Pages

திங்கள், அக்டோபர் 08, 2012

இந்தியா டுடேவின் பித்தலாட்டம்: இடஒதுக்கீட்டில் ஓப்பன் கோட்டா என்பது உயர்சாதிக் கோட்டாவா? 

"இடஒதுக்கீடு நீடிக்குமா? உயர்கல்வி, வேலைவாய்ப்பில் 69 % இடஒதுக்கீடு தரும் தமிழக சட்டத்திற்கு இப்போது சவால்" எனும் ஒரு கட்டுரை அக்டோபர் 17, 2012 தேதியிட்ட இந்தியா டுடே பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதில் மிகமிகமிக முட்டாள்தனமான கேள்வியை கேட்டுள்ளது இந்தியா டுடே.

"தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படும் 69 % இடஒதுக்கீடு நீங்கலாக மீதமுள்ள 31 % இடங்கள் யாருக்கு?" என்பதுதான் இந்தியா டுடே பத்திரிகையின் அடி முட்டாள்தனமான கேள்வியாகும்!

அதாவது, 'கல்வி, வேலைவாய்ப்பில் பட்டியல் இனத்தவர், பழங்குடி இனத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய நான்கு பிரிவினருக்கும் மொத்தமாக 69 விழுக்காடு இடங்கள் இடஒதுக்கீட்டின் படி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் மீதமுள்ள 31 விழுக்காடு இடங்களை யாருக்கு அளிக்க வேண்டும்?' என்று கேட்கிறது இந்தியா டுடே!
இப்படி ஒரு கேள்வியை கேட்கும் அளவிற்கு அந்த பத்திரிகையின் அறிவு முதிர்ச்சி வளர்ந்திருப்பது அதிர்ச்சையளிக்கக் கூடியதாக இருக்கிறது. இது உண்மையிலேயே அறியாமையால் கேட்கப்படும் கேள்வியா அல்லது தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர் சமூகநீதியின் அடிப்படைகளை அறியாமல் இருப்பார்கள். அவர்களை எளிதில் குழப்பிவிடலாம் என்பதற்கான விஷமத்தனமான தந்திரமா என்பது தெரியவில்லை.

ஏனெனில், இந்தியாவில் நீதிமன்ற தீர்ப்புகள் வாயிலாகவும், அரசின் சட்டங்கள் மூலமாகவும் மிக அதிக அளவில் விவாதிக்கப்பட்டு ஏற்கனவே தீர்க்கமான பல முடிவுகள் தெளிவுபடுத்தப்பட்ட மிகச்சில விடயங்களில் இடஒதுக்கீடுதான் முதன்மையானது. இதில் "இடஒதுக்கீட்டின் கீழ் வராத இடங்களை யாருக்கு ஒதுக்க வேண்டும்" என்பது மிகத்தெளிவாக வரையறுக்கப்பட்ட விடயம் ஆகும்.

இப்படி ஏற்கனவே தீர்க்கமாக முடிவு செய்யப்பட்டு, முடிந்துபோன ஒரு விவகாரத்தை இந்திய டுடே பத்திரிகை ஏதோ புத்தம் புதிய விவகாரம் போன்று கிளப்புகிறது.

இந்தியா டுடே பத்திரிகையின் விஷமப் பிரச்சாரம்

அக்டோபர் 17, 2012 தேதியிட்ட இந்தியா டுடே பத்திரிகையின் 35 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ள "இடஒதுக்கீடு நீடிக்குமா?" என்கிற கட்டுரையில் பினவரும் கருத்து கூறப்பட்டுள்ளது:
"(தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டில்) சிக்கலான ஒரு விஷயம் தீர்க்கப்படாமல் இருக்கிறது. அதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் 100 இடங்கள் இருப்பதாக வைத்துக்கொள்ளலாம். அதில் 69 இடங்கள் இடஒதுக்கீட்டில் வழங்கப்பட்டு விடும். மீதமுள்ள 31 இடங்கள் யாருக்கானது என்பது கேள்வி. ஒரு தரப்பு, 'இது இடஒதுக்கீட்டில் பயன் பெறாத இதர சமூகத்தினருக்கானது' என்கிறது. எதிர் தரப்போ, 'அது மெரிட் மாணவர்களுக்கானது. இதில் ஜாதிக்கு இடமில்லை' என்கிறது. இங்குதான் பிரச்சினை வருகிறது.

