Pages

புதன், அக்டோபர் 24, 2012

அவசரம்: இலங்கை மீது ஐநா மனிதஉரிமை விசாரணை - இந்திய துரோகம் தொடருமா? இப்போதே செயல்படுக! 

இலங்கையில் நிலவும் மனித உரிமை நிலை குறித்த "காலமுறை மதிப்பீடு" Universal Periodic Review (UPR) எனும் விசாரணை வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி ஜெனீவாவில் உள்ள ஐ.நா.மனித உரிமை அவையில் நடைபெற உள்ளது. இந்த மதிப்பீட்டு விசாரணையின் போது இலங்கையின் மனித உரிமை மீறல்களும்,  ஐ.நா.மனித உரிமை ஒப்பந்தங்கள் இலங்கையில் செயல்படும் நிலையும் விவாதத்திற்கு வர இருக்கின்றன. 

இலங்கை மீதான மனித உரிமை மதிப்பீட்டு விசாரணையை வழிநடத்தும் நாடுகளாக (TROIKA) இந்தியா, ஸ்பெயின், பெனின் ஆகிய நாடுகளை ஐநா அறிவித்துள்ளது. இவற்றில் ஸ்பெயின், பெனின் ஆகிய நாடுகள் இலங்கையின் மனித உரிமை மீறல்களை ஏற்கனவே கண்டித்து வருகின்றன. எனவே, அந்த நாடுகள் மனித உரிமை மதிப்பீட்டு விசாரணையின் போது நியாயமாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், விசாரணையை வழிநடத்தும் முக்கிய நாடான இந்தியா, இலங்கைக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்து இலங்கை மீது சர்வதேச அழுத்தம் வராமல் தடுக்கக் கூடும் என மனித உரிமை ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர். 

இலங்கை அரசின் அநியாய அறிக்கை

இலங்கை மீதான இந்த மனித உரிமை மதிப்பீட்டு விசாரணைக்காக, இலங்கை தன்னிலை விளக்கமாக 30 பக்க அறிக்கை ஒன்றை ஐ.நா.அவையில் சமர்ப்பித்துள்ளது. கொஞ்சமும் ஈவு, இரக்கம் இல்லாமல் வெறும் பச்சைப் பொய்களை மட்டுமே இந்த அறிக்கையில் முன்வைத்துள்ளது இலங்கை அரசு. குறிப்பாக, இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இனஅழித்தொழிப்பு போரில் ஒரு லட்சத்திற்கும் கூடுதலான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். 

ஆனால், இலங்கை அரசின் அறிக்கையில், தமிழர்களுக்கு எதிரான போர் ஒரு 'மனிதாபிமான நடவடிக்கை' (Humanitarian Operation) என்றும், போரின் போது 'ஒரே ஒரு குடிமகனின் உயிரழப்புக்கூட ஏற்படக்ககூடாது' (zero civilian casualty) என்கிற கொள்கை பின்பற்றப்பட்டதாகவும் கூறியுள்ளது.
ஐநா மனித உரிமை அவையில் கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை, தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையின் காரணமாக இந்தியா ஆதரித்தது. அந்த தீர்மானமும் வெற்றி பெற்றது. ஆனால், இப்போதைய அறிக்கையில் அந்த தீர்மானத்தை கடுமையாக வசைபாடியுள்ளது இலங்கை அரசாங்கம்.

இலங்கை அரசு பச்சைப்பொய்களை ஐ.நா. அவையில் சமர்ப்பித்துள்ள போதிலும், இதற்கு மாறாக, இலங்கை மீதான மனித உரிமை மதிப்பீட்டு விசாரணைக்காக, இலங்கையின் உண்மையான மனித உரிமை நிலை என்ன? என்பது குறித்து உலகளவிய மனித உரிமை அமைப்புகள் மொத்தம் 46 அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன. இவற்றை ஐ.நா. அவை 15 பக்க அறிக்கையாக தொகுத்து அளித்துள்ளது. 

