Pages

செவ்வாய், அக்டோபர் 30, 2012

இலங்கை மீதான ஐநா விசாரணையில் நானும் ஓரணியில் திரளும் தமிழகக் கட்சிகளும்!

இலங்கையில் நிலவும் மனித உரிமை நிலை குறித்த "காலமுறை மதிப்பீடு"  (Universal Periodic Review - UPR) எனும் விசாரணை வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி ஜெனீவாவில் உள்ள ஐ.நா.மனித உரிமை அவையில் நடைபெற உள்ளது. இந்த மதிப்பீட்டு விசாரணையின் போது இலங்கையின் மனித உரிமை மீறல்களும்,  ஐ.நா.மனித உரிமை ஒப்பந்தங்கள் இலங்கையில் செயல்படும் நிலையும் விவாதத்திற்கு வர இருக்கின்றன.

இலங்கை  மீதான ஐநா விசாரணையில் நான்!

இந்த நிகழ்வில் பசுமைத் தாயகம் சார்பில் திரு. கோ.க.மணி அவர்களுடன் நானும் பங்கேற்கிறேன். மருத்துவர் அய்யா அவர்களை நிறுவனராக கொண்டு செயல்படும் பசுமைத்தாயகம் ஐ.நா.வின் சிறப்பு ஆலோசனைக் குழுவாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதால், இந்த விசாரணையில பங்கேற்க பசுமைத்தாயகம் அமைப் பிற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. அதனைக் கீழே காணலாம்.
ஓரணியில் திரளும் தமிழகக் கட்சிகள்!

இங்கிலாந்து அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவும், பிரிட்டிஷ் தமிழ் பேரவையும் இணைந்து வரும் நவம்பர் 6-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்ற அரங்கில் நடத்தவிருக்கும் சர்வதேச தமிழ் மாநாட்டிலும்  திரு. கோ.க.மணி அவர்களுடன் நானும் பங்கேற்கிறேன்.

வரலாற்றின் ஒரு முக்கிய நிகழ்வாக தமிழ்நாட்டிலிருந்து கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து தரப்பினரும் இந்த மாநாட்டில் ஒன்றிணைய உள்ளனர்.

மாநாட்டு நிகழ்ச்சி நிரலைக் கீழே காண்க:
மேற்கண்ட நிகழ்ச்சிகள் குறித்து மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் விடுத்துள்ள அறிக்கையை இங்கே காண்க. (இங்கே சொடுக்கவும்)

இந்த அரிய வாய்ப்பை எனக்களித்த மருத்துவர் அய்யா அவர்களுக்கும் பசுமைத் தாயகம் அமைப்பிற்கும் நன்றிகள் பல.

தொடர்புடைய சுட்டி:


நெருக்கடியில் இலங்கை: ஐநாவில் உலகநாடுகள் சரமாரிக் கேள்வி! இந்தியா மவுனம்!!

அவசரம்: இலங்கை மீது ஐநா மனிதஉரிமை விசாரணை - இந்திய துரோகம் தொடருமா? இப்போதே செயல்படுக! 

இலங்கை மீது ஐநாவில் புதிய விசாரணை:புதிய தலைமுறைக்கு பாராட்டும் கண்டனமும்!

சனி, அக்டோபர் 27, 2012

நெருக்கடியில் இலங்கை: ஐநாவில் உலகநாடுகள் சரமாரிக் கேள்வி! இந்தியா மவுனம்!!


நவம்பர் 1 அன்று ஜெனீவாவில் நடைபெற உள்ள இலங்கை மீதான ஐநா மனித உரிமைகள் அவையின் காலமுறை விசாரணைக்காக, பல்வேறு நாடுகள் சரமாரியாகக் கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளன. இலங்கைக்கு ஆதரவான நாடுகள் என்று கணிக்கப்படும் சீனாவும் பாகிஸ்தானும் கூட கேள்வி எழுப்பியுள்ளன. ஆனால், உலகிலேயே அதிக எண்ணிக்கையில் தமிழ் பேசுவோரைக் குடிமக்களாகக் கொண்ட இந்தியா ஒரே ஒரு கேள்வியைக் கூட எழுப்பாமல் மவுனம் சாதிக்கிறது. (நான் முதலில் இந்தியன், அப்புறம்தான் தமிழன் என்று வசனம் பேசுவோர் கவனிக்க.)

இலங்கை மீதான விசாரணையும் இந்தியாவின் மவுனமும்

ஐநா மனித உரிமைகள் அவையின் காலமுறை விசாரணை (Universal Periodic Review - UPR) என்பது ஒவ்வொரு நாட்டின் மனித உரிமை நிலை குறித்தும் நான்கரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும். இந்த நிகழ்வின் போது அரசாங்கத்தின் சார்பில் ஒரு அறிக்கையும், ஐநாவின் சார்பில் ஒரு தொகுப்பறிக்கையும், அரசு சாராத அமைப்புகளின் சார்பில் ஒரு தொகுப்பறிக்கையும்  ஆய்வுக்காக முன்வைக்கப்படும்.

அதன் பிறகு, விசாணை தொடங்குவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு ஐநா மனித உரிமை அவையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் கேள்விகளை முன்கூட்டியே எழுத்து பூர்வமாக வைப்பர்கள். விசாரிக்கப்படும் நாடு அந்தக் கேள்விகளுக்கு விசாரணையின் போது பதிலளிக்க வேண்டும். அந்த வகையில் பல்வேறு நாடுகள் இலங்கையிடம் சரமாரியாக கேள்வி கேட்டுள்ளன.
ஸ்பெயின், டென்மார்க், லிச்டென்ஸ்டெய்ன், மெக்சிகோ, கனடா, செக் குடியரசு, நெதர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, கியூபா, சுலோவேனியா, சுவீடன், ஆஸ்திரேலியா, சீனா, அயர்லாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மொத்தமாக பதினோரு பக்கத்திற்கு கேள்வி கேட்டுள்ளன. அதிலும், இலங்கையை ஆதரிக்கும் நாடுகளான சீனா, பாகிஸ்தான், கியூபா ஆகிய நாடுகள் கூட கேள்வி எழுப்பியுள்ளன.

ஆனால் மனித உரிமைகள் குழுவில் ஒரு முக்கிய நாடான இந்தியா இலங்கையிடம் ஒரே ஒரு கேள்வியைக் கூட கேட்கவில்லை. (பன்னாட்டு அரங்கில் மவுனம் சாதிக்கும் இந்தியா - தன்னை தெற்காசியாவின் வல்லரசு என்று நினைப்பதும், பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினர் தகுதி வேண்டும் என்று கேட்பதும் வெட்கக்கேடு!)

சரமாரிக் கேள்விகள்

உலக நாடுகள் கேட்டுள்ள கேள்விகளில் சில:

1. இறுதிக்கட்ட போரின் போது போர்க்குற்றம் மற்றும் மனித குலத்துக்கு எதிரான கொடுங்குற்றம் உள்ளிட்ட பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டது குறித்து எப்போது நியாயமான விசாரணை நடத்தப்படும்?

2. இதுகுறித்த ஐநா மனித உரிமை அவைத் தீர்மானத்தை நிறைவேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

3. ஆள்கடத்தல், சட்டவிரோத படுகொலைகளைத் தடுப்போம் என்று 2008 ஆம் ஆண்டு அளித்த வாக்குறுதிகள் என்ன ஆயின?

4. இலங்கையின் மற்ற பகுதிகளில் தேர்தல்கள் நடத்தப்பட்ட போதிலும், வடக்கில் தேர்தல் நடத்தப்படாதது ஏன்? வடக்குப் பகுதியில் 2013 ஆம் ஆண்டில் தேர்தல் நடத்துவதற்கான நாளைக் குறிப்பிட முடியுமா?

5. வடக்குப்பகுதியில், குறிப்பாக வன்னியில், ராணுவத்தைக் குறைப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை ஏதேனும் உண்டா?

6. கற்பழிப்பு உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க என்ன செய்தீர்கள்?

7. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எப்போது கொண்டு வருவீர்கள்?

8. எல்.எல்.ஆர்.சி பரிந்துரைகள் எந்த ஆளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளன? இதற்கான தேசிய செயல்திட்டத்தின் நிலைமை என்ன? இதனை செயல்படுத்த போதுமான பணம் ஒதுக்கப்பட்டதா? செயல்படுத்தப்பட்டதை உறுதி செய்வது எப்படி? யார் கண்காணிப்பது?

9. எல்.எல்.ஆர்.சி பரிந்துரைகளில் 91 மட்டுமே தேசிய செயல்திட்டதில் உள்ளது. மீதமுள்ள 194 பரிந்துரைகளின் நிலை என்ன?

10. பத்திரிகையாளர்கள் மீதான அடக்குமுறைகளைத் தடுக்கவும் பேச்சுரிமையைக் காக்கவும் என்ன செய்தீர்கள்?
11. மானிக் ஃபார்மில் இருந்த உள்நாட்டு அகதிகள் வெளியேற்றப்பட்டனர். ஆனால் அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு சென்று குடியேற முடியாத நிலை இருப்பது ஏன்? மறுவாழ்வு அளிப்பதில் பன்னாட்டு விதிமுறைகளை ஏன் பின்பற்றவில்லை? 300,000 பேர் உள்நாட்டு அகதிகளாக இருந்த நிலையில், அவர்களுக்கான வீட்டு வசதி ஏற்பாடுகள் எப்படி உள்ளது? சரணடைந்த போராளிகளின் நிலை என்ன?

12. போர் முடிந்து மூன்றாண்டுகள் ஆna பின்னரும் ஏன் அரசியல் தீர்வு எட்டப்படவில்லை? 13 ஆவது சட்டத் திருத்தத்தின் நிலை என்ன? அதிகாரப்பகிர்வை மறுப்பது ஏன்?

13. தன்னிச்சையான மனித உரிமைகள் ஆணையத்தை எப்போது அமைப்பீர்கள்?

14. மனித உரிமைக்காக குரல் கொடுப்போருக்கு என்ன பாதுகாப்பு? அரசை விமர்சிப்போரை மிரட்டுவது ஏன்? பாக்கியசோதி சரவணமுத்து மிரட்டப்பட்டது ஏன்? இதுபோன்ற நிலைமைகள் எதற்காக இன்னமும் நீடிக்கின்றன?

15. காணாமல் போனவர்களின் நிலை என்ன? அதனை விசாரிப்பதற்கான நடைமுறைகள், தீர்வுகள் என்ன?

16. மக்களின் நிலத்தை ராணுவமும் அரசும் பிடுங்கிகொள்வது குறித்து விளக்க முடியுமா? வடக்கிலும் கிழக்கிலும் சிவிலியன் அரசாங்க முறை மூலமாக நில உரிமை சச்சரவு சரி செய்யப்படுவதற்கான திட்டம் என்ன?

17. சேனல் 4 வீடியோ, திரிகோணமலையில் மாணவர்கள் கொலை, 17 தொண்டு நிறுவனப் பணியாளர்கள் கொல்லப்பட்டது, பொட்டுவில் பத்து பேர் படுகொலை, லசந்தா விக்கரம சிங்க படுகொலை, பிரகீத் எக்னலிகோடா காணாமல் போனது ஆகிய நிகவுகளின் விசாரணை என்ன ஆனாது?

18. போர் முடிந்து மூன்றாண்டுகள் கடந்த பின்னரும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் எதற்காக?

19. தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் இரண்டாண்டுகளாக பேசியும் முன்னேற்றம் இல்லாதது ஏன்? ஒரு தீர்வை எட்ட வேண்டும் என்பதற்கான திட்டம் அரசிடம் உண்டா?

