Pages

வியாழன், ஆகஸ்ட் 15, 2013

இந்திய சுதந்திரம்: ஜனநாயகத்தின் படுதோல்வி!

இந்திய நாடு விடுதலை அடைந்து 67 ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும் ஒரு தேசம், 'சாரே ஜகான்சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா' (உலகின் எல்லா நாடுகளிலும் உயர்ந்தது எங்கள் இந்துஸ்தான்) என்று தனக்குத்தானே பெருமிதம் கொள்ளும்  ஒரு நாடு - உலகநாடுகளின் மத்தியில் இன்று என்ன நிலையில் இருக்கிறது என்று பார்த்தால் கண்ணீரும் பெருமூச்சும்தான் பதிலாகக் கிடைக்கும்.

கேடுகெட்ட நிலையில் இந்திய நாடு

அடிப்படை சுகாதாரம், அடிப்படைக் கல்வி, கழிப்பிட வசதி, குழந்தைகள் எடை, சிசு மரணம், வாழ்நாள் என எல்லா அளவீடுகளிலும் உலகிலேயே மிகவும் கேடுகெட்ட நிலையில் இருக்கிறது இந்தியா.

உலகிலேயே மிகமோசமான நிலையில் மக்கள் வாழும் நாடுகளான ஆப்பிரிக்க சகாரா பகுதி நாடுகளுடன் ஒப்பிடும் கீழான நிலையில் இந்தியா இருக்கிறது. ஆப்பிரிக்க கண்டத்துக்கு வெளியே உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் வெறும் 16 நாடுகள்தான் மிக வறுமையான நாடுகளாகக் கணக்கிடப்படுகின்றன. அந்த 16 நாடுகளில் 10 நாடுகளுக்கும் கீழான நிலையில் இந்தியா இருக்கிறது.

தெற்காசிய நாடுகளில் மிகக் கேவலமான நிலையில் உள்ள நாடு இந்தியா தான். வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளை விடவும் பல நிலைகளில் இந்தியா பின்தங்கி இருக்கிறது.
பிரிக் (BRIC) கூட்டமைப்பு எனப்படும் இந்தியா, பிரேசில், சீனா, ரஷ்யா கூட்டமைப்பிலேயே இந்திய நாடுதான் மிகக் கீழான நிலையில் இருக்கிறது என இந்தியாவின் கேடுகளைப் பட்டியலிடுகிறார் அமார்த்யா சென். (காண்க: An Uncertain Glory: India and its Contradictions)

அரசியல் சட்டத்தின் படுதோல்வி

இந்திய அரசியல் சட்டம் படுதோல்வி அடைந்துவிட்டது. அந்த சட்டமே ஒரு தவறான பின்னணியில் உறுவானதுதான் படுதோல்விக்கு மிக முக்கிய காரணமாகும். 


இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய குழுவானது இந்திய மக்களை பிரநிதத்துவப் படுத்தவில்லை. இந்தக் குழுவில் 217 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். ஆனால், இந்திய மக்களில் சுமார் 60 சதவீதமாக இருக்கக் கூடிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் இருந்து ஒரே ஒருவர் கூட அந்தக் குழுவில் இல்லை.
இந்தியர்களை அடிமைப்படுத்தி சுரண்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களின் சட்டங்களை சுதந்திர இந்தியா அப்படியே ஏற்றுக்கொண்டது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் 'இந்திய அரசுச் சட்டம் 1935' சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம், இந்திய மக்களை தொடர்ந்து சர்வாதிகார முறையில் அடக்கி ஒடுக்குவதற்கான ஒரு ஏற்பாட்டை உறுதிப்படுத்தினர்.

பெயரளவில் இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு என்று கூறிவிட்டு, உண்மையில் ஒற்றை ஆட்சி முறையை நிலைநாட்டினர்.

அடிப்படை உரிமைகள் புறக்கணிப்பு - அப்பட்டமான மனித உரிமை மீறல்

'பசித்தவனுக்கு உணவு, நிர்வாணமான பெருங்கூட்டத்திற்கு உடை, ஒவ்வொரு இந்தியனும் அவனது திறமைக்கு ஏற்ப முழுஅளவு முன்னேற்றமடையும் வாய்ப்பு' ஆகியவற்றை அளித்து இந்திய மக்களின் பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் 'அரசியல் சாசனம் பொருளற்றதாகிவிடும்' என்றார் ஜவகர்லால் நேரு
நாடு விடுதலை அடைந்த காலத்தில் முன்வைக்கப்பட்ட இலக்குகள் அப்பட்டமான தோல்வியைத் தழுவியுள்ளன. இந்திய அரசியல் சாசனம் "நாட்டின் ஒற்றுமை, சமூகப் புரட்சி, ஜனநாயகத்தை நிலைத்திருக்கச் செய்தல்" என்கிற இலக்குகளை முன்வைத்தது. இவற்றில் நாட்டின் ஒற்றுமை மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. சமூகப் புரட்சி, ஜனநாயகத்தை நிலைத்திருக்கச் செய்தல் என்ற இரண்டு இலக்குகளும் படுதோல்வியைத் தழுவியுள்ளன.