இலங்கை மீதான இந்த மனித உரிமை மதிப்பீட்டு விசாரணைக்காக இந்தியாவிலிருந்து அறிக்கை சமர்ப்பித்துள்ள ஒரே அமைப்பு, மருத்துவர் ச. இராமதாசு அய்யா அவர்களை நிறுவனராகக் கொண்டுள்ள பசுமைத் தாயகம் அமைப்பு மட்டுமே. இந்த விசாரணைக்காக 46 அறிக்கைள் சமர்ப்பித்துள்ள அமைப்புகளில் ஒன்றாக பசுமைத் தாயகம் அமைப்பு ஐ.நா.அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐநா மனித உரிமைகள் காலமுறை மதிப்பீட்டு விசாரணை தொடர்பாக 1. இலங்கை அரசு அளித்துள்ள அறிக்கை, 2. ஐநா அமைப்புகள் அளித்துள்ள அறிக்கை, 3. அரசு சார்பற்ற அமைப்புகள் அளித்த அறிக்கைகளின் தொகுப்பு, 4. இலங்கையிடம் பல்வேறு நாடுகள் கேட்டுள்ள கேள்விகள் - ஆகிய அனைத்தையும் காண இங்கே சொடுக்கவும்:

http://www.ohchr.org/EN/HRBodies/UPR/Pages/LKSession14.aspx

இந்தியா அநியாயத்திற்கு துணை போகுமா?


இலங்கை மீதான மனித உரிமை மதிப்பீட்டு  விசாரணையை வழிநடத்தத் தலைமை ஏற்றுள்ளதால், உலக நாடுகள் இலங்கை குறித்து கேட்கும் கேள்விகளை இலங்கையிடம் கொண்டு சென்று, அதன் விளக்கத்தைக் கேட்கும் முக்கிய இடத்தில் இந்தியா இப்போது உள்ளது. மேலும், இந்த விசாரணை முடிந்த பின்பு விசாரணை அறிக்கையை எழுதி அதனை ஐ.நா.மனித உரிமைக் குழுவிடம் சமர்ப்பிக்கும் இடத்திலும் இந்தியாவே உள்ளது. 
எனவே, பொய்யாகவும், மனித உரிமைகளுக்கு எதிராகவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கையின் அறிக்கையை இந்தியா அதரிக்கக் கூடாது. மாறாக, மனித உரிமை அமைப்புகள் எழுப்பியுள்ள சிக்கல்களை இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பை நியாயத்திற்காக, மனித உரிமைகளைக் காப்பதற்காக இந்தியா பயன்படுத்த வேண்டும். இதற்கு மாறாக, இலங்கையின் கொடூரங்களை மூடி மறைக்க இந்தியா துணைப் போகக்கூடாது.

நீங்கள் என்ன செய்யலாம்?

இலங்கை குறித்த ஐநா விசாரணையின் போது இந்திய அரசு நியாயமான நிலைபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி ஆதரவு திரட்டும் பிரச்சாரத்தை அம்னெஸ்டி அமைப்பு மேற்கொண்டுள்ளது.

இதற்கு ஆதரவு அளிக்கும் விதமாக பின்வரும் செல்பேசி எண்களுக்கு ஒரு 'மிஸ்டு கால்' கொடுங்கள்: 

08067006666, 
02241176777, 
08067006506


இணையத்தில் இணைய இங்கே சொடுக்கவும்:

Sign and Demand Justice in Sri Lanka

தொடர்புடைய சுட்டிகள்: 


இலங்கை மீது ஐநாவில் புதிய விசாரணை:புதிய தலைமுறைக்கு பாராட்டும் கண்டனமும்!

ஐநாவில் ராஜபட்சவை சுற்றிவளைக்கும் தமிழர்கள்: கனடா பத்திரிகை பாராட்டு! இலங்கை பத்திரிகைகள் கலக்கம்!

இலங்கை அரசின் இனவெறி - ஐநா சபையில் எதிர்ப்பு!

இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தொடரும் போராட்டம் - பசுமைத் தாயகத்தின் நீதிக்கான பயணம்!

2 கருத்துகள்:

இ.பு.ஞானப்பிரகாசன் சொன்னது…

நல்ல கட்டுரை! உடனே இதை என்னால் முடிந்த அளவுக்கு எல்லா வகைகளிலும் பரப்பி மிஸ்டு கால்கள் குவியச் செய்கிறேன். தகவலுக்கு நன்றி!

Unknown சொன்னது…

Srilanka arasu nitsayam thandika pada vendum..tamilarkaluku neethi kidaika vendum.. Intha thakavalai thantha unkaluku enathu manamaarntha nanrikal..