Pages

சனி, ஜூன் 14, 2014

பெங்களூரில் மாபெரும் வன்னியர் திருவிழா: அறியாத தகவல்கள்!

பெங்களூரு நகரின் தர்மராயா சுவாமி ஆலயத்தில் சித்திரை மாதத்தில் நடைபெறும் புகழ்பெற்ற கரகா திருவிழா ஒரு வன்னியர் திருவிழா ஆகும்.

பெங்களூரு நகரிலும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் ஒரு குறிப்பிடத்தக்க சமூகமாக வாழும் வன்னியர்கள் இத்திருவிழாவினை ஆண்டுதோரும் மிகச் சிறப்பாக நடத்துகின்றனர்.

கர்நாடக வன்னியர்கள்

கர்நாடக மாநிலத்தில் வன்னியர்கள் 'திகளர்' என்று அழைக்கப்படுகின்றனர். அக்னிகுல சத்திரியர்கள், சம்புகுல சத்திரியர்கள், வன்னிய குல சத்திரியர்கள் என வேறுபட்ட பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்.

அவர்கள் தமிழ் கலந்த கன்னடம் மற்றும் கன்னட மொழிபேசும் மக்களாக அங்கு வாழ்கின்றனர். கர்நாடக அரசு வன்னிய சமூகத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்துள்ளது. (கர்நாடக மாநிலத்தில் சுமார் 40 லட்சம் பேர் வரை வன்னியர்கள் வாழக்கூடும் எனக் கருதப்படுகிறது).

கர்நாடக மாநிலத்தில் வாழும் கணிசமான வன்னியர்கள் அம்மாநிலத்திலேயே நெடுங்காலமாக வாழ்கின்றனர். பெரும்பகுதியினர் பிற்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து கர்நாடக மாநிலத்துக்கு சென்றவர்கள்.
கர்நாடக திகளர் வன்னியர் அக்னி கலச சின்னம்
பெங்களூரை நகரை நிர்மானித்த கெம்பே கௌடா - காஞ்சிபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட வன்னிய குல சத்திரியர் என்று கருதப்படுகிறது. அவர் முதன்முதல் உருவாக்கிய கோட்டை பகுதியில் இப்போதும் வன்னியர்களே அதிக அளவில் வசிக்கின்றனர். அப்பகுதி திகளர் பேட்டை என்றே அழைக்கப்படுகிறது.

கி.பி. பதினோராம் நூற்றாண்டில் சோழப்பேரரசின் படையெடுப்பு காலத்தில், முதன்முதலில் கன்னடப் பகுதிக்கு சென்ற வன்னியர்கள் அங்கேயே தங்கினர் என்றும், அதற்கு அடுத்ததாக விஜயநகரப் பேரரசு காலத்தின் வன்னியர்கள் கன்னட நாட்டிற்கு சென்றனர் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஹைதர் அலி ஆர்க்காட்டின் மீது படையெடுத்த போது, பகலில் எங்குமே எதிரிப்படையினர் இல்லாத நிலையிலும், இரவுகளில் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஏன் இவ்வாறு நடக்கிறது என ஆராய்ந்த போது - பகலில் விவசாயிகளாக இருந்த வன்னியர்கள் இரவில் போராளிகளாக மாறி தாக்குதல் நடத்துவதைக் கண்டு அவர்களையும் தனது படையில் சேர்த்துக்கொண்டார். இவர்கள் மூன்றாவதாக பெங்களூரில் குடியேறிய பிரிவினர் ஆகும்.

இவ்வாறு பல்வேறு காலங்களில் கன்னட நாட்டில் குடியேறிய வன்னியர்களே இன்று பெங்களூரு கரகத் திருவிழாவை நடத்துகின்றனர் (காங்கிரசுக் கட்சி எம்.எல்.ஏ. நரேந்திர பாபு, பெங்களூர் மாநகரின் முன்னாள் மேயர் ரமேஷ் உள்ளிட்டோர் கர்நாடக வன்னியப் பிரமுகர்கள் ஆகும்)

பெங்களூர் திருவிழா

கரகா திருவிழா என்பது, பெங்களூரு தர்மராயா சுவாமி ஆலயம் எனப்படும் 'திரௌபதி ஆலயத்தில்' சித்திரை மாதத்தில் பதினோரு நாட்கள் நடக்கும் திருவிழா ஆகும். அதில் முக்கிய நாளான பெரிய கரகம் (Pete Karaga) எனும் கரக ஊர்வலம் சித்திரா பௌர்ணமி அன்று நடக்கிறது. அதனைக் காண லட்சக் கணக்கான மக்கள் திரளுகிறார்கள்.
'ஆண்டில் ஒருமுறை உங்கள் முன் தோன்றுவேன்' என திரௌபதி வன்னியர்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப, திரௌபதி அம்மன் கரகத்தில் எழுந்தருளுகிறார் என்பது இதன் ஐதீகம் ஆகும்.

