Pages

செவ்வாய், அக்டோபர் 23, 2012

இலங்கை மீது ஐநாவில் புதிய விசாரணை:புதிய தலைமுறைக்கு பாராட்டும் கண்டனமும்!


இலங்கையில் நிலவும் மனித உரிமை நிலை குறித்த "காலமுறை மதிப்பீடு" (Universal Periodic Review) எனும் விசாரணை வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி ஜெனீவா ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்த நிகழ்ச்சிக்காக புதிய தலைமுறை தொலைக்காட்சி பாராட்டப்பட வேண்டும், கண்டிக்கப்படவும் வேண்டும்! 

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பாராட்டு

இலங்கை மீதான காலமுறை மதிப்பீட்டு விசாரணை குறித்து 22.10.2012 திங்கள் அன்று இரவு புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்பட பேசு நிகழ்ச்சியில் விவாதம் நடத்தப்பட்டது. பி.யு.சி.எல் அமைப்பின் சுரேஷ், அம்னெஸ்ட்சி அமைப்பின் அனந்த பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விவாதித்தனர்.
நேர் பட பேசு நிகழ்ச்சியில் பேசியவர்கள் - இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை வெறும் தமிழர்களின் சிக்கலாகப் பார்க்காமல், மனித உரிமை பிரச்சனையாகவும் தெற்காசிய பிரச்சனையாகவும் இந்தியாவால் பார்க்கப்பட வேண்டும். இந்திய அரசின் மேம்போக்கான அனுகுமுறைக்கு முடிவுகட்ட வேண்டும் என்று நியாயமாகப் பேசினர்.

மிகவும் முக்கியமான "காலமுறை" மதிப்பீடு குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தை ஒளிபரப்பியமைக்காக பாராட்டுகிறோம்.

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு கண்டனம்.

இந்த நேர்பட பேசு நிகழ்ச்சியின் போது "கடந்த மார்ச் மாதம் இலங்கை மீதான அமெரிக்க தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்த போது தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் அதற்காகக் குரல் கொடுத்தனர். ஆனால், இப்போது நவம்பர் 1 ஆம் தேதி நடக்க இருக்கும் காலமுறை மதிப்பீடு எனும் விசாரணை குறித்து தமிழ்நாட்டுக் கட்சிகள் எதுவும் எதற்காக வாய்த்திறக்கவில்லை?" என்று புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் கேட்கப்பட்டது.

தமிழ்நாட்டின் எல்லா கட்சிகளும் இந்த விடயத்தில் மவுனம் சாதிக்கின்றன என்பதாகவும், ஒரு அறிக்கைக் கூட விடவில்லையே என்றும் புதிய தலைமுறை நேர்பட பேசு நிகழ்ச்சியில் கூறப்பட்டது.

ஆனால், கடந்த செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதியே "நவம்பர் 1 ஆம் தேதி நடக்க இருக்கும் இலங்கை மீதான காலமுறை மதிப்பீட்டு விசாரணை குறித்தும், அதில் இந்தியா நடுநிலை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், அதற்காக தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் பிரதமரை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டும்" பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பே அறிக்கை வெளியிட்டுள்ள சிக்கல் குறித்து, இப்போது விவாதம் நடத்தும் புதிய தலைமுறை தொலைக்காட்சி "தமிழ்நாட்டுக் கட்சிகள் எதுவும் எதற்காக இன்னும் வாய்த்திறக்கவில்லை? ஒரு அறிக்கைக் கூட விடவில்லையே" என்றெல்லாம் கேட்பது வியப்பளிக்கிறது.

புதிய தலைமுறை நேர்பட பேச வேண்டாமா?

இலங்கை மீதான காலமுறை மதிப்பீட்டு விசாரணை குறித்து மருத்துவர் ச. இராமதாசு அவர்களின் அறிக்கை இதோ:
போர்க்குற்ற விசாரணை இலங்கை வலையில் இந்தியா விழக்கூடாது - மருத்துவர் அய்யா

கருத்துகள் இல்லை: