Pages

திங்கள், அக்டோபர் 31, 2016

மாவீரன் பண்டார வன்னியன் 213 : வரலாற்று அடையாளம் பாதுகாக்கப்படுமா?

விடுதலைப் புலிகளின் வழிகட்டியாக, தமிழீழத்தின் வீர அடையாளமாக இருப்பது வன்னியர் ஆட்சியும் அதன் கடைசி மன்னன் பண்டார வன்னியனும் ஆகும். 213 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (அக்டோபர் 31) பண்டார வன்னியன் துரோகத்தால் தோற்கடிக்கப்பட்டான். ஈழத்தில் இன்று, வன்னிய ஆட்சியின் அடையாளங்களை அழிக்கும் சதிகள் நடந்துகொண்டிருக்கின்றன!

"பண்டார வன்னியன் வழியில் போரிடுகிறோம்" - பிரபாகரன்

முள்ளிவாய்க்கால் இறுதிகட்ட போரின் நாட்களில் தேசியத்தலைவர் பிரபாகரன் பின்வருமாறு கூறினார்:

"விடுதலைபோராட்டத்தில் ஒருவேளை நாங்கள் தோற்றுப்போகலாம். ஆனால் நாங்கள் விட்டுச்செல்லும் வாள், ‘கூர்மையானதாக’ விட்டுச்செல்லவேண்டும். ஒரு காலத்தில் பண்டாரவன்னியன் இந்த மண்ணின் விடுதலைக்காகப் போராடினான். அவன் காட்டிய வழியில் நாங்கள் போரிடுகின்றோம். எங்களால் முடியாவிட்டால் நாளை இன்னொரு சந்ததி வரும். அது எமது போராட்டத்தினைத் தொடர்ந்து கொண்டுசெல்லும்.” என்றார் பிரபாகரன்.

வன்னி: ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் அடங்காத சுதந்திர பூமி

தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவர்கள் ஈழத்து வன்னிய அரசர்கள். கி.பி ஆறாம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட அக்கபோதிமன்னன் காலத்திலேயே வன்னியர்கள் வன்னியை ஆண்டுள்ளனர் என சில ஆய்வுகள் கூறுகின்றனர். சோழர்கள் காலத்தில் வன்னியர்கள் ஈழத்துக்கு வந்ததாக யாழ்ப்பாண வைபவ மாலை கூறுகிறது. வன்னி பெருநிலத்தில் வன்னியர் ஆட்சி, 1803 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நீண்டிருந்தது.

அன்னியருக்குக் கட்டுப்படாமல் மிகநெடுங்காலம் வன்னிய ஆட்சி நீடித்ததால், அப்பகுதி அடங்காப்பற்று என்று அழைக்கப்பட்டது. போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என எல்லா அன்னியர்களையும் முறியடித்த மாவீரர்கள் வன்னியர்கள். (விடுதலைப் புலிகளின் ஈழப்போர் கடைசிவரை நீடித்திருந்ததும் வன்னியில்தான்).

1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது.

டச்சுக்காரர்கள் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும் ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தின் முற்பகுதியிலும் வன்னிராச்சியத்தை ஆண்ட மன்னன் பண்டாரவன்னியன். ஆயிரமாண்டு வன்னிய அரசப் பாரம்பரியத்தின் கடைசி மன்னர். இவரது முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன்.
டச்சுக்காரர்கள் காலத்திலும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தும் மன்னார், திரிகோணமலை, வன்னிக்காடுகள் என வன்னியர்கள் இடைவிடா கொரில்லா போர் நடத்தி வந்தனர். அவர்களில் ஒளிவிடும் மாணிக்கமாய் வந்த மாவீரன்தான் பண்டார வன்னியன்.

1782-ல் வன்னியை கைப்பற்ற டச்சுக்காரர்கள் நடத்திய போர் பற்றி எழுதும் லூயி என்ற வரலாற்று ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: “டச்சுக்காரர்கள் எத்தனையோ நாடுகளில் போர் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் வன்னியர்களைப் போன்று இப்படி வீரத்துடன் போரிட்டவர்களை உலகில் எங்கும் அவர்கள் காணவில்லை”

வன்னிராச்சியத்தில் தோற்கடிக்கப்படாத மன்னாக திகழ்ந்த பண்டாரவன்னியன் காக்கை வன்னியனின் காட்டிக்கொடுப்பினால் ஆங்கிலேய தளபதி லெப். வொன் டெரிபோர்க்கினால், இதே நாளில் 31.10.1803 அன்று தோற்கடிக்கப்பட்டான்.

பண்டார வன்னியன் கொலை செய்யப்படவில்லை!

பண்டார வன்னியன் நினைவு நாள் "1803 ஆகஸ்ட் 25" என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். ஏனெனில், முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள். அப்போது பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி நடைபெற்று வந்தது. வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கினான். அத்தாக்குதலில் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றினான். அந்த நாள்தான் 1803 ஆகஸ்ட் 25. எனவே, பண்டார வன்னியனின் உச்சபட்சமான போர் வெற்றியே அவரது நினைவு நாளும் ஆகும்!
பண்டார வன்னியன் கொலைசெய்யப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் உறுதியாக இல்லை. பண்டாரவன்னியன் 1803 ஆம் ஆண்டில் தோற்கடிக்கப்பட்டதை வைத்தே, அவன் இறந்த நாள்  (அக்டோபர் 31)  என்று கணக்கிடுகின்றனர். ஆனால், 1810 ஆம் ஆண்டு வரை அவர் உயிரோடு இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், போரில் ஏற்பட்ட காயங்களின் விளைவாக அவர் 1811 ஆம் ஆண்டில் பனங்காமத்தில் இறந்திருப்பார் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அந்த வகையில், பண்டார வன்னியனின் வரலாறும் பிரபாகரனின் ஒன்றாக இருப்பது வியப்பானதாகும்!

அழிகப்படும் வன்னியின் வரலாற்று அடையாளம்

இலங்கை அரசு வன்னியர்களின் வரலாற்று இடங்களை முஸ்லிம்களுக்கு அளிக்கத்தொடங்கியிருக்கிறது. இது ஈழத்தின் வரலாற்றை சிதைக்கும் முயற்சி ஆகும்.

தமிழீழத்தில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தமிழர்களாக கருதப்படுவது இல்லை. விடுதலைப் போரின் போது 1990 ஆம் ஆண்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 1000 முஸ்லிம் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர். முஸ்லிம்களை வெளியேறும் நிலை ஏற்பட்டது தவறு என்று பிற்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒப்புக்கொண்டு, முஸ்லிம்களை மீண்டும் வருகை தருமாறு அழைத்தனர். பின்னர் போரினால் எல்லாம் சின்னபின்னம் ஆனது.
இப்போது, முஸ்லிம்கள் மீள் குடியேற்றம் நடக்கின்றன. ஆனால், கரைதுறைப்பற்று எனும் பிரிவில் மட்டும் 1032 குடும்பங்கள் தாங்கள் விட்டுச்சென்ற இடத்துக்கான ஆதாரங்களை அளித்ததன் அடிப்படையில் அவர்களது பழைய நிலம் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 1455 குடும்பங்கள் நிலமற்றவர்களாக அறிவிக்கப்பட்டு - அவர்களுக்கு புதிய நிலத்தை அளிக்கும் பணியை அரசாங்கம் செய்கிறது. இதற்கு மேலும் 448 குடும்பங்கள் புதிதாக நிலத்தைக் கோரியுள்ளன.

ஆக மொத்தத்தில், 1990 ஆம் ஆண்டில் 1000 குடும்பங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வெளியேறிய நிலையில் - இப்போது கரைதுறைப்பற்று என்கிற ஒரு பகுதியில் மட்டும் சுமார் 3000 குடும்பங்கள் உரிமை கோருகின்றனர். அவர்களில் சுமார் 2000 குடும்பங்கள் புதிதாக நிலம் கோருகிறார்கள். இதற்காக வன்னிக்காட்டை அழித்து, புதிய நிலத்தை அளிக்கிறது இலங்கை அரசு.

இவ்வாறு முஸ்லிம்களுக்கு இலவசமாக வழங்கப்படும் நிலங்களில் ஒரு பகுதி 'வன்னியன் மேடு' என்கிற இடம் ஆகும்! வன்னியர்கள் 'அடங்காபற்று முள்ளியவளை வன்னியர்கள் என்றுதான் அழைக்கப்பட்டனர். அவர்களது ஆதிக்கம் மிகுந்திருந்த பகுதிதான் இப்போது முஸ்லிம்களுக்கு அளிக்கப்படுகிறது.

வன்னியன் மேட்டு பகுதியில்தான் பண்டார வன்னியன் தனது படைகளை நிறுத்தியிருந்தார். இதே காட்டுப்பகுதிக்கு படையெடுத்து வந்த வொன் டெரிபோர்க் என்ற ஆங்கிலேய படைத்தளபதியை பண்டார வன்னியனின் தளபதி குலசேகரன் கைது செய்தார். தனது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட வொன் டெரிபோர்க்கை - பண்டார வன்னியன் மன்னித்து விடுதலை செய்த இடம்தான் வன்னியன் மேடு. பின்னாளில் அதே வொன் டெரிபோர்க் தான் பண்டார வன்னியனை தோற்கடித்தான்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க வன்னியன் மேடு பகுதியை, முஸ்லிம்களின் குடியேற்றப் பகுதியாக மாற்றி வருகிறது இலங்கை அரசு.

இந்த வரலாற்று அழிப்பு தடுக்கப்பட வேண்டும்.

சனி, அக்டோபர் 29, 2016

மாபெரும் வெற்றி: மனித உரிமைப் பேரவையில் இருந்து ரஷ்யா வெளியேற்றம்!

இலங்கை அரசுக்கு பன்னாட்டு அரங்கில் அதிதீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்த ரஷ்ய நாடு -ஐநா மனித உரிமைப் பேரவைக்கு நடந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை மீதான விவாதம் மீண்டும் 2017 மார்ச் மாதம் மனிதஉரிமைப் பேரவையில் வரவுள்ள நிலையில், ரஷ்யாவின் தோல்வி இலங்கை அரசுக்கு ஒரு பின்னடைவே ஆகும்.

47 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா மனித உரிமைப் பேரவைக்கு (UN Human Rights Council), 2017 ஆம் ஆண்டுக்காக 14 உறுப்பினர்கள் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டார்கள். ஐநா அவையில் வெள்ளிக்கிழமை (28.9.2016) நடந்த தேர்தலில் உலகின் அனைத்து நாடுகளும் ரகசிய வாக்கெடுப்பு முறையில் வாக்களித்தன. அதில் ரஷ்ய நாடு தோற்கடிக்கப்பட்டுள்ளது. 