கடுமையான விரதம் இருந்து இந்த கரகத்தை தூக்கும் கடமையை மூன்று வன்னியக் குடும்பத்தினர் பரம்பரையாக மேற்கொள்கின்றனர். இந்தக் கரகத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் வீரக் குமாரர்களாக ஒவ்வொரு வன்னியக் குடும்பத்தில் இருந்தும் ஒருவர் வீதம், வீரக்குமாரர்கள் விரவாளுடன் பங்கேற்கின்றனர்.

(இத்திருவிழாவில் வீரக் குமாரர்களாக வன்னியர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். ஒவ்வொரு வன்னியர் குடும்பத்தினரும் வீரக் குமாரர்களின் வீரவாளினை தமது குடும்ப பாரம்பரியமாக கொண்டுள்ளனர். ஆங்கிலேயேர்கள் நூறாண்டுக்கு முன்னரே இந்த வாளுக்கு ஆயுதத் தடைச்சட்டத்திலிருந்து விலக்களித்துள்ளனர்)

திருவிழாவின் முக்கிய நாட்கள்

1. கரகா திருவிழா போதிராஜா பரம்பரையைச் சேர்ந்த வன்னியக் குடும்பத்தினர் கோவிலில் கொடியேற்றுவதில் தொடங்குகிறது. அப்போது விழாவில் தொடர்புடைய வீரக்குமார்கள் உள்ளிட்டோர் காப்பு கட்டிக்கொள்கின்றனர்.

2. அடுதாக 'மடிவந்திகா' எனும் விழா கடைபிடிக்கப்படுகிறது. அன்றுமுதல் திருவிழாக்காலமான ஒன்பது நாட்களுக்கு வன்னியர்கள் வீட்டை தூய்மையாக பராமரிக்க வேண்டும். புது மட்பாண்டங்களில் சமைக்க வேண்டும், இலையில் சாப்பிட வேண்டும் என்பது மரபாகும்.

3. புண்ணிய சேவா என்பது கரகத்தை தூக்குவோர் குறிப்பிட்ட நீர்நிலைகளில் குளிப்பதாகும்.

4. திருவிழாவின் ஆறாம் நாளில், போதிராஜ சிலையும் திரிசூலமும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த நாளில் வீரக்கலைகளை வன்னியர்கள் நிகழ்த்திக்காட்ட வேண்டும். தங்களது போர் ஆயுதங்களை கோவிலில் காட்சிக்கு வைக்க வேண்டும் என்பது மரபாகும்.
வீரவாள் காட்சிக்கு வைத்தல்
இதே நாளில் அரிசியும் வெல்லமும் கொண்ட பாத்திரங்களை மல்லிகை கனகாம்பரம் கொண்டு அலங்காரம் செய்து, வன்னியப் பெண்கள் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துச் செல்கின்றனர்.
5. ஏழாம் நாளில் ஹசி கரகா எனும் திருவிழா கொண்டடப்படுகிறது. பெங்களூருவின் புராதானமான சம்பங்கி குளத்தில் கரகம் பூசை செய்யப்படுகிறது. பின்னர் ஊர்வலமாக கரகம் கோவிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. வன்னிய வீரக்குமாரர்கள் தங்களது வாளால் நெஞ்சில் அடித்து வழிபடுகின்றனர்.

6. எட்டாம் நாளில் வன்னியப் பெண்கள் கோவிலுக்குள் பொங்கல் அவைத்து வழிபடுகின்றனர். கோபம் கொண்ட திரௌபதி அம்மனுக்கு பொங்கல் வைத்து சாந்தப்படுத்தும் விழா இதுவாகும். இரவில் மகாபாரதக் கதை படிக்கப்படுகிறது.

7. ஒன்பதாம் நாள், சித்திரைப் பௌர்ணமி நாளாகும். இதுதான் திருவிழாவின் முக்கிய நாள். இந்த நாளில் கரகம் ஊருவலமாக பெங்களூரு நகரின் முதன்மைப் பகுதிகளில் எடுத்துச் செல்லப்படுகிறது.