ஒரு பழங்குடி மாணவர் 200க்கு 198 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றுவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரை மெரிட் பட்டியலில் சேர்ப்பது அவரது உரிமை. மாறாக, அவரிடம் ஜாதிச் சான்றிதழை வாங்கி அவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும்போது அவரது தகுதி மதிப்பெண் கேள்விக்குட்படுத்தப்படுகிறது. இப்படியிருக்க, 'ஏற்கனவே பிற ஜாதியினருக்கு 31% இடங்களே இருக்கும் நிலையில் அதிக மதிப்பெண்கள் வாங்கும் பழங்குடி மாணவர்கள் பொதுப்பிரிவினரின் வாய்ப்பைப் பறிக்கலாமா?' என்று எதிர் கேள்வி கேட்கப்படுகிறது. ஆக, 31% இடம் இதர பிரிவினருக்கா, பொதுப் போட்டிக்கா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்"

-- என்று கேட்டுள்ளது இந்தியா டுடே.

இந்தியா டுடேவுக்கு பதில் - இதோ:

தினமும் காலையில் கிழக்கு திசையில் சூரியன் உதிக்கிறது. சூரியன் கிழக்கில் உதிக்கிறதா அல்லது மேற்கில் உதிக்கிறதா என்று அரசு தெளிவுபடுத்த வேண்டுமா என்ன? ஒருவேளை இந்தியா டுடே அப்படி ஒரு கேள்வி கேட்டாலும் கேட்கலாம்!

"இடஒதுக்கீட்டில் சிக்கலான ஒரு விஷயம் (ஓப்பன் கோட்டா யாருக்கு?) தீர்க்கப்படாமல் இருக்கிறது" என்று இந்தியா டுடே கூறுவதே அப்பட்டமான பித்தலாட்டம்.

இந்திய உச்சநீதிமனறம் பல்வேறு வழக்குகளில் "இடஒதுக்கீட்டுக்கு வெளியே உள்ள பொதுப்பிரிவு என்பது எல்லோருக்கும் பொதுவானது. பொதுப்பிரிவில் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படும் பட்டியல் இனத்தவர், பழங்குடி இனத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினர் எவரும் இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள கணக்கில் சேர்க்கப்படக்கூடாது." என்பதை மிகத்தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது.

அதாவது இடஒதுக்கீடு இடங்களை ஒதுக்குவதற்கு முன்பே, சாதி வேறுபாடு எதுவும் பார்க்காமல், எல்லோரது தகுதியையும் வரிசைப்படுத்தி - அவற்றில் தகுதி அடிப்படையில் மேலே உள்ளவர்களுக்கு 31% இடங்களை அளித்துவிட்டு, அதன்பின்புதான் இடஒதுக்கீட்டு முறையின் கீழ் 69% இடஒதுக்கீட்டு இடங்களை அந்தந்தப் பிரிவினருக்கு அளிக்க வேண்டும்.

மண்டல் வழக்கு எனப்படும் புகழ்பெற்ற Indra Sawhney v. Union of India, 1992 தீர்ப்பில் உச்சநீதிமன்றம் "இடதுக்கீடு அளிக்கப்பட்ட பிரிவினைச் சேர்ந்தவர்கள் பொதுப்போட்டியில் தேர்வுசெய்யப்பட்டால் அவர்களை இடஒதுக்கீட்டு இடங்களின் கீழ் சேர்க்கக் கூடாது" என்று தெளிவாக உத்தரவிட்டுள்ளது.