20. ஐநா அவையின் சார்பில் ஆறு சிறப்புக் குழுக்கள் இலங்கையின் நிலைமையை நேரில் பார்க்க வேண்டும் என்று ஏற்கனவே அனுமதி கேட்டுள்ளனர். அந்தக் குழுக்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா? எப்போது?

21. மொழி உரிமைகள், மத உரிமைகள் காப்பாற்றப்பட என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

- இப்படியாக நீண்ட கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் இலங்கை அரசு பதிl அளித்தாக வேண்டும்.

ஐநா மனித உரிமைகள் காலமுறை மதிப்பீட்டு விசாரணை தொடர்பாக 1. இலங்கை அரசு அளித்துள்ள அறிக்கை, 2. ஐநா அமைப்புகள் அளித்துள்ள அறிக்கை, 3. அரசு சார்பற்ற அமைப்புகள் அளித்த அறிக்கைகளின் தொகுப்பு, 4. இலங்கையிடம் பல்வேறு நாடுகள் கேட்டுள்ள கேள்விகள் - ஆகிய அனைத்தையும் காண இங்கே சொடுக்கவும்:

http://www.ohchr.org/EN/HRBodies/UPR/Pages/LKSession14.aspx
தொடர்புடைய சுட்டி:

அவசரம்: இலங்கை மீது ஐநா மனிதஉரிமை விசாரணை - இந்திய துரோகம் தொடருமா? இப்போதே செயல்படுக! 

புதன், அக்டோபர் 24, 2012

அவசரம்: இலங்கை மீது ஐநா மனிதஉரிமை விசாரணை - இந்திய துரோகம் தொடருமா? இப்போதே செயல்படுக! 

இலங்கையில் நிலவும் மனித உரிமை நிலை குறித்த "காலமுறை மதிப்பீடு" Universal Periodic Review (UPR) எனும் விசாரணை வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி ஜெனீவாவில் உள்ள ஐ.நா.மனித உரிமை அவையில் நடைபெற உள்ளது. இந்த மதிப்பீட்டு விசாரணையின் போது இலங்கையின் மனித உரிமை மீறல்களும்,  ஐ.நா.மனித உரிமை ஒப்பந்தங்கள் இலங்கையில் செயல்படும் நிலையும் விவாதத்திற்கு வர இருக்கின்றன. 

இலங்கை மீதான மனித உரிமை மதிப்பீட்டு விசாரணையை வழிநடத்தும் நாடுகளாக (TROIKA) இந்தியா, ஸ்பெயின், பெனின் ஆகிய நாடுகளை ஐநா அறிவித்துள்ளது. இவற்றில் ஸ்பெயின், பெனின் ஆகிய நாடுகள் இலங்கையின் மனித உரிமை மீறல்களை ஏற்கனவே கண்டித்து வருகின்றன. எனவே, அந்த நாடுகள் மனித உரிமை மதிப்பீட்டு விசாரணையின் போது நியாயமாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், விசாரணையை வழிநடத்தும் முக்கிய நாடான இந்தியா, இலங்கைக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்து இலங்கை மீது சர்வதேச அழுத்தம் வராமல் தடுக்கக் கூடும் என மனித உரிமை ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர். 

இலங்கை அரசின் அநியாய அறிக்கை

இலங்கை மீதான இந்த மனித உரிமை மதிப்பீட்டு விசாரணைக்காக, இலங்கை தன்னிலை விளக்கமாக 30 பக்க அறிக்கை ஒன்றை ஐ.நா.அவையில் சமர்ப்பித்துள்ளது. கொஞ்சமும் ஈவு, இரக்கம் இல்லாமல் வெறும் பச்சைப் பொய்களை மட்டுமே இந்த அறிக்கையில் முன்வைத்துள்ளது இலங்கை அரசு. குறிப்பாக, இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இனஅழித்தொழிப்பு போரில் ஒரு லட்சத்திற்கும் கூடுதலான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். 

ஆனால், இலங்கை அரசின் அறிக்கையில், தமிழர்களுக்கு எதிரான போர் ஒரு 'மனிதாபிமான நடவடிக்கை' (Humanitarian Operation) என்றும், போரின் போது 'ஒரே ஒரு குடிமகனின் உயிரழப்புக்கூட ஏற்படக்ககூடாது' (zero civilian casualty) என்கிற கொள்கை பின்பற்றப்பட்டதாகவும் கூறியுள்ளது.
ஐநா மனித உரிமை அவையில் கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை, தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையின் காரணமாக இந்தியா ஆதரித்தது. அந்த தீர்மானமும் வெற்றி பெற்றது. ஆனால், இப்போதைய அறிக்கையில் அந்த தீர்மானத்தை கடுமையாக வசைபாடியுள்ளது இலங்கை அரசாங்கம்.

இலங்கை அரசு பச்சைப்பொய்களை ஐ.நா. அவையில் சமர்ப்பித்துள்ள போதிலும், இதற்கு மாறாக, இலங்கை மீதான மனித உரிமை மதிப்பீட்டு விசாரணைக்காக, இலங்கையின் உண்மையான மனித உரிமை நிலை என்ன? என்பது குறித்து உலகளவிய மனித உரிமை அமைப்புகள் மொத்தம் 46 அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன. இவற்றை ஐ.நா. அவை 15 பக்க அறிக்கையாக தொகுத்து அளித்துள்ளது. 

இலங்கை மீதான இந்த மனித உரிமை மதிப்பீட்டு விசாரணைக்காக இந்தியாவிலிருந்து அறிக்கை சமர்ப்பித்துள்ள ஒரே அமைப்பு, மருத்துவர் ச. இராமதாசு அய்யா அவர்களை நிறுவனராகக் கொண்டுள்ள பசுமைத் தாயகம் அமைப்பு மட்டுமே. இந்த விசாரணைக்காக 46 அறிக்கைள் சமர்ப்பித்துள்ள அமைப்புகளில் ஒன்றாக பசுமைத் தாயகம் அமைப்பு ஐ.நா.அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐநா மனித உரிமைகள் காலமுறை மதிப்பீட்டு விசாரணை தொடர்பாக 1. இலங்கை அரசு அளித்துள்ள அறிக்கை, 2. ஐநா அமைப்புகள் அளித்துள்ள அறிக்கை, 3. அரசு சார்பற்ற அமைப்புகள் அளித்த அறிக்கைகளின் தொகுப்பு, 4. இலங்கையிடம் பல்வேறு நாடுகள் கேட்டுள்ள கேள்விகள் - ஆகிய அனைத்தையும் காண இங்கே சொடுக்கவும்:

http://www.ohchr.org/EN/HRBodies/UPR/Pages/LKSession14.aspx

இந்தியா அநியாயத்திற்கு துணை போகுமா?


இலங்கை மீதான மனித உரிமை மதிப்பீட்டு  விசாரணையை வழிநடத்தத் தலைமை ஏற்றுள்ளதால், உலக நாடுகள் இலங்கை குறித்து கேட்கும் கேள்விகளை இலங்கையிடம் கொண்டு சென்று, அதன் விளக்கத்தைக் கேட்கும் முக்கிய இடத்தில் இந்தியா இப்போது உள்ளது. மேலும், இந்த விசாரணை முடிந்த பின்பு விசாரணை அறிக்கையை எழுதி அதனை ஐ.நா.மனித உரிமைக் குழுவிடம் சமர்ப்பிக்கும் இடத்திலும் இந்தியாவே உள்ளது. 
எனவே, பொய்யாகவும், மனித உரிமைகளுக்கு எதிராகவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கையின் அறிக்கையை இந்தியா அதரிக்கக் கூடாது. மாறாக, மனித உரிமை அமைப்புகள் எழுப்பியுள்ள சிக்கல்களை இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பை நியாயத்திற்காக, மனித உரிமைகளைக் காப்பதற்காக இந்தியா பயன்படுத்த வேண்டும். இதற்கு மாறாக, இலங்கையின் கொடூரங்களை மூடி மறைக்க இந்தியா துணைப் போகக்கூடாது.

நீங்கள் என்ன செய்யலாம்?

இலங்கை குறித்த ஐநா விசாரணையின் போது இந்திய அரசு நியாயமான நிலைபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி ஆதரவு திரட்டும் பிரச்சாரத்தை அம்னெஸ்டி அமைப்பு மேற்கொண்டுள்ளது.

இதற்கு ஆதரவு அளிக்கும் விதமாக பின்வரும் செல்பேசி எண்களுக்கு ஒரு 'மிஸ்டு கால்' கொடுங்கள்: 

08067006666, 
02241176777, 
08067006506


இணையத்தில் இணைய இங்கே சொடுக்கவும்:

Sign and Demand Justice in Sri Lanka

தொடர்புடைய சுட்டிகள்: 


இலங்கை மீது ஐநாவில் புதிய விசாரணை:புதிய தலைமுறைக்கு பாராட்டும் கண்டனமும்!

ஐநாவில் ராஜபட்சவை சுற்றிவளைக்கும் தமிழர்கள்: கனடா பத்திரிகை பாராட்டு! இலங்கை பத்திரிகைகள் கலக்கம்!

இலங்கை அரசின் இனவெறி - ஐநா சபையில் எதிர்ப்பு!

இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தொடரும் போராட்டம் - பசுமைத் தாயகத்தின் நீதிக்கான பயணம்!

செவ்வாய், அக்டோபர் 23, 2012

இலங்கை மீது ஐநாவில் புதிய விசாரணை:புதிய தலைமுறைக்கு பாராட்டும் கண்டனமும்!


இலங்கையில் நிலவும் மனித உரிமை நிலை குறித்த "காலமுறை மதிப்பீடு" (Universal Periodic Review) எனும் விசாரணை வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி ஜெனீவா ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்த நிகழ்ச்சிக்காக புதிய தலைமுறை தொலைக்காட்சி பாராட்டப்பட வேண்டும், கண்டிக்கப்படவும் வேண்டும்! 

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பாராட்டு

இலங்கை மீதான காலமுறை மதிப்பீட்டு விசாரணை குறித்து 22.10.2012 திங்கள் அன்று இரவு புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்பட பேசு நிகழ்ச்சியில் விவாதம் நடத்தப்பட்டது. பி.யு.சி.எல் அமைப்பின் சுரேஷ், அம்னெஸ்ட்சி அமைப்பின் அனந்த பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விவாதித்தனர்.
நேர் பட பேசு நிகழ்ச்சியில் பேசியவர்கள் - இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை வெறும் தமிழர்களின் சிக்கலாகப் பார்க்காமல், மனித உரிமை பிரச்சனையாகவும் தெற்காசிய பிரச்சனையாகவும் இந்தியாவால் பார்க்கப்பட வேண்டும். இந்திய அரசின் மேம்போக்கான அனுகுமுறைக்கு முடிவுகட்ட வேண்டும் என்று நியாயமாகப் பேசினர்.

மிகவும் முக்கியமான "காலமுறை" மதிப்பீடு குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தை ஒளிபரப்பியமைக்காக பாராட்டுகிறோம்.

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு கண்டனம்.

இந்த நேர்பட பேசு நிகழ்ச்சியின் போது "கடந்த மார்ச் மாதம் இலங்கை மீதான அமெரிக்க தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்த போது தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் அதற்காகக் குரல் கொடுத்தனர். ஆனால், இப்போது நவம்பர் 1 ஆம் தேதி நடக்க இருக்கும் காலமுறை மதிப்பீடு எனும் விசாரணை குறித்து தமிழ்நாட்டுக் கட்சிகள் எதுவும் எதற்காக வாய்த்திறக்கவில்லை?" என்று புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் கேட்கப்பட்டது.