பெங்களூருவின் பிரதான பகுதிகளில் நகர்வலமாக செல்லும் இந்த கரக ஊர்வலம், Hazrat Takwal Mastan எனும் இஸ்லாமிய தர்காவில் நின்று, மூன்று முறை சுற்றி, ஒரு எலுமிச்சைப் பழத்தை தர்காவிற்கு அளித்து, அங்கிருந்து ஒரு எழுமிச்சைப் பழத்தை வாங்கிச் செல்வது பாரம்பரிய வழக்கமாகும்.
இஸ்லாமிய தர்காவில் கரகம் 
கரகத்தை சுமப்பவர் இரவு முழுவதும் பல மணி நேரம், கரகத்தை கையால் தொடாமலும், கரகத்தை கீழே வைக்காமலும் நடனம் ஆடியபடி வெறும் தலையில் சுமந்து எடுத்துச் செல்கிறர் (நூறாண்டுகளுக்கு மேலான வரலாற்றில் ஒருமுறைக் கூட கரகம் கீழே வைக்கப்பட்டது இல்லை). கரகத்துக்கு பாதுகாப்பாக நூற்றுக்கணக்கான வன்னிய வீரக்குமாரர்கள் வீரவாளுடன் செல்கின்றனர்.

8. பத்தாம் நாள் காவு சேவை எனும் விழா கடைபிடிக்கப்படுகிறது. அதற்கு முதல் நாள் இரவே போதிராஜாவின் புராண வரலாறு, வீரக்கதையாக படிக்கப்படுகிறது. விடியும் நேரத்தில் போதிராஜா பரம்பரையைச் சேர்ந்த இரண்டு வன்னியர்கள் போதிராஜாவாக வேடமிட்டு - கருப்பு அட்டை பலியிடுகின்றனர்.

9. பதினோராம் நாள் விழாவின் இறுதிநாளாகும். வசந்தவிழா என்கிற பெயரில் இந்த நாளில் விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன.

போதிராஜாவின் கதை

ஏழு சுத்துக் கோட்டை எனும் கோட்டைக்கட்டி அரசாட்சி செய்யும் போதிராஜா தனது வலிமையை நிரூபிக்க 101 அரசர்களை யாகத்தில் பலியிடத் திட்டமிடுகிறார். 100 அரசர்களை சிறைபிடித்து 101 ஆவது அரசனுக்காக காத்திருக்கும் நிலையில், தலைமறைவாக வாழும் பஞ்ச பாண்டவர்களில் பீமனை 101 ஆவது ஆளாக கைது செய்து சிறையில் அடைக்கிறார்.

இதனை அறிந்த கிருஷணன் - அர்ஜுனனை குறவங்கி எனும் பெண் வேடமிட்டு, போதி ராஜாவிடம் அனுப்புகிறார். அந்தப் பெண்ணின் அழகில் மயங்கும் போதிராஜா, அவளை திருமணம் செய்ய விரும்புகிறார்.
போதிராஜா கதைநாடகத்தில் போதிராஜா பரம்பரையினர் at Mulabagilu
இதற்கு சிவபக்தனும் சைவனும் ஆகிய போதிராஜா, மாமிசம் உண்ண வேண்டும். சிறையில் இருக்கும் அரசர்களை விடுவிக்க வேண்டும் என கிருஷ்ணன் நிபந்தனை விதிக்கிறான். இதனை ஏற்று ஆட்டு மாமிசத்தை புசித்து, சிறைவைக்கப்பட்ட மன்னர்களையும் போதிராஜா விடுவிக்கிறார். இதற்கு மாற்றாக, பஞ்சபாண்டவர்களின் சகோதரியான சங்கவள்ளியை போதிராஜாவுக்கு மணமுடிக்கின்றனர். மகாபாரதப் போரில் போதிராஜா பாண்டவர்களின் படைக்கு தலைமையேற்கிறார். இந்த கதைதான் பத்தாம் நாள் திருவிழா ஆகும்.

ஏழு சுத்தின கோட்டை எனும் ஒரு பழமையான கோட்டை தர்மராயா கோவிலுக்கு அருகில் இருக்கிறது. பெங்களூருவில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் சித்தரதுர்காவிலும் ஒரு ஏழு சுத்தின கோட்டை இருக்கிறது

(வன்னியர்களிடையே பாரதம் படிக்கும் கதையை கி.பி. எட்டாம் நூற்றாண்டில் பரப்பிய நரசிம்மவர்ம பல்லவனும், அவரது தந்தை மகேந்திரவர்ம பல்லவனும் - மாமல்லபுரம் கல்வெட்டுகளில் 'நரசிம்மவர்ம பொதிராஜன் , மகேந்திரவர்ம போதிராஜன்' என்று குறிப்பிடப்படுகின்றனர். தமிழ்நாட்டின் எல்லா திரௌபதி அம்மன் ஆலையத் திருவிழாவிலும் போதிராஜன் வம்சத்தை சேர்ந்தோர் என சில வன்னியக் குடும்பங்கள் பரம்பரையாக பங்கேற்க்கின்றனர்) 

