளுக்கும் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வேண்டும். தனிப்பெரும் பெரிய சமூகமாக உள்ள வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வேண்டும் என்பது வன்னியர் சங்கத்தின் முதன்மைக் கோரிக்கை ஆகும். (தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை 18% அளவில் இருந்து 22% அளவாக மக்கள்தொகைக்கு ஏற்ப உயர்த்த வேண்டும் என்பதும் வன்னியர் சங்கத்தின் கோரிக்கை ஆகும்)
அனைத்து சாதியினருக்கும் வகுப்புவாரி உரிமை கோரும் சாலைமறியல் போராட்ட சுவரொட்டி
தமிழக முதலமைச்சரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைப்பதற்காக ஐந்து பேர் குழுவை அமைத்தது வன்னியர் சங்கம். பலமுறை முயன்றும் அப்போது முதலமைச்சராக இருந்த எம்ஜிஆரை வன்னியர் சங்க பிரதிநிதிகளால் ஒரு முறைக் கூட சந்திக்க முடியவில்லை. 1985 ஆகஸ்ட் மாதம் சென்னை மாநகரில் ஒரு பெரும் மாநாட்டை நடத்தியது வன்னியர் சங்கம். வன்னியர் சங்கத்தின் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டது.

1986 ஆம் ஆண்டில் வரிசையாக கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன. 15.3.1986 ஆம் நாள் சென்னையில் 'பட்டை நாமப் போராட்டம்'; 6.5.1986 இல் ஒரு நாள் சாலைமறியல் போராட்டம்; 28.6.1986 இல், மதுராந்தகத்தில் முதலமைச்சர் எம்ஜிஆருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம்; 19.12.1986 ஆம் நாள் ஒரு நாள் இரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. வன்னியர் சங்கத்தின் எந்த போராட்டாத்தையும் தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளாத நிலையில், 1987 செப்டம்பர் மாதத்தில், தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 முதல் ஒருவார காலத்துக்கு தொடர்சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் அறிவித்தார்கள்.

இப்படி, ஏழு ஆண்டு காலமாக, கோரிக்கைகளை கேட்கக் கூட மறுத்த செய்கைதான் "எம்.ஜி.ஆர். அரசு மிகவும் சாதுர்யமாக அந்தப் போராட்டத்தைக் கையாண்டது" என்று தினமணி வைத்தியநாதன் பாராட்டும் நிகழ்வா?

4. கொல்லப்பட்ட உயிர்கள் வைத்தயநாதன் கண்களுக்கு தெரியாதா?

தமிழக வரலாற்றில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய போராட்டம் மருத்துவர் இராமதாசு அவர்கள் அறிவித்த சாலைமறியல் போராட்டம் ஆகும். செப்டம்பர் 17 முதல் தொடர் சாலைமறியல் நடத்துவதாக அறிவித்த பின்பு, அதற்கு முதல் நாள் செப்டம்பர் 16-ல் சென்னையில் திமுகவின் அண்ணா அறிவாலயம் கட்டடத்தை திறக்கும் முப்பெரும் விழா மாநாட்டை நடத்துவதாக கலைஞர் கருணாநிதி அறிவித்தார்.

சாலை மறியல் போராட்டம்
திமுகவின் மாநாடு முடித்து செல்கிறவர்கள் தமிழ் நாட்டின் வடமாவட்டங்களை கடக்கும் நேரமும், வன்னியர் சங்கத்தின் சாலைமறியல் தொடங்கிய செப்டம்பர் 17 அதிகாலை நேரமும் ஒன்றாக இருந்ததால், சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் மீது திமுக கட்சியினர் பெரும் தாக்குதலை நடத்தினார்கள்.

ம்ஜிஆரின் காவல்துறை சாலைமறியல் செய்தவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. முதல் நாள் சாலைமறியல் போராட்டம் தொடங்கும் போதே 11 வன்னியர்களை சுட்டுக்கொன்றது தமிழக காவல்துறை. காவல்துறை தாக்கியதில் ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கான தொண்டர்களையும் சங்கத்தின் தலைவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. பல கிராமங்களுக்குள் காவல்துறை புகுந்து சூறையாடியது.
சாலை மறியல் போராட்டம்
காவல்துறையின் வன்முறைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும், ஒருவார கால சாலைமறியல் போராட்டத்தை வெற்றியடைய வைக்கவும் - ஆங்காங்கே சாலைகளில் தடைகளை வன்னியர்கள் ஏற்படுத்தினர். இதனால் தமிழ்நாட்டின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது. சென்னைக்கும் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் இடையேயான போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. ஒருவார காலம் தமிழ்நாடு ஸ்தம்பித்து போனது. அதற்கு பின்னரும் இயல்புநிலை திரும்பாமல் ஒரு மாத காலத்துக்கு போக்குவரத்து தடைப்பட்டது. இந்தப் போராட்டத்தின் முடிவில் 21 வன்னியர்கள் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

5. மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் போராட்டம் தோற்கவில்லை என்பது தினமணி வைத்தியநாதனுக்கு தெரியாதா?