"It may well happen that some members belonging to, say, Scheduled Castes get selected in the open competition field on the basis of their own merit; they will not be counted against the quota reserved for Scheduled Castes; they will be treated as open competition candidates."

அதே போன்று "பொதுப்போட்டியில் தேர்வு செய்யப்படுவோரை இடஒதுக்கீட்டு இடங்களின் கீழ் சேர்க்கக் கூடாது" என்று  Union of India v. Virpal Singh Chauhan 1995 தீர்ப்பிலும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

“while determining the number of posts reserved for Scheduled Castes and Scheduled Tribes, the candidates belonging to reserved category but selected/promoted on the rule of merit (and not by virtue of rule of reservation) shall not be counted as reserved category candidates.” 

"பொதுப்போட்டியில் தேர்வு செய்யப்படுவோரை இடஒதுக்கீட்டு இடங்களின் கீழ் சேர்க்கக் கூடாது" என்று Ritesh R. Sah v. Dr. Y.L. Yamul & Ors 1996 தீர்ப்பிலும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

“In view of the legal position enunciated by this Court in the aforesaid cases the conclusion is irresistible that a student who is en-titled to be admitted on the basis of merit though belonging to a reserved category cannot be considered to be admitted against seats reserved for reserved category.”

இடஒதுக்கீடு உள்ள பிரிவினர், இடஒதுக்கீடு இல்லாத பிரிவினருக்கு இடமே வைக்காமல் பொதுப்பிரிவில் மிகக் கூடுதலான இடங்களைப் பிடித்துக்கொண்டால் என்ன செய்வது? என்ற கேள்விக்கும் உச்சநீதிமன்றம் பதில் அளித்துள்ளது.

R.K. Sabharwal v. State of Punjab 1995 தீர்ப்பில் " பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு இருக்கும்வரை, பிற்படுத்தப்பட்டோரில் எவ்வளவு அதிகமான எண்ணிக்கையிலானோர் பொதுப்பிரிவில் தேர்வு செய்யப்பட்டாலும் - அதனைக் கணக்கில் கொள்ளக்கூடாது. இடஒதுக்கீட்டில் எத்தனை இடங்கள் உள்ளனவோ, அத்தனை இடங்களை அதே பிரிவினருக்கு கூடுதலாக அளித்துதான் ஆகவேண்டும்" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“When the State Government after doing the necessary exercise make the reservation and provides the extent of percentage of posts to be reserved for the said Backward Class then the percentage has to be followed strictly. The prescribed percentage cannot be varied or changed simply because some of the members of the Backward Class have already been appointed/promoted against the general seats.

The fact that considerable number of members of a Backward Class have been appointed/promoted against general seats in the State Services may be a relevant factor for the State Government to review the question of continuing reservation for the said class but so long as the instructions/rules providing certain percentage of reservations for the Backward Classes are operative the same have to be followed. Despite any number of appointees/promotees belonging to the Backward Classes against the general category posts the given percentage has to be provided in addition."

இதர பிரிவு" என்கிற ஒன்று இல்லவே இல்லை!

"31% இடம் இதர பிரிவினருக்கா, பொதுப் போட்டிக்கா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்" என்று இந்தியா டுடே கேட்கும் கேள்வியே அர்த்தமற்றது, கேலிக்கூத்தானது. ஏனெனில், இந்தியாவில் கல்வி, அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டு பிரிவுகளில் "இதர பிரிவு" என்கிற ஒன்று இல்லவே இல்லை! "பொதுப்பிரிவு" ஒன்று மட்டும்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டிற்கு வெளியே உள்ள 31% பொதுப்பிரிவு என்பது எல்லோருக்குமானது. பொதுப்பிரிவில் சுமார் 20% அல்லது 25% இடங்களை பட்டியல் இனத்தவர், பழங்குடி இனத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய "இடஒதுக்கீட்டு பிரிவினர்" எடுத்துக்கொள்ளும் நிலை வந்தாலும் அதில் எவரும் குறைகாண முடியாது.

அவ்வளவு ஏன்? 31% இடத்தையும் முழுவதுமாக "இடஒதுக்கீட்டு பிரிவினர்" வென்றாலும் கூட அதில் ஒரு தவறும் இல்லை. ஏனெனில், பொதுப்பட்டியலில் உள்ள இடங்கள் பொதுவானவை. அவை, 'உனக்கு எனக்கு' என்று சாதி ரீதியாகப் பிரிக்கப்படவில்லை. அங்கு எல்லோரும் ஒன்றுதான். எவருக்கு திறமை இருக்கிறதோ அவருக்கு இடம் கிடைக்கும். அவ்வளவுதான்.

எனவே, "ஏற்கனவே பிற ஜாதியினருக்கு 31% இடங்களே இருக்கும் நிலையில் அதிக மதிப்பெண்கள் வாங்கும் பழங்குடி மாணவர்கள் பொதுப்பிரிவினரின் வாய்ப்பைப் பறிக்கலாமா?" என்கிற இந்தியா டுடே கேள்வி கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான கேள்வியாகும். 

ஏனெனில், பொதுப்பிரிவினரின் வாய்ப்பு என்பது பழங்குடியினரையும் உள்ளடக்கியதுதான். தனக்கு உரிமையானதை தான் பெறுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

7 கருத்துகள்:

மணிமகன் சொன்னது…

மிக நல்ல கட்டுரை.சட்டபூர்வமாகவும்,சமூகநீதி அடிப்படையிலும்,தர்க்கரீதியாகவும் எழுதப்பட்டுள்ளது.ஒவ்வொரு முறையும் பார்ப்பனர்கள் இப்படி ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த முயல்வது நடந்துகொண்டுதான் உள்ளது.நாம் விழிப்பாக இல்லையென்றால் சந்தடி சாக்கில் சமூகநீதிக்கு குழிபறித்துவிடுவார்கள்.முகநூல் மற்றும் வலைப்பூ,வலைத்தள வட்டங்களில் இயங்கும் பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட,பழங்குடியின,சிறுபான்மையின இளையதலைமுறையினருக்கு இத்தகவல்களைக் கொண்டு சேர்க்க வேண்டும்.உரிய நேரத்தில் பதிலடிகொடுத்த தங்களுக்குப் பாராட்டுகள்.இந்தியா டுடேவுக்கு இந்தப் பதிலை அனுப்புங்கள்.

PRINCENRSAMA சொன்னது…

"OC" என்பதை "Open Competition" என்று சொல்லாமல், "Other Community" என்று திரிபுவாதம் செய்யும் திமிரெடுத்த பார்ப்பன நரித்தனத்தோடு இந்தியா டுடே எழுதியுள்ள கட்டுரைக்கு மிகச் சரியான மறுப்புத் தந்திருக்கிறது இக்கட்டுரை!

பொதுப் போட்டிக்கெதிரான திட்டமிட்ட சதியின் வெளிப்பாடே இந்தியா டுடேயின் கட்டுரை! அனைவருக்கும் தெளிபடுத்த வேண்டிய செய்தி இது!

அன்பு துரை சொன்னது…

உண்மையிலேயே எனக்கு இப்பதான் புரிஞ்சிருக்கு...
நன்றி அண்ணா..

Aruna சொன்னது…

நன்றி நன்றி நன்றி


ஆண்டாண்டு காலமாக அரசு அதிகாரத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அந்த நிலையை மாற்றி, எல்லா பிரிவினருக்கும் அரசாங்கத்தில், நிர்வாகத்தில் நியாயமான பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதே இட ஒதுக்கீட்டின் நோக்கம்.
இந்தியா போன்ற பன்முக அமைப்பைக் கொண்ட நாட்டில் நலிந்த பிரிவு மக்கள் ஒரே இரவில் முன்னேறிவிட முடியாது. இந்தப் பிரிவு மக்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைய 100 ஆண்டுகள்கூட ஆகலாம்.

இதற்குச் சான்றாக சில புள்ளி விபரங்களை காணலாம்.