கர்நாடக ராஜ்ய திகள க்ஷத்திரிய மகாசபா

'கர்நாடக ராஜ்ய திகள க்ஷத்திரிய மகா சபா' மாநாடு பிப்ரவரி 2014 இல் நடந்தது. கர்நாடக மாநில முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அனைதுக் கட்சி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர். தமிழ்நாட்டிலிருந்து சிறப்பு விருந்தினராக மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் பங்கேற்றார்.
கர்நாடக ராஜ்ய திகள க்ஷத்திரிய மகாசபா மாநாட்டில் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள்
தர்மராயா சுவாமி ஆலயத்தில் இருந்து மாநாட்டு மேடைக்கு ஊர்வலம் நடத்தப்பட்டது. ஒரு லட்சம் பேர் பங்கேற்ற இம்மாநாட்டில், வன்னியர்களின் பெங்களூர் கரகா விழாவுக்கு கர்நாடக அரசின் சார்பில் ஆண்டுதோரும் ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படும் என முதல்வர் சீத்தாராமய்யா தெரிவித்தார்.

மறைக்கப்படாத வன்னியர் வரலாறு

தமிழ் நாட்டில், சாதி அடிப்படையிலான வரலாற்று அடையாளங்களை அழிப்பதன் மூலம், தமிழர்களின் அடையாளத்தையே இல்லாமல் செய்துவிட்டனர். இதற்கு மாறாக, கன்னட தேசியத்தை ஓங்கி உயர்த்தும் கர்நாடக மாநிலத்தவர்கள் - ஒவ்வொரு சாதியின் அடையாளத்தையும் உயர்த்திப் பிடிக்கின்றனர்.

அந்த வகையில், பெங்களூரு நகரின் முதன்மை திருவிழாவாக வன்னியர்களின் திரௌபதி அம்மன் கரகத் திருவிழாவை அங்கீகரித்து, முக்கியத்துவம் அளித்துள்ளனர் (Bangalore's most important and oldest festival called "Karaga Shaktyotsava" or Bengalooru Karaga). மேலும், இதன் எல்லா உரிமைகளும் வன்னியர்களுடையவை என்பதையும் அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.
பெங்களூருவின் பெருமை
அதுமட்டுமல்லாம, கர்நாடக ஊடகங்கள், இதனை வன்னியர் திருவிழா என வெளிப்படையாக அறிவித்து, இதனை பெங்களூருவின் முதன்மை விழா என்றும் கொண்டாடுகின்றனர் (இதுவே தமிழ் நாடாக இருந்திருந்தால் - இதனை ஒரேயடியாக மூடி மறைத்திருப்பார்கள்)

கீழே உள்ள பெங்களூரு கரகா காணொலியில், இத்திருவிழா ஒரு வன்னியத் திருவிழா என TV9 தொலைக்காட்சி அறிவித்து, அதனைக் கொண்டாடுவதைக் காண்க:

வன்னியர்கள் குறித்து: 10: 25 / 12: 25 / 17: 10 / 20: 40 / 21: 30 ஆகிய மணித்துளிகளில் காண்க. வீரக்குமாரர்கள் குறித்து: 14: 20 மணித்துளியில் காண்க.

காணொலியில் கரகா திருவிழா
http://youtu.be/WyOXuH1RFRw


குறிப்பு: பெங்களூருவில் மட்டுமின்றி, கர்நாடகத்தின் பல்வேறு நகரங்களிலும் வன்னியர்கள் கரகா திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். குறிப்பாக Hoskote, Shanthinagar, Anaekallu, Maluru, Kolar, Vijaypura, Devanahalli, Yelehanka , Mulabagilu ஆகிய நகரங்களில் வன்னியர்களால் கரகா திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது.

தொடர்புடைய சுட்டிகள்:

1. வன்னியர்களுக்கு எதிரான இனவெறி மனநோய்: VANNIYAPHOBIA

2. வடபழனியில் வன்னியர் வரலாறு மறைப்பு

3. விநாயகர் சதுர்த்தியும் தமிழர்களின் வீரமும் - அறியாத தகவல்கள்!

1 கருத்து:

Unknown சொன்னது…

what a come back; welcom ARUL; 'KALKKUERA;