உலகின் அனைத்து மனித உரிமை அமைப்புகளும் ரஷ்யாவுக்கு எதிரான பிரச்சாரம் செய்தன. சிரியா நாட்டில், நேரடியாக போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ள ரஷ்யா எவ்வாறு மனித உரிமைப் பேரவையில் உறுப்பினர் ஆகலாம்? என்கிற கேள்வியை அவை முன்வைத்தன.

எனினும், பன்னாட்டு அரசியலில் ரஷ்யாவுக்கு இருக்கும் பலத்தை வைத்து, அந்த நாடு வெற்றிபெரும் என்றே பெரும்பாலான ஊடகங்கள் கருத்து தெரிவித்தன. ஆனால், அனைத்து நம்பிக்கைகளையும் மீறி, ரஷ்யா தோற்கடிக்கப்பட்டுள்ளது.
ஐநாவில் ரஷ்ய அதிபர் புதின்
ஐநா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் ரஷ்யா, மனித உரிமைப் பேரவைக்கான தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போயிருப்பது சர்வதேச அளவில் அதிர்வலையை உண்டாக்கி இருக்கிறது.

மனித உரிமைப் பேரவை உறுப்பினர் பதவி என்பது மூன்று ஆண்டுகளுக்கான உறுப்பினர் தகுதி ஆகும். தொடர்ந்து இரண்டு முறை உறுப்பினராக இருந்த நாடுகள் மூன்றாவது தேர்தலில் போட்டியிட முடியாது. ஒரு ஆண்டு இடைவெளிவிட்டு மீண்டும் தேர்தலில் நிற்கலாம்.

அமெரிக்கா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் இந்த தேர்தலில் வெற்றிபெற்றுள்ளன. 2016 ஆம் ஆண்டில் உறுப்பினராக இல்லாத அமெரிக்கா, இந்த தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் 2017 ஆம் ஆண்டுமுதல் ஐநா மனித உரிமைப் பேரவையில் உறுப்பினராக சேர்கிறது. இந்தியா ஏற்கனவே, உறுப்பு நாடாக இருந்துவருகிறது.

வியாழன், அக்டோபர் 27, 2016

தமிழக அரசின் சட்டத்துக்கு நீதிமன்றம் தடை: தமிழக கட்சிகளின் கள்ள மவுனம் ஏன்?

"யார் வேண்டுமானாலும் சட்டக் கல்லூரி தொடங்கலாம். ஆனால், வன்னியர் சங்கம் மட்டும் தொடங்கக் கூடாது" - என்கிற கொடூரமான இனவெறியுடன் எட்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக தடை விதித்தன திமுக, அதிமுக கட்சிகள். இதற்காக, சட்டமன்றத்தில் தனியாக ஒரு சட்டமே இயற்றி, ஆளுநரின் ஒப்புதலையும் பெற்று சட்டமாக்கின திராவிடக் கட்சிகள்.

ஒரு சமுதாயத்தை ஒதுக்க வேண்டும், ஒழிக்க வேண்டும், முன்னேற விடவேகூடாது என்பதற்காக அரசாங்கம் தனியாக சட்டம் இயற்றுவது, உலகத்திலேயே தமிழ்நாட்டில்தான் நடந்துள்ளது.

சில சாதிகளை குற்றப்பரம்பரையினர் என்று குற்றம் சாட்டி - தனியாக சட்டம் கொண்டுவந்த ஆங்கிலேய காலனியாதிக்க அரசாங்கத்துக்கும், ஒரு சாதி முன்னேறக் கூடாது என்பதற்காகவே சட்டம் கொண்டுவந்த திராவிடக் கட்சி அரசாங்கத்துக்கும் - அடிப்படை வேறுபாடு எதுவும் இல்லை!

வன்னியர் அறக்கட்டளை கல்லூரிக்கு தடைவிதிக்க வேண்டும் என்பதற்காகவே பிரத்தியோகமாகக் கொண்டுவரப்பட்ட தமிழக அரசின் 'தனியார் சட்டக்கல்லூரி தடைச் சட்டம் செல்லாது' என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் எட்டாண்டு சட்டப் போராட்டத்தின் விளைவாக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

அரசின் சட்டத்தை நீதிமன்றம் தடை செய்வது என்பது மிக முக்கியமான நிகழ்வு. ஆனால், தமிழ்நாடு அரசுக்கு எதிரான இந்த மாபெரும் தீர்ப்பு குறித்து, தமிழகத்தின் கட்சிகள் அனைத்தும் மவுனம் காக்கின்றன! பாட்டாளி மக்கள் கட்சி தவிர, வேறு எந்தக் கட்சியும் இது குறித்து எந்தக் கருத்தும் கூறவில்லை!

ஏன் இந்த கள்ள மவுனம்?

தமிழ்நாட்டில் எது நடந்தாலும் துள்ளிக்குதிக்கும் கட்சிகள், இப்போது எதுவும் சொல்லாமல் இருப்பது ஏன்? 

தமிழக அரசின் சட்டத்தையே நீதிமன்றம் தடை செய்துள்ள நிலையில், அரசாங்கத்தை எதிர்க்கும் நிலையில் உள்ள கட்சிகள் கூட வாய்மூடி மவுனம் காப்பது ஏன்?

இதற்கான பதிலில் தான் - தமிழ்நாட்டில் புரையோடிப் போயிருக்கும் சாதிவெறியும், இனவெறியும் ஒளிந்திருக்கிறது!

ஊடக செய்திகள்:

The Hindu: High Court quashes Act prohibiting private law colleges

HC imposes Rs. 20,000 costs on TN govt.

Verdict a milestone: PMK

Times of India: Can't ban new private law colleges, says HC

DECCAN CHRONICLE: Tamil Nadu can’t stop private law colleges: Madras High Court

New Indian Express: Act barring private colleges from opening law schools struck down in Tamil Nadu

Business Standard: TN act banning new private law colleges quashed

அம்பேத்கர் பல்கலைக்கழகத்துக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்: தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்க விதிக்கப்பட்ட தடை நீங்கியது - உயர் நீதிமன்றம் உத்தரவு

தனியார் சட்ட கல்லூரிகள் தொடங்க உயர் நீதிமன்றம் அனுமதி: தமிழக அரசின் தடை சட்டம் ரத்து

தனியார் சட்டக்கல்லூரி அனுமதி மறுப்பு சட்டத்தை ரத்து செய்து சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

தனியார் சட்டக் கல்லூரி தொடங்க அனுமதியில்லை என்ற சட்டம் ரத்து: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சட்டக்கல்லூரிக்கு அனுமதி: நீண்ட சட்ட போராட்டத்தில் சமூகநீதிக்கு வெற்றி! ராமதாஸ்

தனியார் சட்டக் கல்லூரி அமைக்க தடை விதிக்கும் தமிழக அரசின் புதிய சட்டம் ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்க விதிக்கப்பட்ட தடை ரத்து : உயர்நீதிமன்றம் உத்தரவு

புதன், அக்டோபர் 19, 2016

வன்னி மரம் - வீரத்தின் அடையாளம்: ஒரு மாபெரும் வரலாறு!

தமிழகத்திலும் இந்தியாவிலும் வீரத்தின் அடையாளமாகவும், நெருப்பின் வடிவமாகவும், வெற்றியை தரும் சின்னமாகவும் 'வன்னி மரம்' கருதப்படுகிறது. தமிழர் பண்பாட்டில் வன்னி மரமும், வன்னி மரத்தின் மீது அம்பு தொடுக்கும் விழாவும் முதன்மையானவை ஆகும்.

வறண்ட பகுதிகளில் வளரக்கூடிய பசுமைமாறா மரம் வன்னியாகும். வன்னி மரத்தின் தாவரவியல் பெயர் ப்ரஸாபிஸ் ஸ்பைசிஜரா (Prosopis spicigera). மூலிகை, கால்நடைத் தீவனம், கட்டிடம் கட்ட மரம், விறகு என பலவழிகளிலும் வன்னி மரம் பயன்படுகிறது.

புராணக் கதைகள்

உலகிலுள்ள எல்லா இலைகளிலும் சிறப்பானது வன்னி இலைதான் என்பதால் - சிவபெருமான் தனது சடாமகுடத்தில் வன்னி இலையை சூடியிருக்கிறார் என்பது இந்து மத நம்பிக்கை ஆகும்.

வன்னி மரம் உருவானது குறித்து ஒரு கதை உள்ளது. புருசுண்டு முனிவரின் சாபத்துக்கு ஆளான சமி எனும் பெண் வன்னி மரமாக ஆனதாகவும், பின்னர் விநாயகரை வழிபட்டு சாபம் தீர்ந்ததாகவும் அந்த புராணக்கதை குறிப்பிடுகிறது. (சமற்கிருத மொழியில் வன்னி மரத்தின் பெயர் 'சமி' ஆகும்)

வன்னி மரம் செல்வத்தை தருகிறது என்பதற்கான புராணக் கதையும் உள்ளது. முனிவரிடத்தில் கல்வி கற்ற கௌத்ச்யன் என்பவன், தனது குருநாதருக்கு குருதட்சணை தர அடம்பிடித்தான். பொருட்களின் மீது பற்றில்லாத குருநாதர் - கௌத்ச்யனால் முடியாது எனக் கருதி, 14 கோடி பொன் தட்சணையாக வேண்டும் என்று கேட்டார். அவன் அயோத்தியை ஆண்ட ரகுவிடம் கேட்டான். மன்னரிடமே அவ்வளவு பணம் இல்லாததால், அவர் இந்திரனிடம் கேட்டார். இந்திரன் அயோத்தியில் உள்ள வன்னி மரங்களில் பொன் மழை பெய்யச் செய்தார் - என்பது ஐதீகம் ஆகும்.

இதனால், வன்னி மரத்தின் இலைகள் தங்கமாக கருதப்படுகின்றன. மராட்டியம், ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாட்டில் - விஜயதசமி நாளில் வன்னி இலைகளை கொண்டு வந்து வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது.

விருதாச்சலத்தில் உள்ள விருதகிரீஸ்வரர் கோவிலைக் கட்டியபோது, அதற்காக வேலைசெய்தவர்களுக்கு ஊதியமாக, விபசித்தி முனிவர் என்பவர் தங்கத்திற்கு பதில் வன்னி  இலைகளைக் கொடுத்தாராம். அக்கோவிலின் வன்னி மரத்தில் இருந்து இலைகளை உருவி கொடுக்கும் போது, யார் எவ்வளவு வேலை செய்தார்களோ, அதற்கேற்ற அளவு வன்னி இலைகள் தங்கமாக மாறின என்று கல்வெட்டு கூறுகிறது. இப்போதும் அந்த வன்னிமரம் விருதாச்சலம் கோவிலில் உள்ளது.

வன்னிய புராணத்தில் வீரவன்னியன் யாகத்தீயிலிருந்து உதித்தான் என்று சொல்லப்படுகிறது. அந்த யாகத்தீயை உருவாக்க வன்னி மரக் குச்சிகளே பயன்படுத்தப்பட்டன என்கிறது வன்னிய புராணம்.

புராணங்களில் வன்னி மரம்

மகாபாரதக் கதையில் 12 ஆண்டு வனவாசமும் ஒரு ஆண்டு மறைந்திருந்து வாழுதல் தண்டனையும் விதிக்கப்பட்டதால் பாண்டவர்கள் ஐவரும் 13-ஆவது ஆண்டில் விராட தேசத்துக்குச் சென்றனர். அப்போது அர்ஜுனனது காண்டீபம் முதலான ஆயுதங்களை யாருக்கும் தெரியாது வன்னி மரப் பொந்தில் ஒளித்து வைத்தனர். துரியோதனன் இவர்களை வெளிப்படுத்த முயலும் போது, வன்னி மரப் பொந்தில் இருக்கும் ஆயுதங்களை எடுத்து போரிட்டு கெளரவர்களை வென்றான் அர்ஜுனன். அந்த போரில் வெற்றி பெற்ற நாளே விஜய தசமி என்றும் கூறப்படுகிறது.

இராமாயணத்தில், போருக்கு புறப்படும் முன்பு இராமன் வன்னி மரத்தை வலம் வந்து வழிபட்டு, போருக்கு சென்றதாக உள்ளது.

இலக்கியங்களில் வன்னி மரம்

தமிழ் இலக்கியங்களில் பதிற்றுப்பத்து "மன்னர் மறைத்த தாழி, வன்னி மன்றத்து விளங்கிய காடே" என்றும் மணிமேகலை "சுடலை நோன்பிகள் ஒடியா வுள்ளமொடு மடைதீ யுறுக்கும் வன்னி மன்றமும்" என்றும் குறிப்பிடுகிறது.

“வம்பார் கொன்றை வன்னி மத்தம் மலர் தூவி.
நம்பாவென்ன நல்கும் பெருமான் உறைகோயில்
கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும்
மொய்ம்பார் சோவை வண்பொடும் மூதுகுன்றே” 

- என தேவாரத்தில் திருஞான சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

வன்னி மர திருவிழாக்கள்

சைவம், வைணவம், அம்மன் வழிபாடு, முருகன் வழிபாடு என அனைத்து வழிபாட்டு முறைகளிலும் வன்னி மரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. புரட்டாசி திருவோண நாள் எனப்படும் விஜயதசமி நாளில், வன்னி மர திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

வைணவ தளங்களில், விஜய தசமி நாளில் பெருமாள் அம்பு எய்து அசுரனை கொல்லும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதற்காக வன்னி மரத்தின் மீது பெருமாள் அம்பு எய்வதாக கொண்டாடுகிறார்கள். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் என பல இடங்களிலும் இந்த 'வன்னி மரத்தின் மீது அம்பு எய்தும்' நிகழ்ச்சி நடக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில், முருகப்பெருமான் வன்னி மரத்தின் மீது அம்பு எய்துவதாகக் கொண்டாடப்படுகிறது.

தசரா விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மன் கோபம் கொண்டு அசுரனை அழிக்கும் நிழச்சியாக, வன்னி மரத்தின் மீது அம்பு பாய்ச்சப்படுகிறது. விஜயதசமி நாளில் துர்கை அம்மன் அசுரனை அழிக்க வேல் வாங்கும் நிகழ்ச்சி வன்னி மரத்தின் கீழ் நடப்பதாகும். அவ்வாறே, வன்னி மரத்தில் ஓடி ஒளிந்த சூரனை மகிஷாசுர மர்த்தினி குத்தி கொன்றதாகவும் கொண்டாடப்படுகிறது.

இதனை 'அம்பு போடுதல்'  'மானம்பூ (மா + அம்பு)' 'வன்னி வாழை வெட்டுதல்' என்றெல்லாம் கொண்டாடுகிறார்கள். வாழை மரத்தில் வன்னி மரக்கிளைகளை பதித்து, வாழை மரத்தை வெட்டுகிறார்கள்.

சிவன் கோவில்களிலும் பாரிவேட்டை என்கிற பெயரில் அம்பு போடும் விழாக்கள் நடக்கின்றன. (ஊரைக் காப்பதற்காக வேட்டைக்கு செல்வதையே பாரிவேட்டை என்றனர் என்றும் கருதப்படுகிறது).

தமிழகத்தின் வடமாவட்டங்களில் முதன்மை பண்பாட்டு விழாவாக நடக்கும் திரௌபதி அம்மன் விழாவில் வன்னி மரம் நடுதலும் ஒரு நிகழ்வாக உள்ளது.

"பூந்தொடை விழா'

வன்னி மரத்தின் மீது அம்பு போடுதல் ஒரு இந்து மதத் திருவிழா மட்டுமல்ல. அது மிகப் பழமையான தமிழர் திருவிழாவும் ஆகும். பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாள் போன்றே, பழந்தமிழர்களின் மற்றொரு விழா இந்த "பூந்தொடை விழா' ஆகும். பூந்தொடு அல்லது பூந்தொடை விழா என்றால் 'புதிய அம்பு தொடுக்கும் விழா' என்பதாகும். அதாவது வில்பயிற்சி தொடங்கும் நாள்.

‘வார்கழல் பொலிந்த வன்கண் மழவர்
பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்,

- என அகநானூறு (187) இதனைக் கூறுகிறது.

இவ்வாறு, புரட்டாசி திருவோண நாளில், வன்னி மரத்தில் அம்பு தொடுக்கும் விழா நெடுங்காலமாக கொண்டாடப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக, தமிழ்மன்னரின் போர்களுடன் தொடர்புடைய சமூகங்களும், மன்னர்களும் இதனை கொண்டாடியுள்ளனர். (வன்னிய மன்னர்கள், குறுநில மன்னர்கள், வன்னிய கிராமங்கள் பலவும் இந்த விழாவைக் கொண்டாடியதற்கான கல்வெட்டுகள் உள்ளன என்கிறார் வரலாற்று ஆய்வாளர் முரளி நாயகர்)

கம்பர் எழுதிய சிலையெழுபது நூல் வன்னியர்கள் விஜயதசமி நாளில் வில்லேந்தும் நிகழ்வை குறிப்பிடுகிறது. கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு, சோழ சிற்றரசனாக பல்லவ நாட்டை ஆண்ட, முதற் குலோத்துங்க சோழனுடைய தளபதி கருணாகரத் தொண்டைமானின் குலமாகிய வன்னியர் பெருமையை பாடும் நூல் சிலை எழுபது ஆகும். அந்த நூல் வன்னியர்கள் விஜயதசமி நாளில் அம்பு தொடுக்கும் நிகழ்வை குறிப்பிடுகிறது.

"சொன்மங்கலம் பொருந்தும் தொல்லுலகிற் பல்லுயிரும்
நன்மங்கலம் பெருந்தும் நான்மறையு நனிவிளங்கும்
வன்மங்கலம் பொருந்தி வளர்வனிய குலவலசர்
வின்மங்கலம் பொருந்தும் விறற்றசமி நாட்கொளினே"

வன்னிய அரசர்கள் விஜயதசமி நாளில் வில்லை கையில் ஏந்தினால், நாட்டு மக்களுக்கு ஏராளமான நன்மைகள் உண்டாகும் என்றும், கலிங்கத்தை வெற்றி கொண்ட போருக்கு விஜயதசமி நாளிதான் கருணாகர தொண்டைமான் வில்லேந்தி சென்றார் என்றும் இந்தப் பாடல் கூறுகிறது.

தமிழக தலவிருட்சம்

தமிழகக் கோவில்களில் தலவிருட்சமாக வில்வத்துக்கு அடுத்தபடியாக அதிக அளவில் காணப்படுவது வன்னி மரமே ஆகும். தமிழகத்தின் 1165 பழமையான கோவில்களில் இருக்கும் தலவிருட்சங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், 112 வகையான மரங்கள் தலவிருட்சமாக இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றுள் மிக அதிக எண்ணிக்கையாக 324 கோவில்களில் வில்வ மரம் தலவிருட்சமாக இருக்கிறது. அதற்கு அடுத்ததாக 63 கோவில்களில் வன்னி மரமே தலவிருட்சமாக இருப்பதாக கணக்கெடுப்பு கூறுகிறது.
தஞ்சை பெரிய கோவில், விருத்தாச்சலம், திருவான்மியூர், திருக்காட்டுப்பள்ளி, திருப்பூந்துருத்தி என பல இடங்களில் வன்னி மரம் தல விருட்சம் ஆகும்.

கங்கைகொண்ட சோழபுரத்தின் தலருட்சம் வன்னி மரம்தான். சோழர்கள் தலைநகரம் அங்கு அமைக்கப்பட்டு, கங்கைகொண்ட சோழபுரம் என்று பெயர் சூட்டும் முன்பு அதன் பெயர் வன்னியபுரம் ஆகும். இன்றும் தல விருட்சமாக, கங்கைகொண்டசோழபுரம் கோவிலில் வன்னி மரம் உள்ளது.

வெளி மாநிலங்களில் வன்னி மரம்

பண்பாடு மற்றும் வரலாற்று ரீதியில் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகா, ஒரிசா, மராட்டியம், இராஜஸ்தானம் ஆகிய பகுதிகளுக்குள் பலவிதமான ஒற்றுமைகள் இருக்கின்றன. அவற்றுள் வன்னி மரமும் ஒன்றாகும். இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் மாநில மரமாக இருப்பது வன்னி மரம் ஆகும்.

(பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் மரமாக வன்னி மரம் உள்ளது. துபை, அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்தில் வன்னி மரம் தேசிய மரம் ஆகும். அங்கு வன்னி மர வளர்ப்பு ஊக்குவிக்கப்படுகிறது. வன்னி மரத்தை வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது)

இராஜஸ்தான்

இராஜஸ்தான் மாநிலத்தில் சம்பு ஈஸ்வரர் எனும் சத்திரிய மகரிஷியால், அன்னிய படையெடுப்பை தடுப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட பிஷ்னோய் சாதியினர் மரங்களை வெட்டக்கூடாது என்பதை மரபாகக் கொண்டவர்கள். அவர்களது தெய்வீக மரம் வன்னி மரம் ஆகும்.