இந்திய அரசியல் அமைப்பின் மிக முக்கியமான இலக்குகள் பிரிவு 36 முதல் 51 வரை கூறப்பட்டுள்ளன. இவை அரசின் ஆளுகைக்கு அடிப்படையாக அமைய வேண்டிய கொள்கைகள் என "அரசியல் அமைப்புச் சட்டம் பகுதி 4 இல்" கூறப்பட்டுள்ளன (இங்கே காண்க: DIRECTIVE PRINCIPLES OF STATE POLICY). இந்த இலக்குகளை எந்த அரசாங்கமும் மதிக்கவே இல்லை:
  • அனைத்து மக்களுக்கும் சமூக, பொருளாதார, அரசியல் நீதி.
  • அந்தஸ்து, வாய்ப்புகளில் தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வைக் குறைத்தல்.
  • அனைவருக்கும் போதுமான அளவுக்கு வாழ்வாதாரங்களை உறுதி செய்தல்.
  • சொத்துக்கள் மற்றும் உற்பத்தி ஆதாரங்கள் எல்லோருக்கும் பயன்படும் வகையில் பகிர்ந்தளிக்கப்படுதல். 
  • பொருளாதார நடவடிக்கைகள் மூலம் சொத்தும் உற்பத்தி ஆதாரங்களும் ஓரிடத்தில் குவியாமல் தடுத்தல்.
  • குழந்தைகள் உரிமைகள் மற்றும் மேம்பாட்டுக்கான ஏற்பாடுகள்.
  • வேலை வாய்ப்பு உரிமை, கல்வி உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை உறுதி செய்தல்.
  • சுற்றுச்சூழலைக் காப்பாற்றுதல்.
  • மதுபானத்தை ஒழித்தல்.
  • உள்ளாட்சி அரசுகளை சுதந்திரமாக இயங்கச் செய்தல்.
- இவ்வாறாக, இந்திய அரசியல் அமைப்பில் "அரசாங்கங்களின் அளுகைக்கான" அடிப்படையாக உள்ள இந்த பிரிவுகள் எதுவும் 67 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆண்டுவரும் கட்சிகளால் மதிக்கப்படவே இல்லை.

இரண்டு விதமான மனித உரிமைகள்

உலகின் மிக முதன்மையான உரிமை ஆவணம் ஐநாவின் பன்னாட்டு மனித உரிமைப் பிரகடனம் ஆகும். (இங்கே காண்க: United Nations Universal Declaration of Human Rights) அதனை அடிப்படையாகக் கொண்டு மனித உரிமைகள் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.
குடியுரிமைகள், அரசியல் உரிமைகள் (Civil and Political Rights) என்பன ஒருவிதமான மனித உரிமைகள் (இங்கே காண்க: International Covenant on Civil and Political Rights) என்றும், சமூக, பொருளாதார, கலாச்சார உரிமைகள் (Economic, Social and Cultural Rights) மறுவிதமான மனித உரிமைகள் (இங்கே காண்க: International Covenant on Economic, Social and Cultural Rights) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த இரண்டுவகை உரிமைகளுமே மிக முக்கியமானவை ஆகும்.

இந்திய அரசியல் அமைப்பின் பகுதி 3-இல் குடியுரிமைகளும், அரசியல் உரிமைகளும், (இங்கே காண்க: FUNDAMENTAL RIGHTS) பகுதி 4-இல் சமூக, பொருளாதார, கலாச்சார உரிமைகளும் கூறப்பட்டுள்ளன. (இங்கே காண்க: DIRECTIVE PRINCIPLES OF STATE POLICY)

இவற்றில் பகுதி மூன்றினை உறுதி செய்யக்கோரி, குடிமக்கள் நீதிமன்றத்தை நாட வழி செய்யப்பட்டுள்ளதால் - குடியுரிமைகள், அரசியல் உரிமைகளை மிகக் குறைந்த அளவுக்காவது அரசாங்கங்கள் ஏற்று செயல்பட முனைகின்றன.

ஆனால், பகுதி நான்கினை உறுதிசெய்யக் கோரி நீதிமன்றத்தை நாடமுடியாது என்பதால் சமூக, பொருளாதார, கலாச்சார உரிமைகளுக்கான பிரிவுகள் 'கண்டும் காணாமல்' கைவிடப்பட்டுள்ளன.

ஆக, 67 ஆண்டுகளை அடைந்த நிலையிலும், சராசரி இந்தியக் குடிமக்கள் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்ட கூட்டமாகவே வாழ்கின்றனர்.

இது இந்திய ஜனநாயகத்தின் மிக மோசமான படுதோல்வியே ஆகும்.

1 கருத்து:

kamal சொன்னது…

இனியொரு விதி செய்வோம் அதை எந்தநாலும் காட்போம் தனியொருவனுக்குணவில்லையெனில் ஜகத்தினை அழிக்காது புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடுச்சாய்த்தே புதியதோர் உலகம் செய்வோம் . வாடியபயிரை கண்டு வாடி நின்றுவிடாது கூடி உழைத்து பகிர்ந்துத்திழைப்போம் . கூடுங்கள் தோழர்களே ஒன்றாய்ச்சேறுங்கள் தோழர்களே...