தமிழ்நாட்டின் எல்லா கட்சிகளும் இந்த விடயத்தில் மவுனம் சாதிக்கின்றன என்பதாகவும், ஒரு அறிக்கைக் கூட விடவில்லையே என்றும் புதிய தலைமுறை நேர்பட பேசு நிகழ்ச்சியில் கூறப்பட்டது.

ஆனால், கடந்த செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதியே "நவம்பர் 1 ஆம் தேதி நடக்க இருக்கும் இலங்கை மீதான காலமுறை மதிப்பீட்டு விசாரணை குறித்தும், அதில் இந்தியா நடுநிலை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், அதற்காக தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் பிரதமரை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டும்" பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பே அறிக்கை வெளியிட்டுள்ள சிக்கல் குறித்து, இப்போது விவாதம் நடத்தும் புதிய தலைமுறை தொலைக்காட்சி "தமிழ்நாட்டுக் கட்சிகள் எதுவும் எதற்காக இன்னும் வாய்த்திறக்கவில்லை? ஒரு அறிக்கைக் கூட விடவில்லையே" என்றெல்லாம் கேட்பது வியப்பளிக்கிறது.

புதிய தலைமுறை நேர்பட பேச வேண்டாமா?

இலங்கை மீதான காலமுறை மதிப்பீட்டு விசாரணை குறித்து மருத்துவர் ச. இராமதாசு அவர்களின் அறிக்கை இதோ:
போர்க்குற்ற விசாரணை இலங்கை வலையில் இந்தியா விழக்கூடாது - மருத்துவர் அய்யா

ஞாயிறு, அக்டோபர் 14, 2012

இஸ்லாம் மதத்தைத் திட்டியவர்கள் எங்கே போனார்கள்?


தலிபான்களுக்கு எதிராக வலைதளத்தில் எழுதிய மலலா யூசப்சாய் சுடப்பட்டது உலகெங்கும் பேரதிர்ச்சியை எழுப்பியது. இந்த தருணத்திற்காகவே காத்திருந்தது போல சிலர் "இது இஸ்லாமிய தீவிரவாதம்" என சாயம் பூசினர். ஏதோ "உலகின் எல்லா இஸ்லாமியர்களும் துப்பாக்கிச் சூட்டினை ஆதரிப்பார்கள்" என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றனர்.

"முகம்மதுவின் படத்துக்காக ஒன்றுக் கூடிய பாகிஸ்தானிய கும்பல்கள், தாலிபானின் மனித விரோத செயல்களைக் கண்டிக்க ஒன்றுக் கூடுமா என்பதை பொறுத்திருந்துப் பார்ப்போம்" என்று ஒருவர் தனது வலைப்பூவில் எழுதினார். (இங்கே காண்க: இளம்பெண் வலைப்பதிவர் சுடப்பட்டமைக்குக் கடும் கண்டனங்கள்)
ஆனால், இப்போது உலகின் எல்லா இஸ்லாமியர்களும் துப்பாக்கிச் சூட்டினை எதிர்த்து நிற்கிறார்கள். குறிப்பாக பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் மலலா யூசப்சாய்க்கு ஆதரவான பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. உண்மையில் அமெரிக்க படத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களை விட மலலாவுக்கு ஆதரவாக மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடந்துவருகின்றன.

அதுகுறித்து தி இந்து செய்தியை இங்கே காண்க:

Malala wave sweeps Pakistan

I-am-Malala

இஸ்லாமிய உலகம் "நாங்கள் ஒவ்வொருவரும் மலலா தான்" என்று ஓங்கி ஒலிக்கிறது.

எதற்கெடுத்தாலும் இஸ்லாம் மதத்தை திட்டுபவர்கள் -இந்த முற்போக்கான பக்கத்தை மட்டும் கண்டுகொள்ளாமல் போவது ஏன்?

தொடர்புடைய சுட்டிகள்:



இளம்பெண் வலைப்பதிவர் சுடப்பட்டமைக்கு இஸ்லாம் காரணமா?

மது, மதம், சாதி: மிகத் தீமையானது எது?

வெள்ளி, அக்டோபர் 12, 2012

செல்பேசிக் கோபுரம்: கண்டுகொள்ளப்படாத புதிய விதிமுறைகள்!

செல்பேசிக் கதிர்வீச்சால் ஏற்படும் கேடுகள் குறித்து எனது முந்தைய பதிவுகளில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது:

1. எச்சரிக்கை: செல்பேசி கதிர்வீச்சை தவிர்ப்பது எப்படி? செல்பேசி நிறுவனங்கள் மறைக்கும் உண்மைகள்.

2. செல்பேசி மாசுபாடு என்றால் என்ன?


3. செல்பேசிக் கோபுரங்கள்: மாபெரும் ஆபத்து! கதிர்வீச்சின் உடல்நல பாதிப்புகள்


4. சுற்றுச்சூழலும் செல்பேசிக் கோபுரமும்:அழிவின் விளிம்பில் தேனீக்கள், சிட்டுக்குருவிகள்!


செல்பேசிக் கதிர்வீச்சினைக் கட்டுப்படுத்தும் விதிகள் 

இந்தியாவின் செல்பேசி செவை நிறுவனங்கள் அனைத்தும் செல்பேசிக் கோபுரங்களை அமைக்கும் போது, அவை "இந்திய அரசும் ICNIRP பன்னாட்டு அமைப்பும் முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதாக" கூறுகின்றன. இந்த வாதம் தந்திரமானது, மக்களை ஏமாற்றக்கூடியது.
செல்போன் கோபுரங்களால் ஏற்படக்கூடிய கதிர்வீச்சை கட்டுப்படுத்துவதற்கான பன்னாட்டு விதிமுறை மிகப்பழமையானது (International Commission on Non-Ionizing Radiation Protection - ICNIRP guidelines). 1998 ஆம் ஆண்டி உருவாக்கப்பட்ட்து. இந்த விதிமுறை கதிர்வீச்சால் ஏற்படக்கூடிய வெப்பத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது. ஆனால், வெப்ப விளைவை விட உயிரியல் விளைவுகள் நான்கு அல்லது ஐந்து மடங்கு தீவிரமானவை என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அதாவது, எது மிகப்பெரிய பாதிப்போ, அதை இந்த ICNIRP கட்டுப்பாடு கணக்கில் கொள்ளவில்லை.

காலத்துக்கு பொருந்தாத விதிமுறைகள்

மிகப்பழமையான ICNIRP விதிமுறைக் கூட இந்தியாவில் உண்மையாகக் கடைபிடிக்கப்படவில்லை. ICNIRP விதிமுறைப்படி GSM900 வகை செல்பேசிக் கோபுரத்தின் கதிர்வீச்சு சதுர மீட்டருக்கு 4500 மில்லிவாட் (Milliwatt/m2) அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த உச்சவரம்பு என்பது ஒரு குறிப்பிட இடத்தின் ஒட்டுமொத்த அளவாகும். அதாவது, ஒரு பகுதியில் எததனை செல்பேசிக் கோபுரங்கள் இருந்தாலும் அவற்றின் ஒட்டுமொத்த கதிர்வீச்சு அளவு சதுர மீட்டருக்கு 4500 மில்லிவாட் அளவுக்கு மேல் போகக்கூடாது.

ஆனால், இந்தியாவில் இதனை ஒரு நிறுவனத்தின் ஒரு செல்பேசிக் கோபுரத்தின் உச்ச அளவாக நிருணயித்துள்ளனர். ஒரு பகுதியில் பத்து செல்பேசிக் கோபுரங்கள் இருந்தால் ஒவ்வொன்றுக்கும் 4500 மில்லிவாட் கதிர்வீச்சு அனுமதி உண்டு.  அவற்றின் ஒட்டுமொத்த கதிர்வீச்சு அளவு சதுர மீட்டருக்கு 45000 மில்லிவாட் அளவுக்கு போகக்கூடும். இது ICNIRP பன்னாட்டு அளவைவிட பலமடங்கு அதிகமாகும்.

இப்படி ஒரு காலத்துக்கு பொருந்தாத விதிமுறைகளை வைத்துக்கொண்டுதான், "இந்திய அரசும் ICNIRP பன்னாட்டு அமைப்பும் முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதாக" கூறுகின்றன நிறுவனங்கள்.

ஆனால், உலகின் மற்ற நாடுகள் தமது குடிமக்களை காப்பாற்றுவதில் வெகுதூரம் சென்றுவிட்டன. ICNIRP பன்னாட்டு அமைப்பின் உச்சவரம்பை விட 100 மடங்கு முதல் 1000 மடங்கு வரை குறைத்துவிட்டன.

எடுத்துக்காட்டாக, இந்தியாவில் சதுர மீட்டருக்கு 4500 மில்லிவாட் என்ற அளவு பின்பற்றப்படும் போது, சீனாவில் இது 400 மில்லிவாட், இத்தாலி, போலந்து, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் 100 மில்லிவாட் என மிக மிக குறைக்கப்பட்டு விட்டது. சுவிட்சர்லாந்து நாட்டில் குடியிருப்பு, பள்ளி, மருத்துவமனை, விளையாட்டுத்திடல் பகுதிகளில் இந்த அளவும் வெறும் 42 மில்லிவாட்டிற்கு மிகக் கூடாது என்கிற கடுமையான விதிமுறை உள்ளது.

ஆக, இந்தியாவில் பல ஆயிரம் மடங்கு அதிக கதிர்வீச்சினை வெளியிடும் செல்பேசி நிறுவனங்கள் தாங்கள் 'நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதாக' கூறுகின்றன.

அரசாங்கம் செய்வது என்ன?

மக்கள் நலனைக் காப்பாற்றுவதில் இந்திய அரசாங்கம் மிக மெத்தனமாக இருந்து வருகிறது. அதில் தமிழ்நாடு அரசு இன்னும் அலட்சியமாக இருக்கிறது என்று கூறலாம்.
மக்களின் உடல்நலத்தைக் காப்பாற்றும் வகையில், செல்பேசிக் கோபுரங்களை அமைப்பதற்கான இடங்கள் குறித்து முறையான விதிமுறைகள் இந்தியாவில் இல்லை. இக்கோபுரங்களை அமைப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்று மட்டும் கூறப்பட்டுள்ளது.

புது தில்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மட்டும் பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு அருகில் செல்பேசிக் கோபுரங்களை அமைக்கக் கூடாது என்கிற விதிமுறை உள்ளது. இதற்கு நேர்மாறாக தமிழ்நாட்டில் செல்பேசிக் கோபுரம் அமைக்க அனுமதியே தேவையில்லை என்கிற நிலை உள்ளது.

புதிய விதிமுறைகள்

இந்திய அரசாங்கம் செல்பேசிக் கோபுரங்களை முறைப்படுத்துவது குறித்து 2010 ஆம் ஆண்டில் இரண்டு குழுக்களை அமைத்தது. ஒரு நிபுணர் குழு 'வனவிலங்குகள், பறவைகள், தேனீக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்' குறித்தும், அமைச்சரகங்களுக்கு இடையேயான மற்றொருக் குழு 'மின்காந்தப்புலனால் ஏற்படும் கதிர்வீச்சு' குறித்தும் ஆராய்ந்து பரிந்துரைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டன.

