Pages

திங்கள், அக்டோபர் 01, 2012

சபாநாயகரின் பதவி நீக்கத்திற்கு 'இது' காரணமா? ஜெயக்குமார் நீக்கப்பட்டதை வரவேற்போம்!

சட்டத்தையும், அரசு உத்தரவை மீறும் வகையிலும் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில் சபாநாயகர் ஜெயக்குமார் பங்கேற்றார். அதற்காகத்தான் அவர் இப்போது பதவிநீக்கப்பட்டார் என்றிருந்தால் நன்றாகத்தானே இருக்கும்?!
சட்டவிரோத நிகழ்ச்சியில் சபாநாயகர்
புகையிலைப் பொருட்களை விற்கும் நிறுவனங்கள் ஆண்டுக்கு பத்துலட்சம் இந்தியர்களைக் கொலை செய்கின்றன. புகையிலைக் கொடுமையை ஒழிக்கும் முயற்சிகள் ஒருபக்கம் நடக்கும் போது இந்தியாவின் மிகப்பெரிய புகையிலை நிறுவனம் நடத்திய விளமபர நிகழ்ச்சியில் பத்தாயிரத்திற்கும் கூடுதலான பள்ளிக்குழந்தைகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு சென்னையில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளே தங்களது பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் சென்ற அவலம் நடந்துள்ளது. (இந்த சட்டவிரோத நிகழ்ச்சிக்கும் தி இந்து பத்திரிகைதான் அதிகாரப்பூர்வ விளம்பரக் கூட்டாளி - Official Media Partner)

இத்தனைக்கும் பள்ளிக்குழந்தைகள் புகையிலை நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என்று கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவை மீறும் வகையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் சட்டமன்ற சபாநாயகர் ஒரு சாட்சியாக பங்கேற்றார்!

ITC-இந்திய புகையிலை நிறுவனத்தின் கொடுஞ்செயல்

ஐ.டி.சி என்று இப்போது அழைக்கப்படும் இந்திய புகையிலை நிறுவனம்தான் (Indian Tobacco Company) இந்தியாவின் மிகப்பெரிய சிகரெட் விற்பனை நிறுவனமாகும். இந்தியாவில் விற்பனையாகும் மொத்த சிகரெட்டுகளில் 75 விழுக்காடு இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள்தான். 1910 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐ.டி.சி நிறுவனம் 1975 ஆம் ஆண்டு வரை சிகரெட் தயாரிப்பில் மட்டுமே ஈடுபட்டு வந்தது. அதன் பின்னர் சிறிய அளவில் தங்கும் விடுதிகளைத் தொடங்கியது. 2000 ஆவது ஆண்டுக்கு பின்னர் ஒப்புக்கு மிட்டாய், உணவுப்பொருட்கள், எழுதுபொருட்கள் என சில துணைத் தொழில்களைச் செய்துவருகிறது.
பள்ளி குழந்தைகள் நிகழ்ச்சியில் சிகரெட் விளம்பரம்
இப்படி வேறுபட்ட தொழில்களைச் செய்வதாகக் காட்டிக்கொண்டாலும் ஐ.டி.சி நிறுவனம் தனது சிகரெட் திணிப்புத் தொழிலைக் கொஞ்சமும் கைவிடவோ, குறைத்துக்கொள்ளவோ இல்லை. தொடர்ந்து சிறுவர்கள் மீது சிகரெட்டைத் திணிப்பதை விடாமல் செய்துவருகிறது ஐ.டி.சி. இப்போதும் அந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த இலாபத்தில் 80 விழுக்காட்டிற்கும் கூடுதலான இலாபம் சிகரெட் விற்பனை மூலமாக மட்டுமே கிடைக்கிறது.