1730 ஆம் ஆண்டு, மன்னரின் உத்தரவின் பேரில் வன்னி மரங்கள் வெட்டப்பட்ட போது, ஒவ்வொரு மரத்துக்கும் ஒவ்வொருவர் உயிரைக் கொடுப்பது என்று சபதம் ஏற்று, 363 பேர் வெட்டப்படும் மரங்களைக் கட்டிப்பிடித்து உயிர்த்தியாகம் செய்தனர். பின்னர் மன்னர் மன்னிப்பு கேட்டு பிஷ்னோய்கள் பகுதிகளில் வன்னி மரங்களை வெட்ட தடை செய்தார். அதன் தொடர்ச்சியாகவே இன்றைக்கும் இராஜஸ்தான் மாநிலத்தின் மரமாக வன்னி மரம் உள்ளது.
பிஷ்னோய் சாதியினரின் போராட்டம்
உலகின் மிகப்பழமையான சுற்றுச்சூழல் போராட்டமாகவும் பிஷ்னோய் சாதியினரின் போராட்டம் கருதப்படுகிறது. பிற்காலத்தில் உருவான, சிப்கோ இயக்கம் எனும் சுற்றுச்சூழல் போராட்டத்துக்கு வழிகாட்டி பிஷ்னோய் போரட்டமே ஆகும். (பிஷ்னோய்கள் உயிர்த்தியாகம் நடந்த நாள் புரட்டாசி மாதம் பத்தாம் நாள் ஆகும். இது புரட்டாசி திருவோண நாளுடன் ஒத்துப்போவது வியப்பான ஒற்றுமை ஆகும்)

ஆந்திர மாநிலம்

ஆந்திர மாநிலத்தில் வன்னி மரம் புனித மரமாகக் கருதப்பட்டு, வணங்கப்படுகிறது. தெலுங்கில் 'ஜம்மிச் செட்டு' என்கிறார்கள். பெரியவர்களிடம் வன்னி இலைகளைக் கொடுத்து, அதனை தலையில் அட்சதையாக தூவச் செய்து, ஆசீர்வாதம் பெறுவது ஆந்திர மாநிலத்தின் வழக்கம் ஆகும்.

மராட்டிய மாநிலம்

மராட்டிய வீரர்கள் வன்னி மரத்தை வழிபட்டு அதன் இலைகளைப் பிரசாதமாகப் பெற்று போருக்குச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.

கர்நாடக மாநிலம்

கர்நாடகத்தில் மைசூர் தசராவின் முக்கிய நிகழ்வாக வன்னி மர வழிபாடு உள்ளது. மகிஷாசுரனை வதம் செய்யும் இடம் வன்னி மண்டபம் என்றும் வன்னி மரம் என்றும் அழைக்கப்படுகிறது (கன்னடத்தில் பன்னி மண்டப், பன்னி மரா)

வன்னியர்களும் வன்னி மரமும்

வன்னி மரமும் வன்னியர்களும் பிரிக்கமுடியாத பந்தத்தைக் கொண்டிருக்கிறார்கள். தங்களது சாதித் தொன்மம் ஆன வன்னிய புராணம், வீரவன்னிய மகராஜன் வன்னி மரத்தின் யாக நெருப்பில் இருந்து தோன்றியதாகக் கூறுவதாலும், வன்னி மரமே நெருப்பின் வடிவமாக இருப்பதாலும், திரவுபதி வழிபாட்டில் - பாண்டவர்கள் ஆயுதங்களை வைக்கும் இடமாக வன்னிமரம் இருப்பதாலும், வன்னி மரத்தை வன்னியர்கள் புனிதமானதாகக் கருதியுள்ளனர்.

(கி.பி. 642 ஆம் ஆண்டில் பாதாமி மீது போர்தொடுத்து, புலிகேசி மன்னனை தோற்கடித்தான் நரசிம்மவர்ம பல்லவன். அதன் அடையாளமே வன்னிய புராணம் ஆகும். வீர வன்னிய ராஜன் என்பதும், திரவுபதி அம்மன் வழிபாட்டில் உள்ள போத்துராஜா என்பதும் - நர்சிம்மவர்ம பல்லவனே ஆகும். மாமல்லபுரத்தில் உள்ள கல்வெட்டுகள் பல்லவர்களை போத்துராஜா என்றே குறிப்பிடுகின்றன).

ஏற்கனவே குறிப்பிட்டது போல, புரட்டாசி திருவோண நாளில், பூந்தொடை விழா எனும் வன்னி மரத்தின் மீது புதிதாக அம்பு தொடுக்கும் விழாவை வன்னியர்கள் கொண்டாடி வந்துள்ளனர்.

வன்னியர்கள் தங்கள்து குலதெய்வத்தைப் போன்று வன்னி மரத்தைக் கருதியுள்ளனர். திருமணத்தின் போது வன்னி மரத்தின் கிளையை முதல் பந்தல்காலாக பயன்படுத்த வேண்டும் என்பது வடார்க்காடு பகுதி வன்னியர்களின் பழக்கம் என எட்கர் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார். வன்னியர் மரணம் அடைந்தால் தகனத்திற்கு வன்னி மரக் கட்டைகளை பயன்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது.

வன்னி மரம் எனும் மாபெரும் மரபு

மொத்தத்தில், வன்னி மரம் என்பது நெருப்பு, வீரம், வெற்றி ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளிலும், பல நம்பிக்கைகளிலும், பல மன்னர்களின் மரபுகளிலும் வன்னி மரம் போருடன் தொடர்புடையதாக இருந்துள்ளது. சமூகங்கள் அளவில் தமிழ்நாட்டில் வன்னியர்களும் இராஜஸ்தானின் பிஷ்னோய் சமூகமும் நேரடியாக வன்னி மரத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
கனடா நாட்டில் வன்னி தெரு 
(வன்னியர்கள் என்கிற பெயரும், வன்னி மரமும் ஒன்றோடொன்று இணைந்து இருப்பதால் - ஈழத்துக்கு சென்ற வன்னியர்கள் ஆட்சி செய்த பகுதி வன்னி நாடு என்றும் வன்னிக்காடு என்றும் அழைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2013 ஆம் ஆண்டில் கனடா நாட்டில் ஈழத்தமிழர்கள் வாழும் ஒரு பகுதிக்கு வன்னி தெரு என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது).

வியாழன், அக்டோபர் 13, 2016

ரெமோவும் ஆனந்த விகடனும்: தறுதலைக் காதலை எதிர்க்கும் தறுதலை!

தறுதலைக் காதலை போற்றி வளர்க்கும் 'ரெமோ' படத்தின் மீது பாய்ந்து விழுந்து குதறியிருக்கிறது ஆனந்த விகடன். அந்த திரைப்படம் குறித்த விமர்சனத்தில் "இது மாதிரி படங்கள் தமிழ் சினிமாவுக்கு மட்டும் அல்ல, சமூகத்துக்கே கேடு!" என்று பொங்கியிருக்கிறது விகடன் விமர்சனக் குழு!

இந்த விமர்சனத்தில்:

ஒரு பெண்ணைக் காதலிக்கவைக்க, என்னவும் செய்யலாம்; எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம்; பின்னாலேயே திரிந்து டார்ச்சர் கொடுக்கலாம். அந்தப் பெண்ணே `எனக்கு இந்த லவ்ல விருப்பம் இல்லை, பின்னால் வராதே!' என விரட்டினாலும் விடவே கூடாது. அவரை ஐ லவ் யூ சொல்லவைக்க, எந்த லெவலுக்கும் இறங்கலாம். இதுதான் இந்தப் படம் சொல்லும் செய்தி. 

படம் நெடுக நிச்சயதார்த்தம் ஆன பெண்ணாக வரும் கீர்த்தி சுரேஷ்… தூத்துக்குடி பிரான்சினாவை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார். 

`பெண் என்பவள், இலக்குவைத்து அடையக்கூடிய பொருள்’ என்பதே இயக்குநர் முன்வைக்கும் அழுத்தமான மெசேஜ். 

- என்கிறது ஆனந்த விகடன்.

இடிப்பது பெருமாள் கோவில்: படிப்பது ராமாயணமாயனமா?

தமிழ்நாட்டின் தறுதலைக் காதல் நாடகங்கள் அனைத்துக்கும் வக்காலத்து வாங்கிவந்தது இதே விகடன் கும்பல் தான்.

"தருமபுரி"

தருமபுரி சம்பவத்தின் போது - திருமண வயதை அடையாத 19 வயது நபரின் தறுதலை திருமணம் தான் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதை ஒருபோதும் ஒத்துக்கொள்ளவில்லை விகடன். மாறாக, 19 வயது சிறுவனின் காதல்தான் புரட்சிகரமான, புனிதமான, வரலாற்று சிறப்பு மிக்க காதல் என்று கொண்டாடியது விகடன். இதுபோன்ற குழந்தைகளின் சாதி ஒழிப்பு காதலை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று பிரச்சாரம் செய்தது விகடன் கும்பல்.

"நுங்கம்பாக்கம்"

இன்னுமொரு தறுதலை - நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காதலிக்க மறுத்த பெண்ணை முகத்திலேயே வெட்டிக்கொன்றான். அந்தக் கொடியவன் பின்னர் சந்தேகமான முறையில் மரணமடைந்தான். சிலர் அது சிறையில் நடந்த கொலை என்றனர். பிரேத பரிசோதனை செய்த 'எய்ம்ஸ்' மருத்துவர் - அவன் கொலைசெய்யப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என்றார்.

அந்த தறுதலைக் காதல் கொலைக்காரனை தியாகியாக்கி, கவிதை வாசித்தது விகடன்.
கொலைகாரன் ராம்குமாரை புகழ்ந்து  ஜூனியர் விகடனில் வெளியான பழனிபாரதி கவிதை

இப்படி, சாதி ஒழிப்பு போர்வையில் தறுதலைக் காதலுக்காக அல்லும் பகலும் அயராது உழைக்கும் விகடன் கும்பல்தான் - இப்போது தறுதலைக் காதல் திரைப்படத்துக்கு எதிராக கொந்தளித்துள்ளது.

"படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவிலா?" என்பார்கள், ஆனால், "பெருமாள் கோவிலை இடிப்பதையே" முழுநேரத் தொழிலாகக் கொண்ட விகடன் கும்பல் - இப்போது "ராமயணம் படிப்பது" கொடுமையாக இருக்கிறது! 
-----------------------------------------------
விகடன் கும்பலின் விநோத கூத்து!

ஆனந்த விகடன் இதழில் ரெமோ திரைப்படத்துக்கு எதிராக கொந்தளித்திருக்கும் அதே விகடன் கும்பல் - அதன்  விகடன்.காம் இணைய பக்கத்தில் அதே ரெமோ படத்தை போற்றிப் புகழ்ந்திருக்கிறது! 