இந்த குழுக்களின் அடிப்படையில் இரண்டு புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை உத்தரவு

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை 2012 ஆகஸ்ட் 9 ஆம் நாள் வெளியிட்டுள்ள உத்தரவில் பின்வரும் விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
  • மின்காந்தக் கதிர்வீச்சு குறித்து மாநில அரசுகளும் உள்ளாட்சிகளும் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும். குறிப்பாக பாதுகாக்கப்பட்ட இடங்களுக்கு அருகில் கண்காணிக்க வேண்டும். சிக்கலுக்குரிய செல்பேசிக் கோபுரங்கள் இடம் மாற்றப்பட வேண்டும்.
  • தெளிவான எச்சரிக்கைப் படங்களை செல்பேசிக் கோபுரங்களைச் சுற்றிலும் அமைக்க வேண்டும்.
  • சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு அருகே செல்பேசிக் கோபுரங்களை அமைக்கும் முன்பு அதுகுறித்து தாக்க மதிப்பீட்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும். வனத்துறையிடம் ஆலோசிக்க வேண்டும்.
  • செல்பேசிக் கோபுரங்கள் குறித்தும் மின்காந்த ஆபத்துகள் குறித்தும் மாநில சுற்றுச்சூழல் துறை விளம்பரங்களையும் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் நடத்த வேண்டும்.
  • ஏற்கனவே செல்பேசிக் கோபுரம் உள்ள இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் இனி புதிய செல்பேசிக் கோபுரங்கள் அனுமதிக்கப்படக் கூடாது.
  • ஒரு ஊர், நகரம், மாவட்டம் என அனைத்து நிலைகளிலும் உள்ள செல்பேசிக் கோபுரங்கள் குறித்த தகவலகள் மக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். செல்பேசிக் கோபுரங்கள் அனைத்தைக் குறித்தும் அவை வெளியிடும் மின்காந்தக் கதிர்வீச்சுக் குறித்தும் தகவல் பகிரங்கமாக்கப்பட வேண்டும்.
  • இந்தியாவுக்கு என புதிய கதிர்வீச்சு உச்ச வரம்பை மத்திய தொலைத்தொடர்புத் துறை உருவாக்க வேண்டும். அத்தகைய உச்சவரம்பு நிருணயிக்கப்படும் வரை வருமுன் காப்பது என்கிற முன்னெச்சரிக்கை கொள்கையைக் கடைபிடிக்க வேண்டும்.
- என நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. (இங்கே காண்க)

இந்திய தொலைத் தொடர்புத்துறைஉத்தரவு

இந்திய தொலைத் தொடர்புத்துறை 2012 செப்டம்பர் 1 முதல் செயலுக்கு வரவுள்ளதாகக் கூறி வெளியிட்டுள்ள உத்தரவில்:
  • செல்பேசிக் கோபுரங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அளவை பத்தில் ஒரு பங்காகக் குறைக்க வேண்டும். அதாவது ஒரு சதுர மீட்டரில் 4500 மில்லிவாட் என்கிற பழைய உச்ச வரம்பு அளவு இனி 450 மில்லிவாட்டாக குறைக்கப் பட வேண்டும்.
  • நகரங்களின் முக்கிய பகுதிகளில் கதிர்வீச்சின் அளவைக் கண்காணித்து அதனை மக்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும்.
  • தேசிய அளவில் செல்பேசிக் கோபுரங்களின் புள்ளிவிவர கட்டமைப்பு உருவாக்கப்பட்டு இணையத்தின் மூலம் தகவல் வெளியிடப்படும்.
  • தேசிய ஆளவிலான தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் ஏற்படுத்தப்படும்.
  • அதிகக் கதிர்வீச்சு இல்லாத புதிய தொழிநுட்பங்கள் இனி பயன்படுத்தப்பட வேண்டும்.
  • செல்பேசி விற்கும் இடங்களில் மின்காந்தக் கதிர்வீச்சு குறித்த விழிப்புணர்வு தகவல்கள் அளிக்கப்பட வேண்டும்.
- என்பன உள்ளிட்ட புதிய விதிமுறைகளை 1.9.2012 முதல் செயல்படுத்தி உத்தரவிட்டுள்ளது இந்திய அரசின் தொலைத் தொடர்புத்துறை.  (இங்கே காண்க)

இனி என்ன?

அரசின் இப்போதைய விதிமுறைகள் போதுமானவை அல்ல என்றபோதிலும் புதிய விதிமுறைகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.ஆனால், அவை தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை
அரசின் விதிமுறைகளில் உள்ள மிகப் பெரிய குறைபாடு - செல்பேசிக் கோபுரங்களில் வெளியாகும் கதிர்வீச்சு மாசினை செல்பேசி சேவை நிறுவனங்களே கண்காணிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதுதான். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் போன்ற பொதுவான அமைப்புகளால் கண்காணிக்கப்படும் நிலை வரவேண்டும்.

மத்திய அரசின் உத்தரவு ஒருபுறம் இருந்தாலும், செல்பேசிக் கோபுரங்கள் அமைப்பது நகராட்சிகள், உள்ளாட்சிகளின் கட்டுப்பாட்டில் வருவதால் - இதுகுறித்து தமிழ்நாடு அளவில், மக்களின் உடல் நலத்தைக் காக்கும் நோக்கிலான முற்போக்கான விதிமுறைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

மிக முதன்மையாக பள்ளிகளுக்கு அருகில் சுமார் 100 மீட்டர் வரை செல்பேசிக் கோபுரங்கள் இல்லை என்கிற விதியை செயல்படுத்த மாநில அரசாங்கம் முன்வர வேண்டும். அதற்காக மக்கள் நலனில் அக்கறையுள்ள அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

புதிய விதிமுறைகள் சட்டப்படி செப்டம்பர் 2012 முதல் செயல்பாட்டுக்கு வந்துவிட்ட போதிலும் இதுவரை இதனை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது வியப்பையும் வேதனையையும் தருகிறது. நம்நாட்டில் பொதுநலனுக்கு தரப்படும் மதிப்பு அவ்வளவுதான்!

பன்னாட்டு நிறுவனங்களின் இலாபவெறிக்கு முன்பு பொதுநலன் என்று ஏதாவது ஒன்று இருக்கிறதா என்ன?

புதன், அக்டோபர் 10, 2012

இளம்பெண் வலைப்பதிவர் சுடப்பட்டமைக்கு இஸ்லாம் காரணமா? 


தான் சொந்தமாக நடத்தி வரும் வலைப்பதிவில் தனது எழுத்துப் படைப்புக்கள் மூலம் பெண் சிறுமிகளின் பள்ளிப்படிப்பை தலிபான்கள் தடுத்து நிறுத்திவருவதை வெளி உலகுக்கு கொண்டுவந்த மலலா யூசப்சாய் தலிபான்கள் என நம்பப்படுவோரால் சுடப்பட்டுள்ளார். (மலலா யூசப்சாயின் கட்டுரைகள்: Diary of a Pakistani schoolgirl)
மலலா யூசப்சாய் 
செவ்வாய்க்கிழமை (9.10.2012) பாகிஸ்தான் ஸ்வாட் வெலி பிரதேசத்தில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அவர் மீது இத்துப்பாக்கிச்சூட்டு தாக்குதலை நடத்தினர். படுகாயமடைந்த மாலலா தற்போது சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றார்.

இதுகுறித்த ஒரு பதிவு "முகம்மதுவின் படத்துக்காக ஒன்றுக் கூடிய பாகிஸ்தானிய கும்பல்கள், தாலிபானின் மனித விரோத செயல்களைக் கண்டிக்க ஒன்றுக் கூடுமா என்பதை பொறுத்திருந்துப் பார்ப்போம்" என்று கூறுகிறது. (இங்கே காண்க: இளம்பெண் வலைப்பதிவர் சுடப்பட்டமைக்குக் கடும் கண்டனங்கள்)

இஸ்லாம் - தலிபான்: யாரருடையக் குற்றம்? 

இந்த துப்பாக்கிச்சூடு நிகழ்வுக்காக இஸ்லாமிய மதம் தூற்றப்படும் வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக இந்தியாவிலும், அமெரிக்காவிலும் தலிபான்களின் செயல் இசுலாமியர்களின் செயலாக வர்ணிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், இஸ்லாம் மதத்தைக் காப்பதற்காக தலிபான்கள் இந்த துப்பாக்கிச்சூட்டினை நடத்தியதாகக் கூறப்படும் அதேநேரத்தில் - இஸ்லாமிய நாடான பாகிஸ்தான் அரசுதான் மலலா யூசப்சாய்க்கு அமைத்திக்கான தேசிய விருதினை அளித்துள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.
காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச்சூடு நிகழ்வுக்காக பாகிஸ்தான் அதிபரும், இராணுவ தளபதியும் மற்ற தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். (Attack on Malala Yousafzai widely condemned)

பாகிஸ்தானின் பெஷாவர், முல்தான், மிங்கோரா எனப் பலநகரங்களில் எதிர்ப்பு ஊர்வலங்கள் நடைபெற்றுள்ளன.  ஸ்வாட் வெலி பள்ளத்தாக்கில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் எல்லா பள்ளிகளிலும் மலலா யூசப்சாய் குணமடைய வேண்டும் என்று வழிபாடுகள் நடந்து வருகின்றன. (Malala Yousafzai: Pakistan bullet surgery 'successful')
பாகிஸ்தானின் செய்தி ஊடகங்கள் இந்த நிகழ்வைக் கடுமையாக கண்டித்துள்ளன. (Pakistan media condemn attack on Malala Yousafzai)

எனவே, இந்த நிகழ்வுக்காக இஸ்லாமிய மதத்தை யாரேனும் குற்றம் சொல்வார்களேயானால் - அது மிகப்பிழையான கருத்தாகவே இருக்கும்.

மதமும் மனிதனும்

மதம் என்று பார்க்கும் போது - உலகின் எல்லா மதங்களையும் ஏதோ ஒரு காரணத்திற்காக குற்றம் சாட்ட முடியும். அதே நேரத்தில் மிகப் பெரும்பான்மையான மனிதர்களுக்கு மதம் தேவையான ஒன்றாகவும் இருக்கிறது.

ஒருபக்கம் மதம் தேவைதான், மறுபக்கம் அதனால் தொந்தரவும் இருக்கிறது என்று கருதுவோமானால் - அவர்வர் பின்பற்றும் மதத்தின் கேடுகளை அந்தந்த மதத்தினர் எதிர்க்க முற்படுவதுதான் ஒரே வாய்ப்பு.

மதத்தின் பேரால் மேற்கொள்ளப்படும் கொடூரங்களை எல்லோரும் கண்டிக்க வேண்டும். அதாவது கொடூரங்களை கண்டிக்க வேண்டும், மதத்தை அல்ல.

தொடர்புடைய சுட்டி:

திங்கள், அக்டோபர் 08, 2012

இந்தியா டுடேவின் பித்தலாட்டம்: இடஒதுக்கீட்டில் ஓப்பன் கோட்டா என்பது உயர்சாதிக் கோட்டாவா? 

"இடஒதுக்கீடு நீடிக்குமா? உயர்கல்வி, வேலைவாய்ப்பில் 69 % இடஒதுக்கீடு தரும் தமிழக சட்டத்திற்கு இப்போது சவால்" எனும் ஒரு கட்டுரை அக்டோபர் 17, 2012 தேதியிட்ட இந்தியா டுடே பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதில் மிகமிகமிக முட்டாள்தனமான கேள்வியை கேட்டுள்ளது இந்தியா டுடே.

"தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படும் 69 % இடஒதுக்கீடு நீங்கலாக மீதமுள்ள 31 % இடங்கள் யாருக்கு?" என்பதுதான் இந்தியா டுடே பத்திரிகையின் அடி முட்டாள்தனமான கேள்வியாகும்!