இப்படி பெயரிலும் நடத்தையிலும் மரணத்தை விற்கும் நிறுவனமாக இருக்கும் ஐ.டி.சி, தன்னையும் ஒரு பொறுப்புள்ள நிறுவனமாகக் காட்டிக்கொள்ள பல போலித்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் "தேசிய மறு சுழற்சி நாள்" என்கிற ஒரு கண்துடைப்பு நிகழ்ச்சியை சென்னையில் நடத்தியுள்ளது ஐ.டி.சி.
பள்ளி குழந்தைகள் நிகழ்ச்சியில் சிகரெட் விளம்பரம்
"பள்ளிக் குழந்தைகள் தங்கள் வீட்டின் குப்பைகளை, குறிப்பாக காகிதம், நெகிழிப் பொருட்களைத் தனியாக சேமிக்க வேண்டும். அதனை சென்னையில் குப்பை அள்ளும் தனியார் நிறுவனமான ராம்கி நிறுவனத்தினரிடம் கொடுக்க வேண்டும். அப்படி செய்யும் பள்ளிக்குழந்தைகளுக்கு ஐ.டி.சி நிறுவனத்தின் நோட்டுபுத்தகங்கள் சலுகை விலையில் கொடுக்கப்படும்" என்று கூறி, அதனை அறிமுகப்படுத்தும் விதமாக "தேசிய மறு சுழற்சி நாள்" எனும் நிகழ்ச்சியை நடத்தியது ஐ.டி.சி. (தேசிய மறு சுழற்சி நாள் என்று அங்கீகரிக்கப்பட்ட நாள் எதுவும் கிடையாது. இது ஐ.டி.சி தனக்குத்தானே வைத்துக்கொண்ட பெயர்)

ஜூலை 1 அன்று சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளியில் நடத்த்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சென்னையின் பல்வேறு தனியார் பள்ளிகளில் இருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றுள்ளனர்.

குப்பையை மறுசுழற்சி செய்வதில் என்ன தவறு?

மேலோட்டமாகப் பார்க்கும் போது இது ஒரு நல்ல நிகழ்ச்சிப் போல தோன்றலாம். ஆனால், இதன் பின்னே பலவிதமான சதிகளும், சட்ட மீறல்களும் உள்ளன.

சிகரெட் என்பது ஒரு சட்டப்படியான, சாதாரணமான நுகர்பொருள் அல்ல. அது சட்டத்தால் தடுக்கப்பட்டுள்ள பொருள். சிகரெட்டை விளம்பரப் படுத்துவதும், விற்பனையை ஊக்கப்படுத்துவதும் சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.

உலகளவில், புகையிலை நிறுவனங்கள் அரசாங்கத்துடன் தொடர்புகொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் கையொப்பமிட்டு ஏற்றுக்கொண்டுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலைக் கட்டுப்பாட்டு உடன்படிக்கையின் 5.3 ஆம் பிரிவு (FCTC Article 5.3) புகையிலை நிறுவனங்களுடன் அரசு சார்பானவர்கள் உறவாடுவதைத் தடை செய்கிறது.

அதாவது பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் பொறுப்பில் உள்ள அரசாங்கம் மக்கள் உடல்நலத்துக்கு எதிரான நச்சுப்பொருளை விற்கும் புகையிலை நிறுவனங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். சட்டத்தால் கட்டுப்படுத்தப்பட வேண்டியவர்களுடன் சட்டத்தை செயல்படுத்த வேண்டியவர்கள் தொடர்புவைப்பது பொதுநலனுக்கு எதிரானது. எனவே, அரசுக்கும் புகையிலை நிறுவனங்களுக்கும் உறவு கூடாது என்கிறது அந்த உடன்படிக்கை.

இத்தகைய சூழலில் - தமது "கொலைகார" அடையாளத்தை மறைக்கவும், அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள், உயர்பதவிகளில் இருப்போருடன் தொடர்பை ஏற்படுத்தவும் - பொதுவான சேவைகளை நடத்துகின்றன புகையிலை நிறுவனங்கள்.

அந்தவகையில், சென்னையில் ஐ.டி.சி நிறுவனம் நடத்திய தேசிய மறுசுழற்சி நாள் எனும் நிகழ்ச்சி முழுக்க முழுக்க சிகரெட் விற்பனையை அதிகரிப்பதற்காகன ஒரு சதி நிகழ்ச்சிதான்.