சாலை மறியல் போராட்டத்தால் வன்னியர்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் எல்லா சமூகங்களும் தமது கோரிக்கையை எழுப்பும் வாய்ப்பினைப் பெற்றார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான வகுப்புவாரி உரிமைக் கோரிக்கை மீண்டும் விவாதத்திற்கு வந்தது. அமெரிக்காவில் இருந்து சிகிச்சைப்பெற்று திரும்பியிருந்த எம்ஜிஆர் அனைத்து சமூக அமைப்புகளையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்.

16.12.1988 இல் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தியது வன்னியர் சங்கம். பின்னர் 13.1.1989 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தியது. இத்தனை போராட்டங்களுக்கும் உயிரழ்ப்புகளுக்கும் பின்னர்  28.3.1989 இல் 'பிற்படுத்தப்பட்டோர்க்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டில், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 20 சதவிகிதம் ஒதுக்கியும், மீதமுள்ள 30 சதவிகிதத்தை பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கியும்' தமிழக அரசு ஆணையிட்டது (அரசாணை எண்: 242, நாள் 28.3.1989). இதன் மூலம் 108 சாதியினர் புதிதாக இடஒதுக்கீடு பெற்றனர்.
சாலை மறியலில் பொலீசாரால் கொல்லப்பட்ட தியாகிகள்
பிராமணரல்லாதோருக்கு வாய்ப்பளித்து 62 ஆண்டுகள் கடந்த பின்னர், பிற்படுத்தப்பட்டோருக்கு வாய்ப்பளித்து 42 ஆண்டுகள் கடந்த பின்னர், உண்மையிலேயே மிகவும் பின்தங்கியிருந்த 'மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு' மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் தியாகத்தாலும், போராட்டத்தாலும் 1989 ஆம் ஆண்டில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இவ்வாறு இரண்டு தலைமுறைகள் காலம் கடந்து வழங்கப்பட்ட இந்த இடஒதுக்கீடும் முழுமையான இடஒதுக்கீடோ, மக்கள் தொகைக்கு ஏற்ப அளிக்கப்பட்ட விகிதாச்சார இடஒதுக்கீடோ அல்ல. இந்த அரைகுறை இடஒதுக்கீடு 'மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் தலைமையிலான வன்னியர் சங்கத்தின் பகீரத பிரயத்தனத்தால்தான் சாத்தியமாகியுள்ளது. இது ஒரு வரலாற்று சாதனை ஆகும்.

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் தியாகத்தால் கிடைத்த மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டால், இன்று பல்லாயிரக்கணக்கானவர்கள் உரிமைப்பெற்றுள்ளார்கள். உலகின் பல பகுதிகளில் நல்ல நிலையில் வாழ்கிறார்கள். தினமணி வைத்தியநாதன் கொச்சைப்படுத்தும் அந்த 1987 சமூகநீதி போராட்டம்தான், இன்று பல ஆயிரம் குடும்பங்களை கோபுரத்தில் ஏற்றியுள்ளது.

நமது கடமை என்ன?

தமிழ்நாட்டில் மிகவும் பிறபடுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு, தேசிய அளவில் இதர பிறபடுத்தப்பட்டோருக்கு கல்வியில் இடஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு மருத்துவ உயர்கல்வியில் இடஒதுக்கீடு என்கிற வரலாற்று சாதனைகளை செய்த கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. அதற்கு காரணமாக இருந்தவர் மருத்துவர் இராமதாசு அய்யா. இந்த அளவுக்கு சமூகநீதிக்காக பாடுபட்ட தலைவரோ, கட்சியோ சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே இல்லை.
சாலைமறியலின் போது கைது செய்யப்பட்ட மருத்துவர் இராமதாசு அய்யா
பாட்டாளி மக்கள் கட்சியை, மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை இனிமேலும் எந்த ஒருநபரும் தவறாக வர்ணிப்பதை அனுமதிக்க முடியாது. அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாட்டின் உண்மையான சாதிவெறி பிடித்த கோயபல்ஸ் கும்பலின் வரலாற்று சதி முறியடிக்கப்பட வேண்டும்.

அந்த வகையில் தினமணி தலையங்கம் கண்டிக்கப்பட வேண்டும்!

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

இதே வேலை தான் வேசி ஊடகங்கள் செய்துகொண்டு வருகிறது.. இவர்களை அடிவேர்களை வெட்டி எடுக்க வேண்டும் ... கோயபல்ஸ் கும்பல்

பெயரில்லா சொன்னது…

Story super sir......

Sesh