அதாவது, 'கல்வி, வேலைவாய்ப்பில் பட்டியல் இனத்தவர், பழங்குடி இனத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய நான்கு பிரிவினருக்கும் மொத்தமாக 69 விழுக்காடு இடங்கள் இடஒதுக்கீட்டின் படி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் மீதமுள்ள 31 விழுக்காடு இடங்களை யாருக்கு அளிக்க வேண்டும்?' என்று கேட்கிறது இந்தியா டுடே!
இப்படி ஒரு கேள்வியை கேட்கும் அளவிற்கு அந்த பத்திரிகையின் அறிவு முதிர்ச்சி வளர்ந்திருப்பது அதிர்ச்சையளிக்கக் கூடியதாக இருக்கிறது. இது உண்மையிலேயே அறியாமையால் கேட்கப்படும் கேள்வியா அல்லது தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர் சமூகநீதியின் அடிப்படைகளை அறியாமல் இருப்பார்கள். அவர்களை எளிதில் குழப்பிவிடலாம் என்பதற்கான விஷமத்தனமான தந்திரமா என்பது தெரியவில்லை.

ஏனெனில், இந்தியாவில் நீதிமன்ற தீர்ப்புகள் வாயிலாகவும், அரசின் சட்டங்கள் மூலமாகவும் மிக அதிக அளவில் விவாதிக்கப்பட்டு ஏற்கனவே தீர்க்கமான பல முடிவுகள் தெளிவுபடுத்தப்பட்ட மிகச்சில விடயங்களில் இடஒதுக்கீடுதான் முதன்மையானது. இதில் "இடஒதுக்கீட்டின் கீழ் வராத இடங்களை யாருக்கு ஒதுக்க வேண்டும்" என்பது மிகத்தெளிவாக வரையறுக்கப்பட்ட விடயம் ஆகும்.

இப்படி ஏற்கனவே தீர்க்கமாக முடிவு செய்யப்பட்டு, முடிந்துபோன ஒரு விவகாரத்தை இந்திய டுடே பத்திரிகை ஏதோ புத்தம் புதிய விவகாரம் போன்று கிளப்புகிறது.

இந்தியா டுடே பத்திரிகையின் விஷமப் பிரச்சாரம்

அக்டோபர் 17, 2012 தேதியிட்ட இந்தியா டுடே பத்திரிகையின் 35 ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ள "இடஒதுக்கீடு நீடிக்குமா?" என்கிற கட்டுரையில் பினவரும் கருத்து கூறப்பட்டுள்ளது:
"(தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டில்) சிக்கலான ஒரு விஷயம் தீர்க்கப்படாமல் இருக்கிறது. அதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் 100 இடங்கள் இருப்பதாக வைத்துக்கொள்ளலாம். அதில் 69 இடங்கள் இடஒதுக்கீட்டில் வழங்கப்பட்டு விடும். மீதமுள்ள 31 இடங்கள் யாருக்கானது என்பது கேள்வி. ஒரு தரப்பு, 'இது இடஒதுக்கீட்டில் பயன் பெறாத இதர சமூகத்தினருக்கானது' என்கிறது. எதிர் தரப்போ, 'அது மெரிட் மாணவர்களுக்கானது. இதில் ஜாதிக்கு இடமில்லை' என்கிறது. இங்குதான் பிரச்சினை வருகிறது.

ஒரு பழங்குடி மாணவர் 200க்கு 198 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றுவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரை மெரிட் பட்டியலில் சேர்ப்பது அவரது உரிமை. மாறாக, அவரிடம் ஜாதிச் சான்றிதழை வாங்கி அவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும்போது அவரது தகுதி மதிப்பெண் கேள்விக்குட்படுத்தப்படுகிறது. இப்படியிருக்க, 'ஏற்கனவே பிற ஜாதியினருக்கு 31% இடங்களே இருக்கும் நிலையில் அதிக மதிப்பெண்கள் வாங்கும் பழங்குடி மாணவர்கள் பொதுப்பிரிவினரின் வாய்ப்பைப் பறிக்கலாமா?' என்று எதிர் கேள்வி கேட்கப்படுகிறது. ஆக, 31% இடம் இதர பிரிவினருக்கா, பொதுப் போட்டிக்கா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்"

-- என்று கேட்டுள்ளது இந்தியா டுடே.

இந்தியா டுடேவுக்கு பதில் - இதோ:

தினமும் காலையில் கிழக்கு திசையில் சூரியன் உதிக்கிறது. சூரியன் கிழக்கில் உதிக்கிறதா அல்லது மேற்கில் உதிக்கிறதா என்று அரசு தெளிவுபடுத்த வேண்டுமா என்ன? ஒருவேளை இந்தியா டுடே அப்படி ஒரு கேள்வி கேட்டாலும் கேட்கலாம்!

"இடஒதுக்கீட்டில் சிக்கலான ஒரு விஷயம் (ஓப்பன் கோட்டா யாருக்கு?) தீர்க்கப்படாமல் இருக்கிறது" என்று இந்தியா டுடே கூறுவதே அப்பட்டமான பித்தலாட்டம்.

இந்திய உச்சநீதிமனறம் பல்வேறு வழக்குகளில் "இடஒதுக்கீட்டுக்கு வெளியே உள்ள பொதுப்பிரிவு என்பது எல்லோருக்கும் பொதுவானது. பொதுப்பிரிவில் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படும் பட்டியல் இனத்தவர், பழங்குடி இனத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினர் எவரும் இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள கணக்கில் சேர்க்கப்படக்கூடாது." என்பதை மிகத்தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது.

அதாவது இடஒதுக்கீடு இடங்களை ஒதுக்குவதற்கு முன்பே, சாதி வேறுபாடு எதுவும் பார்க்காமல், எல்லோரது தகுதியையும் வரிசைப்படுத்தி - அவற்றில் தகுதி அடிப்படையில் மேலே உள்ளவர்களுக்கு 31% இடங்களை அளித்துவிட்டு, அதன்பின்புதான் இடஒதுக்கீட்டு முறையின் கீழ் 69% இடஒதுக்கீட்டு இடங்களை அந்தந்தப் பிரிவினருக்கு அளிக்க வேண்டும்.

மண்டல் வழக்கு எனப்படும் புகழ்பெற்ற Indra Sawhney v. Union of India, 1992 தீர்ப்பில் உச்சநீதிமன்றம் "இடதுக்கீடு அளிக்கப்பட்ட பிரிவினைச் சேர்ந்தவர்கள் பொதுப்போட்டியில் தேர்வுசெய்யப்பட்டால் அவர்களை இடஒதுக்கீட்டு இடங்களின் கீழ் சேர்க்கக் கூடாது" என்று தெளிவாக உத்தரவிட்டுள்ளது.

"It may well happen that some members belonging to, say, Scheduled Castes get selected in the open competition field on the basis of their own merit; they will not be counted against the quota reserved for Scheduled Castes; they will be treated as open competition candidates."

அதே போன்று "பொதுப்போட்டியில் தேர்வு செய்யப்படுவோரை இடஒதுக்கீட்டு இடங்களின் கீழ் சேர்க்கக் கூடாது" என்று  Union of India v. Virpal Singh Chauhan 1995 தீர்ப்பிலும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

“while determining the number of posts reserved for Scheduled Castes and Scheduled Tribes, the candidates belonging to reserved category but selected/promoted on the rule of merit (and not by virtue of rule of reservation) shall not be counted as reserved category candidates.” 

"பொதுப்போட்டியில் தேர்வு செய்யப்படுவோரை இடஒதுக்கீட்டு இடங்களின் கீழ் சேர்க்கக் கூடாது" என்று Ritesh R. Sah v. Dr. Y.L. Yamul & Ors 1996 தீர்ப்பிலும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

“In view of the legal position enunciated by this Court in the aforesaid cases the conclusion is irresistible that a student who is en-titled to be admitted on the basis of merit though belonging to a reserved category cannot be considered to be admitted against seats reserved for reserved category.”

இடஒதுக்கீடு உள்ள பிரிவினர், இடஒதுக்கீடு இல்லாத பிரிவினருக்கு இடமே வைக்காமல் பொதுப்பிரிவில் மிகக் கூடுதலான இடங்களைப் பிடித்துக்கொண்டால் என்ன செய்வது? என்ற கேள்விக்கும் உச்சநீதிமன்றம் பதில் அளித்துள்ளது.

R.K. Sabharwal v. State of Punjab 1995 தீர்ப்பில் " பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு இருக்கும்வரை, பிற்படுத்தப்பட்டோரில் எவ்வளவு அதிகமான எண்ணிக்கையிலானோர் பொதுப்பிரிவில் தேர்வு செய்யப்பட்டாலும் - அதனைக் கணக்கில் கொள்ளக்கூடாது. இடஒதுக்கீட்டில் எத்தனை இடங்கள் உள்ளனவோ, அத்தனை இடங்களை அதே பிரிவினருக்கு கூடுதலாக அளித்துதான் ஆகவேண்டும்" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“When the State Government after doing the necessary exercise make the reservation and provides the extent of percentage of posts to be reserved for the said Backward Class then the percentage has to be followed strictly. The prescribed percentage cannot be varied or changed simply because some of the members of the Backward Class have already been appointed/promoted against the general seats.

The fact that considerable number of members of a Backward Class have been appointed/promoted against general seats in the State Services may be a relevant factor for the State Government to review the question of continuing reservation for the said class but so long as the instructions/rules providing certain percentage of reservations for the Backward Classes are operative the same have to be followed. Despite any number of appointees/promotees belonging to the Backward Classes against the general category posts the given percentage has to be provided in addition."

இதர பிரிவு" என்கிற ஒன்று இல்லவே இல்லை!

"31% இடம் இதர பிரிவினருக்கா, பொதுப் போட்டிக்கா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்" என்று இந்தியா டுடே கேட்கும் கேள்வியே அர்த்தமற்றது, கேலிக்கூத்தானது. ஏனெனில், இந்தியாவில் கல்வி, அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டு பிரிவுகளில் "இதர பிரிவு" என்கிற ஒன்று இல்லவே இல்லை! "பொதுப்பிரிவு" ஒன்று மட்டும்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டிற்கு வெளியே உள்ள 31% பொதுப்பிரிவு என்பது எல்லோருக்குமானது. பொதுப்பிரிவில் சுமார் 20% அல்லது 25% இடங்களை பட்டியல் இனத்தவர், பழங்குடி இனத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய "இடஒதுக்கீட்டு பிரிவினர்" எடுத்துக்கொள்ளும் நிலை வந்தாலும் அதில் எவரும் குறைகாண முடியாது.

அவ்வளவு ஏன்? 31% இடத்தையும் முழுவதுமாக "இடஒதுக்கீட்டு பிரிவினர்" வென்றாலும் கூட அதில் ஒரு தவறும் இல்லை. ஏனெனில், பொதுப்பட்டியலில் உள்ள இடங்கள் பொதுவானவை. அவை, 'உனக்கு எனக்கு' என்று சாதி ரீதியாகப் பிரிக்கப்படவில்லை. அங்கு எல்லோரும் ஒன்றுதான். எவருக்கு திறமை இருக்கிறதோ அவருக்கு இடம் கிடைக்கும். அவ்வளவுதான்.

எனவே, "ஏற்கனவே பிற ஜாதியினருக்கு 31% இடங்களே இருக்கும் நிலையில் அதிக மதிப்பெண்கள் வாங்கும் பழங்குடி மாணவர்கள் பொதுப்பிரிவினரின் வாய்ப்பைப் பறிக்கலாமா?" என்கிற இந்தியா டுடே கேள்வி கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான கேள்வியாகும். 

ஏனெனில், பொதுப்பிரிவினரின் வாய்ப்பு என்பது பழங்குடியினரையும் உள்ளடக்கியதுதான். தனக்கு உரிமையானதை தான் பெறுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

சனி, அக்டோபர் 06, 2012

ஐநாவில் ராஜபட்சவை சுற்றிவளைக்கும் தமிழர்கள்: கனடா பத்திரிகை பாராட்டு! இலங்கை பத்திரிகைகள் கலக்கம்!