"லாஜிக் மீறல்களை மறக்கடிக்கும் அந்த மேஜிக்! - ரெமோ விமர்சனம் #REMO" - எனும்  விகடன்.காம் இணைய தளவிமர்சனத்தை இங்கே காண்க (இங்கே சொடுக்கவும்) 
-----------------------------------------------
இணைப்பு: ஒருதலை காதலா? தறுதலை காதலா? - மருத்துவர் ச. இராமதாசு, தினமணி கட்டுரை (இங்கே சொடுக்கவும்)

புதன், அக்டோபர் 12, 2016

கிணற்றுத் தவளை திருமாவளவனுக்கு, மருத்துவர் அன்புமணி இராமதாசின் சாதனைகள் புரியுமா?

கிணற்றுத் தவளை திருமாவளவனுக்கு, மருத்துவர் அன்புமணி இராமதாசின் சாதனைகள் புரியுமா?
கிணற்றுத் தவளையும், கண்ணை மூடிய பூனையையும்
கலந்து செய்த கலவை திருமாவளவனுக்கு அன்புமணி 
இராமதாசின் அகண்ட மருத்துவ சாதனைகள் புரியுமா?

தமிழ்நாட்டில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று மருத்துவர் அய்யா அவர்கள் விருப்பம் தெரிவித்திருக்கிறார். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களிடம் நலம் விசாரித்து வந்திருக்கிறார். இது ஒருபுறம்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர்களாக இருப்பவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனைகளிலேயே மருத்துவம் பெறும் நிலை உள்ளதே.... இதை மாற்றும் வகையில் உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனை ஒன்றை அமைக்க 50 ஆண்டு கால திராவிட ஆட்சிகள் தவறி விட்டன... இனியாவது அத்தகைய மருத்துவமனை ஒன்றை அமைக்க வேண்டும் என்று மருத்துவர் அய்யா அவர்கள் இன்று (11.10.2016)  அறிக்கை வெளியிட்டிருந்தார். இது நல்ல நோக்கத்துடன் விடுக்கப்பட்ட ஓர் அறிவுரை.

மருத்துவர் அய்யாவின் இந்த அறிக்கை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கருத்துக் கேட்டுள்ளனர். தமிழகத்தில் உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனை இல்லை என்பது உண்மை. அந்த உண்மையைத் தான் மருத்துவர் அய்யா அவர்கள் கூறியிருக்கிறார். அதனால் அந்த கேள்விக்கு, "அய்யா அவர்கள் கூறியது சரி தான்’’ என்பதைத் தவிர வேறு பதில் இல்லை.

ஆனால், அய்யா அவர்கள் கூறிய கருத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதையே கொள்கையாக கொண்டவர்களால் அப்படி கூற முடியாது அல்லவா? அதனால் ஏட்டிக்குப் போட்டியாக பதில் கூறும் நோக்குடன்,‘‘அன்புமணி இராமதாசு மத்திய அமைச்சராக இருந்த போது தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை அமைத்திருக்கலாமே... அவர் ஏன் செய்யவில்லை’’ என்று எதிர்கேள்வி எழுப்பியிருக்கிறார் திருமாவளவன். அவருடைய அறிவுத் திறன் புல்லரிக்க வைக்கிறது.

மருத்துவர் அய்யா அவர்கள் விமர்சித்தது திராவிடக் கட்சிகளின் அரசை.... அவர்கள் இப்படி பதில் கூறியிருந்தாலாவது ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், தேசியம், திராவிடம் (மதிமுக தவிர்த்த) இரண்டையும் ஒழிப்போம் என்று கூறி புதிய அணி திரட்டிய திருமாவளவன் ஏன் திடீரென திராவிடக் கட்சிகளுக்கு வக்காலத்து வாங்கி இப்படி ஒரு கேள்வியை முன்வைத்திருக்கிறார்?

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் பி அணியாக செயல்பட கோடிகளை வாங்கிக் குவித்ததுடன், அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆளுங்கட்சியின் பெயிட் விருந்தினராக (Paid Guest) சென்று வந்த திருமாவளவனிடம் இதைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்? வாங்கிய காசுக்கு கூவியிருக்கிறார் ... அவ்வளவு தான் என்று தான் எடுத்துக் கொள்ள முடியும்.

சரி.... திருமாவளவன் கூவுவதெல்லாம் கூவட்டும்... அதை சரியாக கூவக்கூடாதா? மருத்துவர் அய்யா அவர்கள் வெளியிட்ட அறிக்கையை படித்திருந்தாலே அவருக்கு எல்லா உண்மையும் புரிந்து இருக்கும். ஆனால், அறிக்கையையும் படிக்காமல், முழு உண்மையையும் தெரிந்து கொள்ளாமல் வாய்க்கு வந்தபடி உளறிக் கொட்டியிருக்கிறார்.

தமிழகத்திலும், புதுவையிலும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் செய்த மருத்துவப் பணிகள் குறித்து மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கையில் விரிவாக விளக்கம் அளித்திருக்கிறார். அதன் விவரம் வருமாறு:

‘‘பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது மேற்கு மாவட்ட மக்களின் தேவைக்காக சேலத்தில் ரூ.139 கோடியில் அதிஉயர் சிறப்பு மருத்துவமனையை அமைத்துக் கொடுத்தார். மதுரையில் ரூ.150 கோடியில் எய்ம்சுக்கு இணையான மருத்துவமனை அமைக்க நிதி ஒதுக்கினார். அதைப்பயன்படுத்தி அந்த மருத்துவமனையை உலகத் தரம் கொண்டதாக அமைத்திருந்திருக்கலாம். ஆனால், முன்பிருந்த திமுக அரசும், இப்போதுள்ள அதிமுக அரசும் அவ்வாறு செய்யத் தவறி விட்டன.

எல்லா மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கும் திட்டத்தின்படி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கும் திட்டம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்டது. தமிழகத்துடன் அறிவிக்கப்பட்ட மற்ற 4 மாநிலங்களில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுவிட்ட நிலையில், தமிழகத்தில் இடம் கூட இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இதற்காக தமிழகம் தேர்வு செய்து வழங்கிய 5 இடங்களையும் மத்திய அரசு நிராகரித்து விட்ட நிலையில் புதிய இடத்தை தேர்வு செய்து வழங்க தமிழக அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மருத்துவத்துறை வளர்ச்சியில் தமிழக அரசின் அக்கறை என்ன? என்பதற்கு இதுதான் உதாரணமாகும்’’.

அதுமட்டுமல்ல.... அண்டை மாநிலமான புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனை மேம்படுத்தப்பட்டது குறித்தும் மருத்துவர் அய்யா அய்யா அவர்கள் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்கள்....

‘‘புதுச்சேரியில் 1964-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜிப்மர் எனப்படும்  ஜவகர்லால் நேரு பட்டமேற்படிப்பு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு  மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டதுடன், ரூ.1500 கோடி செலவில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

அதன்பயனாக, 52 ஆண்டு வயதான ஜிப்மர் நாட்டின் மூன்றாவது தலைசிறந்த மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ நிறுவனமாக உருவாகியுள்ளது. மருத்துவ வசதிகள் மற்றும் தரமான சேவையில் தமிழகத்தில் உள்ள எந்த ஒரு தனியார் மருத்துவமனையும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை நெருங்கக்கூட முடியாது’’

---- இதையெல்லாம் படிக்காமல் தான் திருமாவளவன் உளறியிருக்கிறார்.

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர். அவர் மத்திய அரசின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தான் மருத்துவமனை கட்டவோ, இருக்கும் மருத்துவமனையை மேம்படுத்தவோ முடியும். அதனடிப்படையில் அவர் புதுவையில் ஜிப்மர் மருத்துவமனையை மேம்படுத்தியிருக்கிறார். ஹரியானாவில் எய்ம்ஸ்சின் இரண்டாவது வளாகத்தை அமைத்திருக்கிறார். 

சண்டிகரில் உள்ள பட்டமேற்படிப்பு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை மேம்படுத்தியிருக்கிறார். வடகிழக்கு மாநில மக்களின் வசதிக்காக மேகாலயாத்  தலைநகர் ஷில்லாங்கில் இந்திரா காந்தி வடகிழக்கு மண்டல சுகாதாரம் மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தை (North Eastern Indira Gandhi Regional Institute of Health & Medical Sciences - NEIGRIHMS) விரிவுபடுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் மருத்துவமனை அமைப்பதற்கான நிதியை மட்டுமே அவரால் ஒதுக்கீடு செய்ய முடியும். நேரடியாக குதித்து வந்து மருத்துவமனை அமைக்க முடியாது. அது மாநில அதிகாரத்தில் குறுக்கிடுவதாக அமைந்து விடும். அதன்படி மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஒதுக்கிய நிதியில் சேலத்தில் 139 கோடியில் அதிஉயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டிருக்கிறது.  சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு 100 கோடி ஒதுக்கினார். இன்னமும் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டே இருக்கின்றன.

மதுரையில் ரூ.150 கோடியில் எய்ம்ஸ்க்கு இணையான  மருத்துவமனை அமைக்க அன்புமணி இராமதாஸ் ஒதுக்கிய நிதி இன்னும் பயன்படுத்தப்படாமல் கிடக்கிறது. அன்புமணி இராமதாஸ் வகுத்துக் கொடுத்த  திட்டத்தின்படி திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய இடங்களிலும் இத்தகைய மருத்துவமனைகளை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கெல்லாம் மேலாக ரூ.1000 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இவற்றையெல்லாம் தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதற்காக தமிழக அரசை விமர்சிக்க துப்பில்லாத திருமாவளவன் மருத்துவர் அன்புமணி இராமதாசிடம் வினா எழுப்பியிருக்கிறார். மக்களவை உறுப்பினராக இருந்த திருமாவுக்கு இவை தெரிந்திருக்க வேண்டும். ஆனால் பாவம் எதுவும் தெரியவில்லை.

கிணற்றுத் தவளைக்கு கிணற்றைத் தவிர வேறு எதுவும் தெரியாது. கண்ணை மூடிய பூனைக்கு இருட்டைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அப்படி இருக்கும் போது இந்த இரண்டும் கலந்த கலவையான திருமாவளவனுக்கு மட்டும் என்ன தெரியும்... அதன் வெளிப்பாடு தான் இந்த உளறல். போய்த் தொலையட்டும்....! விட்டுத் தள்ளுங்கள்!!

வெள்ளி, அக்டோபர் 07, 2016

கனடா நாட்டில் தமிழ் பண்பாட்டு மாதம்: நாடாளுமன்றம் தீர்மானம்


ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தை, கனடா நாட்டில் தமிழ் பண்பாட்டு மாதமாக (Tamil Heritage Month) கொண்டாட வேண்டும் என அந்த நாட்டின் நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 

இது தொடர்பாக, கேரி ஆனந்தசங்கரி MP கொண்டுவந்த தீர்மானம், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் புதன்கிழமை (5.9.2016) நிறைவேற்றப்பட்டது.

ஆளும் லிபரல் கட்சியை சேர்ந்த கேரி ஆனந்தசங்கரி கொண்டுவந்த இந்த தீர்மானத்துக்கு கன்சர்வேட்டிவ் கட்சி, நியூ டெமாக்ரடிக் கட்சி, பசுமைக் கட்சி ஆகிய கட்சிகளும் ஆதரவளித்தன.
(கேரி ஆனந்தசங்கரி பசுமைத் தாயகத்தின் பிரதிநிதியாக 2009 ஆம் ஆண்டு முதல் ஜெனீவா - ஐநா மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) பங்குபெற்றவர். கனடா நாடாளுமன்றத் தேர்தலில், ஐநாவில் பாடுபட்டதை கனடிய ஈழத்தமிழர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார். அவர் வெற்றிக்கு அதுவும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.)

தமிழ் பண்பாட்டு மாத தீர்மானம்

Tamil Heritage Month: That, in the opinion of the House, the government should recognize the contributions that Tamil-Canadians have made to Canadian society, the richness of the Tamil language and culture, and the importance of educating and reflecting upon Tamil heritage for future generations by declaring January, every year, Tamil Heritage Month.

(தைப்பொங்கல் கொண்டாடப்படும் தை மாதத்தை - ஜனவரி - தமிழ் பண்பாட்டு மாதம் குறிக்கிறது)

கனடா நாட்டின் நாடாளுமன்றத்தில் தமிழ் பண்பாட்டு மாத தீர்மானம் நிறைவேற்றம், கேரி ஆனந்தசங்கரி MP உரை - Youtube காணொலி: https://youtu.be/7CvaXtKzZ2w

வியாழன், அக்டோபர் 06, 2016

சொந்த சாதியினருடன் - தேசிய இனத்துக்காக சண்டையிடுவது சரிதானா?

தமிழ்த் தேசியம் என்கிற கருத்தியலை வைத்தும், சில நேரத்தில் மதத்தை வைத்தும் ஒரே சாதிக்குள் மோதல்கள் நடப்பதை பார்க்க நேர்கிறது. 

ஒவ்வொரு மனிதனும் தாம் நம்புகிற கருத்தைக் கொண்டிருக்கவும் அதனை வெளிப்படுத்தவும் உரிமை உண்டு. ஆனால், முடிந்தவரை - அதுவும் தேவையற்ற சூழலில் - மாற்றுக்கருத்து கொண்டவர்களை புண்படுத்தும் வகையில் கருத்துகளை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது.

அடையாள அரசியல் எனும் பேராபத்து!

மனிதர்கள் அடையாளங்களுடன் வாழ்கின்றனர். சில அடையாளங்கள் பிறப்பினால் வருகின்றன. சில அடையாளங்கள் நம்பிக்கையால் வருகின்றன. ஒரே நேரத்தில் ஒரே மனிதன் பலவிதமான அடையாளத்துடன் வாழ்கிறான்.  அதாவது, சாதி என்கிற அடையாளம் பிறப்பால் வருகிறது, மொழியின் அடையாளம் தன்னுடைய பெற்றோர் பேசிய மொழியால் வருகிறது. மத அடையாளம் அவரவர் நம்பிக்கையால் வருகிறது. ஒரே நேரத்தில் ஒரே மனிதன் இப்படி பல அடையாளங்களை கொண்டிருக்கிறான்.

மனிதர்கள் அடையாளங்களை கைவிட்டு வாழும் நிலையோ - அல்லது ஒருவர் ஒரு அடையாளத்துடன் மட்டும் இருக்கும் நிலையோ, இனி ஒருகாலத்திலும் வரவே வராது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் சாதி, மதம், இனம், மொழி, அரசியல் கருத்து போன்ற அடையாளங்களில் எந்த ஒன்றையும் ஒழித்துவிடும் சாத்தியம்,  நம்முடைய வாழ்நாளில், இல்லை.

சில நேரங்களில், 'இந்த அடையாளத்துடன் இருப்பவர்கள் மட்டும்தான் இருக்க வேண்டும், இதற்கு எதிரான அடையாளம் ஒழிய வேண்டும்' என்கிற கருத்து பேராபத்தில் முடிந்து விடுகிறது. ஜெர்மனியில் யூத இனம் இருக்கக் கூடாது என்கிற கருத்து பல லட்சக்கணக்கான மக்களை கொன்றது. கம்போடியாவில் அடையாள அரசியலே கூடாது என்று சொன்ன, கம்யூனிஸ்டுகளின் கலாச்சார புரட்சி பல லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தது.

இன்றைய உலகின் பல போர்கள், பயங்கரவாதம், இன அழிப்பு என எல்லாமே இத்தகைய அடையாள அழிப்பின் தொடர்ச்சிதான்.

கலைந்துபோன கனவுகள்

சில காலங்களில் சில நம்பிக்கைகள் முன் வைக்கப்பட்டன. 'உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்று குரல்கொடுத்த கார்ல் மார்க்சும், லெனினும் முன்வைத்த பாட்டாளி வர்க்கம் என்கிற ஒன்று இப்போது இல்லாமலேயே போய்விட்டது. பொருள் தான் அடிக்கட்டுமானம், மற்றதெல்லாம் மேல் கட்டுமானம்தான் - எனவே, உழைக்கும் வர்க்கம் தனது அடையாளத்தைக் கடந்து ஒன்றுபடும் என்கிற கருத்து படுதோல்வி அடைந்துவிட்டது.

இன்னொரு பக்கத்தில், ஒரு நாட்டின் மக்கள் எல்லோரும் ஒரே குடிமைச் சமூகமாக இருப்பார்கள், என்கிற ஜனநாயக நம்பிக்கையும் தகர்க்கப்பட்டுவிட்டது. இப்போது எல்லா நாடுகளும் பல சமூகங்களின் கூட்டமைப்பாக மட்டுமே இருக்கின்றன.

இந்தியாவிலும் கூட, 'மதத்தை அழிப்போம், சாதியை ஒழிப்போம்' என்று கனவு கண்டனர். அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் கண்ட அந்த கனவு, வெரும் கானல் நீர் என்பது தெளிவாகிவிட்டது.

மொத்தத்தில் இன்றைய உலகில், ஒவ்வொரு நாடும் பல்வேறு அடையாளங்களை பிரதிபளிக்கும் பல சமூகங்களின் கூட்டமைப்பாக மட்டுமே உள்ளது. எனவே, ஒவ்வொரு மனிதனும் சம உரிமைப் படைத்தவன் என்பது மட்டும் போதுமானது அல்ல. மாறாக, ஒவ்வொரு 'அடையாளக் குழுவும்' சம உரிமைப் படைத்தது என்கிற நிலையே இன்றைய முதன்மை அரசியல் கருத்தாகும்.

அடையாளத்தின் அரசியல்

அரசியல் என்பது அதிகாரத்தை நோக்கியது. எந்த ஒரு அடையாளமும் அதன் உரிமைகள் அங்கீகரிக்கப்படும் நிலையில், அதிகாரமும், வளமும் நியாயமாக பகிரப்படும் நிலையில் - அடையாள மோதல் தவிர்க்கப்படலாம். மாறாக, ஒரு அடையாளத்தை சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்துவோராகவும் மற்றொரு அடையாளத்தை சேர்ந்தவர்கள் ஒடுக்கப்படுவோராகவும் மாறும்போது - மனிதர்கள் ஒடுக்குபவர்களாகவும், ஒடுக்கப்படுபவர்களாகவும் பிரிந்து மோதிக்கொள்வது இயற்கையானது.
எந்த அடையாளம் தாக்கப்படும் நிலைக்கு செல்கிறதோ - அப்போது அந்த அடையாளம் முதன்மை பெருகிறது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளங்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் போது இது பலமுனை மோதலாகவும் மாறுகிறது. இரண்டு நபர்கள் ஒரு அடையாளத்தில் ஒன்றுபட்டு நிற்பதும், இன்னொரு அடையாளத்தில் எதிர்நிலை எடுப்பதும் இயல்பானது.

இந்திய இராணுவம் பாகிஸ்தானுக்குள் ஊடுருவி தாக்கியபோது - தமிழர்களின் கருத்தும், கன்னடர்களின் கருத்தும் ஒன்றுதான். இந்தியாவின் கிரிக்கெட் அணி, வேறொரு நாட்டுடன் மோதும் போது, தமிழர்களும் கன்னடர்களும் இந்தியா வெற்றிபெற வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். அதற்காக, காவிரியில் இரு இனமும் கரம் கோர்த்து நிற்க முடியாது.

சுவாதியை கொன்ற ராம்குமாருக்காக கொடி பிடிப்போரும், சுவாதிக்காக குரல்கொடுப்போரும் - காவிரிக்காக ஒன்றுபட்டுதான் போராடுகிறோம். அதற்காக, எல்லோரும் ஒன்றாக ராம்குமாருக்கு வீரவணக்கம் செலுத்த முடியாது.

சாதி, மொழி சார்ந்த இனம், மத நம்பிக்கைகளும் இப்படிதான். ஒருகருத்தில் ஒன்றுபட்டு நிற்போர், எல்லாவற்றிலும் ஒன்றுபட முடியாது.

மனிதனின் பல அடையாளங்கள் - எது முதன்மையானது?

ஒரு மனிதனுக்கு இருக்கும் அடையாளங்களில் எது முதன்மையானது என்பது அவ்வப்போது எதிர்கொள்ளும் சூழல், மற்றும் அவரவர் தரும் முன்னுரிமையை பொருத்தது.

இன்றைய சூழலில் சாதி, மொழி சார்ந்த இனம் ஆகிய அடிப்படைகளில் தமிழத்தில் வாழும் சமூகங்களுக்கு அச்சுறுத்தலும், சிக்கல்களும் இருக்கின்றன. (சிறுபான்மையினர் தவிர மற்றவர்களுக்கு மதம் சார்ந்த அச்சுறுத்தல் இல்லை).

இவற்றுள், 'சாதி மற்றும் மொழி சார்ந்த இனம்' - ஆகிய நிலைப்பாடுகளில் ஒன்றுக்கு எதிராக மற்றொன்றை நிறுத்தும் தேவை இம்மியளவும் இல்லை என்பதே நமது கருத்து. குறிப்பாக, தன்னுடைய சாதி சார்ந்த சிக்கல்களை முன்வைக்கிற எவரும் - தன்னுடைய மொழி சார்ந்த சிக்கல்களை மறுக்கவோ, எதிர்க்கவோ, புறக்கணிக்கவோ இல்லை (அதற்கான தேவையும் இல்லை).