கல்வித்துறையின் தடை உத்தரவு மீறல்

ஐ.டி.சி நிறுவனம் 2011 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் தமிழ்நாட்டின் பள்ளிகளில் "சன்ஃபீஸ்ட் மில்கி மேஜிக் ஆல்ரவுண்டர்" எனும் ஒரு ஊக்கப்பரிசு நிகழ்ச்சியை நடத்த முயன்றது. சிகரெட் நிறுவனம் பள்ளிகளில் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்கிற கோரிக்கை அப்போது எழுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் புகையிலைக் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் இத்தகைய நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் 19.01.2011 அன்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளில் சிகரெட் நிறுவனங்கள் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்தத் தடை விதித்தது. (Letter No. 1812/E1/2011-1 dated 19.01.2011 of Secretary, School   Education Department, Chennai – 9)
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
"எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் எந்த ஒருபள்ளியும் சிகரெட் நிறுவனங்கள் நடத்தும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்கக் கூடாது" என்றும் பள்ளிக்கல்வித்துறை தெளிவாக தனது உத்தரவில் தெரிவித்தது.ஆனால், தமிழ்நாடு அரசின் உத்தரவை மீறி ஐ.டி.சி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் சென்னை நகரில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 10,000 பள்ளி மாணவர்கள் "தேசிய மறுசுழற்சி நாள்" எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் .

இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டம் மீறல்

ஐ.டி.சி நிறுவனம் நடத்திய "தேசிய மறுசுழற்சி நாள்" நிகழ்ச்சியில் இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டு சட்டம் (COTPA 2003) அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.

இந்திய அரசின் புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 5 ஆம் பிரிவு "நேரடியாகவோ மறைமுகமாகவோ புகையிலைப் பொருட்கள் எதுவும் விளம்பரப்படுத்தப்படக் கூடாது" என தடை விதித்துள்ளது. ஆனால், சென்னை புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தின் பல இடங்களிலும் ஜூலை 1 அன்று புகையிலை விளம்பரங்கள் வைக்கப்பட்டிருந்தன. அதாவது பத்தாயிரத்துக்கும் கூடுதலான பள்ளிக்குழந்தைகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் எங்கு பார்த்தாலும் சிகரெட் விளம்பரங்கள் வைக்கப்பட்டிருந்தன.
பள்ளி குழந்தைகள் நிகழ்ச்சியில் சிகரெட் விளம்பரம்
ஐ.டி.சி நிறுவனத்தின் தயாரிப்பான 'வில்ஸ்' சிகரெட்டின் விளம்பரம் வில்ஸ் வாழ்க்கைமுறை என விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. (பள்ளிக்குழந்தைகளின் வாழ்க்கைமுறையில் சிகரெட்டுக்கு என்ன பங்கோ?)

பசுமைத் தாயகத்தின் எதிர்ப்பு

ஐ.டி.சி நிறுவனம் தமது விளம்பரத்துக்காக நடத்தும் 'தேசிய மறுசுழற்சி நாள்' எனும் நிகழ்ச்சியில் தமிழக சபாநாயகர் டி.செயக்குமார், சுற்றுச்சூழல் அமைச்சர் பி.வி.ரமணா, தொழில்துறை அமைச்சர் பி. தங்கமணி, சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாக 30.06.2012 அன்று நாளிதழ் ஒன்றில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.
 பசுமைத் தாயகம் எதிர்ப்பு சுவரொட்டி
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பசுமைத் தாயகம் அமைப்பின் நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு அய்யா அவர்கள் 30.06.2012 அன்று அறிக்கை வெளியிட்டார்கள். அந்த அறிக்கை 1.07.2012 அன்று செய்தித்தாள்களில் வெளியானது. அன்றையதினம் "மரணத்தை விற்கும் ஐ.டி.சி, சுத்தத்தைப் பற்றி பேசலாமா - ஐ.டி.சி நிறுவன நிகழ்ச்சியில் அரசுசார்பான பிரமுகர்கள் பங்கேற்கக் கூடாது" எனக்கோரும் சுவரொட்டிகள் சென்னை நகரில் ஒட்டப்பட்டன.
 பசுமைத்தாயகம் சார்பில் ஆர்ப்பாட்டம் 
1.7.2012 ஞாயிறு அன்று மாலை ஐ.டி.சி நிகழ்ச்சி நடைபெற்ற சென்னை புனித ஜார்ஜ் பள்ளியின் முன்பு பசுமைத்தாயகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
  • ஐ.டி.சி நிறுவனம் சென்னை நகரின் பல இடங்களிலும் சட்டவிரோத சிகரெட் விளம்பரங்களை வைத்துள்ளது. பள்ளிகளுக்கு நூறு மீட்டர் தொலைவுக்குள் சிகரெட் விற்கக் கூடாது எனும் சட்டத்தை மீறி பள்ளிகளுக்கு அருகேயே சிகரெட் விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன. சிகரெட் விற்கப்படுகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள சென்னை மாநகர மேயர் அதே நிறுவனத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்பது நியாயம் தானா?
  • சென்னை மெரினா கடற்கரையில் மே 31 - புகையிலை எதிர்ப்பு நாள் நிகழ்ச்சியில் மேயரும் அமைச்சர்களும் பங்கேற்று புகையிலைக்கு எதிரான கையெழுத்து நிகழ்ச்சியை நடத்தினார்கள். இன்று அவர்களே சிகரெட் நிறுவனத்தின் விள்ம்பரத்தில் கலந்து கொள்ளலாமா?
  • தமிழ்நாட்டில் குழந்தைகள் புகையிலைக்கு அடிமையாவது அதிகரித்துவருகிறது. 2000 ஆவது ஆண்டில் பள்ளிக்குழந்தைகளில் 7 சதவீதத்தினர் புகையிலைப் பொருட்களை பயன்படுத்தினர், இது 2009 ஆம் ஆண்டில் 15 சதவீதமாக அதிகரித்துள்ளது. 
சிகரெட் விற்பனையை அதிகரிப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருக்கும் ஐ.டி.சி நிறுவனத்தின்  மற்றுமொரு விளம்பர நிகழ்ச்சிதான்  'தேசிய மறுசுழற்சி நாள்' நிகழ்ச்சியும். இதனை அமைச்சர்களும், அரசுத்துறையினரும், பள்ளிக்குழந்தைகளும் முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்" எனக்கோரும் துண்டுப் பிரசுரங்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்தோரிடம் விநியோகிக்கப்பட்டன.