ராஜபட்ச பன்னாட்டு சமூகத்தால் போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதற்கான முன்முயற்சிகள் முழுவேகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அண்மையில் அமெரிக்க நாட்டின் 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் "இலங்கை குறித்த ஐநா மனிதஉரிமைக் குழுவின் தீர்மானத்தை செயல்படுத்த அமெரிக்க அரசு தீவிரம் காட்ட வேண்டும்" என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு கூட்டாக கடிதம் எழுதினார்கள். (U.S. Lawmakers' Letter-Writing Campaign to Secretary Clinton Calling for Concerted Action on Sri Lanka)
இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த பன்னாட்டு விசாரணைக்கு வழிசெய்ய வேண்டும் என இலங்கை மற்றும் தமிழ்நாட்டின் அரசியல் இயக்கங்கள் பிரிட்டன் பாராளுமன்றத்தில் நவம்பர் மாதம் முறையிட உள்ளன.

நவம்பர் 1 ஆம் நாள், இலங்கையின் மனிதஉரிமை நிலைக் குறித்த மதிப்பீட்டு விசாரணை ஜெனீவா ஐநா மனிதஉரிமைக் குழுவில் நடக்க இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், இலங்கை குறித்த ஐநா மனிதஉரிமைக் குழுவின் தீர்மானம் செயல்படுத்தப்பட்டதா? எனபது குறித்து மிகமுக்கியமான அறிக்கையும் அதன் மீதான விவாதமும் அடுத்த ஆண்டு 2013 மார்ச் மாதம் ஐநா மனிதஉரிமைக் குழுவில் நடக்கவுள்ளது.

இலங்கை பத்திரிகைகள் கலக்கம்

ஐநா மனிதஉரிமைக் குழுவினை மையமாக வைத்து, இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கப்படும் நிலையில், அதனை எதிர்க்கொள்ள இலங்கை பத்திரிகைகள் வினோதமான முயற்சியை மேற்கொண்டுள்ளன. 
அதாவது, "விடுதலைப் புலிகள் ஜெனீவாவில் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர்" என்ற தலைப்பில் செய்தி வெளியிடுகின்றன சில சிங்கள ஊடகங்கள்! (புலிகள் ஜெனீவாவில் தாக்குதல் நடத்த திட்டம்: சிங்கள ஊடகம் சொல்கிறது!)

கனடா பத்திரிகை பாராட்டு

கனடாவிலிருந்து வெளிவரும் தமிழர்களின் ஆங்கில பத்திரிகை Monsoon Journal ஜெனீவா மனிதஉரிமை அவையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை பாராட்டி விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டின் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பின் உதவியுடன் உலகத்தமிழர்கள் ஜெனீவா மனிதஉரிமை அவையில் செயல்படுவதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜெனீவா மனிதஉரிமை அவையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த Monsoon Journal செய்தியை கீழே காண்க:


தொடர்புடைய சுட்டிகள்:

1. இலங்கை அரசின் இனவெறி - ஐநா சபையில் எதிர்ப்பு!

2. இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தொடரும் போராட்டம் - பசுமைத் தாயகத்தின் நீதிக்கான பயணம்!

வெள்ளி, அக்டோபர் 05, 2012

ஜூனியர் விகடனைக் கிழிக்கும் கலகக்குரல்: தமிழ்நாட்டின் சாதி வெறி அரசியல்!

ஜூனியர் விகடன் இதழை தொடர்ந்து படிக்கும் வாசகர்கள் அதன் "வைகோ பிரச்சாரத்தை" கண்டுபிடிக்காமல் இருக்க முடியாது. தமிழருவி மணியன் "வைகோ தான் அடுத்த முதல்வர்" என்று தொடர்ச்சியாக ஜூவியில் எழுதி வருகிறார்.

அண்மையில் குல்தீப் நய்யார் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் "என் சாய்ஸ் தமிழகத்தின் மூன்றாம் நபருக்கு. அதனை தேசிய அரசியல் அறிந்த வைகோ போன்றவர்கள் முன்னெடுக்கலாம்" என்று சொன்னதை "வைகோ தான் எனது சாய்ஸ்" என்று திரித்து அட்டைப் படத்தில் வெளியிட்டார்கள். "அவரைப் போன்றவர்கள்" என்பதற்கும் "அவர்தான்" என்பதற்கும் உள்ள வேறுபாட்டை கவனமாக மறைத்துவிட்டார்கள்.

விகடன் குழுமத்தின் வைகோ புராணம்: அம்பலப்படுத்தும் கலகக்குரல் 

விகடன் குழுமம், குறிப்பாக ஜூனியர் விகடன் வைகோவைத் தீவிரமாக தூக்கிப்பிடிப்பதை கலகக்குரல் இணையத்தளம் விரிவாக ஆராய்ந்துள்ளது. அதனைக் கீழே காண்க::

""(விகடன் குழுமத்தினர்) ஒவ்வொரு இதழிலும் வைகோ வின் செய்தித் தொடர்பாளராக மாறி எழுதித் தள்ளுகின்றனர். ..விகடன் ஆசிரியர் குழுவிற்கு வைகோ தமிழ்நாட்டைக் காக்க வந்த பிதாமகர்.
...நம்மைப் போல காசு கொடுத்து ஜூ.விகடன் வாங்கிப் படிக்கும் வாசகனின் சகிப்புத்தன்மையைச் சோதிக்கும் வண்ணம் ஒவ்வொரு இதழையும் வைகோவின் சங்கொலி இதழின் வாரமிருமுறைப் பதிப்பாய் மாற்றி வெளியிட்டு வருகின்றனர்.

தமிழருவி மணியனின் எழுத்து அல்லது மேடைப் பேச்சு வழியாக வைகோ தான் வருங்கால முதல்வர் என்றோ, அல்லது நல்லகண்ணு குரலில் மூன்றாவது அணிக்கு வைகோ தலைமை தாங்க வேண்டும் என்றோ, அல்லது ஏதாவது விபத்தில் அடிபட்டவரை காப்பாற்றிய வைகோவின் மனிதாபிமானம் என்றோ,வைகோ தும்மி விட்டார் ஆகவே தமிழ்நாட்டில் விரைவில் புரட்சி வருவதன் எதிரொலி என்ற ரேஞ்சில் ஜூ.வி.இதழ்களில் பதிவாகி விடுகிறது.

இது எதுவும் இல்லாவிட்டாலும் வைகோ தான் தமிழ்நாட்டை ரட்சிக்க வந்த ரட்சகர் என்று ஒரு வாசகர் கடிதம் வெளியிட்டாவது விகடன் குழும இதழ்கள் குறிப்பாய் ஜூ.வி.தனது அரிப்பைத் தீர்த்துக் கொள்கின்றன.

சமீபத்திய ஆனந்த விகடனில் குல்தீப்நய்யாரின் பேட்டியில் பல்வேறு முக்கியமான செய்திகள் இருந்தும் என் சாய்ஸ் வைகோ தான் என்று தலைப்பு வைத்த மகிழ்ந்தது ஒரு உதாரணம்.ஆனால் காசு கொடுத்து விகடன் வாங்கிப் படிக்கும் சாய்சாகவும் ஓட்டுப் போடுபவர்களின் சாய்சாகவும் வைகோ என்றும் இருந்தது இல்லை.அது ஜெயலலிதா,கருணாநிதி என்று தான் மாறிமாறி வருகிறது.அதற்கு மாற்றாகவும் வைகோ இப்பொழுது கண்காணும் தூரத்தில் கூட இல்லை.

....தமிழ்நாட்டில் ராமதாஸ், கருணாநிதி, ஜெயலலிதா, போன்றவர்களின் அரசியல் தவறுகள்,சமரசங்கள், எவ்வளவோ அவையனைத்தும் வைகோவிடமும் உண்டு.அவர்கள் ஏதேனும் போராட்டம் அறிவித்தாலோ,போராட்டத்தில் கலந்து கொண்டாலோ, அதனை விமர்சிக்கும்,அதில் உள்ளர்த்தம் கண்டுபிடித்து வாசகர்களுக்குத் தரும் ஜூ.வி., அவர்களின் ஒவ்வொரு செயலையும் விமர்சிக்கும் ஜூ.வி., வைகோவின் ஒவ்வொரு செய்கைக்கும் போராளி அரிதாரம் பூசுகிறது. அவரது ஒவ்வொரு அசைவையும் ரசிக மனப்பான்மையுடன் பதிவு செய்கிறது.வியக்கிறது.

இதற்கு மேல் வைகோவிடம் பாராட்டத்தக்க அம்சங்கள் எமக்குத் தெரியவில்லை. காலங்கள் கடந்த பின்னும்,ஒப்பனைகள் கலைந்த பின்னும் நாடக மேடை பிரிக்கப்பட்ட பிறகும் இன்னும் தலைவரின் நவரசக்காட்சிக்கு வேறு வழியின்றி காத்திருப்பது, மதிமுக தொண்டர்களுக்கு வேண்டுமானால் அவசியமாய் இருக்கலாம். ஜூவி.ஆசிரியர் குழுவிற்குத் தேவை இல்லை.

எடுத்துக்காட்டாய் கடந்த 4 ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் அனைத்துக் கட்சிகளுக்கும் எதிரான எத்தனையோ செய்திகள் ஜூவி.யில் பதிவாகி உள்ளன.ஆனால் வைகோவிற்கு எதிரான ஒரு செய்தி கூடப் பதிவாக வில்லை.எத்தனையோ அரசியல் சறுக்கல்கள்,சமரசங்கள் வைகோவிடம் ஏற்பட்டுள்ளது.அவரது கட்சியில் இருந்து பலர் வெளியேறிவிட்டனர்.கட்சி பலகூறுகளாக உடைந்து விட்டது.இப்பொழுது கூட நாஞ்சில் சம்பத் வெளியேறப் போவதாக செய்திகள் வருகின்றன.ஆனால் ஒரு செய்தி நெகடிவ்வாக ஜூ.வி.யில் பதிவாகவில்லை.

அனைவரையும் போட்டுத் தாக்கும் கழுகார் பதில்களில் கூட போறபோக்கில் கூட நடுநிலையான விமர்சனங்கள்  சொல்லப்படவில்லை. வைகோவிடம் உங்களுக்குப் பிடிக்காதது எது என்ற கேள்விக்கு, அவர் அதிகமாக உணர்ச்சிவசப்படுவது தான் என்று கழுகாரின் பதிலாக வருகிறது.

மதிமுக தொண்டனின் மனநிலையும் ஜுவி ஆசிரியர் குழுவின் மனநிலையும் ஒரே மாதிரி இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

நடுநிலையாக இருந்து அனைவரின் செய்திகளையும் பதிந்து கொள்ள வேண்டிய ஜூவி வாசகர் பணத்தில் இப்படி சங்கொலியின் இலவச இணைப்பு போல செயல்படுவது அயோக்கியத்தனம்."

--என்று விகடன் குழுவின் "பத்திரிகா தர்மத்தை" கிழித்துள்ளது கலகக்குரல். மேலும் விரிவாக "கலகக்குரலில்" இங்கே காண்க: ஜூ.வி.பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும் ”தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் வைகோ”...! 

தமிழ்நாட்டின் சாதி வெறி அரசியல்!

கலகக்குரல் கட்டுரைக்கும் தமிழ்நாட்டின் சாதி வெறி அரசியலுக்கும் என்ன தொடர்பு?