சென்னை பல்கலைகழகத்தில் 1918ல் இளங்கலை படிப்பில் மொத்த மாணவர் எண்ணிக்கை 15,209. அதில் பிராமணர்கள் 10269. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்கள் 3,213. மற்றவர்கள் எண்ணிக்கை 1,748.
முதுகலை படிப்பில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 511. அதில் பிராமணர்கள் 389. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்கள் 65. மற்றவர்கள் 53.
ஆசிரியப் பயிற்சியில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 1,498. பிராமணர்கள் 1,094. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்கள் 163. மற்றவர்கள் 241.
சட்டக்கல்வியில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 54. பிராமணர்கள் 48. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்கள் 4. மற்றவர்கள் 2.
பொறியியல் கல்வியில் (சிவில்) மொத்தம் 120 இடங்களில் பிராமணர்கள் 21. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்கள் 15. மற்றவர்கள் 23.
Ref :
http://www.thiruvalluvar.in/2007/01/blog-post_18.html

ஸ்ரீமூஷனம் சாரங்கராஜன் ஐயங்கார் சொன்னது…

India Todayவின் கட்டுரை எற்க முடியாது என்பது திண்ணம்.

31% என்பது பொது போட்டி தான். இதர பிரிவிற்கு அல்ல.

அதே நேரத்தில் சட்டத்திற்கு மாறாக தமிழக அரசும் மைய அரசும் கூட OC என்பதற்கு அரசு விண்ணப்ப படிவங்களில் Open Competition என்று குறிபிடாமல் ஏன் Other Community என்று குறிப்பிட வேண்டும்.


அன்புடன்
அடியேன்
ஸ்ரீமூஷனம் சாரங்கராஜன் ஐயங்கார்

P.S.Narayanan சொன்னது…

இந்த ஜாதிவாரி ஒதுக்கீடு என்பது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிக்க சக்திகளால் உருவாக்கப்பட்டது. இந்த சூழ்ச்சியின் பெயர் வருணாசிரம முறை. அதாவது உடல் உழைப்பாளர் கல்வி கற்கத் தடை. கல்வியாளர் உழைக்கத் தேவையில்லை. உடல் உழைப்புக்கும் மனம் தொடர்பான செயல்களுக்கும் இடையே ஒரு இரும்புச் சுவர் கட்டப்பட்டது. இப்போது நடைமுறையில் உள்ள 69% முறை இந்த ஐந்தாயிர ஆண்டு கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்த De-Reservation சட்டம். கோட்டா அடிப்படையில் திறமை கெட்டுப்போய் விட்டதென அழிச்சாட்டியம் செய்வோருக்கு ஒரு கேள்வி: ஐயாயிரம் ஆண்டுகளாக இந்த திறைமையால் எங்களுக்கு கிடைத்ததெல்லாம் சமூக இழிவு, ஏளனம், வறுமை போன்றவையே. இந்தக் கொடுமை மீண்டும் வேண்டியதில்லை. திறமை என்பதே ஐயாயிரம் ஆண்டுகளாக பெரும்பான்மை மக்களை ஏய்த்து சேர்த்த திருட்டுச் சொத்து. இந்த திறமை வீரர்கள் இவர்களது திறமையை பயன்படுத்தி மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கலாமே. திறமை என்றால் Takers என்ற முத்திரையை மாற்றி எப்போது Givers ஆகப்போகிறீர்கள்?

P.S.Narayanan சொன்னது…

திரு சாரங்கராஜன் எந்த கல்லூரியில் எந்த பல்கலை கழகத்தில் இந்த ஐயங்கார் பட்டம் பெட்றார் என்பதை வெளிப்படுத்துவாரா? ஒரு அருந்ததியர் இந்த மாதிரி பட்டத்தைப் போட்டுக்கொள்ள முடியுமா? ஏன் இந்த சாதாரண உணர்வுகூட இல்லாமல் இந்த கேவலப் பட்டங்களைப் போட்டுக்கொண்டு அலைகின்றனர்?