மாறாக, தன்னுடைய மொழி சார்ந்த இனத்துக்காக குரல் கொடுப்பதாகக் கூறுகிறவர்கள் தான் - சாதியின் சிக்கல்களை மறுக்கிறார்கள். சாதி என்கிற அடையாளத்தையே அழித்தொழிக்க துடிக்கிறார்கள்.

'மொழியை விட்டுவிட்டு சாதியை தூக்கிப்பிடி' என்று இங்கு யாரும் சொல்லவில்லை. ஆனால், 'சாதியை விட்டுவிட்டு மொழியை துக்கிப்பிடி' என்றுதான் பலரும் சொல்கிறார்கள். இது தவறான போக்கு ஆகும்.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால் - "நாம் எல்லோரும் இலங்கையின் குடிமக்கள், இதிலிருந்து தமிழர்களை தனியாக பார்க்க வேண்டாம்" - என்று இலங்கை அரசியல்வாதிகள் சொல்வதற்கும், "நாங்கள் எல்லோரும் தமிழர்கள், எங்களை சாதிகளால் பிரிக்க வேண்டாம்" என்று சில தமிழ் அரசியல்வாதிகள் சொல்வதற்கும் பெரிதாக வேறுபாடு இல்லை.

இரண்டுமே - இனவெறி தான்.

தெருக்கூத்து எங்களின் உடல் அல்ல; உதிரம்


முக்கலைகளின் தொகுப்பாய், முச்சந்தியில் நடக்கும் மூத்த கலையே, தெருக்கூத்து. இது, இந்தியாவின் பாரம்பரிய சொத்து. தென்னகத்தில், வடக்கத்தி பாணி, தெற்கத்தி பாணி என்னும், இரு பிரிவாய், நடை, உடை, பாவனை, இசையால் பிரிந்து கிடக்கிறது. கட்டைக்கூத்து என்று, பரவலாக அழைக்கப்படும் தெருக்கூத்து தான், கதகளியின் தாய் என்கின்றனர், கலை ஆய்வாளர்கள். விருந்தில் வாழை இலை போல், திருவிழா துவங்கி தெருவிழா வரை, கூத்து தான் முக்கிய அம்சமாய் இருந்தது ஒருகாலத்தில். ஆறுகள், வாய்க்காலாய் சுருங்குவது போல், கைக்குள் இணையம் வந்து விட்ட நிலையில், தெருக்கூத்து ரசிகர்களின் எண்ணிக்கையும் சுருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (2.9.2016), சி.ஐ.டி.நகர், தக்கர்பாபா வித்யாலயாவில் நடந்த விதை சத்தியாகிரகத்தில், இரண்டு தெருக்கூத்து கலைஞர்கள், பார்வையாளர்களை கவர்ந்தனர். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் வயது வேறுபாடு இல்லாமல், அந்த கலைஞர்களுடன் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.

உத்திரமேரூர், இளநகரைச் சேர்ந்த சேகர் என்ற கூத்துக் கலைஞரிடம், தெருக்கூத்து பற்றி கேட்டபோது, ''தெருக்கூத்து, எங்களின் உடல் அல்ல; உதிரம். அது, எங்களை எங்கெங்கோ அழைத்துச் செல்கிறது. எங்களை, கிருஷ்ணனாகவும், தருமனாகவும் ரசிகர்கள் போற்றுவர்; அதேநேரம், துரியோதனன் வேடத்தில் துாற்றுவர். வேடமிட்ட பின், நாங்கள் நாங்களே அல்ல என்பதை உணர்ந்துள்ளோம்,'' என்றார், தன் நினைவுகளை மீட்டெடுத்து.
அவர் அருகில் இருந்த பூபதி தொடர்ந்தார் -

வினாயகர் அருளல், அபிமன்யு சண்டை, கிருஷ்ணன் துாது, அறவாண் களபலி என, பல்வேறு குட்டிக்கதைகளை நாங்கள் கூத்தில் நிகழ்த்துவோம். மகாபாரதம் மட்டும், 20 இரவுகள் நடத்துவோம். ராமாயணம் கதையும் எங்கள் கூத்தில் உண்டு. அம்மன் கதைகள், கண்ணன் பிறப்பு உள்ளிட்ட கதைகளும் எங்கள் கூத்தில் இடம்பெறும். கூத்து பொதுவாக, தை மாதம் துவங்கி, ஆனி மாதம் வரை நடக்கும்.இவ்வாறு, கூத்தின் கதை மற்றும் காலம் பற்றி பூபதி விவரித்தார்.
அர்ஜுனன் தபசு

தெருக்கூத்து.காம்' ( http://therukoothu.com ) என்ற, இணையப்பக்கத்தை நிர்வகித்து வரும், சுரா சுரேஷ் கூறியதாவது:

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட வட மாவட்டங்களில் மட்டும், ரசிகர்களால் விரும்பப்படும் கலையாக இது உள்ளது. இது, முழுக்க முழுக்க, தெருக்களில் ஆடப்படும் கலை. இதில், ஆர்மோனியம், தபேலா, முகவீணை ஆகிய வாத்தியங்கள் மட்டும் இடம்பெறும்.

கலைஞர்கள் பெரும்பாலும், மைக் இல்லாமலேயே, மிகவும் சத்தமாக பேசி, பாடுவர். பழங்காலத்தில், இந்த கலையில் பெண்கள் இருந்ததில்லை. தற்போது, பல்வேறு குழுக்களில், பெண்களும் இந்த கலைகளை கற்றுக்கொண்டு, பிரமாதமாக கலையை வெளிப்படுத்துகின்றனர்.
இந்த கலைஞர்கள், விறைப்பான பாவாடைகள், கல்யாண முருங்கை கட்டையிலிருந்து செய்யப்பட்ட ஆபரணங்கள், அடர் வண்ணங்களில் தங்களை அலங்கரித்துக் கொள்வர். ஒருவர், ஒரு கதாபாத்திரத்தை ஏற்க, குறைந்தது ஒரு மணி நேரம் வரை ஆகும். 15க்கும் மேற்பட்ட கலைஞர்கள் உள்ள ஒரு குழுவை, வாத்தியார் என்பவரே வழி நடத்துவார்.
பெரும்பாலும், கிருஷ்ணன் கோவில், திரவுபதி அம்மன் கோவில்களில், இந்த கலைகள் நடத்தப்படும்.

பல்லவர் காலத்தில், தொண்டை மண்டலத்தில், வைணவத்தை பரப்பவும், வீரர்களை எழுச்சியுடன் வழி நடத்தவும், மகாபாரதம், ராமாயணக் கதைகளை சொல்ல தெருக்கூத்து வளர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. வில்வளைப்பு, திரவுபதி கல்யாணம், சுபத்ரை கல்யாணம், ராஜசூயயாகம், துகில் உரித்தல், அர்ஜுனன் தபசு, குறவஞ்சி, கீசகவதம், கிருஷ்ணன் துாது, அபிமன்யூ போர், கர்ண மோட்சம், பதினெட்டாம் போர் ஆகியவை, மகாபாரத கூத்துக்கள் ஆகும். ராமாயணத்தில், ராமர் பட்டாபிஷேகம், பக்த அனுமான், சீதா கல்யாணம் ஆகியவையும் இடம்பெறும்.
துரியோதனன் படுகளம்

இவ்வாறான புராண கதைகள் மட்டுமின்றி, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதைகளிலும் இவர்கள் நடிப்பதுண்டு. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள், இறப்பு சடங்குகளிலும், அதற்கேற்றவாறு கூத்தாடுவர்.

தெருக்கூத்து கலைஞர்களிடம், போதிய படிப்பறிவு இல்லை. அதனால், கூத்து நடக்காத நாட்களில், கூலி வேலைக்கு செல்வர். அவர்களுக்கான அரசு உதவிகள் கிடைக்க உதவுவதோடு, அக்கலையை ஆவணப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன்.

தற்போது, அழிந்து வரும் இக்கலையை வளர்க்க, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில், ஒரு மணி நேரம் நிகழ்த்துவதன் மூலம், அக்கலைஞர்களை காக்கலாம். காரணம், நம் மண்ணின் கலை, நம் கண் முன் அழியக்கூடாது. இவ்வாறு, அவர் பேசினார். தொடர்புக்கு: 96264 62802, 72992 12345

(இச்செய்தி தினமலர் நாளிதழின் படைப்பு - நன்றி: தினமலர் 4.9.2016)

குறிப்பு: "பல்லவர் காலத்தில், தொண்டை மண்டலத்தில், ...வீரர்களை எழுச்சியுடன் வழி நடத்தவும் ...தெருக்கூத்து வளர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது" - என்கிற இந்த தினமலர் செய்தியின் பின்னணியை அறிய, இந்த இணைப்பை காண்க: http://arulgreen.blogspot.com/2016/09/Vatapi-Ganapati.html

செயல்பாட்டுக்கு வந்தது பாரீஸ் காலநிலை ஒப்பந்தம்: உலகை காப்பாற்ற 50 : 50 வாய்ப்பு!


உலகின் சுற்றுச்சூழலைக் காக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்துக்கு (The Paris Climate Agreement) இந்தியா ஒப்புதல் அளித்தது. இந்தியாவின் ஒப்புதலைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்புதல் அளித்தது. இதன் காரணமாக, 24 ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட, ஐநா காலநிலை உடன்படிக்கை செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.

பாரிஸ் ஒப்பந்தத்தின் பின்னணி

புவி வெப்பம் அதிகரித்து வருவதையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் தடுப்பதற்காக 1992 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஐநா காலநிலை பணித்திட்ட பேரவை (United Nations Framework Convention on Climate Change - UNFCCC) மூலமாக உலகநாடுகள் 23 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. முடிவில் 2015 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கூடிய ஐநா காலநிலை மாநாட்டில் (COP21)  'பாரிஸ் காலநிலை உடன்படிக்கை' (Paris Climate Agreement) உலகின் 195 நாடுகளால், டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி ஒருமனதாக ஏற்கப்பட்டது.

நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களை மிதமிஞ்சி பயன்படுத்தியதாலும், காடுகளை அழித்ததாலும் வளிமண்டலத்தில் மாசுக்காற்றின் அடர்த்தி அதிகமாகி, அதனால் பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்துச் செல்கிறது. பெருவெள்ளம், அதிவேக சூறாவளி, பெரும் வறட்சி, நோய்கள் அதிகரிப்பு, வேளாண்மை பாதிப்பு, கடல்வள அழிவு என எண்ணற்ற பாதிப்புகள் இதனால் அதிகமாகியுள்ளன.

இவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புவியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பை 2 டிகிரி செல்சியஸ் ஆளவுக்கு மிகாமல் மிகக்கீழாக குறைப்பது என்றும், அதற்கு மேலும் 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கீழ் குறைக்க முயற்சிப்பதாகவும் 'பாரிஸ் காலநிலை உடன்படிக்கை' கூறுகிறது. 
இந்த உடன்படிக்கையின் மூலம் பெட்ரோல், டீசல், எரிவாயு, நிலக்கரி உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

பாரிஸ் காலநிலை உடன்படிக்கையை செயல்படுத்துவதற்கான ஒப்புதலை, ஐ.நா. சபையில், அக்டோபர் 2 காந்தி பிறந்தநாளில் இந்தியா அளித்தது. அதற்கு முன்பாக, இதுதொடர்பாக மத்திய அமைச்சரவை முன்வைத்த திட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அக்டோபர் 1 ஆம் தேதி கையெழுத்திட்டார்.  

செயல்பாட்டுக்கு வந்தது ஐநா காலநிலை ஒப்பந்தம்

பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இந்தியா 2016 ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி கையெழுத்திட்டது. இதுவரை இந்த ஒப்பந்தத்தில் 191 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் கையொப்பம் (Signatories) இடுவது மட்டுமல்லாமல், அதற்கு நாடுகள் ஒப்புதல் அளிப்பது (Ratification) மிக முக்கியமான நடவடிக்கை ஆகும். உலகின் 55 நாடுகளும் (55 countries ), உலகின் மாசுக்காற்றில் 55 விழுக்காட்டிற்கு பொறுப்பான (55% global emissions) நாடுகளும் ஒப்புதல் அளித்தால் மட்டுமே - பாரிஸ் உடன்படிக்கை செயல்பாட்டுக்கு வரும். இந்தியாவின் மாசுக்காற்று அளவு 4.1 விழுக்காடு ஆகும்.

அக்டோபர் 2 ஆம் தேதிவரை, இந்தியா உட்பட ஒப்புதல் அளித்த நாடுகளின் எண்ணிக்கை 61 ஆகவும், இந்த நாடுகளின் ஒட்டுமொத்த மாசுக்காற்று அளவு 51.89 ஆகவும் இருந்தது. அதன் பின்னர், 12.1 விழுக்காடு மாசுக்காற்றுக்கு பொறுப்பான 28 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அக்டோபர் 4 ஆம் தேதி, பாரிஸ் உடன்படிக்கைக்கு ஒப்புதல் தெரிவித்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றின.

இதனைத் தொடர்ந்து, 55 நாடுகள் மற்றும் 55 விழுக்காடு மாசுக்காற்று என்கிற இரண்டு நிபந்தனைகளும் நிறைவேறியுள்ளன. இதனால், அடுத்த 30 நாட்களில் பாரிஸ் உடன்படிக்கை பன்னாட்டு சட்டமாக செயல்பாட்டுக்கு வந்துவிடும். மொராக்கோ நாட்டில் டிசம்பர் மாதம் கூடவுள்ள ஐநா காலநிலை மாநாடு (COP 22) -  இந்த உடன்படிக்கையின் தொடக்கமாக அமையும்.

இதுவொரு வரலாற்று சாதனை. பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் அதன் லட்சியமான 2 டிகிரி செல்சியஸ் வெப்பத்துக்கு கீழாக புவி வெப்பம் அதிகரிப்பதை தடுத்து நிறுத்தினால் - இப்போதைய அறிவியல் கணிப்பின் படி, உலகை காப்பாற்ற 50 : 50 வாய்ப்பு உள்ளது.

(உலகை முழுமையாக காப்பாற்ற 1.5 டிகிரி செல்சியசுக்கு கீழே போக வேண்டும். அதாவது பெட்ரோல், டீசல், நிலக்கரியை முற்றிலுமாக கைவிட வேண்டும். இனி அடுத்த போராட்டம் அதை நோக்கியதாக இருக்கும்).
படம்: 2009 ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டின் கோபன்ஹெனில் நடைபெற்ற ஐநா காலநிலை மாநாட்டில் (COP 15) நான். இந்த மாநாட்டில்தான் ஐநா காலநிலை ஒப்பந்தம் நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால், அமெரிக்காவின் அடாவடியால் 6 ஆண்டுகள் தாமதம் ஆயின. மேலும், 2015 ஒப்பந்தத்திற்காக இந்தியா அதன் உரிமைகளை விட்டுக்கொடுத்தது.)

 #ParisAgreement

செவ்வாய், அக்டோபர் 04, 2016

ஜெயலலிதாவுக்காக குழந்தைகள் சித்தரவதை: மாபெரும் மனித உரிமை மீறல்!

முதலமைச்சருக்காக நடத்தப்பட்ட வேண்டுதலில், ஏழை எளிய இளம் குழந்தைகளுக்கு கொடூரமான முறையில் அலகு குத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம்பெற வேண்டி, அதிமுக கட்சித் தொண்டர்கள் எந்தவிதமான வேண்டுதல்களை வேண்டுமானாலும் நிறைவேற்றலாம். ஆனால், சின்னஞ்சிறிய ஏழை குழந்தைகளுக்கு அலகு குத்தியிருப்பது ஒரு கொடூர நிகழ்வாகும். இந்த மோசமான மனித உரிமை மீறல் கண்டிக்கப்பட வேண்டும். இதனை நிகழ்த்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

குழந்தைகள் உரிமை

ஐநா குழந்தைகள் உரிமை உடன்படிக்கையில் இந்திய அரசு கையொப்பமிட்டு ஏற்றுக்கொண்டுள்ளது (UN Convention on the Rights of the Child).  இந்த உடன்படிக்கையின் 4 ஆம் பிரிவின்படி, குழந்தைகளின் அனைத்து உரிமைகளையும் காப்பது அரசாங்கத்தின் கடமை (Protection of rights: Governments have a responsibility to take all available measures to make sure children’s rights are respected, protected and fulfilled.)


இதன் 24 ஆம் பிரிவின் படி, குழந்தைகள் மீது ஆபத்தான பாரம்பரிய சடங்குகளை திணிப்பதை அரசு தடுக்க வேண்டும். (States parties shall take all effective and appropriate measures with a view to abolishing traditional practices prejudicial to the health of children.)

பெற்றோர் கடமை

பதினெட்டு வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் மீது பெற்றோருக்கு உரிமை உண்டு. ஆனால், அது உரிமை அல்ல, கடமைதான். குறிப்பாக, பெற்றோர் எதைச் செய்தாலும், அது அந்தக் குழந்தையின் நலத்துக்கானதாக மட்டுமே இருக்க வேண்டும் - என்று ஐநா குழந்தைகள் உரிமை உடன்படிக்கையின் 18 ஆம் பிரிவு குறிப்பிடுகிறது.

States Parties shall use their best efforts to ensure recognition of the principle that both parents have common responsibilities for the upbringing and development of the child. Parents  have the primary responsibility for the upbringing and development of the child. The best interests of the child will be their basic concern. (Article 18).

மனித உரிமைகள் மீறல்

மொத்தத்தில் - குழந்தைகள் நலனுக்காக ஒரு தலைவர் அலகு குத்திக்கொண்டால் - அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், தலைவர்கள் நலனுக்காக குழந்தைகளுக்கு அலகு குத்துவது மாபெரும் குற்றம் ஆகும்.

இந்த குற்றச்செயலுக்கு காரணமானவர்கள், இந்த மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். மனித உரிமை ஆணையம், குழந்தைகள் உரிமைக்கான அமைப்புகள், நீதிமன்றம் உள்ளிட்ட பொறுப்புள்ள அமைப்புகள் நீதிக்காக குரல்கொடுக்க வேண்டும்.

மாடுகளில் உரிமைக்காக குரல்கொடுக்க மாபெரும் கும்பல் உள்ள நாட்டில், குழந்தைகள் உரிமைக்காகவும் குரல்கொடுக்க வாருங்கள்.

(குறிப்பு: முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதுதான் நமது விருப்பம்.)

திங்கள், அக்டோபர் 03, 2016

தமிழ் நாட்டுக்கு தண்ணீரும் இல்லை; காவிரி மேலாண்மை வாரியமும் இல்லை - மத்திய மோடி அரசின் இனவெறி முடிவு சரிதானா?

2007 ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு வெளியானது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால், நடுவர் மன்றத்தின் தீர்ப்பு வெறும் காகிதமாகவே இருக்கும் என்று எச்சரித்து, காவிரி மேலாண்மை வாரியத்தை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கான தெளிவான வழிகாட்டுதல்களையும் அளித்தது.

For this purpose, we recommend that Cauvery Management Board on the lines of Bhakra Beas Management Board may be constituted by the Central Government. In our opinion, the necessity of setting up a suitable mechanism is of utmost importance; besides whatever machinery is set up should be adequately empowered to implement the Tribunal’s decision, as otherwise, we are afraid our decision would only be on a piece of paper. (CWDT decision - Volume 5 - 8:14)

மேலும், நடுவர் மன்றத்தின் தீர்ப்பும் உச்சநீதிமன்ற உத்தரவும் சமமானது என்பதால், காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவை திருத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இல்லை - என்றும் தெளிவுபடுத்தியது.

ஆனாலும், கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு மௌனம் சாதித்து வந்துள்ளது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை எப்போது அமைப்போம், என்பதை மட்டும்தான் மோடி அரசு நீதிமன்றத்தில் கூறியிருக்க வேண்டும். 

மாறாக, இந்திய அரசியல் சாசனத்தில் 262 ஆவது பிரிவின் கீழ் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்று ஒருபக்கம் கூறிவிட்டு, மறுபக்கத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித்தீர்ப்பில் பரிந்துரை மட்டுமே செய்துள்ளது. அதனை ஏற்பதும் ஏற்காமல் போவதும் மத்திய அரசின் விருப்பம் என்று உச்சநீதிமன்றத்தில் மோடி அரசு கூறியிருப்பது தமிழகத்துக்கு எதிரான இனவெறி போக்கே ஆகும்!

காவிரி நடுவர் மன்றதின் இறுதி தீர்ப்பில் - காவிரி மேலாண்மை வாரியத்தின் முக்கியத்துவம் குறித்த பகுதிகளை கீழே காண்க (9 பக்கங்கள்- CWDT decision - Volume 5 - Chapter 8):








காவிரி நடுவர்மன்ற இறுதி  திர்ப்பு - பகுதி 5 PDF வடிவில் (இங்கே சொடுக்கவும்): Apportionment of The Waters of The Inter-State River Cauvery