தமிழ்நாட்டில் நீண்டகாலமாக சாதிவெறி அரசியல்தான் இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் முதன்மை அரசியல் கட்சியாக எந்த ஒரு பெரும்பான்மை சாதியினரும் வந்துவிடக் கூடாது என்கிற வெறியுடன் சிறுபான்மை ஆதிக்க சாதிக் கூட்டத்தினர் செயல்பட்டு வருகின்றனர். அதனால்தான் காமராசருக்கு பின்னர் தமிழ்நாட்டு அரசியலில் முதன்மை இடத்தை எந்த ஒரு பெரும்பான்மை சாதியினரும் அடையவில்லை.

இந்நிலையில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்கு மாற்றாக ஒரு வெற்றிடம் உருவானால் அங்கும் ஒரு சிறுபான்மை சாதியினர்தான் வரவேண்டும் என்பதில் பலரும் கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றனர். விஜயகாந்த் அந்த இடத்தை நிரப்புவார் என்கிற நம்பிக்கையை இவர்கள் இழந்துவிட்டனர். அதன் வெளிப்பாடுதான் வைகோ புராணம்.

தமிழருவி மணியனின் பித்தலாட்டம்

எடுத்துக்காட்டாக, தமிழருவி மணியன் - 2014 ஆம் ஆண்டு வரவேண்டிய நாடாளுமன்ற தேர்தலில் வைகோ தலைமையில் ஒரு அணி ஏற்பட்டால் அதனால் ஒரு இடத்திலும் வெற்றிபெற முடியாது என்று தெரிந்து - அந்த தேர்தலில் ஜெயலலிதா வெற்றிபெற வேண்டும் என்கிறர்.
26.9.2012 ஜூனியர் விகடனில் கீழே உள்ள கருத்தைச் சொன்னவ்ர் தமிழருவி மணியன்

"தமிழகத்தில் 4.59 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் சரிபாதி பெண்கள். ஆண்கள் வாக்குகள் கட்சி சார்ந்து பிரியக்கூடியவை. பெண்கள் ஒரே உணர்வுடன் வாக்களிக்கும் வழக்கம் உள்ளவர்கள். மதுக் கடைகளை மூடினால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட பெண் வாக்காளர்கள் ஒரு தேவதைக்கு வாக்களிக்கும் மகிழ்ச்சியுடன் உங்களுக்கு வாக்களிப்பார்கள்.

...தமிழகத்துப் பெண் மக்கள் அனைவரும் பைரனைப் போல் உங்கள் ஆட்சியை ஆயிரம் குறைகளையும் மீறி நேசிக்கத் தொடங்கி விடுவார்கள். நீங்களும் சூளுரைத்தபடி தகுதிமிக்க தமிழுலகின் இசை மேதைகள் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருதை எளிதில் பெற்றுத் தரும் அளவுக்குத் தேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்தும் அசைக்க முடியாத ஆளுமையாக உயர்ந்து விடுவீர்கள்." என்று ஜெயலலிதாவைப் புகழ்கிறார். (தமிழக முதல்வருக்கு தமிழருவி மணியன் மடல்!)

இதையே, ஜூனியர் விகடன் நாடாளுமன்ற தேர்தலில் "ஜெ'வுடன் வைகோ இருப்பார்" என்கிறது.

ஆனால், 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு எதிர்ப்பு அலை இருக்கலாம் என்பதால் - வைகோ சட்டமன்ற தேர்தலில் முன்னிறுத்தப்பட வேண்டும் என்று தமிழருவி மணியன் பேசுகிறார். அதனை ஜூ.வி மகிழ்ச்சியாக வெளியிடுகிறது:

16.9.2012 ஜூனியர் விகடனில் கீழே உள்ள கருத்தைச் சொன்னவரும் தமிழருவி மணியன்தான்.

''வைகோவை அதிகாரத்தில் உட்கார வைக்க, அரசியல் களத்தில் பலரை அப்புறப்படுத்த வேண்டும். முதலாவது, கலைஞர் கருணாநிதி. ஈழத்துக்குச் செய்த துரோகத்தால் அவரை மக்கள் புறக்கணித்து விட்டனர். ஜெயலலிதாவை வீழ்த்துவதற்கு யாரும் கஷ்டப்படத் தேவையே இல்லை. செய்யக்கூடாததைச் செய்து அவரே ஓய்வு பெறுவார்."  (ஜெயலலிதா அவராகவே ஓய்வு பெறுவார்!)

பத்தே நாட்கள் இடைவெளியில், "ஜெயலலிதா தேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்தும் அசைக்க முடியாத ஆளுமையாக உயர்ந்து விடுவார்" என்று புகழ்ந்தும், "ஜெயலலிதா செய்யக்கூடாததைச் செய்து அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார்" என்று இகழ்ந்தும்  தமிழருவி மணியனால் இரட்டை நாக்குடன் பேசமுடிகிறது. அதனை ஜூனியர் விகடனும் வெளியிடுகிறது.

சாதி வெறி 

ஆக, நாடாளுமன்ற தேர்தலில் ஜெ'வுடன் சேர்ந்து வைகோ வெற்றிபெற வேண்டும், அடுத்த சட்டமன்ற தேர்தலில் வைகோ தலைமையில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும். இந்தக் கனவுடன் தான் தமிழருவி மணியனும் ஜூனியர் விகடனும் செயல்பட்டு வருகின்றனர்.

இப்படியாக, தப்பித்தவறிக் கூட பெரும்பான்மை சாதியினர் தமிழக அரசியலில் முதன்மை இடத்தைப் பெற்றுவிடக் கூடாது என்கிற சிறுபான்மை ஆதிக்க சாதிவெறி தான் தமிழ்நாட்டின் அரசியல் போக்கைத் தீர்மானிக்கிறது. 

சிறுபான்மை ஆதிக்க சாதிவெறியின் வெளிப்பாடுதான் தமிழருவி மணியனும், ஜூனியர் விகடனும்!

குறிப்பு: எந்த ஒரு இனமோ, சாதியோ, மதமோ, மொழிபேசும் மக்களோ - சனநாயக அமைப்பில் ஒதுக்கப்பபடக்கூடாது. எல்லா பிரிவினரும் மக்கள்தொகைக்கு ஏற்ற அளவில் அதிகாரத்திலும் இடம்பெறுவதே நியாயம் ஆகும். அந்த வகையில் சிறுபான்மையான எண்ணிக்கையில் உள்ளவர்களும் தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தில் இடம்பெற அவர்களது எண்ணிக்கைக்கு ஏற்ப உரிமை உண்டு.

திங்கள், அக்டோபர் 01, 2012

சபாநாயகரின் பதவி நீக்கத்திற்கு 'இது' காரணமா? ஜெயக்குமார் நீக்கப்பட்டதை வரவேற்போம்!

சட்டத்தையும், அரசு உத்தரவை மீறும் வகையிலும் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில் சபாநாயகர் ஜெயக்குமார் பங்கேற்றார். அதற்காகத்தான் அவர் இப்போது பதவிநீக்கப்பட்டார் என்றிருந்தால் நன்றாகத்தானே இருக்கும்?!
சட்டவிரோத நிகழ்ச்சியில் சபாநாயகர்
புகையிலைப் பொருட்களை விற்கும் நிறுவனங்கள் ஆண்டுக்கு பத்துலட்சம் இந்தியர்களைக் கொலை செய்கின்றன. புகையிலைக் கொடுமையை ஒழிக்கும் முயற்சிகள் ஒருபக்கம் நடக்கும் போது இந்தியாவின் மிகப்பெரிய புகையிலை நிறுவனம் நடத்திய விளமபர நிகழ்ச்சியில் பத்தாயிரத்திற்கும் கூடுதலான பள்ளிக்குழந்தைகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு சென்னையில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளே தங்களது பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் சென்ற அவலம் நடந்துள்ளது. (இந்த சட்டவிரோத நிகழ்ச்சிக்கும் தி இந்து பத்திரிகைதான் அதிகாரப்பூர்வ விளம்பரக் கூட்டாளி - Official Media Partner)

இத்தனைக்கும் பள்ளிக்குழந்தைகள் புகையிலை நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என்று கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவை மீறும் வகையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் சட்டமன்ற சபாநாயகர் ஒரு சாட்சியாக பங்கேற்றார்!

ITC-இந்திய புகையிலை நிறுவனத்தின் கொடுஞ்செயல்

ஐ.டி.சி என்று இப்போது அழைக்கப்படும் இந்திய புகையிலை நிறுவனம்தான் (Indian Tobacco Company) இந்தியாவின் மிகப்பெரிய சிகரெட் விற்பனை நிறுவனமாகும். இந்தியாவில் விற்பனையாகும் மொத்த சிகரெட்டுகளில் 75 விழுக்காடு இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள்தான். 1910 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐ.டி.சி நிறுவனம் 1975 ஆம் ஆண்டு வரை சிகரெட் தயாரிப்பில் மட்டுமே ஈடுபட்டு வந்தது. அதன் பின்னர் சிறிய அளவில் தங்கும் விடுதிகளைத் தொடங்கியது. 2000 ஆவது ஆண்டுக்கு பின்னர் ஒப்புக்கு மிட்டாய், உணவுப்பொருட்கள், எழுதுபொருட்கள் என சில துணைத் தொழில்களைச் செய்துவருகிறது.
பள்ளி குழந்தைகள் நிகழ்ச்சியில் சிகரெட் விளம்பரம்
இப்படி வேறுபட்ட தொழில்களைச் செய்வதாகக் காட்டிக்கொண்டாலும் ஐ.டி.சி நிறுவனம் தனது சிகரெட் திணிப்புத் தொழிலைக் கொஞ்சமும் கைவிடவோ, குறைத்துக்கொள்ளவோ இல்லை. தொடர்ந்து சிறுவர்கள் மீது சிகரெட்டைத் திணிப்பதை விடாமல் செய்துவருகிறது ஐ.டி.சி. இப்போதும் அந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த இலாபத்தில் 80 விழுக்காட்டிற்கும் கூடுதலான இலாபம் சிகரெட் விற்பனை மூலமாக மட்டுமே கிடைக்கிறது.

இப்படி பெயரிலும் நடத்தையிலும் மரணத்தை விற்கும் நிறுவனமாக இருக்கும் ஐ.டி.சி, தன்னையும் ஒரு பொறுப்புள்ள நிறுவனமாகக் காட்டிக்கொள்ள பல போலித்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் "தேசிய மறு சுழற்சி நாள்" என்கிற ஒரு கண்துடைப்பு நிகழ்ச்சியை சென்னையில் நடத்தியுள்ளது ஐ.டி.சி.
பள்ளி குழந்தைகள் நிகழ்ச்சியில் சிகரெட் விளம்பரம்
"பள்ளிக் குழந்தைகள் தங்கள் வீட்டின் குப்பைகளை, குறிப்பாக காகிதம், நெகிழிப் பொருட்களைத் தனியாக சேமிக்க வேண்டும். அதனை சென்னையில் குப்பை அள்ளும் தனியார் நிறுவனமான ராம்கி நிறுவனத்தினரிடம் கொடுக்க வேண்டும். அப்படி செய்யும் பள்ளிக்குழந்தைகளுக்கு ஐ.டி.சி நிறுவனத்தின் நோட்டுபுத்தகங்கள் சலுகை விலையில் கொடுக்கப்படும்" என்று கூறி, அதனை அறிமுகப்படுத்தும் விதமாக "தேசிய மறு சுழற்சி நாள்" எனும் நிகழ்ச்சியை நடத்தியது ஐ.டி.சி. (தேசிய மறு சுழற்சி நாள் என்று அங்கீகரிக்கப்பட்ட நாள் எதுவும் கிடையாது. இது ஐ.டி.சி தனக்குத்தானே வைத்துக்கொண்ட பெயர்)

ஜூலை 1 அன்று சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளியில் நடத்த்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சென்னையின் பல்வேறு தனியார் பள்ளிகளில் இருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றுள்ளனர்.

குப்பையை மறுசுழற்சி செய்வதில் என்ன தவறு?

மேலோட்டமாகப் பார்க்கும் போது இது ஒரு நல்ல நிகழ்ச்சிப் போல தோன்றலாம். ஆனால், இதன் பின்னே பலவிதமான சதிகளும், சட்ட மீறல்களும் உள்ளன.

சிகரெட் என்பது ஒரு சட்டப்படியான, சாதாரணமான நுகர்பொருள் அல்ல. அது சட்டத்தால் தடுக்கப்பட்டுள்ள பொருள். சிகரெட்டை விளம்பரப் படுத்துவதும், விற்பனையை ஊக்கப்படுத்துவதும் சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.

உலகளவில், புகையிலை நிறுவனங்கள் அரசாங்கத்துடன் தொடர்புகொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் கையொப்பமிட்டு ஏற்றுக்கொண்டுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலைக் கட்டுப்பாட்டு உடன்படிக்கையின் 5.3 ஆம் பிரிவு (FCTC Article 5.3) புகையிலை நிறுவனங்களுடன் அரசு சார்பானவர்கள் உறவாடுவதைத் தடை செய்கிறது.

அதாவது பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் பொறுப்பில் உள்ள அரசாங்கம் மக்கள் உடல்நலத்துக்கு எதிரான நச்சுப்பொருளை விற்கும் புகையிலை நிறுவனங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். சட்டத்தால் கட்டுப்படுத்தப்பட வேண்டியவர்களுடன் சட்டத்தை செயல்படுத்த வேண்டியவர்கள் தொடர்புவைப்பது பொதுநலனுக்கு எதிரானது. எனவே, அரசுக்கும் புகையிலை நிறுவனங்களுக்கும் உறவு கூடாது என்கிறது அந்த உடன்படிக்கை.

இத்தகைய சூழலில் - தமது "கொலைகார" அடையாளத்தை மறைக்கவும், அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள், உயர்பதவிகளில் இருப்போருடன் தொடர்பை ஏற்படுத்தவும் - பொதுவான சேவைகளை நடத்துகின்றன புகையிலை நிறுவனங்கள்.

அந்தவகையில், சென்னையில் ஐ.டி.சி நிறுவனம் நடத்திய தேசிய மறுசுழற்சி நாள் எனும் நிகழ்ச்சி முழுக்க முழுக்க சிகரெட் விற்பனையை அதிகரிப்பதற்காகன ஒரு சதி நிகழ்ச்சிதான்.

கல்வித்துறையின் தடை உத்தரவு மீறல்

ஐ.டி.சி நிறுவனம் 2011 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் தமிழ்நாட்டின் பள்ளிகளில் "சன்ஃபீஸ்ட் மில்கி மேஜிக் ஆல்ரவுண்டர்" எனும் ஒரு ஊக்கப்பரிசு நிகழ்ச்சியை நடத்த முயன்றது. சிகரெட் நிறுவனம் பள்ளிகளில் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்கிற கோரிக்கை அப்போது எழுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் புகையிலைக் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் இத்தகைய நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் 19.01.2011 அன்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளில் சிகரெட் நிறுவனங்கள் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்தத் தடை விதித்தது. (Letter No. 1812/E1/2011-1 dated 19.01.2011 of Secretary, School   Education Department, Chennai – 9)
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
"எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் எந்த ஒருபள்ளியும் சிகரெட் நிறுவனங்கள் நடத்தும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்கக் கூடாது" என்றும் பள்ளிக்கல்வித்துறை தெளிவாக தனது உத்தரவில் தெரிவித்தது.ஆனால், தமிழ்நாடு அரசின் உத்தரவை மீறி ஐ.டி.சி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் சென்னை நகரில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 10,000 பள்ளி மாணவர்கள் "தேசிய மறுசுழற்சி நாள்" எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் .

இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டம் மீறல்

ஐ.டி.சி நிறுவனம் நடத்திய "தேசிய மறுசுழற்சி நாள்" நிகழ்ச்சியில் இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டு சட்டம் (COTPA 2003) அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.

இந்திய அரசின் புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 5 ஆம் பிரிவு "நேரடியாகவோ மறைமுகமாகவோ புகையிலைப் பொருட்கள் எதுவும் விளம்பரப்படுத்தப்படக் கூடாது" என தடை விதித்துள்ளது. ஆனால், சென்னை புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தின் பல இடங்களிலும் ஜூலை 1 அன்று புகையிலை விளம்பரங்கள் வைக்கப்பட்டிருந்தன. அதாவது பத்தாயிரத்துக்கும் கூடுதலான பள்ளிக்குழந்தைகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் எங்கு பார்த்தாலும் சிகரெட் விளம்பரங்கள் வைக்கப்பட்டிருந்தன.
பள்ளி குழந்தைகள் நிகழ்ச்சியில் சிகரெட் விளம்பரம்
ஐ.டி.சி நிறுவனத்தின் தயாரிப்பான 'வில்ஸ்' சிகரெட்டின் விளம்பரம் வில்ஸ் வாழ்க்கைமுறை என விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. (பள்ளிக்குழந்தைகளின் வாழ்க்கைமுறையில் சிகரெட்டுக்கு என்ன பங்கோ?)

பசுமைத் தாயகத்தின் எதிர்ப்பு

ஐ.டி.சி நிறுவனம் தமது விளம்பரத்துக்காக நடத்தும் 'தேசிய மறுசுழற்சி நாள்' எனும் நிகழ்ச்சியில் தமிழக சபாநாயகர் டி.செயக்குமார், சுற்றுச்சூழல் அமைச்சர் பி.வி.ரமணா, தொழில்துறை அமைச்சர் பி. தங்கமணி, சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாக 30.06.2012 அன்று நாளிதழ் ஒன்றில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.
 பசுமைத் தாயகம் எதிர்ப்பு சுவரொட்டி
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பசுமைத் தாயகம் அமைப்பின் நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு அய்யா அவர்கள் 30.06.2012 அன்று அறிக்கை வெளியிட்டார்கள். அந்த அறிக்கை 1.07.2012 அன்று செய்தித்தாள்களில் வெளியானது. அன்றையதினம் "மரணத்தை விற்கும் ஐ.டி.சி, சுத்தத்தைப் பற்றி பேசலாமா - ஐ.டி.சி நிறுவன நிகழ்ச்சியில் அரசுசார்பான பிரமுகர்கள் பங்கேற்கக் கூடாது" எனக்கோரும் சுவரொட்டிகள் சென்னை நகரில் ஒட்டப்பட்டன.
 பசுமைத்தாயகம் சார்பில் ஆர்ப்பாட்டம் 
1.7.2012 ஞாயிறு அன்று மாலை ஐ.டி.சி நிகழ்ச்சி நடைபெற்ற சென்னை புனித ஜார்ஜ் பள்ளியின் முன்பு பசுமைத்தாயகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
  • ஐ.டி.சி நிறுவனம் சென்னை நகரின் பல இடங்களிலும் சட்டவிரோத சிகரெட் விளம்பரங்களை வைத்துள்ளது. பள்ளிகளுக்கு நூறு மீட்டர் தொலைவுக்குள் சிகரெட் விற்கக் கூடாது எனும் சட்டத்தை மீறி பள்ளிகளுக்கு அருகேயே சிகரெட் விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன. சிகரெட் விற்கப்படுகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள சென்னை மாநகர மேயர் அதே நிறுவனத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்பது நியாயம் தானா?
  • சென்னை மெரினா கடற்கரையில் மே 31 - புகையிலை எதிர்ப்பு நாள் நிகழ்ச்சியில் மேயரும் அமைச்சர்களும் பங்கேற்று புகையிலைக்கு எதிரான கையெழுத்து நிகழ்ச்சியை நடத்தினார்கள். இன்று அவர்களே சிகரெட் நிறுவனத்தின் விள்ம்பரத்தில் கலந்து கொள்ளலாமா?
  • தமிழ்நாட்டில் குழந்தைகள் புகையிலைக்கு அடிமையாவது அதிகரித்துவருகிறது. 2000 ஆவது ஆண்டில் பள்ளிக்குழந்தைகளில் 7 சதவீதத்தினர் புகையிலைப் பொருட்களை பயன்படுத்தினர், இது 2009 ஆம் ஆண்டில் 15 சதவீதமாக அதிகரித்துள்ளது. 
சிகரெட் விற்பனையை அதிகரிப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருக்கும் ஐ.டி.சி நிறுவனத்தின்  மற்றுமொரு விளம்பர நிகழ்ச்சிதான்  'தேசிய மறுசுழற்சி நாள்' நிகழ்ச்சியும். இதனை அமைச்சர்களும், அரசுத்துறையினரும், பள்ளிக்குழந்தைகளும் முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்" எனக்கோரும் துண்டுப் பிரசுரங்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்தோரிடம் விநியோகிக்கப்பட்டன.

ஐ.டி.சி சிகரெட் விளம்பர நிகழ்ச்சி - விளைவு என்ன?

ஐ.டி.சி சிகரெட் விளம்பர நிகழ்ச்சியில் தமிழக சபாநாயகர் டி. ஜெயக்குமார், தமிழக அமைச்சர்கள் பி.வி. ரமணா, பி. தங்கமணி, சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி, சுற்றுச்சூழல் துறைச் செயலாளர் சி.வி. சங்கர், புகழ்பெற்ற சதுரங்க விளையாட்டு வீரர் விசுவநாதன் ஆனந்த், திரைப்பட நடிகர் விக்ரம் ஆகியோர் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியின் போது ஐ.டி.சி நிறுவனம் பத்திரிகையாளர்களுக்கு அளித்த செய்திக் குறிப்பிலும் இவர்களது பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேயர், அமைச்சர்கள், நடிகர் விக்ரம், செஸ் வீரர் விசுவநாதன் ஆனந்த் புறக்கணிப்பு
ஆனால்,தமிழக சபாநாயகர் டி. ஜெயக்குமார் ஒருவர் தவிர வேறு எவருமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.  பசுமைத் தாயகத்தின் எதிர்ப்புக்கு கிடைத்த வெற்றி என்று இதனைக் கருதலாம்.
ஐ.டி.சி நிறுவன நிர்வாகியுடன் சபாநாயகர்
அதே நேரத்தில் - சென்னை நகரின் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் இருந்து பத்தாயிரம் குழந்தைகள் பங்கேற்றது கவலை அளிக்கும் செய்தியாகும்.

இனி என்ன?

புகையிலை நிறுவனம் குழந்தைகள் மீது சிகரெட்டைத் திணிக்கும் பேராபத்து இந்த ஒரு நிகழ்ச்சியுடன் முற்றுப்பெற்றாக வேண்டும். சட்டத்துக்கும் நியாயத்துக்கும் எதிரான இத்தகைய நிகழ்ச்சிகள் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். கூடவே, அரசு சார்பானவர்களுக்கும் புகையிலை நிறுவனங்களுக்கும் இடையேயான உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இதற்கு மாறாக, தமிழ்நாடு அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டு சட்டத்தை முழுவீச்சில் செய்ல்படுத்த வேண்டும். அதற்காக அனைவரும் குரல் கொடுப்பதே இப்போதுள்ள தேவை ஆகும்.

எது எப்படியோ, அன்று சட்டவிரோத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சபாநாயகர் இன்று வேறு எதற்காகவோ நீக்கப்பட்டிருந்தாலும், அவரது நீக்கம் வரவேற்கத்தக்கதே!