ஐ.டி.சி சிகரெட் விளம்பர நிகழ்ச்சி - விளைவு என்ன?

ஐ.டி.சி சிகரெட் விளம்பர நிகழ்ச்சியில் தமிழக சபாநாயகர் டி. ஜெயக்குமார், தமிழக அமைச்சர்கள் பி.வி. ரமணா, பி. தங்கமணி, சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி, சுற்றுச்சூழல் துறைச் செயலாளர் சி.வி. சங்கர், புகழ்பெற்ற சதுரங்க விளையாட்டு வீரர் விசுவநாதன் ஆனந்த், திரைப்பட நடிகர் விக்ரம் ஆகியோர் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியின் போது ஐ.டி.சி நிறுவனம் பத்திரிகையாளர்களுக்கு அளித்த செய்திக் குறிப்பிலும் இவர்களது பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேயர், அமைச்சர்கள், நடிகர் விக்ரம், செஸ் வீரர் விசுவநாதன் ஆனந்த் புறக்கணிப்பு
ஆனால்,தமிழக சபாநாயகர் டி. ஜெயக்குமார் ஒருவர் தவிர வேறு எவருமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.  பசுமைத் தாயகத்தின் எதிர்ப்புக்கு கிடைத்த வெற்றி என்று இதனைக் கருதலாம்.
ஐ.டி.சி நிறுவன நிர்வாகியுடன் சபாநாயகர்
அதே நேரத்தில் - சென்னை நகரின் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் இருந்து பத்தாயிரம் குழந்தைகள் பங்கேற்றது கவலை அளிக்கும் செய்தியாகும்.

இனி என்ன?

புகையிலை நிறுவனம் குழந்தைகள் மீது சிகரெட்டைத் திணிக்கும் பேராபத்து இந்த ஒரு நிகழ்ச்சியுடன் முற்றுப்பெற்றாக வேண்டும். சட்டத்துக்கும் நியாயத்துக்கும் எதிரான இத்தகைய நிகழ்ச்சிகள் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். கூடவே, அரசு சார்பானவர்களுக்கும் புகையிலை நிறுவனங்களுக்கும் இடையேயான உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இதற்கு மாறாக, தமிழ்நாடு அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டு சட்டத்தை முழுவீச்சில் செய்ல்படுத்த வேண்டும். அதற்காக அனைவரும் குரல் கொடுப்பதே இப்போதுள்ள தேவை ஆகும்.

எது எப்படியோ, அன்று சட்டவிரோத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சபாநாயகர் இன்று வேறு எதற்காகவோ நீக்கப்பட்டிருந்தாலும், அவரது நீக்கம் வரவேற்கத்தக்கதே!

கருத்துகள் இல்லை: